தலைப்பு

ஞாயிறு, 29 நவம்பர், 2020

தன்னை பல்வேறு ரூபமாக்கி புட்டபர்த்தியில் தரிசனம் கொடுத்த வொயிட்ஃபீல்ட் சாயி!

இறைவன் ஸ்ரீகிருஷ்ணனே இறைவன் ஸ்ரீ சத்யசாயி என்பதற்கு ஏராளமான அனுபவ சான்றுகள் இன்றளவும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.. அப்படி ஓர் மெய் சிலிர்க்கும் அனுபவம் .. வியப்பே வியக்கும் வண்ணம் அதை அனுபவித்த பலரில் சென்னையை சார்ந்த K.P ராமனாதனும் ஒருவர். அவரின் பேராச்சர்ய அனுபவம் இதோ... 


ராமநாதன் அவர்களுக்கு இளம்வயது முதல் சுவாமியை பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாமலேயே இருந்திருக்கிறது. 60களில் ஒரு வியாழக்கிழமை இவருக்கு திருமணம் நிகழ்கிறது. அன்றே சுவாமி தான் அறியா வண்ணம் தன் வாழ்வில் நுழைந்து விட்டதாக உரைக்கிறார்.

பொறியியல் பட்டபடிப்பு முடித்து தனியார் கம்பெனியில் வேலை புரிந்து பிறகு சொந்த தொழிற்சாலை ஆரம்பிக்கிறார் இவர். ராகா இன்டஸ்ட்ரீஸ். இசைக்கு மயங்கும் இறைவன் ராகாவிற்கு இசைவு தெரிவிப்பது போல்.. 80'களின் வாக்கில் இவருக்கு ஓர் கடிதம் வருகிறது. 


புட்டபர்த்தி சத்யசாயி உயர்கல்வி நிலையத்திலிருந்து வந்த கடிதத்தில் உபகரணங்கள் வாங்க வேண்டியதைக் குறித்து இவரிடம் கலந்தாலோசிக்க அழைப்பு விடுக்கிறது கல்லூரி (1982). தொழில்முறைக்காக பர்த்தி வருகிறார் ஒரு திங்கட் கிழமை. கிருஷ்ணா லாட்ஜில் தங்கி காலை சிற்றுண்டி வரை முடித்து ரெடியாகிறார். லாட்ஜின் உரிமையாளரோ கல்லூரி 10 மணிக்கே திறக்கும் என சொல்ல.. இவரோ மீதமுள்ள இரண்டு மணிநேரத்தை கழிக்க கணேஷ் கேட் வழியாக உள்ளே நுழைகிறார். இதுவரை அவர் சுவாமியை கேள்விப்பட்டது கூட இல்லை. 

மந்திரில் செல்ல விளைகையில் ஒரே திரளான கூட்டம். சிலர் சக்கர நாற்காலியிலும் அமர்ந்திருந்தனர் தரிசனத்திற்காக.. 

அவர்களோடு இவர் அமர்கிறார்.

ஆரஞ்சு அங்கி.. ஆரா கேசம்.. தேஜோ மய ரூபம் மெது மெதுவாய் மலரே கால் எடுத்து அன்னநடை பயில மணம் வீசி வருவதைப் போல் அருள் கமழ மிதந்து வருகிறார் சுவாமி.ராமநாதனோ யார் இவர்? என தன் தரிசன அருகில் இருந்த ஒருவரை விசாரிக்கிறார். இவர் தான் சத்யசாயிபாபா என்கிறார் அவர். 

ஓஹோ இவர் தான் சாயிபாபாவா என நினைக்கிறார். அந்த நொடி சுவாமி இவரை உற்று நோக்குகிறார். அழைக்கிறார். இவர் ஏதும் புரியாமல் அருகே செல்ல.. சுவாமி ஒருவரிடம் ஒன்று கை அசைத்து கேட்க..  சிறு கவர் ஒன்றை அவர் தருகிறார். அதை சுவாமி தன் திருக்கரங்களால்  ராமனாதனிடம் தர.. இவரும் வாங்கிக் கொண்டு லாட்ஜ்'ஜில் தன் அறைக்கு வந்துவிடுகிறார். அந்தக் கவர் என்னவாக இருக்கும்.. தொழில்முறை அழைப்புக்கான படிவமா..?

இல்லை என்ன instruments வேண்டும் என்பதற்கான லிஸ்ட்டா? என மெதுமெதுவாக யோசித்தபடி பிரிக்கிறார்.

அதில் சுவாமியின் திருவுருவப்படம்.

சுவாமி தன் ஒரு கரத்தின் மேல் இன்னொரு கரம் வைத்திருப்பதான அபூர்வப் படம்.

திரு. ராமநாதன் அவர்களுக்கு சுவாமி கொடுத்த புகைப்படம் இதுதான்

சரி என்று நேராக கல்லூரிக்கு வருகிறார்.  

பேரா.மகாஜன் அவர்களை சந்தித்து தொழில்முறை உரையாடல் நிகழ்த்த.. 

மகாஜனும் மகிழ்ந்து instruments ஆர்டர் தர... இறுதியில் இவரிடம் இப்போது சுவாமி வொயிட் ஃபீல்ட்டில் இருப்பதால் உங்களால் இந்தமுறை சுவாமியை தரிசிக்க இயலாது.. அடுத்தமுறை நீங்கள் வருகையில் தரித்துக் கொள்ளுங்கள் என்கிறார்.

அதற்கு ராமனாதன் அதிர்ச்சியாகிறார்..

என்ன பாபா பெங்களூர் வொயிட் ஃபீல்டில் இருக்கிறாரா? என்ன சொல்றீங்க சார்..

இப்போ தானே அவர பாத்துட்டு வந்தேன்.. ஒரே கூட்டம். ஒரு கவர் கூட கொடுத்தாரே என அதைக் காட்டுகிறார்.


மகாஜன் முதலில் நம்பவில்லை.. பிறகு இவர் கொடுத்த கவரை பார்த்த பிறகு அவருக்கு மெய் சிலிர்க்கிறது. என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

கேட்ட அடியேனுக்கும் அப்படியே.. இதோ இதனை வாசிக்கும் உங்களுக்கும் அப்படியே...

ஆம்!! சுவாமி தன்னை தரிசன கூட்டமாகவும் தன் திவ்ய உருவத்தை விரிவுப்படுத்தியும் இவருக்கு தரிசனம் அளித்திருக்கிறார். அது கனவல்ல .. காரணம். சுவாமி தந்த கவர் இவரின் கையிலேயே இருக்கிறது‌ . மேலும் அப்போது ராமனாதன் சுவாமி பக்தரும் அல்லர்.

வியப்பாக இருக்கிறதா? வியக்க ஒன்றுமில்லை..

சுவாமிக்கு இது சர்வ சாதாரணம்‌. காரணம் சுவாமி இதை துவாபர யுகத்திலேயே நிகழ்த்தி இருக்கிறார்.


சுவாமி தன் கிருஷ்ண அவதாரத்தில் அகாசுர வதம் முடித்த வண்ணம் அதை வியந்த பிரம்மா மேலும் சுவாமி லீலை காண எண்ணி சுவாமியின் மேயும் பசுக்களையும் .. தோழமை சிறுவர்களையும் கவர்ந்து செல்கிறார். என்ன செய்யப் போகிறார் சுவாமி என்பதை காண..

சுவாமியோ பிரம்மாவின் செயல் உணர்ந்து மிக கூலாக தன்னையே ஆயர் சிறுவர்களாகவும் பசுக்களாகவும் உருவ விரிவை ஏற்படுத்தி விருந்தாவனம் வருகிறார். ஒரு கணத்தில் பிரம்மா தன் தவறை உணர்வது பூலோகத்தில் ஒரு வருட காலம் ஆகிறது.

ஒரு வருட காலமாக சுவாமியே அத்தனை ரூபங்களாக செயல்படுகிறார். 

அந்த பெருஞ்சக்தியின் பெயர் தெரியுமா?

பரஸ்ய ப்ரஹ்மண சக்தி.

(ஆதாரம்: கிருஷ்ணர் - பக்கம் 132.. ஆசிரியர் : பிரபுபாதா)

அந்த பரஸ்ய ப்ரஹ்மண சக்தி ரூபரே இறைவன் சத்யசாயி கிருஷ்ணர். அதையே மீண்டும் கலியுகத்திலும் நிகழ்த்துகிறார்.

பிறகு.. ராமனாதன் அவர்களின் தொழில்முறை சேவையும் செயல்பாடும் தொடர்கிறது. 

சுவாமியை மீண்டும் தரிசனம் செய்கிறார்.

அந்த தரிசனத்தில் சுவாமி இவரிடம் நேராக வந்து..

"Start Singing" என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்.

இவர் அதுவரை பின்பாட்டு பாடுவதே வழக்கம். தன் சென்னை நங்கநல்லூர் - வெஸ்ட் சமிதியில்.. நண்பரும்/ எழுத்தாளரும் /  பழுத்த சுவாமி பக்தருமான குஞ்சிதபாதம் சாயி ராமின் வேண்டுகோளின் பெயரில் சமிதி செல்ல ஆரம்பித்தவர் சுவாமியின் இந்த மொழி கேட்டு புதிரானார். 


அதன் தொடர்ச்சியாக இவர் வீட்டில் பஜன் வைக்க ஏற்பாடாகிறது .. விநாயகர் பாடலை கற்றுக் கொள்ளும்படி நண்பர் அறிவுறுத்த.. இவர் பாட ஆரம்பிக்க.. சுவாமி சொல்வதெல்லாம் நிகழ..சுவாமி பக்தி இவருக்கு ஆழமாகிறது. சமிதியிலும் விநாயகர் பாடலை தொடர்கிறார். அதை அங்கீகரிக்கும் விதம் வீட்டில்  விபூதி பொழிகிறது. நெகிழ்வின் முகட்டில் சென்றுவிட்டு சாயி ராம் என கூக்குரல் எழுப்புவதைப் போல உள்ளம் உருகுகிறது இவருக்கு...

மகன் சதீஷ் சுவாமி கல்லூரியில் பயில்வதற்கு விண்ணப்பிக்க.. சென்னையிலிருந்து சென்ற மாணவர்களில் சதீஷ் மட்டுமே புட்டபர்த்தி கல்லூரியில் தேர்வாக (அவர்களில் சிலருக்கு.. வொயிட் ஃபீல்ட்'டில் இடம் கிடைக்கிறது) வியக்கிறார் ராமனாதன்.

பகவானுடன் திரு. ராமநாதன் அவர்களின் புதல்வர் சதீஷ்

ஒருநாள் மகன் சதீஷ் உடல்நிலை மிக மோசமாக.. attendance இல்லாத காரணத்தினால் (பாதி நாள் சத்ஷ் மருத்துவமனையில் என்பதால்) தேர்வு எழுத விடமாட்டோம் என்கின்றனர் சுவாமி கல்லூரி நிர்வாகிகள்‌. பலர் ஏற்கனவே இவருக்கு பல ஆண்டாக அறிமுகமானபடி.. இரக்கத்தின் அடிப்படையில் 15 நாள் விடுப்பு தந்து சென்னைக்கு அனுப்புகின்றனர். நீர் கோர்த்திருந்திருப்பதை அகற்ற என்டோஸ்கோப்பி எனில் 2 மாத கால ஓய்வு தேவை என சென்னை மருத்துவர் உணர்த்த.. சில மாத்திரையோடு சுவாமி மேல் பாரத்தை போட்டு பர்த்திக்கே வருகின்றனர் சதீஷும் .. ராமனாதன் அவர்களும்.

அந்த தரிசனத்தில் சுவாமி நடந்து வர.. தடுக்கி விழுவதைப் போல் சுவாமி ஒரு லீலா நாடகம் அரங்கேற்றுகையில் balance செய்வதற்காக சுவாமியோ சதீஷின் தலையை தொடுக்கிறார்.. சதீஷோ தலைவலியில் தவித்திருந்த சமயம் அது..

உடல் வியர்த்து போகிறது. தான் பூரண குணமாகிவிட்டோம் என்ற உணர்வு கூட இல்லை. மறுநாளே அதனை உணர்ந்து பூரிப்படைகிறார்.

சுவாமி செய்த அந்த Balancing அவருக்கானது அல்ல சதீஷுக்கானது.

சுவாமியாவது தடுக்கி விழுவதாவது.. அவர் நம்மை தான் அவர் பக்தியில் தடுக்கிவிழ வைப்பவர்! மேலும் பாரத்தை சுவாமியின் தலையில் போட்டுவிட்டால் அதை சுவாமி ஏற்று தன் கையால் நம் தலையைத் தொட்டு விதியை மாற்றி எழுதிவிடுகிறார்.

அந்த என்டோஸ்கோப்பிக்கும் End card தந்துவிடுகிறார். நோய் இருந்த இடம் தெரியாமல் விட்டால் போதும் என தப்பித்து ஓடி விடுகிறது.

திரு. ராமநாதன் தனது மேலாளருடன்.. 

ஒருமுறை புட்டபர்த்தி கல்லூரியில் வரவேண்டிய பணம் குறித்து ராமனாதனின் ராகா இன்டஸ்ட்ரீஸ் நபர்கள் இவரிடம் கலந்தாலோசிக்க.. எவ்வளவு தாமதமானாலும் ஆகட்டும்.. சுவாமி கல்லூரியினரிடம் எதையும் கேட்க வேண்டாம் என உறுதியாகச் சொல்லிவிடுகிறார்.

அன்று இவர் வெளியே செல்ல.. மீண்டும் தன் தொழிற்சாலையில் நுழைய அது அல்லோல கல்லோலப்படுகிறது.

இவர் வைத்திருக்கும் சுவாமி படங்களுக்கு முன் கற்கண்டுகள் சிதறிக்கிடக்கின்றன.. அங்கிருப்பவர்களுக்கு அமானுஷ்ய பயம் ஏற்படுகிறது.

பிறகு சுவாமி படத்திலும் கற்கண்டு பரவி இருக்க.. அன்றே இவருக்கு வரவேண்டிய சுவாமி கல்லூரி செக்'கும் வந்து சேர்கிறது.

கல்கண்டு இனிப்போடு பணச் செக்கும் (16,000ரூ) சுவாமி தன் பிறந்தநாள் பரிசாக அளித்திருக்கிறார். ஆம் அன்று சுவாமியின் அவதாரத் திருநாள்.

80 களில் இருந்து 90 கள் வரை தன்னால் மறக்க இயலாத தங்கமயமான காலங்கள் என்கிறார் தற்போது 80 வயதை அடைந்த பழுத்த பக்தரான ராமனாதன் சாயிராம்.. 


சுந்தரத்தில் சமிதி வழி பாடியும் சுவாமியை ஆராதித்து வருகிறார்.

சுவாமி ஒவ்வொரு நொடியையும் தங்கமயமான நொடியாகவே மாற்றி.. பல பக்தர்களுக்கு தன் தெய்வீக இருப்பை உணர்த்தி.. அருட்காவலை நிகழ்த்தி பேரானந்த நிலையை வழங்கிக் கொண்டே இருக்கிறார் என்பது நிதர்சன சத்தியம்.

சுவாமி அன்று ராமனாதன் அவர்களிடம் "Start singing" என்று சொன்னது அடியேன் காதில் "Start Sinking" என்றே விழுந்தது..

ஆம் நாம் அனைவரும் சத்யசாயி கிருஷ்ணரின் மேலான பக்தி சாகரத்தில் மூழ்கவே பிறவி எடுத்திருக்கிறோம்.


  பக்தியுடன் 

வைரபாரதி

1 கருத்து: