தலைப்பு

வெள்ளி, 13 நவம்பர், 2020

இறைவனுக்கான இலக்கணத்தை ரிஷிகள் வகுத்திருப்பார்களே.. அந்த இலக்கணத்திலும் உங்கள் சத்யசாயி பொருந்தி இருக்கிறாரா?


ஆம்! ரிஷிகள் வகுத்திருக்கிறார்கள். அதிலும் நூற்றுக்கு ஆயிரம் சதவிகிதம் இறைவன் ஸ்ரீ சத்யசாயி பொருந்தி இருக்கிறார். 

இறைவனுக்கான குணங்கள் / அம்சங்கள் இத்தகையன என ரிஷிகள் எழுதி வைத்திருக்கிறார்கள். தியானத்தில் உணர்ந்து கொண்டபடி இறைவனின் குணங்களை / வியாபகத்தை / பேராற்றலை ஆறுவிதங்களாக ரிஷிகள் பிரிக்கிறார்கள்.

அவை

1.செல்வம்

2.வலிமை

3. புகழ்

4. அழகு

5. அறிவு

6. துறவு என்பன 

இந்த ஆறு அம்சங்களும் ஒன்றிணைந்திருப்பது எந்த மனிதனுக்கும் இல்லாத ஒரு பேருயர் நிலை.

செல்வத்தையும் வைத்து எவ்வாறு துறவு நிலையில் மனிதனால் இருக்க முடியும்?

அழகிருந்தால் அறிவிருக்காது கர்வமே இருக்கும்.

அறிவிருந்தால் அகந்தையும் / தர்க்க புத்தியும் / வறட்டு வாதமும் கூடவே ஒட்டிப் கொள்கிறது. 

துறவைத் தவிற மேலே எடுத்துச் சொல்லப்பட்ட ஐந்து அம்சங்களில் எது ஒன்று மனிதனுக்கு இருந்தாலும் தலைக்கு மேல் கொம்பு முளைத்துவிடுகிறது. தான் பெரியவன் என மிதப்பு வந்துவிடுகிறது. தற்பெருமையே அவனின் நினைப்பாக ஆகிவிடுகிறது.

ஆக இந்த ஆறும் இல்லாத மனிதனை இந்த ஆறும் நிறைந்த இறைவன் பூமிக்கு கீழ் இறங்கி வந்து ஆறாய் இரங்கி அவனை ஆற்றுப்படுத்துகிறார்.

இம்மகிமையான அம்சங்களை அளவிட முடியாத அளவிற்கு பெற்றிருப்பவரே முழுமுதற் கடவுள் என வசிஷ்டரின் பேரனும் வேத விற்பன்னரான பராசர முனிவர் விவரிக்கிறார்.

(ஆதாரம்: ஸ்ரீ கிருஷ்ணர். பக்கம் 7. ஆசிரியர் : பிரபுபாதர்) 

இந்த ஆறு விதமான அம்சங்கள் இருவருக்கே இருக்கிறது..

ஒருவர் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர்.

இன்னொருவர் கிருஷ்ணரின் அவதாரமான இறைவன் ஸ்ரீ சத்யசாயி.

செல்வம்:- செல்வ வளத்தின் அதிபதியே சுவாமி தான். சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்த்ததே அவர் தான். 



இலவச குடிநீர்/ கல்வி/ உணவு (நித்திய அன்ன சேவா) இந்த பூலோகத்திலேயே சுவாமியால் மட்டுமே சாத்தியப்படுகிறது.

சுவாமியின் அரண்மனை ஆசிரமம் செல்வத்தை பிரதிபலிக்கிறது. செல்வமகள் லட்சுமி தேவி சத்யசாயி கிருஷ்ணருக்கு பாத சேவை புரிந்து வருவதில் எந்த வியப்பும் இல்லை.

வலிமை:- சுவாமியின் வலிமையை வார்த்தையால் விவரிக்க இயலுமா? 


உடல் வலிமைக்கு அவர் மாணவர்களோடு கைக்கு கை இணைத்து அவர்களால் வெற்றி கொள்ள முடியாத உடல் வலிமை. 

தேங்காயோடு தேங்காயை சரிசம அளவில் உடைக்கின்றவாறு மோதிடும் விரல் வலிமை.. அந்த Grip. அதுவே நம்மைப் போன்ற பக்தர்களையும் அந்த Grip'பே இறுகப் பிடித்திருக்கிறது.

நாம் அவரை சிக்கனப்பிடித்திருப்பதாலா அவரிலிருந்து விலகாமல் இருக்கிறோம்?இல்லை அவர் நம்மை பிடித்திருப்பதால் தான் விலகாமல் இருக்கிறோம்.

சுவாமியின் விவேகம்/வைராக்கியமான மனவலிமையை என்ன சொல்வது? அந்த இரண்டையும் நமக்களிப்பதே அவர்தான். அவரின் தூய துறவு வாழ்க்கை.


அத்தனை செல்வமும் சுற்றி இருந்த போதிலும் எதனையும் தனக்காக அனுபவிக்காக மனவலிமை. தன் உடல்தேவைகளை பெரிதுபடுத்தாத தன்னலமற்ற தூய நிலை இதுவே மனவலிமை.

ஆன்ம வலிமையை பற்றி இந்த ஜீவாத்மா என்ன விவரிப்பது? சாதாரண ஆன்ம வலிமை அல்ல சுவாமிக்கு.. அது பரமாத்ம வலிமை.

அந்தர்யாமி (ஜீவன்களின் உள்ளே நிறைந்திருப்பது)

சர்வாந்தர்யாமி (அண்டசராசரத்தில் நிறைந்திருப்பது)

இதுவே பேரான்ம வலிமை. 

அதுவும் சுவாமி மட்டுமே.

அந்த வலிமையே மனிதனின் கர்மாவையும் மாற்றி அமைக்கிறது!

புகழ்:- சுவாமியை அறிந்திடாத உலகமே இல்லை. பெயர் குறிப்பிடாத உலக வரைபடத்தின் பகுதியிலும் சுவாமியின் உருவப்படம் வைத்து இன்றளவும் வழிபாடு நடக்கிறது.



அழகு:- எந்த உலகத்திலும் சுவாமிக்கு இருக்கும் அழகு எந்த உருவத்திற்கும் இல்லை.

மனிதன் வெறும் அலங்கார கவர்ச்சியை அழகு என நினைத்து மயங்கி விடுகிறான். மயங்கி அதை அபகரிக்க நினைக்கிறான்.

எது ஆசையை  கிளறிவிடுகிறதோ அது அழகல்ல.. எது ஆசையை அழிக்கிறதோ அதுவே அழகு!

உண்மையில் அழகு கவர்ந்திழுக்கும் .. ஆனால் கவர்ந்திழுத்தபடியே ஆனந்த அமைதியையும் அளிக்கும். அப்படி அளிக்கும் உருவத் தோற்றம் உடையவர் சுவாமி மட்டுமே.

சுவாமியின் முக அமைப்பு.. கன்னத்து மச்சம்.. அந்த கேசம்.. அந்த கேசம் போல் எந்த தேசத்திலும் இப்படி ஓர் பேரழகு உருவம் எப்போதும் இல்லை.



அந்த உடை.. அன்ன நடை.. கைகளை அசைக்கும் விதம்.. புன்னகை தழுவும் ஈர உதடு.. வாய் வழி கசியும் அமுதத்தை அவ்வப்போது சுவாமி கைக்குட்டையால் துடைப்பது.. இந்த அழகை ரசிப்பதற்கே வரிசையாய் மனிதன் ஏழு பிறவி எடுத்தாலும் முழுமையாய் முடியாது!

அறிவு: பேரறிவு சுவாமியுடையது. சுவாமி ஒருவனை உற்று பார்க்கிற போது அவனின் இரண்டாயிரம் வருஷங்களை முன்னும் பின்னும் பார்க்கிறார்.

அவர் பேசுகிற போதும் அதையே சூசகமாய் உணர்த்துகிறார். பூர்வ ஜென்மங்களை தன் கண்களால் ஸ்கேன் எடுக்கிறார். அதில் ஏதேனும் ஒரு பிறவியில் அவனுக்கு பக்தி இருந்திருந்தாலும் இப்போது தன் பக்தனாய் மாற்றிக் கொள்கிறார்.

அவரின் விசும்பு அறிவை விட்டில் பூச்சி அறிவுடைய நம்மால் எந்த ஜென்மத்தில் அளந்துவிட முடியும்?

துறவு:-  தொடாதே தீட்டு என்று சொல்லாத துறவி இருவர்... ஒருவர் ஸ்ரீ கிருஷ்ணர். இன்னொருவர் ஸ்ரீ சத்யசாயி.



சபிக்காத துறவி / ஜாதி-மத-இன-தேச பேதம் பார்க்காத துறவு நிலை இந்த இருவரை தவிற வேறு எந்த so called துறவிகளுக்கும் இருந்ததில்லை/ இருக்கவில்லை.

துறவு நிலையை தேசத்தில் வளர்க்கவே சுவாமி காவி உடையையே உறுத்தியது. அவர் நெருப்பு என்பதையும் அது காட்டுகிறது.

துறவி எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? அவர்களுக்கு எந்தவிதத்திலும் எதன் மேலும் அபிமானம் இருப்பதில்லை.

வேதத்தை யாரும் கற்பதில்லை/ அது மலிந்துவிட்டது என்ற புலம்பல் அல்ல துறவுநிலை. 

எந்த எதிர்மறை உரையாடலும் இன்றி அந்த வேத காவலை செயலில் காட்டியவர் இறைவன் ஸ்ரீ சத்யசாயி ஒருவரே!

யாரையும் குற்றம் கூறாத நிலையே துறவு. அதை வாழ்ந்து காண்பித்தவர் சுவாமி.

தானே தெய்வம் என்ற நிலையை உணர்ந்த துறவிகள் அதே நிலையில் ஒன்றிணைகின்றனர். மனிதர்களுக்கே வழிபாடு தேவை.. துறவிகளுக்கல்ல‌..

அந்த ஞான நிலையை மனிதன் அடைய இப்படி வாழ் என வாழ்ந்து காண்பித்தவர் கிருஷ்ணருக்கு பிறகு சத்யசாயி‌ ஒருவரே!

There is Only One God.. He is Omnipresent .. that is SathyaSai

இந்த ஆறு அம்சங்களும் ரிஷிகளே வகுத்தவை.. அந்த அம்சங்களில் ஒன்று கூட குறையாமல் இந்நொடிவரை இப்பூவுலகில் நடமாடி நம்மை புனிதமாக்கிக் கொண்டிருப்பது இறைவன் ஸ்ரீசத்யசாயி ஒருவரே!


 பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக