தலைப்பு

திங்கள், 2 நவம்பர், 2020

ஒவ்வொரு இசைக் கச்சேரியிலும் நான் சத்யசாயியை அழைக்காமல் தொடங்கியது கிடையாது!


இந்திய சங்கீதத்தை உலக அளவில் எடுத்துச் சென்று, பிரபலப் படுத்தியவர் திருமதி. அருணா சாய்ராம். இந்திய அரசின் பத்மஸ்ரீ, மியூசிக் அகாடெமியின் சங்கீத கலாநிதி விருதையும், தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் அமெரிக்க காங்கிரஸின் "உயர் சிறப்பு விருது" மேலும் பிரெஞ்சு அரசின் செவாலியர் விருது.. போன்ற விருதுகளையும் ஏராளமான ரசிகர்களின் பாராட்டையும் பெற்றவர். அவரது "மாடுமேய்க்கும் கண்ணே பாடல் மிகவும் பிரபலமானது. அது ஒலிக்கும் இடத்தில் நம்மை அறியாமலே நம் கால்கள் நிற்க, செவி அப்பாட்டை கேட்டுவிட்டுதான், நம்மை நகர அனுமதிக்கும்.இனி, பாபாவுடனான தம் அனுபவங்களை அவர் பகிர நாம் கேட்கலாம்... 


உள்ளத்தில் ஒன்றியபின்...  உருவ அருகாமைக்கு ஏங்குவதேன்:

எனது பத்தாவது வயதில் ஏற்பட்ட பந்தம். அப்போது நாங்கள் மும்பாயில் இருந்தோம். அந்தேரியில் உள்ள தர்ம க்ஷேத்ராவிற்கு பாபா வருகை தந்திருந்தார். என் அம்மா  என்னை பாபாவின் தரிசனத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். அமைதியாக காத்திருந்த சமயம், எனது மனது கூறியது , இதோ பாபா தரிசனம் தர வரப் போகிறார்.  ஆம். அவ்வாறே நிகழ்ந்து. பாபா தரிசனம் தர தளிர் நடையிட்டு வந்து கொண்டிருந்தார். இந்த தரிசனம் மட்டுமல்ல, நான் எனது உள்ளத்தில் பிரார்த்திக்கும் போதெல்லாம் அவர் தரிசனம் தர வருவதை முன்கூட்டியே அறியும் உள் உணர்வு எனக்குள் உதிக்கும். என்னை, மனச் சுமைகள், கவலைகள், துன்பங்கள்  தாக்கும் போதெல்லாம், பாபா பாபா என பரிதவித்து குரல் கொடுப்பேன்.  மனம் அமைதி அடையும். பின் நாட்களில் என் சந்தோஷங்களையும் அவரிடம்  மனப் பரிமாற்றம்  செய்து மகிழ்வேன்  

மும்பாயிலிருந்து சென்னைக்கு:

சங்கீதத்தில் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்ததால் அதை கற்க ஆரம்பித்தேன். என் அன்னைதான் என் முதல்குரு. கச்சேரி நிகழ்த்த திறமை வந்தபோது , வாய்ப்புகள் தேடி சென்னைக்கு புலம் பெயர்ந்தேன். 

ஆரம்ப நாட்களின் கச்சேரிகளில் சுமார் 100 ரசிகர்களே இருப்பர். 1200 பேர்கள் அமரக்கூடிய சபாவில் 100 பேர்களே அமர்ந்திருப்பது எவ்வாறு இருக்கும். ஒரு 200 அல்லது 400 ரசிகர்களாவது வரமாட்டார்களா என மனம் எதிர்பார்த்தது. பின் நாட்களில் சபாவின் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிய, கச்சேரிகள் நிகழ்த்தி இருக்கிறேன். 

இசைக் கச்சேரி நிகழ்வுகளில்.... பாபாவை தவறாமல் அழைப்பேன்:


நான் செய்யும் ஒவ்வொரு கச்சேரிகளுக்கு புறப்படும் முன் பாபா விடம் கூறுவேன். "பாபா நீங்கள் அந்த அரங்குக்கு சென்று அங்கு நிலவும் சூழலை தூய்மையாக்குங்கள். எனக்கு அங்கு நிகழவிருக்கும் சங்கடங்களை நீக்குங்கள்" இதை பிரார்த்தனையாக அல்லாமல் ஒரு உரிமை  கலந்த தோரணையில் கூறுவேன். அதன் பிறகு பாபாவை மனதில் பிரார்தித்து " பாபா நீங்கள் இந்த இசை நிகழ்ச்சிக்கு வரவேண்டும். உங்களுக்கு அதற்காக முன் வரிசையில், முதலில் ஒரு இருக்கையை அமைத்துள்ளேன் என என் இதய அரங்கில் இருக்கும் பாபாவை, இசை அரங்கிற்கு அழைப்பேன். இது எனது அனைத்து இசை நிகழ்ச்சியிலும் நான் தவறாது செய்யும் பிரார்த்தனை ஆகும்.

பர்த்தி அனுபவங்கள்:

பர்த்திக்கு நான் பாபா தரிசனம் காண சிலமுறை சென்றிருக்கிறேன். வரிசையில் காத்திருந்து, எனக்கு கிடைத்த இடத்தில் அமர்ந்து, அமைதியாக ஸ்வாமியை தரிசனம் செய்திருக்கிறேன்.அவரது அருகாமைக்கோ, நேர்காணலுக்கோ விழைந்ததில்லை. என் பக்தி உள் முகமானது. அது ஆழமானதும் கூட. இன்னும் சொல்லப் போனால் நான் பாபாவின் திருமுன் அமர்ந்து ஒரு இசை நிகழ்ச்சியும் நடத்தியதில்லை. 


நான்கு முறை அந்த வாய்ப்பு  முதலில் உருவாகி, கடைசி நிமிடத்தில் கைகூட வில்லை.  ஆனால் பாபாவின்  சந்நிதானத்தில் 2011ம் ஆண்டு குரு பூர்ணிமா அன்று பாடும் பாக்கியம் கிடைத்தது. பாபா இல்லை என்ற நினைவுக்கே இடமின்றி , என் இதயம் ஒன்றிய உணர்வோடு , அந்த கச்சேரியை நிகழ்த்தினேன். அவரது அருட் பிரவாகம் மிக நெருக்கமாக என்மீது பொழிந்ததை உணர்ந்தேன். பாபா இல்லாமல் கச்சேரி நிகழ்வு மனதிற்கு கடினமாக இருந்ததா என வினவினால், இல்லை என்றே கூறுவேன். ஆம் அவர் எங்கும் செல்லவில்லை. வழக்கம்போல் முன் வரிசையில் அமர்ந்து என் இசையை ரசித்தார் என்றே நம்புகிறேன். 

🌻 அருணா சாயிராம் அவர்களின் அனுபவம் நமக்கு கற்பிப்பது என்ன. அருகாமை என்பது உடல் சார்ந்ததா அல்லது உள்ளம் சார்ந்ததா. உடல் சார்ந்த அருகாமை, ஒரு நிகழ்வுதான். ஆனால் உள்ளம் சார்ந்த அருகாமை, பின்னிப் பிணைந்த உறவின் வெளிப்பாடு அல்லவா. அதனால் தானே இறைவன் "உள்ளம் கவர் கள்வன் ஆகிறான். காம க்ரோதம் போன்ற அறு பகைவர்களால் அழுக்குற்ற இதயத்தை அன்பெனும் சாம்பலால் துலக்கி, கருணைமாம் நீரால் கழுவி, சேவை என்னும் கோலம் இட்டால், அங்கு இறைவனாம் பாபா ஓடோடி வந்து குடிபுகுவார். 🌻

ஜெய் சாய்ராம்.

ஆதாரம்: 2011ல் ரேடியோ சாயிக்கு அவர்கள் அளித்த ஆங்கில நேர்காணல்..
தமிழில் தொகுத்து வழங்கியவர்: திரு.குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக