தலைப்பு

திங்கள், 9 நவம்பர், 2020

சாயி பக்தர்கள் தனியாக இருப்பதில்லை எனும் சத்தியம் உணர்த்திய ஷிர்டி சாயி!


ஷிர்டிசாயியே சத்யசாயி என்பது உள்ளங்கை விளக்கான வெளிச்ச அனுபவம். இருவரும் கிருஷ்ணரே என்பது அனைத்து பக்தர்களும் உணரக் கூடியதே.. ஷிர்டிசாயி உபதேசித்ததையே சத்யசாயியும் உபதேசித்து உணர்த்தினார். காரணம் ஏகம் சத்தியம். அப்பேர்ப்பட்ட பேரிறைவனான சாயியை வழிபடுபவர்கள் தனிமையாக இருப்பதில்லை என்பதை சுவாமியே ஒரு சிறு சம்பவம் வாயிலாக உணர்த்துகிறார் இதோ..... 

மகாபாரதத்தை எழுதிய வியாசர் போல, சீரடி சாய் சத் சரிதத்தை(சீரடி சாயியின் புனித வரலாறு) எழுதிய ஹேமத் பந்த், ஒரு புனித ஆத்மா. ஒரு சமயம் சீரடிமகராஜ் அவர்கள், தனது நெருக்கமான பக்தர்களான, ஷ்யாமா, மகல்சபாதி, ஹேமத்பந்த் மற்றும் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார்.

திரு. ஹேமத் பந்த் அவர்கள் பெரும்பாலும் வேஷ்டி சட்டை. அதற்கு மேலே ஒரு பழைய கோட்டை அணிந்து இருப்பார். சீரடி சாய்பாபா அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, ஹேமத் பந்த் கோட்டில் இருந்த தனது பாக்கெட்டில் தற்செயலாக கையை விட உள்ளிருந்து சில நிலக்கடலைகள் வெளியே உருண்டோடின.


அதைக்கண்ட சீரடி மகராஜ், "இவன் ஒரு திருடன். நிலக்கடலை திருடுபவன்.", என கூச்சலிட்டார். அதற்கு ஹேமத் பந்த் கூச்சத்துடன், "சுவாமி! நான் திருடன் அல்ல. எனக்கு நிலக்கடலை என்றால் மிகவும் பிரியம். காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவேன்.", என்றார். அதற்கு சீரடி மகராஜ், "பிறருக்கு கொடுக்காமல் சாப்பிடும் இவன், ஒரு திருடனே.", என மீண்டும் கூச்சலிட்டார்.  

ஹேமத் பந்த் உடனே, "சுவாமி! நான் சாப்பிடும் போது யாரேனும் அருகில் இருந்தால், அவர்களுக்கு கொடுத்துவிட்டு தான் சாப்பிடுவேன். நான் தனியாக சாப்பிடுகிறேன் என்றால், அப்பொழுது யாரும் அருகில் இல்லை என்பதே உண்மை.", என்றார். "அப்படி என்றால் நீ திருடனே!" என மீண்டும் கூச்சலிட்டார் சீரடி பாபா. 

ஹேமத் பந்த், "பாபா யாரும் இல்லாமல் நான் தனியாக இருக்கும்போது என்ன செய்வது ? எப்படி பிறர்க்கு தர முடியும் ?", என்றார். அதற்கு சீரடி பாபா அமைதியாகக் கூறினார், "கடவுளாகிய நான் உன் அருகில் எப்போதும் இருக்கும்போது, நீ எப்படி தனியாக இருக்க முடியும் ? எனக்கு கொடுத்தாயா ? அர்ப்பணம் செய்தாயா ?, என்றார். ஹேமத்பந்த் வெட்கம் அடைந்தார். 


சீரடி பாபாவின் மறு அவதாரமான பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவும்,"பங்காரு! நான் இருக்கும் போது நீ கவலையோ, பயமோ, அடைய வேண்டியதில்லை. ஏனென்றால், நான் உனது முன்னும், பின்னும், உன்னை சுற்றியும், உன்னுள்ளம் இருக்கிறேன்! கவலைப்படாதே!", என்கிறார். நாம் உண்ணும்போதோ, வேறு செயல்களில் ஈடுபடும்போதோ, அதை பகவானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அது தெய்வீக பலன்களை நமக்கு வழங்கும்.

மேலும் சுவாமியிடம் நாம் அர்ப்பணிக்கும் எல்லாவற்றையும் அவர் ஏற்றுக் கொள்கிறார். 

ஒரு பக்தரிடம் நீ அன்று சமைத்தது ருசியாக இருந்தது.. இன்று அவ்வளவு ருசி இல்லை என்றார். காரணத்தை சத்யசாயி பரிபூரணமே சொல்கிறது.. அன்று நீ எனக்காக சமைத்தாய் ஆகவே ருசியாக இருந்தது.. இன்று உனக்காக சமைத்தாய் ஆகவே ருசியில்லை என்றிருக்கிறார். நமக்காக வாழும் வாழ்க்கை ருசியில்லாதது.. இறைவனுக்காக வாழும் வாழ்க்கை ருசியானது என்பதையும் இது தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.


🌻 சாட்சாத் கிருஷ்ணரான மூன்று சாயி அவதாரங்களே நம் மும்மலங்களையும் அகற்றுகின்றன.. அவர்களிடம் நம் வாழ்வை சரணாகதியாக்கி வாழ்வதே அர்த்தமுள்ள அற்புதமான வாழ்க்கை!! 🌻


ஆதாரம்: 

ஸ்ரீ ஷீரடி சாயி சத்சரித்திரம் ! ஹேமத் பந்த்

தொகுத்தளித்தவர்: S. Ramesh, Ex-Convenor, Salem Samithi, Salem.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக