தலைப்பு

புதன், 4 நவம்பர், 2020

திடுக்கிடும் மர்ம நாவல் போன்ற பாபாவின் ஆச்சர்யமூட்டும் லீலை!

பூட்டிய மனதிலும் புகுந்து , அதில் குடியேறும் நம் பர்த்தி பாபா, பூட்டிய காரில் நுழைந்து, சதிவலையில் மாட்டிய இளைஞனை மீட்டு , நல்வழிப் படுத்திய அற்புத லீலை...


சஞ்சய் சஹானி .."கடவுளுடன் வாழ்வதே உண்மையான கல்வி"(Living with God is True Education) என்ற தலைப்பில் பாபாவைப் பற்றி ஒரு சமர்ப்பண கட்டுரை எழுதி  உள்ளார். அதில் மும்பாய் நகர வாசியான பிரிதிவிராஜ் என்கிற பாபா பக்தரின் வியப்பூட்டும் அனுபவம் பற்றி குறிப்பிடுகிறார். அவரது கட்டுரையின் சாரத்தை இனி காண்போம். 


உள் உறையும் இறைவனின்.. தெள்ளிய குரல் கேட்போம்:

அது ஒரு பகல் நேரம். பிரிதிவிராஜ் தம் பயண முடிவில் , மும்பாய் விக்டோரியா முனையத்தில் ரயிலில் இருந்து இறங்கினார். நிலையத்தை விட்டு வெளியேறும் போது, அந்த விந்தையான காட்சியைக் கண்டார்.   ஒரு புறம் மக்கள் வெள்ளம் சாரை சாரையாக  வெளியே சென்று கொண்டிருக்க, மறுபுறம் ஒரு சிறிய கூட்டம் எதையோ அச்சத்துடன்  வேடிக்கை பார்த்தபடி நிற்பதைக் கண்டார். அருகில் சென்று பார்த்தபோது , ஒரு முரடர் கூட்டம் கையில் கத்தி மற்றும் துப்பாக்கி ஏந்தி ஒரு இளைஞனை ஏதோ செய்யச் சொல்லி மிரட்டிக் கொண்டிருந்தனர்.  அந்த இளைஞன் சைகைகளைக் கவனித்தால் , அவன் அவர்களின் மிரட்டலுக்கு ஒத்துழைக்கவில்லை என்று தோன்றியது. கூடியிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனரே தவிர, தடுக்கும் தைரியம் அற்றவராய் விலகி நின்றனர். இதைக்கண்ட பிரிதிவிராஜ் அந்த இளைஞன்மீது பச்சாதாப்பட்டு, அவனை காக்கும் பொருட்டு, சம்பவ இடம் நோக்கி அடி எடுத்து வைக்க முயன்றார். அப்போது அவரது உள் மனதில் ஒரு குரல் ஒலித்தது. "அங்கு செல்லவேண்டாம். இதற்கு மேல் நடப்பதை ஒரு சாட்சியாக கவனித்து வா" திகில் படக் காட்சிபோல்... அவர்களை டாக்ஸியில் பின் தொடர்ந்த போது:

சிறிது நேரம் கழிந்தது. அந்த இளைஞன் அந்த குழுவினரின் மிரட்டலுக்கு அடி பணிந்ததாக தோன்றியது. அந்த குழு அவனை ஒரு டாக்ஸியில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர். தன் மனதில் கேட்ட குரலின் வழிகாட்டுதலால் உந்தப்பட்ட பிரிதிவிராஜ், ஒரு வாடகைக் காரில் ஏறி அவர்களைப் பின்தொடர்ந்தார். நீண்டநேர பயணத்திற்குப் பிறகு தர்மக்ஷேத்ரா( ஸ்வாமியின் மும்பாய் திரு மாளிகை) அருகே அக்குழுவின் டாக்ஸி நின்றது. அந்த இளைஞன் மட்டும் அங்கே இறங்கி விறுவிறு என்று நடந்து அங்கு நின்றிருந்த ஒரு வெளிநாட்டு காரை( அந்த கார் ஒரு சாயி பக்தருடையது) நோக்கி சென்றான். பிறகு தன்னிடமிருந்த சாவிக் கொத்தில் ஒரு சாவியை எடுத்து லாவகமாக அந்த காரின் கதவைத் திறந்து, அதனுள் அமர்ந்தான். இப்போது தான் பிரித்விராஜுக்கு அவர்கள் கார் திருடும் கும்பல் என விளங்கியது. 

காரில் ஏறிய இளைஞன் சிறிது நேரம் ஏதோ யோசித்து தாமதிப்பது போல தோன்றியது. பிறகு திடீரென அந்த காரை இயக்கி செலுத்தத் தொடங்கினான். அக்குழுவினர் தமது டாக்ஸியில் அவனை தொடர, பிரிதிவிராஜ் அவர்களும்  அவர்களைப் பின் தொடர்ந்தார். அவர்கள் சென்ற சாலை ஒரு வளைவோ, திருப்பமோ இன்றி  நேரான சாலையாக இருக்கவே, இளைஞன் ஓட்டிச்சென்ற கார் அவரது பார்வையில் தெளிவாக தெரிந்து கொண்டு பயணித்தது. பயணம் தொடர்கையில் திடீரென அந்த இளைஞன் ஓட்டிச் சென்ற கார் மாயமாக மறைந்துவிட்டது. கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தும் கார் சென்ற இடமோ , தடமோ தெரியவில்லை.வேறு வழியின்றி பிரிதிவிராஜ் வந்த வழியே திரும்பி தன் இல்லம் வந்தடைந்தார். 


எப்படி  இருந்தது என்  நாடகம்... பகவானின் குறும்புக் கேள்வி:

சில மாதங்கள் கழிந்தன. பிரிதிவிராஜ் பகவானத் தரிசிக்க வந்தபோது அவருக்கு தம் நேர்காணலை அளித்த பகவான்  கேட்டார்.. "எப்படி இருந்தது என் நாடகம்." பிரிதிவிராஜ் இதைக்கேட்டு ஏதும் தோன்றாமல் விழிக்க, பாபா , "அதுதான் பங்காரு , அந்த மும்பாய் சம்பவம்" என்றார் , குறும்பாக சிரித்தபடி. அந்த இளைஞன் ஓட்டிச் சென்ற கார் மாயமாக மறைந்தது எப்படி, அதன்பின் நடந்தது என்ன என்பதை பாபா கூறத் தொடங்கினார். 

லீலா நாடக சூத்திரதாரி மாயா மானுஷ வேஷாதாரி:

அந்த இளைஞன் தரமக்ஷேத்ராவின் அருகே வெளிநாட்டுக் காரை திறந்து உள்ளே அமர்ந்த அந்த நொடியில் பகவான் அந்த காரின் பின் இருக்கையில் பிரசன்னமானார். தமது பேச்சை கேட்டு அதன்படி  நடந்தால், அந்த கொடிய கும்பலிடமிருந்து அவனைக் காப்பாற்றுவதாக கூறினார். 


அந்த இளைஞன் எவ்வாறு பகவான் பூட்டிய காரில் ஏறி அமரந்திருக்க முடியும் என வியந்தான். ஆனால் அவரது பேச்சைக் கேட்க மறுத்து, காரைவிட்டு பகவானை இறங்கச் சொன்னான். பகவான் அவனிடம் மறுபடியும் வற்புறுத்த, அவன் காரைவிட்டு வெளியேற நினைத்து கதவை திறக்க முயற்சித்தான். ஆனால்  கார் கதவு பூட்டியிருந்தது எவ்வளவு முயற்சித்தும் அதை திறக்க அவனால் முடியவில்லை. வேறு வழியின்றி காரை , பாபா கூறிய திசைகளில் காரை செலுத்தி ஓட்டலானான். கடைசியில் ஒரு வீட்டின்முன் காரை நிறுத்தச் சொன்ன பாபா, அந்த வீட்டினுள் இளைஞனுடன் நுழைந்தார். 

சாயி வாக்கு சத்திய வாக்கு:

அந்த வீட்டில் இருந்த மூதாட்டியிடம் பாபா கூறினார். "அம்மா உனது மகனை திரும்பக் கொண்டு வந்துள்ளேன்." பத்து ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அவளது மகன் ஒரு திருவிழாவில் காணாமல் போனான். அவன் பிறகு ஒரு திருட்டுக் கும்பலிடம் சிக்கி, கார் திருடும் கலையில் பயிற்றுவிக்கப்பட்டான். மகன் தொலைந்ததால் மனம் பரிதவித்த அன்னை , பாபாவின் மகிமை பற்றி கேள்விபட்டு , பகவானிடம் நேரிடையாக முறையிடும் வாய்ப்பும் பெற்றாள். அப்போது பாபா "ஒருநாள் நானே உன் மகனை அழைத்து வருவேன்" என்று உறுதி அளித்தார். அதனை நிறைவேற்றவும் செய்தார். இதை பாபா கூறக்கேட்ட பிரிதிவிராஜ் , அன்று மும்பாய்  V.T.ரயில் முனையத்தில் தம் மனதில் கேட்ட குரல் பாபாவினுடையது என உணர்ந்தார். 

🌻 இந்த லீலா நாடகத்தை நடத்திய பகவான் நமக்கு போதிப்பது என்ன. அவர் நமது இதயவாசி, அதில் ஒலிக்கும் குரல் நமக்கு நல் வழிகாட்டி என்பதே அன்றோ. மேலும் தமது வாக்கு சத்திய வாக்கு , அறியாமல் பிழை செய்பவர்களை அணைத்து திருத்துவது தமது அவதார நோக்கம் என்பதையும் கூட அறிவிக்கிறார். 🌻

ஆதாரம்: Living with God is True Education - by Sanjay Sahani published in Sai Vandana 1990 (65th Birthday Offering)

தமிழில் தொகுத்து வழங்கியவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக