தலைப்பு

சனி, 7 நவம்பர், 2020

ஸ்ரீ சத்ய சாயி எனும் பன்முகப் பரிமாண பகவான் - ஆடிட்டர் S. குருமூர்த்திசுவாமி இறைவன். அதுவும் பன்முகப் பரிமாணம் கொண்ட பிரபஞ்சப் பரம்பொருள். சுவாமி எனும் இறைவனால் மட்டுமே முடிகிற பேராற்றல் என்பது அவரின் கல்யாண குணங்களில் ஒன்று. அதை நேரில் அனுபவித்து வியந்து பரவசத்தில் துதிக்கிறார் பிரபல ஆடிட்டரும் / எழுத்தாளரும் .. தற்போதைய துக்ளக் இதழின் ஆசிரியருமான திரு.குருமூர்த்தி அவர்கள்.. அவரின் நேரடி  பரவச அனுபவ ரிப்போர்ட் இதோ..

திரு. ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்... 

“தேசம் ஆபத்தில் உள்ளது; நீங்கள் ஸ்வாமியை சந்திக்க வேண்டும்” என்று ஒருவர் அமெரிக்காவில் இருந்து பல மாதங்களாக என்னை அழைத்து கூறியது தான் ஸ்வாமியுடனான எனது முதல் அனுபவத்திற்கு காரணமாக இருந்தது. 

“எனக்கு தெரிந்து, ஸ்வாமி நினைக்காமல் அவரை நானோ எவரோ சந்திப்பது என்பது இயலாது. நாம் அவரை சந்திக்க வேண்டுமென அவர் விரும்ப வேண்டும்” என நான் அவரிடம் கூறினேன்.


ஆனால் அந்த நபர் என்னை விடுவதாயில்லை. “இந்திய விமானபடையில் தொடர்ந்து விபத்துக்கள் நடக்கின்றன. எம்.ஐ.ஜி வீரர்கள் கிட்டத்தட்ட மாதம் ஒரு விபத்தில் சிக்குகிறார்கள். 18 மாத காலகட்டத்தில் குறைந்தது 14 வீரர்கள் விபத்தில் சிக்கியுள்ளார்கள், பல பைலட்டுகள் மரணமடைந்திருக்கிறார்கள்.” என கூறிய அந்த அமெரிக்க நபர் இது நிறுத்தப்பட வேண்டுமென்றும், அதற்கு விசித்திரமான காரணத்தையும் கூறினார். 

தேச விரோத சக்திகளால் இந்திய விமானப் படைக்கு செய்யப்பட்டுள்ள செய்வினையே விபத்துக்களுக்குக் காரணமென அவர் கூறினார். செய்வினைகளைப் பற்றி அளவற்ற பரிசோதனைகள் செய்துள்ளதாகவும், இதனை நிறுத்தக்கூடிய ஒரே நபர் ஸ்வாமிதான் என்று கூறினார். “நீங்கள் ஸ்வாமியை சந்திக்க வேண்டும். நீங்கள் உங்களை ஒரு தேசியவாதி என கூறிக்கொள்கிறீர்கள் ஆனால் இதை செய்ய மாட்டேன் எங்கிறீர்களே” என்றார்.


3-4 மாதங்கள் ஒவ்வொரு 3ம் 4ம் தேதிகளில் அமெரிக்காவில் இருந்து அவர் அழைத்துக்கொண்டே இருந்தார். எனது நண்பர் திரு. வேணு ஸ்ரீனிவாசன் அவர்களிடம் ஸ்வாமியை சந்திக்க ஏற்பாடுகள் செய்யக் கேட்டுக்கொண்டேன். ஏனெனில் அவரால் மட்டுமே அதனை செய்ய முடியுமென நான் எண்ணினேன். நான் அவரிடம் ‘வேணு, அவரை எப்படி தவிர்பதென தெரியவில்லை. அந்தளவு அழுத்தம். ஆயினும், பல போர் விமான விபத்துகள் நடப்பதும் உண்மையே” என்றேன். 

“ஸ்வாமி உங்களை பார்ப்பாரா எனத் தெரியவில்லை, இருப்பினும் தயாராக இருங்கள். நாம் தினமும் காலை மாலை தரிசனத்திற்கு செல்வோம். உங்கள் நண்பர் சொல்லியது உண்மையெனில், அதனை உங்கள் மூலம் தான் அவர் அறிய வேண்டுமென இருந்தால், நிச்சயமாக பகவான் உங்களை அழைப்பார்” என திரு. வேணு ஸ்ரீனிவாசன் கூறினார்.

“நான் சாதரணமானவன். நிச்சயமாக ஸ்வாமி அழைப்பார்” என நான் கூறினேன்

முதல் நாள், ஸ்வாமி கவனிக்காமல் கடந்து சென்றார். நான் ஏமாற்றமடைந்தேன். ஆனால், மறுநாள் ஸ்வாமி வந்த போது, வேணுவை எழுப்பினேன். அவரும் ஸ்வாமியிடம், ‘ஸ்வாமி, எனது நண்பர் தேச நலனுக்கு முக்கியமான ஒரு விஷயத்தை தங்களிடம் தெரிவிக்க வந்துள்ளார்.“ என கூற, அதிர்ஷ்டவசமாக ஸ்வாமியும் எங்களை உள் செல்லுமாறு பணித்தார்.

அறையில் பலர் இருந்தனர், அனைத்தையும் நான் உன்னிப்பாக கவனித்தேன். எனக்கு ஸ்வாமியைப் பற்றி எதுவும் தெரியாது; எந்த அனுபவமும் இல்லை; ஏதோ சில விஷயங்களை மட்டுமே கேள்விப்பட்டுள்ளேன். அவரது அற்புதங்களைப் பற்றி ஏதோ சிறிது அறிந்திருந்தேன்.

பலருக்கு பல பொருட்களை ஸ்வாமி சிருஷ்டித்துக் கொடுத்தார். சற்று பருமனான ஒருவருக்கு பெரிய மோதிரம் ஒன்றை வரவழைத்து கொடுத்தார். மற்றொருவருக்கு சின்ன மோதிரம் ஒன்றை வரவழைத்தார். “எப்படி அவரது சிருஷ்டிகள் சரியாக பொருந்தக் கூடிய அளவாக இருக்கிறது?” என எண்ணம் மனதில் தோன்றியது. 

திடீரென ஸ்வாமி என்னை அழைத்து எனக்கும் ஒரு மோதிரம் வரவழைத்து கொடுத்தார். சரியாக பொருந்தியது அது.

என்னை நோக்கி “சரியாக பொருந்தி உள்ளதா?” எனக் அவர் கேட்டது, என் மன ஓட்டத்தை அவர் அறிந்திருக்கிறார் என்பதை காட்டியது. 


உடன் நான் ஸ்வாமியிடம். “ஸ்வாமி, முக்கியமான விஷயம் ஒன்றை உங்களிடம் கூற வேண்டும்” என கூறினேன். உடனே நானும் வேணுவும் உள் அறை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நான் ஸ்வாமியிடம் அமெரிக்க அன்பர் (நான் முன் பின் அறிந்திராதவர்) கூறிய செய்தியை பகிர்ந்தேன். எப்படி எனது தொலைபேசி எண் அவருக்கு கிடைத்து என்பதும் தெரியவில்லை. 

“அவர் மிகுந்த அழுத்தத்தோடு இருப்பதுடன், எனக்கும் அழுத்தம் கொடுக்கிறார். தங்களால்தான் இதிலிருந்து காப்பாற்ற முடியும் எனக் கூறுகிறார்” என ஸ்வாமியிடம் கூறினேன்.

இதனை கேட்டவுடன் ஸ்வாமி, சிறிது நேரம் கண்ணை மூடி சிந்தனையில் ஆழ்ந்தார். பின் என்னிடம், “அந்த நபர் என்ன சொல்ல எண்ணினாரோ அதனை நான் அறிந்து கொண்டேன். இனி அதனைப் பற்றி மறந்து விடுமாறு உன் நண்பனிடம் சொல்” என கூறினார்.

சிறிது நேரம் கழித்து, “பிரசாதம் தருகிறேன். உன் நண்பரிடம் கொடுக்கவும்.” என்றார். பெரிய வைர மோதிரம் ஒன்றை சிருஷ்டித்தார். அதனை அணியப் போகும் அமெரிக்க நபரை எனக்குத் தெரியாது. காரணம் போனில் மட்டுமே அவருடன் பேசியிருகிறேன். இவையெல்லாம் நடந்தது 2003ம் வருடம்.

வீடு திரும்பியதும், அன்று இரவே அந்த அமெரிக்க அன்பர் என்னை அழைத்தார். ஸ்வாமி அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டார் என்றும் அவருக்கு பிரசாதம் அனுப்பியுள்ளார் என்றும் கூறினேன். அடுத்த 72 மணி நேரத்தில் என் வீட்டை அடைந்தார் அவர். அவர் ஆஜானுபாகுவாக, 6 அடி உயரம் இருந்தார். ஸ்வாமி அளித்த மோதிரம் அவருக்கு மிகச் சரியாக பொருந்தியது. இவையெல்லாம் சாதரண மனதிற்கு புரியாத ஒன்றாக இருந்தது. 

எல்லா பரிமாணங்களும் சேர்ந்த ஒரு அதிசயம் ஸ்வாமி! நீங்கள் பல பரிமாணங்கள் கொண்டவராக இருந்தாலும் அவரை எந்த தனி பரிமாணத்துடனும் காண முடியாது. இதுவே எனக்கு கிடைத்த முதல் செய்தி! 

ஆதாரம்: 2014 ஏப்ரல் 24, ஸ்ரீ சத்ய சாயி ஆராதனா மஹோத்ஸவத்தின் போது பிரசாந்தி நிலையத்தில் ஆற்றிய சிறப்புரையில் இருந்து.. 


🌻 இதில் மிக விசேஷமானது எதுவெனில் அந்த ஆறடி மனிதருக்கு ஒரு சத்தியம் புரிந்திருந்ததே.. அதாவது தேசத்திற்கு ஒரு ஆபத்து நேர்ந்திருக்கிறது .. அதை சுவாமியால் மட்டுமே தீர்க்க முடியும் என்று உணர்ந்தார் அல்லவா... அது தான்.. உள்ளுணர்வு சத்தியம். தலைவர்களால் அல்ல.. இறைவன் சத்யசாயியால் மட்டும் தேசத்தையும்.. மனிதனின் சுவாசத்தையும்.. உலக நேசத்தையும் காப்பாற்ற முடியும்!! 🌻


1 கருத்து: