இரண்டுமே முக்கியமானது என சுவாமி வலியுறுத்துகிறார்.
எடுத்த எடுப்பில் பி.எச்.டி படிப்பது கடினமானது தானே.. படிப்படியாய்த் தான் படிப்பு எனும் படிக்கட்டுகளில் ஏறி அதை படிக்க முடிகிறது.
யோகம் என்பது படிப்பு..
ஞானம் என்பது படிப்பினை..
நேரடியாக ஞானத்தில் ஈடுபடுபவர்கள் உண்டு. அது அவர்களுக்கு பூர்வ ஆன்மீகப் பிறவிகளால் வாய்க்கிறது.
பகவான் ரமணர் போன்ற ஞானிகள் உதாரணம்.
வேதாந்த சாரம் / பகவத் கீதை சிரவணம் / ஆத்ம விசாரம் போன்றவை ஞான மார்க்கம்.
யமம் / நியமம் / யோகாசனம் / பிராணாயாமம் / பிரத்யாகாரம் /தாரணை /தியானம் / சமாதி
இவை எட்டே .. அஷ்டாங்க யோகம்..
தயிரைக் கடைய நவநீதம் கிடைக்கிறது.
யோகத்தைக் கடைய ஞானம் உதிக்கிறது.
ஐம்புலன்களை வென்றபின்னரே ஒருவனுக்கு ஆத்மவிடுதலை என்கிறார் சுவாமி.
யோகம் நெருப்பைப் போன்றது எனவும்..
யோகாக்கினியே பாபங்களைப் போக்குகிறது எனவும் சுவாமி சத்தியம் பகர்கிறார்.
ஆகவே தான் இமயத்தில் யோகிகள் மார்ப்புத்துணியும் இல்லாமல் தியானத்தில் உறைந்திருப்பது எல்லாம் இந்த யோகாக்கினி மூலமாகவே..
ஆத்ம ஜோதியை தியானம் தூண்டிவிடுகிறது... எப்படி திரியைத் தூண்டிவிட்டால் ஜோதி பிரகாசிக்குமோ அப்படி பிரகாசிக்கிறது.
தியானம் பழகப்பழக ... தியானத்தில் அமர அமர அந்த ஆத்ம ஜோதியின் உட்கனலை அனுபவிக்கலாம்.. உண்மையில் அந்தக் கனலே நம்மை தியான நிலைக்கு அழைத்துச் செல்கிறது என்பது தியானானுபவம்.
யோகத்தால் எல்லா பூர்வ ஜென்ம வாசனையும் அழியும் என்கிறார் சுவாமி.
தியானத்திற்கு முன்னதான யம / நியம போன்றவை எல்லாம் தியானத்திற்கு இட்டுச் செல்வதற்கே.. இவைகள் படிநிலைகள்.
தியான நிலை நிலைத்துவிட அதுவே சமாதியாகிறது.
நெருப்பில்லாமல் அரிசி வேகாதது போல் யோகம் இல்லாமல் மனம் பக்குவமடையாது என்கிறார் சுவாமி.
மின் விசிறி ரெக்கைகள் சுழன்று கொண்டிருக்கும் போது அந்த விசிறி ரெக்கைகளுக்கு யாராவது பெயின்ட் அடிக்க முடியுமா?
முதலில் அவைகளை நிறுத்த வேண்டும்.. பிறகே அதைப் பொலிவாக்க முடியும். அதைப் போல் மனதை பிராணாயாமத்தால் நிறுத்தி தியானத்தால் அதை எரித்து விட வேண்டும்.
மனோநாசமே யோகத்தின் அந்தம்.
அந்த மனோ நாசமே ஞான நிலை.
யோகம் தான் எல்லாவற்றுக்கும் மூலம் என்கிறார் சுவாமி
(ஆதாரம் : பிரச்னோத்தர வாஹினி . பக்கம் : 32. ஆசிரியர் - ஸ்ரீமான் கஸ்தூரி)
மலரால் வாசனை பிறப்பது போல்..
நிலவால் வெளிச்சம் பிறப்பது போல்
யோகத்தால் ஞானம் பிறக்கிறது.
எல்லா வெளிப்புறமான பூஜை / சடங்கு எல்லாம் உள்முகமான சுவாமியை நோக்கி திரும்புவதற்கே..
உள்ளே தான் சுவாமி உட்கார்ந்திருக்கிறார்.
உள்முகப் பயணமே யோகம். அதன் இலக்கு ஞானம்.
நான்கைந்து புத்தகம் படித்து கிளிபோல் ஒப்பிப்பது ஞானம் அல்ல..
யோக அப்யாசமே (பயிற்சியே) ஞானம் தருகிறது.
பத்தாம் வகுப்பிலேயே நாம் பத்து வருடம் அமர்ந்து படிப்பதில்லை..
அதுபோல் வெளிமுக வழிபாட்டிலிருந்து உள்முக வழிபாட்டிற்கு வந்தாக வேண்டும்.
கரை சேருவதற்கே படகில் ஏறுகிறோம்..
படகிலேயே வாழ்க்கை முடிந்துவிட்டால் பயணத்திற்கான இலக்கு தடைபடுகிறது.
நமக்கு எத்தனை ஜென்மமானாலும் சுவாமி நம் அகத்திலேயே காத்திருப்பார். ஆனால் கிடைக்கின்ற எல்லா பிறவியும் மனிதப் பிறவியா என்பது நாம் செய்கின்ற கர்மங்கள் பொறுத்து சந்தேகமே என்பதால்..
இந்தப் பிறவியிலேயே ...இந்த நொடியே.. யோக வாழ்வை துவங்குவதே பிறவி எடுத்ததற்கான பயன்.
இன்றைய பசிக்கு.. நாளைக்கு யாராவது நாத்து நடுவார்களா..??
சுவாமியை அடைவதே சுவாமி பக்தர்களாகிய நமக்கு பிரதானம். மற்றவை ஏதாகினும் அவை மாயையே!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக