தலைப்பு

வியாழன், 26 நவம்பர், 2020

இறந்த பக்தரின் உடலை இரு நிமிடங்களில் உயிர்ப்பித்த சத்யசாயி விபூதி!


சுவாமியும் அவர் விபூதியும் வேறு வேறல்ல.. இரண்டும் ஒன்றே எனும் .. ஒரே மகிமை எனும் அற்புதம் உணர்த்தும் ஔஷத அனுபவப் பதிவு இதோ...

ஹாங்காங்கில் ஒரு செல்வமிக்க வணிகர் பகவான்தாஸ் தாஸ்வானி. சிந்தி இனத்தைச் சேர்ந்தவர். பாபாவிடம் பிடிமானம் இல்லாவிடினும் மாமியாரை அழைத்துச் செல்ல வேண்டியிருந்ததால் 1975 குரு பூர்ணிமையின் போது புட்டபர்த்தி வந்தார். சத்குரு தேவனின் கரம் வழங்கிய லட்டுப் பிரசாதம் பெற்றார். அச்சமயம் சுவாமி அவரைக் கவனிக்கவில்லை - அல்லது கவனித்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை.

மறு வருடம், ஒயிட்ஃபீல்ட் சாயி கல்லூரியில் படிக்கும் தமது இரண்டாவது பிள்ளையைப் பார்ப்பதற்காக பிருந்தாவனம் வந்தார் அந்தப் பிள்ளை யார் எனில் “அற்புதம் அறுபது”தில் 26-வது, 35-ஆவது அத்தியாயங்களில் சந்துருவாகவும், சாயி சந்திரசேகர் தாஸ்வானியாகவும் நாம் கண்டுள்ள இளைஞர்தான்.



பிருந்தாவனத்தில் தரிசனம் தர பகவான் வெளியே வந்தார். பகவான்தாஸ் ஒரு மரத்தடியே நின்று கொண்டிருந்தார். சுவாமி அவரிடம் சென்றார். அடடா, பகவான்தாஸின் பாக்கியத்தை என்ன சொல்ல? அவரை அன்போடு அணைத்துக் கொண்டார். அன்னையனையர் “ஹௌ ஆர் யூ ஹாங்காங் ஃபாதர்?” என்றார். (சந்துருவை சுவாமி ஹாங்காங் என்றே அழைப்பார்!)

கேட்டாரேயன்றி இவருடைய 'ஹௌ' முழுவதும் சொல்லாமலே தமக்குத் தெரியும் என்பதையும் வெளிப்படுத்தினார்! எல்லா விவரத்தையும் அவரே சொல்லி “சுவாமி ஹரிதாஸ் உன் குரு அவரும் என் பக்தர்தான். இப்போது மேல் லோகத்தில் இருக்கிறார்” என்றார்.

அந்த க்ஷணமே பகவான்தாஸ் தாஸ்வானி நமது சாயி பகவானின் தாசானுதாசன் ஆனார். 



இனி தாசருக்கு வைத்தியநாதனாக சுவாமி ஆன கதை:

1977 மே 10-ம் தேதி ஹாங்காங்கில் பகவான்தாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ராணி மேரி மருத்துவ மனையில் சேர்த்தார்கள்.

பதினொன்றாம் தேதி அதிகாலையில் இங்கே மகன் சந்துருவிடம் சுவாமி விளையாட்டாக நிறையப் பேசினார். விபூதிப் பிரசாதம் கொடுத்தார். “ஹாங்காங்குக்கு போய் வா. ஒன்றுமில்லை அப்பாவுக்குக் கொஞ்சம் ஹார்ட் டிரபிள்” என்று லேசாகச் சொல்லி ஆனாலும் தீர்மானமாக அவனை அனுப்பிவைத்தார். விமான புக்கிங் கிடைத்து. அவன் விரைவில் ஹாங்காங் சேர்ந்ததும் ஒரு சாயி அற்புதம்தான்!

சந்துரு ஹாங்காங் ஆஸ்பத்திரி போய்ச் சேர்ந்தபோது பகவான்தாஸ் மரித்து இரு நிமிடங்கள் ஆகிவிட்டன! வைத்தியர்களின் மஸாஜுடன் வைத்தியநாதனின் திருநீறும் சேர்ந்து, மாண்டவரை மீண்டுவரச் செய்தது! ஆம், குப்பம் ராதா கிருஷ்ணா, வால்டர் கோவன் ஆகியோரைப் போல, இறந்தவரைப் பிழைப்பிக்கும் சாயி அற்புதமே பகவான்தாஸ் குறித்தும் நடந்ததாகக் கருதப்படுகிறது.

புத்துயிர் பெற்றுச் சில தினங்கள் ஆனபின், கோவனைப் போலவே தாஸ்வானியின் உடல்நிலையும் மறுபடி மிகவும் சீர்கேடுற்றது. மீண்டும் கோவனுக்குக் கவசமாக சுவாமி நின்றது போலவே இப்போதும் துணைக்கு வந்தார் - அதனினும் வினோதமிக்க முறையில்!

ரத்தக்குழாய்கள் உடைந்து ஏகமாகக் குருதியிழந்து கிடந்த பகவான்தாஸ் மே 25 காலை மணி 4:10-க்கு அதிசயக் காட்சி ஒன்று கண்டார். அறைச்சுவரின் வழியாக சுவாமி உள்ளே வந்தார்! அவர் கையிலிருந்து வெள்ளமாக அந்த வெண்ணீறைப் பகவான்தாஸின் உடல் பூராவும் வீசினார். குற்றுயிராகக் கிடந்தவர் விபூதி அபிஷேகம் பெற்றதும் புத்துயிர்த்தார்.



நடப்பது அனைத்தும் நனவுதானா என அவருக்கு நம்பிக்கைப் படவில்லை. “பாபா, நீங்கள் நிஜமாகவே இங்கே இருக்கிறீர்களா? அல்லது நான் கனவு காண்கிறேனா?” என்று கேட்டார்.

“நிஜமாகத்தான் இங்கே இருக்கிறேன்” என்றார் பாபா. ஆனால் தாம் இப்படிச் சொல்வதும் சொப்பனத்தில்தானோ என்று நோயாளி எண்ணிவிடக் கூடும் அல்லவா? எனவே தமது நனவான வருகைக்குச் சான்று காட்டுமாறு ஏதேனும் செய்ய வேண்டுமா என்று வினவினார். என்ன பரிவு, ஈடுபாடு, தாக்ஷிண்யம் அப்பனுக்கு!

“அப்படியானால் என்னை இந்தப் படுக்கையிலிருந்து அதோ அந்தப் படுக்கைக்கு மாற்றிப் போடுங்களேன்!” என்றார் பகவான்தாஸ்.

அவ்வளவுதான்! இதயநோயில் இளைத்த பின்னும் 173 பவுண்டு (79 கிலோ ) எடை இருந்த அந்தக் 'கனவானை' ஏதோ குறளுருவம் போல அலாக்காகத் தூக்கி இன்னொரு படுக்கையில் கிடத்தினார் - அவருக்குள் சொருகி இருந்த ட்யூபுகள் எதுவும் இடம் பெயராதபடி அத்தனை நாசூக்காக!

சுவர் வழியாகவே சென்று மறைந்தார், “கன்னம் வைத்து நம் கருத்தில் புகுபவர்”.

பகவான்தாஸ் , காலிங் பெல்லை அழுத்தினார். நர்ஸ் படை வாரிப் புடைத்துக்கொண்டு ஒடி வந்தது. கை, காலை அசைக்கவும் சக்தியற்றுக் கிடந்த நோயாளி கட்டில் மாறி உற்சாகமாகப் படுத்திருப்பதை விழி பிதுங்கப் பார்த்த செவிலியர், “எப்படி இடம் பெயர்ந்தீர்கள்? இதென்ன எங்கே பார்த்தாலும் வெள்ளைத் தூசி?” என்று வியந்து கேட்டனர். இன்டென்ஸிவ் கேர் யூனிட் டில் தூசு தும்பு இருக்கவே கூடாதே!

சுவாமியின் மகிமையைப் புரிந்துகொள்ள இயலாதவர் எனப் பகவான்தாஸ் கருதும் எவரிடமும் அவர் சுவாமி பற்றி வாய் திறக்கவே மாட்டார். அப்போதும் நர்ஸுகளுக்குத் தெளிவாக விடை சொல்லாமல் மழுப்பிவிட்டு, “ஏன் என்ன என்றெல்லாம் கேட்காமல் இந்த வெள்ளைத் தூசியைத் திரட்டி எனக்குக் கொடுங்களேன்” என்றார். அப்படியே அவர்களும் திரட்ட ஒன்றரை கிலோ விபூதியாக்கும் பகவான்தாஸ் கைக்கு வந்தது!

அவர் இடம்மாறிய அற்புதம், அதன்பின் அன்றிலிருந்து அதிவிரைவில் அவர் குணமாகி நான்கு நாட்களில் தாமாக அடுத்த வார்டுக்கு நடந்து சென்ற அற்புதம் ஆகியன பற்றி டாக்டர்கள் அவரைக் குடை குடை என்று குடைந்து விசாரித்தனர். பிற்பாடு ஆஸ்பத்திரியின் சான்று தேவைப்பட்டாலும் அதற்கு உதவியாக இருக்கட்டும் என்பதால் இந்தியரான ஒரு டாக்டரிடம் மட்டும் பகவான்தாஸ் நடந்ததைக் கூறினார்.

🌻 சுவாமி விபூதி சர்வ ரோக நிவாரணி!! சுவாமி விபூதி நம் பக்கத்தில் இருப்பது சுவாமியே பக்கத்தில் இருப்பது எனும் சத்திய அனுபவத்தை அனைவரும் நிச்சயம் உணர்ந்திருப்போம். ஆக வீண் பயத்தை விலக்கி சுவாமியின் திருப்பாதங்களில் சரணாகதி அடைவோம்.. சுவாமி எப்போதும் தன் பக்தரை கைவிடுவதே இல்லை. என்றென்றும்.. எப்போதும்!!! 🌻

ஆதாரம்: அற்புதம் அறுபது, ரா. கணபதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக