தலைப்பு

வெள்ளி, 6 நவம்பர், 2020

சத்யசாயி கிருஷ்ண விரல் பட்டு தங்கமான வெங்கல கிருஷ்ண விக்ரகம்!


இறைவன் தொட்டதெல்லாம் பொன்னாகும்.. பாதம் எடுத்து தெய்வம் நடந்து வந்தால் பூமியில் புல்லும் கூட கண்ணாகும்.. இறைவன் சத்யசாயி ஆற்ற முடியாத / ஆற்றாத / ஆற்றிக் கொண்டிருக்காத அற்புதமே இல்லை எனும் வகையில் ஏராள லீலையில் ஓர் எதிர்பாரா விசித்திர லீலை இதோ..


1970ன் ஆரம்பத்தில் நடந்த சம்பவம்! மும்பையில் ஒரு பெண் மணிக்கு நடந்த லீலா அனுக்ரஹம் இது! அவரது குடும்பம் சமீப காலமாக மிகவும் சிரமத்தில் உழன்றது, ஏனெனில் இவரது கணவருக்கு வேலை போய் விட்டது. ஆனால் நிலையான வருமானம் துண்டிக்கப்பட்டு, ஏதேதோ வேலைகள் செய்து காலத்தை ஓட்டி வந்தனர். அப்பெண்மணி ஒரு ஆத்மார்த்த பக்தி உடையவர். இரண்டு வருடங்கள் கழித்து, இவரது இடைவிடாத பிரார்த்தனையால் ஒரு வேலை கணவருக்கு கிடைத்து விட்டது! ஆயினும் முன்பு வந்த வருமானத்தில் ஒரு பகுதியே கிடைத்தது. இடைவிடாது ஸ்வாமியை முறையாக பூஜை செய்து வந்தார். 


ஸ்வாமியை தரிசிக்க ஆவல் கொண்டார். ஸ்வாமி ப்ருந்தாவனில் இருந்தார், எப்படியோ ப்ருந்தாவனை அடைந்து விட்டார். நுழை வாயிலில் சின்ன சின்ன வெங்கல விக்ரகங்கள் விற்றுக் கொண்டிருந்தனர். அவற்றுள் தனது குல தெய்வமாகிய ஒரு சிறிய க்ருஷ்ண விக்ரஹம், ஒரு சிறிய தட்டு ... கொஞ்சம் பூக்கள் வாங்கிக் கொண்டு, தட்டில் பூக்களை வைத்து, நடுவே க்ருஷ்ணர் விக்ரஹத்தை வைத்து, உள்ளே சென்றார். தரிசனத்தின் பொழுது ஸ்வாமியின் ஆசி பெற்று, விக்ரஹத்தை திரும்ப எடுத்துச் செல்ல நினைத்தார். வீட்டில் சென்று பூஜை அறையில் வைப்பதற்காக! தன் கணவர் முன்பு போல் சம்பாதித்தால் தங்க விக்ரஹமே வாங்க முடிந்திருக்கும் என நினைத்தாள். உள்ளே சென்று அமர்ந்தார், ஸ்வாமி இவரைக் கண்டு கொள்ளவில்லை. தட்டு, விக்ரஹம் இவற்றை தூக்கிப் பிடித்திருப்பதையும் பார்க்காமல் கடந்து செல்ல ஆரம்பித்து விட்டார். 


நேரம் சரியாக இல்லாவிடில் தெய்வம் கூட கருணை காட்டாதோ என எண்ணி, “ஸ்வாமி” என உரக்க கூப்பிட்டே விட்டாள். ஸ்வாமி பக்கத்தில் உள்ள பெண்மணியிடம் பேசுவதற்காக நின்றவர், இவர் உரக்க அழைப்பதைப் பார்த்து திரும்பி இவர் கையில் உள்ள விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு நகர்ந்து சென்று விட்டார்! , இவளிடம் திரும்பத் தரவில்லை! ஏமாற்றமடைந்து “ஸ்வாமி” என மீண்டும் அழைக்க, அப்பொழுது தான் கையில் விக்ரஹத்தொடு நடந்து செல்வதை உணர்ந்தது போல், திரும்பி விக்ரஹத்தை லேசாக சுழற்றி தட்டில் வைத்தார். மகிழ்ச்சியுடன், திரும்ப தனது தங்கும் இடத்திற்கு ஸ்வாமி செல்லும் வரை தரிசித்து விட்டு, பிறகு தான் தன் கையில் உள்ள தட்டைப் பார்த்தார்! 

ஸ்வாமியால் தொட்டு ஆசிர் வதித்துக் கொடுத்து விக்ரஹத்தை பார்த்தாள்! அது தங்க விக்ரஹமாக மாறியிருந்தது! இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை! வெங்கலச் சிலையை வெளியே வாங்கும் போது, “தனது கணவர் முன்பு போல் சம்பாதித்தால், தங்க விக்ரஹமே வாங்கலாம்” என எண்ணியது ஞாபகம் வந்தது. ஸ்வாமியின் அன்பான ஆசியுடன் தொடப்பட்டது, தன் மனதையே படித்து, தங்கமாக மாற்றி, தனது பிரார்த்தனைகளை நிறைவேற்றி விட்டதை எண்ணி வியந்தாள். 

ஆதாரம்: SAI SPARSHAN. P - 83

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 


🌻 சுவாமியே கிருஷ்ணர். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இந்த சத்திய நிதர்சனம் உள்ளங்கை விளக்காக ஒளிதரக்கூடிய பேரனுபவ மெய்யுணர்வு. விரல் கூட நீளவேண்டிய அவசியமில்லை.. சத்யசாயியின் விழி நீண்டு நம்மை ஊடுறுவிப் பார்த்தாலே இந்த தங்க விக்ரகம் போல் நம் இதயமும் மாறி பேரன்பாய் ஒளிவீசத் தொடங்கும்!!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக