இல்லை அப்படி இல்லை. நீங்கள் யாரை குரு உருவங்களாக நினைத்து இப்படி பேசுகிறீர்கள் என தெரியவில்லை.
இன்றைய குருமார்களுக்கு எல்லா சக்திகளும் உண்டென்றும், யாவும் அவரே என்றும் நினைத்துவிடக் கூடாது என்கிறார் சுவாமி.
நீங்கள் யோகா சொல்லித் தருபவரை குரு என்கிறீர்களா இல்லை வழிபாட்டு வழிமுறைகள் கற்றுத் தருபவரை குரு என்கிறீர்களா? தெரியவில்லை.
அப்படிப் பார்த்தால் நமக்கு ஆரோக்கிய வழிகாட்டியான மருத்துவரையும்.. சட்டரீதியாக வழிகாட்டும் வக்கீல்களையும் சமூக பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்களையும் புகைப்படங்களாக நாம் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறோமா? இல்லை. அது பெரிய தவறும் கூட..
குருவுக்கு நன்றியுடன் இருப்பதும் .. மரியாதை காட்ட வேண்டும் என்பதும் அவசியமே என்கிறார் சுவாமி. ஆனால் தற்கால கலியுகத்தில் யார் குரு என்பது தான் பிரச்சனை..
ஞானம் அளிக்கிறேன் என கட்டணம் வசூலிப்பவர் குருவா?
சைவ /வைணவ பேதம் கற்பிப்பவர் குருவா?
வெறும் சடங்குகளை மட்டும் சொல்லித் தருபவர் குருவா? என ஆழ்ந்து உணர வேண்டும்.
பெரியவர்கள் கூறிய குருமார்களை இப்போது காண்பது அரிது என்கிறார் சுவாமி.
குரு பிரம்மா குரு விஷ்ணு என்ற மந்திரத்தின் பொருளை குரு தான் பிரம்மா .. குரு தான் விஷ்ணு என மாற்றிப் புரிந்து கொண்டிருக்கிறோம்.
உண்மையில் பிரம்மா தான் குரு .. விஷ்ணு தான் குரு.. மஹாதேவனே குரு.. அந்த குருவே பரப்பிரம்மம் என்பதே சரியான மந்திர விளக்கம்.
சுவாமி விவேகானந்தர் என்ற பெயருக்கு நம் சுவாமி தான் விவேகானந்தர் என்று பொருள் கொள்வது தவறல்லவா..
விவேகானந்தர் ஒரு சுவாமிஜி என்ற பொருளே சரி.. டாக்டர் காடியா என்றால் காடியா ஒரு டாக்டர் என்பதே சரி. அதைப்போல் குரு பிரம்மா என்றால் பிரம்மா என்பவர் குரு என்பதே சரியான பொருள்.
ஆக தெய்வமே குருவாக இருக்கிறது.
குரு என்ற இருள் நீக்கி சுவாமி ஒருவரே.
அவரே சத்குரு / ஜகத்குரு இதில் குழப்பமடைய ஏதுமில்லை.
அவரே கீதை உபதேசித்து கிருஷ்ணம் வந்தே ஜகத் குருவாக விளங்குகிறார்.
தக்ஷிணா மூர்த்தியான சிவ அம்சமே இறைவன் சத்யசாயி.
சுவாமி துவாபர யுகத்தில் அவதரிக்கிற போது "ஸத்யம் பரம்" என்றே தேவர்கள் துதிபாடி அழைத்தார்கள். அந்த
"உன்னதமான பூரண சத்தியமே" சத்ய நாராயணன் எனப் பெயர் தாங்கி கலியுகத்தில் சத்யசாயியாக மீண்டும் அவதரித்தது.
"பக்தித் தொண்டை மேற்கொள்ளாதவர்கள் அறிவின் இறுதி இலட்சியத்தை உணராதவர்கள் ஆகையால் உமது கருணைக்கு பாத்திரமாக மாட்டார்கள்" என நாரத முனிவர் பாகவதத்தில் கூறி இருக்கிறார்.
ஆகவே தான் பக்தியோடு சேர்ந்து பக்தி ததும்ப சேவையையும் இணைத்து நம்மை சேவாதளராக உருமாற்றி சேவையையும் சாதிக்க வைக்கிறார்.
கிருஷ்ண அவதாரத்தில் /உபதேசத்தில் / செயல்முறையில் இம்மி அளவிற்கு குறைவில்லாதது சத்யசாயியின் அவதாரம் / உபதேசம்/செயல்முறை.
பிரம்ம சம்ஹிதை "உயிர்வாழிகளுக்கு எல்லாம் அவர் வயதில் மூத்தவர் என்றாலும் அவர் புத்தம் புது இளைஞரின் நிரந்தர இளமையுடன் கூடிய வடிவை உடையவர்" என்கிறது.
அப்படி இக்கலியில் அதே கார்குழலோடு.. சின்னஞ்சிறு உருவாக இருப்பவர் இறைவன் சத்யசாயி ஒருவரே!
ஆக அந்த சத்யசாயி இறைவனே நமது பரமார்த்த குருவும் ஆகிறார் என்பதை நெஞ்சில் நிறுத்த வேண்டும்.
சுருக்கமாக தாயை / தந்தையை முதலில் வழிபட வேண்டும் என்கிறார் சுவாமி.
இக்காலத்து வழிகாட்டிகளின் மேல் மரியாதையும்.. நன்றியும் வைத்துக் கொள்ளலாம் தவறில்லை.
ஐந்தொழிலை (படைத்தல்/அழித்தல்/காத்தல்/மறைத்தல்/அருளல்) ஆற்றும் இறைவனாகிய சத்யசாயியையே தியானித்து அவரையே நாம் வழிபட வேண்டும்.
இதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை.
"இறைவனை தவிர ஏனையோர்க்கு அவரவர்க்கு ஏற்ற தகுதியைத் தான் அளிக்க வேண்டும்.
தாய் தாய் தான். தந்தை தந்தை தான். குரு குரு தான்.. உண்மையில் இவை யாவும் ஒன்றல்ல.. இறைவனையே முன்னிறுத்தி தியானிக்க வேண்டும். அப்படி செய்தாலே ஆத்ம சாட்சாத்காரம் வரும் என்கிறார் சுவாமி.
சுவாமி இறைவன் என்பதற்கான போதுமான சான்றுகளும் இப்பதில்களில் வழங்கப்பட்டிருக்கிறது.
நீர்க்குமிழியை முத்தாக.. முத்தை நீர்குமிழியாகக் கொள்ளாதே என்கிறார் சுவாமி.
இக்காலக்கட்டத்தில் தன்னை குருவாக "காட்டிக் கொள்பவர்களிடம்" நாம் அனைவரும் கவனமாகவே இருக்க வேண்டும்.
ஆத்மா/இறைவன்/குரு மூன்றும் ஒன்றே என்கிறார் பகவான் ரமணமகரிஷி.
ஆக இறைவன் சத்யசாயியையே வழிபட்டு பிறவாமை எனும் எல்லையை சுவாமியின் கருணையினாலேயே அடைவோம். மற்ற எவ்வழியும் சுற்றலில் நம்மை சிக்க வைத்து விடும் என்பதையும் ஆழ்ந்து உணர வேண்டும்!
(ஆதாரங்கள்: சந்தேக நிவாரணி -ஆசிரியர் ஸ்ரீமான் கஸ்தூரி / ஸ்ரீ கிருஷ்ணா - ஆசிரியர் பிரபுபாதா)
வாழ்க்கை என்பது தினசரி திருவிழா..
நேரடியாக சன்னதிக்கு செல்லாமல்.. அங்காடித் தெருக்களிலும்.. ரங்க ராட்டின வேடிக்கை விளையாட்டிலும் நேரத்தை விரயமாக்காமல்.. நம்மையே நாம் தொலைக்காமல்.. சுவாமியையே சரணடைந்து ஆத்ம சாதனை புரிந்து வீடுபேறு அடைவோம்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக