1987 கூடலூர் சமிதியில் பகவான் பிறந்த நாள் விழா அன்று குழந்தைகளின் பாலவிகாஸ் கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும், பெரியவர்கள் பகவானின் ஸ்தாபனங்கள் குறித்தும் லீலைகள் குறித்தும் அவரவர்களுடைய அனுபவங்களை பற்றி பேசினார்கள். அன்றைய தினம் சுமார் 150 பேர்கள் விழாவில் கலந்து கொண்டார்கள் என கணக்கிட்டு எல்லோருக்கும் அன்னதானம்( நாராயண சேவை) செய்ய ஏற்பாடு செய்திருந்தோம். பிறகு நாராயண சேவை நடந்து கொண்டிருந்த பொழுது முதல் பந்திலேயே அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர். எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். இது நாள் வரை இவ்வளவு பேர்கள் சமிதி நாராயண சேவையில் பங்கேற்றதில்லை. நான் சமிதிக்கு வெளிப்பக்கம் வந்தவர்களை வரவேற்று உணவு படைப்பதை கவனித்துக் கொண்டிருந்தேன். சமையல் வேலைகளை சமிதியின் மகிளா அங்கத்தினர்களே கவனிப்பார்கள்.
மகிளா அங்கத்தினர்களில் மிக முக்கிய பங்காக ராக்வுட் எஸ்டேட்டில் இருந்து வரும் மாமி( ஜானகி மகாதேவன்) அவர்கள் பங்கேற்பார்கள். திடீர் என பரபரப்பாக மாமி அவர்கள் என்னிடம் வந்து அண்ணா இங்கே வாருங்கள் என கூறினார். என்ன மாமி, என்ன நடந்தது, என்ன விஷயம், என கேட்டேன். அவர்கள் வாருங்கள் நான் சொல்கிறேன் என என்னை கூப்பிட்டு சமிதிக்குள் அழைத்து சென்றார். பிறகு என்னிடம் அண்ணா சமைத்த உணவு கொஞ்சம் தான் உள்ளது பாருங்கள், முதல் பந்தியே இன்னும் முடியவில்லை. அவர்களுக்கு இரண்டாவது முறை பரிமாற வேண்டும். கேட் பக்கம் பாருங்கள், இன்னும் சுமார் நூறு பேர்களுக்கு மேல் உள்ளனர். மற்றும் சமிதி அங்கத்தினர்கள் எல்லோரும் சுமார் முப்பது பேர்களுக்கு மேல் உள்ளனர். அவர்களுக்கு என்ன செய்வது என கேட்டு, சமையல் செய்ய பொருட்களும் தீர்ந்து விட்டன என கூறினார்.
உடனே பாதி உணவு படைத்த நிலையில் இந்த நிலை ஏற்பட்டுவிட்டதே என்ன செய்வது என திகைத்து, பகவானை நினைத்து சாஷ்டாங்கமாக பகவானின் பாதத்தில் விழுந்து வணங்கி விபூதியை அள்ளி எடுத்து சமைத்துள்ள உணவின் மேல் போட்டு, சுவாமி இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார். நீங்கள் பரிமாறுங்கள் என்று கூறினேன். எவருமே நம்பமுடியாத விந்தையிலும் விந்தையை பகவான் காட்டினார். எல்லோருக்கும் உணவு தாராளமாக பரிமாறப்பட்டது. சமிதி அங்கத்தினர்களும் உண்டு, அப்படியும் மீதி இருந்தது. கடைசியாக அங்கத்தினர்களின் வீடுகளுக்கு கொடுத்தனுப்பினோம். கூடலூர் சமிதி அங்கத்தினர்கள் எல்லோரும் இந்த அற்புத நிகழ்ச்சியை பார்த்து பகவானுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டனர். அவர்களின் வாழ்நாளில் இந்த நிகழ்ச்சியை மறக்கமாட்டார்கள். புராண காலம் தொட்டு இதுநாள் வரையிலும் பகவான் நிகழ்த்தும் அற்புதங்களில் இதுவும் ஒன்று. நமக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை தந்த சாமிக்கு எனது மகிழ்ச்சியையும் கண்ணீர் மல்க எனது நன்றியையும் சுவாமியின் பாதத்தில் காணிக்கை ஆக்குகிறேன். 1960 ஆம் ஆண்டு சிவராத்திரி தினம், நாராயண சேவையில் பகவான் சமைத்த உணவின் மேல் விபூதியை வரவழைத்து போட்டு, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பேருக்கு உணவு பரிமாறியதை பார்த்ததால் தான், எனக்கும் பகவானின் விபூதியை சமைத்த உணவின் மேல் போடும் எண்ணத்தை பகவான் அருளி மிக இக்கட்டான நிலையில் இருந்து எங்களை காப்பாற்றி உள்ளார்...
ஆதாரம்: 'இதயத்தோடு இதயம்' - ஸ்ரீ ஜோகையா லிங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக