தலைப்பு

வெள்ளி, 6 நவம்பர், 2020

விஷ்ணுவும் சிவனும் வேறு வேறு என சிலர் பேதம் பார்க்கிறார்களே? இதற்கு சுவாமி என்ன பதில் சொல்லி இருக்கிறார்?

பொதுவாக சுவாமி இரு வகையில் பதில் சொல்கிறார்‌. ஒரு வகை என்பது நேரடியான பதில். இன்னொரு வகை செயல் வழியே பதில் சொல்வது.

சுவாமி கிருஷ்ண அவதாரம். ஆக அவர் விஷ்ணு. சுவாமி தன்னை சிவசக்தி அம்சம் என்கிறார். ஆக அவரே சிவனும்.

இதிலேயே உங்கள் பதில் இருக்கிறது.

அவதாரம் என்பது பூமிக்கு இறங்கி வருதல். அம்சம் என்பது குணம்.

ஆக கிருஷ்ணன் சிவ சக்தி குணத்தோடு சத்ய சாயியாய் இறங்கி வந்ததில் விஷ்ணுவும் சிவனும் ஒன்றென்பது புரிந்திருக்கும்.

பல சத்ய சாயி பஜனைப் பாடல்களில் சிவனையும் விஷ்ணுவையும் சேர்த்தே நம்மை சுவாமி பாட வைக்கிறார். இது ஒரு சான்று. 

பதினாறாம் நூற்றாண்டில் விஷ்ணு பக்தர்கள் சிவ லிங்கத்தை வழிபட்டதும்.


பரம கிருஷ்ண பக்தரான கிருஷ்ண சைதன்ய மகா பிரபு குப்த காசிக்கு சென்று ஹர ஹர சம்போ என ஆடிப்பாடியதும் தெள்ளத் தெளிவாய் பதிவாகி புத்தக சான்று இருக்கிறது. 

1000 வருடங்களுக்கு முன் சிவன் சந்நதியில் மகா யோகியான சிவேந்த்ர மகானுக்கு விஷ்ணு ரூபத்தில் சுவாமி காட்சியும் தந்து ஆட்கொண்டிருக்கிறார்.

ஹரியும் சிவனும் ஒண்ணு என்னும் கிராமப் பழமொழியே இருக்கிறது.

மகான் ராகவேந்த்ரரும் இதற்கு சான்றாக பேத வாதம் செய்தவரை வினயமாய் பதில் சொல்லி சத்தியத்தை உணர்த்தியிருக்கிறார்.

விஷ்ணு மயம் ஜகத் என்கிறோம். இந்த பூமி விஷ்ணு மயமானது. வீடு விஷ்ணு என்றால்.. அந்த வீடு கட்டப்பட்டிருக்கிற வெட்ட வெளி சிவன்.

வெறும் வெட்ட வெளியில் வசிக்க இயலாது. வெட்ட வெளியின்றி வீடும் இல்லை. ஒன்றின்றி ஒன்றில்லை என்பதே ஆன்ம தத்துவம்.

எங்கே பேதம் பார்க்கப்படுகிறதோ அங்கே ஞானம் நின்று போகிறது.

எங்கே ரூப பேதம் மனதை மையம் கொள்கிறதோ அங்கே ஆன்ம ஞான ஒளி வீசுவதில்லை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரூபம் பிடித்திருக்கலாம் அதற்கென மற்ற ரூபங்களை குறைத்துப் பேசுவது குழந்தைத்தனமான அறியாமை.இவை எல்லாம் ஆன்மீகம் இல்லை எனப் புரிந்து கொள்ள வேண்டும்.


"There is only one God .. He is omnipresent" என்கிறார் சுவாமி. இறைவன் ஒருவரே .. அவர் எங்கும் நிறைந்திருப்பவர் என்கிறார்.

சைவ / வைணவ பேதம் சனாதன மார்க்கத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும். ஆகவே தான் ஆதி சங்கரர் ஆறு தெய்வ வழிபாட்டு முறைகளையும் ஒன்றிணைத்தார். ஒற்றுமையே நம் சனாதன வலிமை என்பதை நாம் உணர வேண்டும்.

சனாதன சமநிலைக்கு நம் சனாதன சாரதி வழிகாட்டுகிறார்.


இறைவன் ஸ்ரீ சத்ய சாயியை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதற்கு சமம். சகல தெய்வ சங்கம ரூபம் சத்ய சாயி ரூபம்.

மூன்று நதிகளில் தனித்தனியாக சென்று குளிப்பதை விட .. மூன்று நதிகள் சங்கமிக்கும் கடலில் குளிப்பது போல் சத்ய சாயியை வழிபடுவது என்பதை உணர்ந்து பேதம் நீக்கி.. ஞான நிலை அடைந்து பரிபூரண ஸ்ரீ சத்ய சாயி இறைவனை பக்தி செலுத்தி ... சிவ விஷ்ணுவை சேர்ந்தே அனைவரும் ஆராதிப்போம்!


 பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக