தலைப்பு

புதன், 17 ஜூலை, 2019

கடவுள் தரும் துன்பங்கள் நன்மைக்கே!


இளம் சாயி வாழ்விலிருந்து ஒரு சம்பவம்..  

பல ஆண்டுகளுக்கு முன்பு பகவான் பாபா ஓல்ட் மந்திர் என்று அழைக்கப்பட்ட சிறு வீட்டில் வாழ்ந்து வந்தார். அவருடைய மகிமையை உணர்ந்த பலர் அங்கு அவருடன் வசித்து வந்தனர். ஆனால் சிலர் அவருடைய எதிரிகளாகவும் இருந்தனர். அப்படி எதிரிகளாக இருந்தவர்கள் அவரை நம்பாமல் மக்களை ஏமாற்றுகிறார், அவர் தவறு செய்யும் பொழுது, அதை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக விரும்பினார்கள். அத்தகைய சிலர் பிறவியிலேயே ஊமையாக இருந்த ஒரு சிறுவனை அவரிடம் அழைத்து வந்தார்கள். நீ தான் பெரிய தெய்வீக சக்தி உடையவனாயிற்றே, இந்த சிறுவனின் குறையை போக்கி அவனை பேச வையுங்கள் பார்க்கலாம் என்றார்கள். பகவான் மிகுந்த அன்புடனும் பொறுமையுடனும் நீங்கள் விரும்பும்படி எல்லாம் அற்புதங்களை செய்ய முடியாது. அவனுடைய கர்மா அதற்கு ஒத்துழைக்க வேண்டும். மிகவும் வலுவான கர்ம விளைவுகளை அனுபவிக்க வேண்டுமென்றால் அனுபவித்தே தீர வேண்டும் என்றார்.
அதற்கு அவர்கள் இந்த மாதிரி எல்லாம் சொல்லி தப்பிக்கலாம் என்று பார்க்காதே! முடியுமா? முடியாதா? என்று சொல். முடியாவிட்டால் நான் ஏதோ தந்திரங்கள் செய்கிறேன், என்னை விட்டுவிடுங்கள் என்று ஒப்புக் கொள் என்றார்கள். உங்களிடம் பேசி பயனில்லை, பஜனை ஆரம்பிக்கலாம் என்று, அங்கிருந்த மற்ற பக்தர்களிடம் சொன்னார். பஜனை ஆரம்பித்தது. சிறுவனை அழைத்து வந்தவர்கள், பஜனை முடிந்து மறுபடியும் பேசிக்கொள்ளலாம் என்று அமைதியாக இருந்தார்கள். பஜனை ஆரம்பித்தது. முன்பெல்லாம் மூன்று வேகங்களில் பாடபடுவது வழக்கம். பாபாவே, தாளங்களை கைகளால் அடித்து பஜனையில் கலந்து கொள்வார். அப்படி மூன்றாவது வேகத்தில் பாடிக் கொண்டிருக்கும் பொழுது, வெண்கலத்தால் ஆன ஜால்ரா அவருடைய கையில் இருந்து நழுவி அந்த சிறுவனின் நெற்றியில் வலுவாக பட்டது. உடனே ரத்தம் கசிந்தது. அதை பார்த்து அவருடன் வந்தவர்கள், "ஏய்" என்று கத்தி உன்னால் முடியவில்லை என்று சொன்னதற்காக இப்படி அடித்து ரத்தம் கசிய வைக்கிறாயா? என்று கொதித்தெழுந்தார்கள். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பிறவியிலேயே ஊமையாக இருந்த அந்த சிறுவன், அப்பா அப்பா என்று கூறி அழைத்து, என்னால் பேச முடிகிறது என்று சொன்னான். அப்போதுதான் தெரிந்தது அந்த சிறுவனுக்கு பேச்சு வந்து விட்டது என்று. உடனே அந்த சிறுவனை அழைத்து வந்தவர்கள், பாபாவின் காலடியில் விழுந்து உங்களைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் தவறாக பேசி விட்டோம், மன்னியுங்கள் என்றார்கள்.

அந்தக் கூட்டத்தில் ஒருவர் இப்படி பேச்சுவந்தது நிரம்ப மகிழ்ச்சி, ஆனால் ஏன் ரத்தம் கசிய வைத்து பேச்சுவந்தது? சும்மா அவனை தொட்டிருந்தால் அல்லது உங்கள் சங்கல்பத்தால் பேச்சை வரவழைக்க முடியாதா? என்று கேட்டார். அதற்கு பகவான் அவருடைய பாவ கர்மா மிகவும் வலுவாக இருந்ததால் ஏதாவது வகையில் அவனை கஷ்டப்படுத்தியே தீர வேண்டும் என்பதால் நான் அப்படி செய்தேன் என்றார். சாதாரணமாக அப்படியே விட்டிருந்தால் அவன் கடைசி வரைக்கும் ஊமையாகவே இருந்திருப்பான். ஆனால் தெய்வத்தின் மூலமாக ஒரு கஷ்டம் வந்தால் சிறு கஷ்டமானாலும் பெரிய விளைவு ஏற்படும் என்று விளக்கினார். குட்டு பட்டாலும் மோதிர கையால் குட்டு படுவது மேல் என்று பழமொழி கூட இருக்கிறது அல்லவா?

ஆதாரம்:  Sri Sathya Sai Digvijayam Part 1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக