தலைப்பு

செவ்வாய், 30 ஜூலை, 2019

கன்னம் சிவந்த கண்ணன்!


இளம் சாயி வாழ்விலிருந்து ஒரு சம்பவம்..

பள்ளிக்கூடத்தில் சத்யா புத்திசாலி மாணவனாக இருந்ததால் ஆசிரியர் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னான். ஒருநாள், “இந்தியாவின் பெருமையை விவரி?’ என்ற கேள்வியைக் கேட்டார் ஆசிரியர். அதுவும் பதிலை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும்.
புக்கபட்டினம் மாணவர்களின் ஆங்கில அறிவு ரொம்ப குறைவு. அதுவும் இந்தியாவைப் பற்றிய அறிவோ மேலும் குறைவு.

பதில் சொன்னது சத்யா மட்டும்தான்.
மற்ற மாணவர்களுக்குத் தண்டனை தருவது ஆசிரியரின் வழக்கம். வழக்கமாய் பிரம்பு பிய்யும்.

ஆனால், அன்றைக்குத் தண்டனையை மாற்றினார் ஆசிரியர். பதில் தெரியாத எல்லா மாணவர்களின் கன்னத்திலும் “பளார்’ என்று சத்யாவை அறையச் சொன்னார் ஆசிரியர்.
சத்யா என்ன செய்தான்?
அதை பாபாவின் வார்த்தைகளிலேயே நாம் கேட்போமா? 1978-ம் ஆண்டு பெங்களூரில் கோடைப் பயிற்சி முகாமின் கடைசி நாளன்று பாபாவே அந்த சம்பவத்தைச் சொன்னார். இதோ அது!

“எனக்குத் துயரத்தையும் எரிச்சலையும் தந்த விஷயம் அது. ஒவ்வொரு மாணவனின் மூக்கையும் இடது கையால் இறுக மூடி, வலது கையால் நான் அறைய வேண்டும் என்பது ஆசிரியர் உத்தரவு. வகுப்பில் அப்போது 30 மாணவர்கள் இருந்தார்கள். பலர் என்னைவிட உயரமாக இருந்தார்கள். அதனால் எனக்குப் பிடிக்காத அந்த வேலையைச் செய்ய நான் பெஞ்ச் மீது ஏற வேண்டியிருந்தது. அப்போதுதான் அவர்களின் கன்னம் எனக்கும் எட்டும்?
ஆசிரியர் எதிர்பார்த்தபடி மாணவர்களை ஓங்கி அறைய எனக்கு எப்படி மனசு வரும்? அதனால் அவர்களுடைய கன்னங்களில் என் கரங்கள் பூப்போல் மெதுவாகவே விழுந்தன.

அதைப் பார்த்த ஆசிரியர் என் மேல் கோபம் கொண்டார். “ஏண்டா, பசங்க கன்னத்துல சந்தனம் பூசவா நான் உங்கிட்ட சொன்னேன்? அறையத்தானே சொன்னேன்? அது எப்படின்னு உனக்குத் தெரியல போலிருக்கே. இங்க வா, அலையறது எப்படீன்னு நான் உன்குக் காட்டறேன்.’ என்று கத்தினார்.
என் மூக்கை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மறுகையால் என் கன்னத்தில் விட்டார் ஒரு அறை! ஒன்று இரண்டு அல்ல கிட்டத்தட்ட 30 முறை என் கன்னத்தில் அறைந்தார். 30 மாணவர்களை நான் எப்படி அறையவேண்டும் என்று முழுப்பாடம் எடுத்துவிட்டார்.

என் கன்னமே வீங்கிவிட்டது என்றாலும் நான் அனைத்தையும் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டேன். குருவை எதிர்க்கவோ அவமதிக்கவோ கூடாது என்பதற்காக நான் கண்களை மூடி மௌனமாக நின்று கொண்டிருந்தேன்.’
சொல்லிவிட்டு சத்யசாய் பாபா புன்னகைத்தார். கேட்டுக்கொண்டிருந்த மாணவர்கள் கண்களில் நீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக