தலைப்பு

புதன், 3 ஜூலை, 2019

கார் விபத்தில் காப்பாற்றிய சத்ய சாயி!


விபத்து ரக்ஷனையில் வியத்தகு அற்புதம் சில ஆயிரமாயிரமானவற்றில் 'துளியூண்டு' இனி பார்ப்போம்.

லண்டன் பிளிட்சில் நமது சுவாமி ஏர் வார்டனாக சென்ற மாபெரும் விபத்து காப்பை பால லீலைகளில் பார்த்தோம் அல்லவா? அவ்வருளுக்குப் பாத்திரமானவருக்கு செய்த இன்னொரு ரக்ஷணை.

லண்டனில் நாம் மாணவராக கண்ட அவருக்கு மணமாகி, மணவாழ்வில் பல்லாண்டு சென்றுவிட்டன. இப்போது தேச வாழ்விலும் காந்திய தலைவர்களிடை ஓரளவு முக்கியம் பெற்றுவிட்டார்.

அவரும் அவர் மனைவியுமாக குறுகிய மலைப் பாதை ஒன்றில் காரில் சென்று கொண்டிருந்தனர். எதிரே வந்த வண்டி ஒன்றுக்காக இவ்வண்டியை ஓட்டி வந்த நம் அன்பர் இதை சற்று ஒடித்தார். சற்று ஒடித்ததே வண்டியை ஒடித்துப் போட்டு, ஓடாக்கும் விபரீதமாயிற்று. மலைச்சரிவில் கார் உருண்டது. காருக்குள் தலைவரும் ஸ்ரீமதியும் உருண்டனர்.

அச்சமயத்திலும் அம்மங்கை நல்லாளின் நாவில் உருண்டது ஸ்ரீ ராம நாமம்,ராமா, ராமா, ராமா, ராமா!

"ஆபதாமபஹர்த்தா:" ஆபத்துகளை அபஹரிப்பவன் அந்த ராம்பத்ரனேயல்லவா? ராம நாமம் காதில் மோதும் நினைவோடு, பாறை பாறையாய்  மோதி செல்லும் காருக்குள் இருந்த தலைவர் நினைவிழந்தார். மீண்டும் பிரக்ஞையுற்றபோது தாம் சமநிலத்தில் நீள நெடுக படுத்து இருப்பதை உணர்ந்தார். உடம்பில் வலியா காயமா எதுவும் இல்லை. பக்கத்திலேயே ஒரு பாறை ஸவஸ்தமாக முட்டுக் கொடுக்க அதில் சாய்ந்தவாறு மனைவி காணப்பட்டாள். அவளுக்கு உயிர் இருக்கிறதா என்று எண்ணியபோதே அவளும் பிரக்ஞைனையுற்று  கண்ணை திறந்து பார்த்தாள்.

என்ன ஆச்சரியம்! அவளுக்கும் வலியில்லையாம் காயம் இல்லையாம். தூரத்தில் எங்கோ, அறுவடையான வயலில் இவர்களது கார் அடியோடு ரூபம் தெரியாமல் வளைந்த இரும்பு தகடுகளாக தெரிந்தது. அதிலிருந்து இவர்களை யார் எடுத்து இத்தனை அழகாக படுத்தவும், உட்காரவும் வைத்தது? "ராமா, ராமா" என்றாளே அவன் தானா? யார்? யார்?

நான்தான் என்று ஸ்பஷ்டமாகச் சொன்னார் சாய்ராமர்- இதற்கு சில மாதங்களுக்குப் பின்னால்!

அப்போது ஒரு நகரத்துக்கு இந்த அரசியல் தலைவர் சென்றிருந்தார். தமக்கே ஏனென்று தெரியாமல், அங்கு பாபா பேசவிருந்த ஒரு பொதுக்கூட்டத்திற்கு சென்றார். இவர் வரப்போவதை பாபா நன்றாக அறிந்திருக்கிறார் என்று அங்கே தெரிந்தது. வரவழைத்தவர் அல்லது வர இழுத்தவர் அவர்தானே? சேவக் ஒருவர் இவரிடம் வந்து சுவாமி உங்களை அடையாளம் சொல்லி முன்வரிசையில் உட்கார்ந்து வைக்கச் சொன்னார் என்று சொல்லி அழைத்து போய் அமர்த்தினார்.

கூட்டத்துக்கு வந்த கூத்தபிரான் இவர் முன் வந்ததும் நின்றார். அச்சா வந்துவிட்டீர்கள்! உங்கள் லைப்புக்காக நீங்கள் ஒய்ஃபை தாங்க்  பண்ணவேண்டும். அவர் என்னை கூப்பிட்டிரா  விட்டால் நீங்கள் இன்று உயிரோடு இருக்க முடியாது. நான் தான் உங்கள் இருவரையும் காயம் படாமல் காத்து காரில் இருந்து எடுத்து ஸ்வஸ்தமாக வெளியே சேர்த்தது .நீங்கள் என்னை நினைக்காவிட்டாலும் இதற்கு முன் பல முறை உங்களுக்கே தெரியாமல் உங்கள் உயிரை காப்பாற்றி இருக்கிறேன். இப்படி சொல்லித்தான் முத்தாய்ப்பாக ஏர் ரைட் வார்டன் ஞாபகம் இருக்கா? என்று முடித்தார்.

நாம மகிமையையும் மனைவியின் பக்தி பெருமையையும் இவருக்கு உணர்த்தவே இங்கே பகவான் இவர் மனைவிக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றும் அந்த அம்மாள் எழுப்பிய நாம சப்தமே தமது ரக்ஷணை ஈட்டிக் கொடுத்தது என்றும் கூறியிருக்கிறார். லண்டன் குண்டுவீச்சில் இவருடைய மனைவி பக்கத்தில் இருந்தாரா? இவரேனும் எவரேனும் அப்போது நாமத்தால் பரமனை அழைத்தனரா? விபத்து வர இருப்பதையே அறியாமல் தூக்கத்தில் நழுவிக்கொண்டிருந்தவரை அல்லவா சுவாமி அன்று வார்டனாக சென்று காத்தார்?

ஆதாரம்:  அற்புதம் அறுபது, ரா. கணபதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக