தலைப்பு

திங்கள், 8 ஜூலை, 2019

கிழவர் ரூபத்தில் உதவிய சத்ய சாயிபாபா!


வால்பாறை டாக்டர். எஸ். எஸ். வி. கிருஷ்ணன் அவர்கள் பகிர்ந்துகொண்ட பாபாவின் அற்புதம் ஒன்று.. 

டாக்டருக்கு ஒரு நண்பர். அவர் ஒரு புதிய கார் வாங்கினார். முதல் விஜயமாக புட்டபர்த்திக்கு தான் சென்று வர வேண்டும் என்று தீர்மானம் செய்தார். அதே பிரகாரம் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் புறப்பட்டுவிட்டார். பெங்களூருக்கு வரும் பொழுது இருட்ட ஆரம்பித்துவிட்டது. ஒரு நூறு மைல் தானே போய்விடலாம் என்று தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டு போனார். சுமார் இரவு ஒன்பது மணி ஆனபோது பெட்ரோல் சுத்தமாக தீர்ந்துவிட்டது. ஒரே கும்மிருட்டு பாதையும் தெரியவில்லை. பெட்ரோலும் இல்லை. தங்குவதற்கு எந்த இடமும் இல்லை. குழந்தைகள் அழ ஆரம்பித்து விட்டார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார் நண்பர்.

அந்த நேரத்தில் ஒரு தாத்தா ஒரு கையில் பெட்ரோல் டின்னையும் மறு கையில் ஒரு லாந்தர் விளக்கையும் கம்பையும் தூக்கிக் கொண்டு வந்தார். என்னப்பா குழந்தை குட்டிகளோடு வரும்பொழுது முன்ஜாக்கிரதையாக கொஞ்சம் அதிகமாகவே பெட்ரோல் போட்டுக் கொண்டு வரவேண்டாமா? குழந்தைகள் பசியால் அழுகிறார்களே, பாதையும் தெரியாமல் இருட்டாக இருக்கிறது. என்ன செய்வாய் பாவம் என்றார். ஆமாம் சாமி, தெரியாமல் தவறு செய்து விட்டேன், நீங்கள் தான் இதற்கு தீர்வு சொல்ல வேண்டும். ஆமாம் உங்கள் கையில் வைத்திருப்பது பெட்ரோல் டின் மாதிரி இருக்கிறதே? என்று கேட்டார் நண்பர். ஆம், ஒருவருக்காக எடுத்துக் கொண்டு போகிறேன். உனக்கு கொடுக்க முடியாது. ஐந்தே கால் லிட்டருக்கான பணத்தை கொடுத்தால் கொடுக்கிறேன் என்றார் தாத்தா. தெய்வமே உங்களை அனுப்பியிக்கிறது, சீக்கிரம் கொடுங்கள் அந்த பெட்ரோலை என்று கூறி நண்பர், அதை காரில் ஊற்றிக் கொண்டார். பலப்பல நன்றிகளுடன் புட்டபர்த்தி கிளம்பி சென்றார். அங்கு சேரும் போது நடு ராத்திரி ஆகிவிட்டது. எப்படியோ ஒரு இடத்தை கண்டுபிடித்து தூங்கிவிட்டார்கள். மறுநாள் காலையில் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு குழந்தைகளுக்கு உணவு கொடுத்து விட்டு,தர்சன் ஹாலுக்கு சென்றார்கள்.

சற்று  நேரம் கழித்து பாபா உள்ளே நுழைந்து அவருடைய நாற்காலியில் அமர்ந்தார். பின்னர் நம்முடைய நண்பரை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார். எதற்காக சிரிக்கிறார் நம்மைப் பார்த்து என்று புலம்பினார் நண்பர். அப்போது பகவான் தன்னுடைய கையை நீட்டி வலது பக்கம் பார்க்க சொன்னார். அங்கே ஒரு முக்காலி இருந்தது. அதன் மேல் ஒரு பெட்ரோல் டின்னும் , லாந்தர் விளக்கும், சில ரூபாய் நோட்டுகளும் சில்லறைகளும் இருந்தன. அப்போதுதான் புரிந்தது நண்பருக்கு. நேற்று இரவு வந்த தாத்தா உண்மையில் பகவான் தான் என்று புரிந்தது. ஆனந்த கண்ணீர் விட்டார்.

நண்பர் வால்பாறைக்கு திரும்பி சாய்பக்தர்களிடம் விவரித்தார். இந்த அற்புதமான அன்பு சொட்டும் லீலையைப் பற்றி, நாம் கவனக் குறைவாக இருந்தாலும் பாபா அதை ஈடு செய்து காப்பாற்றுகிறார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக