தலைப்பு

வியாழன், 12 நவம்பர், 2020

ஈடில்லாத ஈஸ்வரம்மாவின் அன்பைப் பற்றி சாயீஷ்வரனே சொல்கிறார்....


தேவகிக்கும் ... கோசலைக்கும் கிட்டாத பேறு ஈஷ்வரன்னைக்கு கிடைத்தது சுவாமியின் அன்பையும் அருகாமையும் பெற.. கர்ப்பத்தில் கடவுளைச் சுமந்தவளின் பேரன்பைப் பற்றி சுவாமியே பூரித்து பூரணமாய் விளக்குகிறார்.. மேலும் பெண்களின் பக்தியையும் மேம்படுத்தி எடுத்துரைக்கிறார் இதோ‌..

கர்ணம் சுப்பம்மாவைத் தவிர, இந்த கிராமத்தில் இருந்தவர்களே கூட சுவாமியை நினைக்காத காலகட்டம், அது..  என்னுடைய தரிசனத்திற்கு வரும் உயர் அதிகாரிகளை கிரஹம் அம்மாயி(ஈஸ்வரம்மாவை,சுவாமி அப்படி தான் குறிப்பிடுவார்!!) பார்த்து கொண்டு இருப்பார். போலீஸ் சீருடையில் யாரையாவது பார்த்து விட்டால், அவருக்கு அச்சம் ஏற்படும்;அவர்கள் சுவாமிக்கு ஏதாவது தொந்தரவு தரக்கூடும் என அஞ்சி, அவர்களை அனுமதிக்க வேண்டாம் என சுப்பம்மா விடம் கேட்டுக் கொள்வார். சுப்பம்மாவோ, "ஏன் அவர்கள் வரக்கூடாது? அவர்களும் சுவாமியின் பக்தர்கள். அவர்களிடம் நாம் வித்தியாசம் பாராட்டக் கூடாது. ஒவ்வொருவரும் சுவாமியை வந்து அடைந்தே ஆக வேண்டும். சுவாமிக்கு எவராலும்,எந்த துன்பமும் நேராது. நீ அதைப்பற்றி கவலைப்படாதே", என்று சமாதானம் கூறுவார். ஈஸ்வரம்மா, "சுவாமி உன்னுடன் தங்கியிருப்பதால் தான், போலீஸ் அதிகாரிகள் வீட்டிற்கு வருகிறார்கள். தயவு செய்து அவர்களை அனுமதிக்காதே", என்று கோபப்படுவார். ஒருமுறை, மெட்ராஸிலிருந்து வந்த ஐ.ஜி.ரங்கநாயகம், என்னை அவருடன் அழைத்து செல்ல விரும்பினார். இதைக் கேட்ட கிரஹம் அம்மாயி,மெட்ராஸ் என்பது, மிகத் தொலைவில் உள்ள அயல்நாடு என நினைத்து, அழலானார். புட்டபர்த்தியில்  இருந்து சுவாமியை நிரந்தரமாக அழைத்துச் சென்று விடுவார்கள் என்று கலக்கமடைந்தார். சுவாமியின் மீதிருந்த தீவிர அன்பின் காரணமாக, அதைத் தடுக்க முனைந்தார். அவரது பிரார்த்தனையின் பலனாக இந்த மந்திர்(கோவில்) கட்டப்பட்டது!


ஒருமுறை சாக்கம்மா வந்தபோது,"சுவாமி, சரியான சாலைகளோ, போக்குவரத்தோ இல்லாத காரணத்தால், நாங்கள் இந்த  குக்கிராமத்திற்கு, தங்களை தரிசிக்க வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறோம். கார் மற்றும் மாட்டு வண்டிகளும் இங்கு வரமுடியாத காரணத்தால், ஒவ்வொரு முறையும் நாங்கள் பெனுகொண்டாவில் காரை நிறுத்திவிட்டு வர நேரிடுகிறது. ஆகவே தாங்கள் பெங்களூரில் வந்து தங்கி விட வேண்டும். உங்களுக்கு அரண்மனை ஒத்த மாளிகையைக் கட்டித்தருகிறோம்", என்று வேண்டினார்.நான், "எனக்கு ஒரு சிறிய அறையே போதுமானது", என்று கூறினேன் .


ஆனால் அவர் அதை கேட்கவில்லை. அப்போது ஈஸ்வரம்மா, "ஒரு சிறிய மரக்கன்று பெரிய மரமாக தழைத்து வளர்வதற்கு,அதை நட்டு, நீரூற்றி, உரமிடுவதோடு அல்லாமல், அதனை அப்படியே  விட்டுவிட வேண்டும். மாறாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி நட்டால் அது சரியாக வளராது. ஆகவே, தயவு செய்து உங்களது பிறப்பிடமான புட்டபர்த்தியிலேயே இருக்க வேண்டும்", என்று கேட்டுக்கொண்டார். நான் புட்டபர்த்தியிலேயே இருந்து விடுவதாக உறுதி அளித்தேன்.


இறைவனிடம் பக்தி கொள்வதிலும், சரணாகதி அடைவதிலும் ஆண்களை விட பெண்களே விஞ்சி நிற்கின்றனர். அவர்கள், மதச்சார்பற்ற அறிவிலும், ஆன்மீக அறிவிலும், நிலையான ஒருங்கிணைந்த விழிப்புணர்வு கொள்வதிலும் களஞ்சியங்களாத் திகழ்கிறார்கள். ஆகவே பெண்களை ஒருபோதும் தாழ்ந்தவர்களாக எண்ணாதீர்கள். பிறரைப் பற்றி ஏளனமாகப் பேசாதீர்கள். அனைவரது நலத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். 

  'ஸமஸ்த லோகா ஸுகினோ பவந்து'

(அனைத்து உலகங்களும் ஆனந்தமாக இருக்கட்டும்!!) பகவத்கீதையின் முக்கிய சாராம்சம், ஒவ்வொருவரும் அனைவரின் நலனுக்காகவும் உழைக்க வேண்டும், என்பதே. 'ஏகம் பாஹுஸ்யம்' (இறைவன் ஒருவனே அனைத்திலும் வியாபித்து இருக்கிறான்!!) அனைவருள்ளும் ஒரே தெய்வீகமே குடிகொண்டுள்ளது. எல்லா வடிவங்களும் இறைவனுடையவையே ஆகும்.

-பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபா, ஆகஸ்ட் 31,2002.

தமிழாக்கம்: தி. கல்யாணி, சென்னை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக