தலைப்பு

வியாழன், 5 நவம்பர், 2020

8000 பாடல்களுக்கு மேல் பாடிய பிரபல திரைப்பட பாடகி B.வசந்தா அவர்களின் சாயி அனுபவம்!


நல்ல குரல் வளம் வருவது அரிது.. அவர்கள் பாடகராவது அதனினும் அரிது. அவர்களுக்கு பக்தி இருப்பது அரிதிலும் அரிது. அப்படி அரிதான பாடகர்களில் இவரும் ஒருவர். சுவாமியிடம் எண்ணற்ற அனுபவம். அந்த அனுபவங்களை நாமும் அனுபவிக்க தயாராவோம் வாருங்கள்!


தம்தன தம்தன தாளம் வரும் என்ற பாடல் ஒலிக்கிற போதெல்லாம் இவர்களின் வசந்த குரலாய் அது நம் இதயத்தை வரவேற்கும். பொட்டு வைத்த முகமான இவர் அந்தப் பாடலின் ஹம்மிங்கிலேயே தன் இசை ஞான முத்திரையைப் பதித்திருப்பவர். 16 மொழிகளில் பல பாடல்கள். பல விருதுகள்.  விருதுகளில் எல்லாம் சிறந்த விருது இறைவன் சத்யசாயி பக்தராக இருப்பது தான் என்பதை உணர்ந்தவர். 


ஆந்திரா குண்டூரில் பிறந்த பிரபல பாடகி வசந்தா அம்மா .. சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஷிர்டி சாயி பக்தை. சுவாமியை தன் சிறிய தாயின் மூலமாக கேள்விப்பட்டு ஆப்ட்ஸ்பரியில் பலமுறை தரிசனம் செய்திருக்கிறார். பெரிய பெரிய கூட்டம். அருகே தரிசிக்கும் ஆவல் மெதுவாய் எழ ஆரம்பிக்கிறது! திரைப்படப் பாடகரானதற்கு பிறகு சுசீலா போன்ற பாடகிகள் இவர்களுக்கு நன்கு அறிமுகமாவார்கள். சுவாமியை சுந்தரத்திலும் தரிசனம் செய்து கொண்ட வசந்தா அம்மா.. தானும் சுவாமி முன்னர் பாட வேண்டும் என்ற உயரிய தாகம் எழுகிறது.

இதயங்களைக் குளிர்விப்பதைக் கடந்து இறைவனை குளிர்வித்தால் இதயங்கள் தானாய் குளிரத் தொடங்குகிறது. காரணம் எல்லா இதயங்களிலும் சத்யசாயி இறைவனே இருக்கிறார்!!


சுசீலா அம்மாவிடம் விண்ணப்பிக்க பர்த்தி அழைத்துப் போகும் படியும் கேட்கிறார். தானே அஞ்சலி தேவி அம்மாவுடன் செல்வதாகச் சொல்லி தயங்குகிறார். சுந்தரத்தில் இசை நிகழ்ச்சி என சுசீலா அவர்களின் அழைப்பில் தனக்கும் வாய்ப்பு வந்ததென மகிழ.. அது எம்.எஸ் அம்மா மட்டும் பாடுவதாக மாறிப்போக.. அழுகிறார். நீ சுவாமியை அருகில் பார்க்க ஆவல் கொண்டிருக்கிறாய் அல்லவா.. சுவாமி நாளைக்கு என் வீட்டிற்கு ஒரு பிளாகை திறந்து வைக்க வருகிறார். குடும்பத்தோடு வா என்கிறார். அந்த அழைப்பு அமுதம் பாய்ச்சுகிறது இதயத்தில்..

அடுத்த நாள் இறைவனைக் காண குடும்பத்தோடு வருகிறார் வசந்தா அம்மா. நடிகை ஜமுனா ராணி.. பாடகி எஸ்.ஜானகி போன்றவர்கள் குழுமியிருக்க.. இவர் தான் பாடகி வசந்தா என பாடகி சுசீலா அம்மா அறிமுகப்படுத்த.. "எனக்கு தெரியுமே.. எப்படி இருக்க வசந்தி.. ஹஸ்பெண்ட் வந்திருக்கா ?" என சுவாமி அன்போடு கேட்கிறார்.

பரம்பொருளான சுவாமிக்கு இந்தப் பிரபஞ்சத்தில் யாரைத் தான் தெரியாது?

அன்று முதல் உலகம் இவர்களை வசந்தா என அழைத்தாலும்.. சுவாமியோ வசந்தி வசந்தி என்றே அன்போடு அழைக்க ஆரம்பித்திருக்கிறார்.

சுவாமி உங்க முன்னாடி புட்டபர்த்தியில பாட முடியுமா? வாய்ப்பு கிடைக்குமா ? என தயங்குகிறார்.. சினிமாவில் பரபரப்பாய் பாடிக் கொண்டிருந்த வசந்தா அம்மா.. கிடைக்குமாவா.. தாராளமா.. என்கிறார் சுவாமி. 

இல்ல சுவாமி .. உங்க வாலன்ட்டியர்ஸ் விட மாட்டேங்கறாங்க என வருத்தப்பட.. 

நீ அது பத்தி கவலப்படாத.. நீ வா .. நான் பாட வைக்கிறேன் என்கிறார் சுவாமி.

சுவாமி பாட மட்டுமா வைக்கிறார்.. நம்மை ஆட வைப்பதும்.. ஆட்டி வைப்பதும் அவர் தானே!!

சிரஞ்சீவி ராவ் சாய்ராம் மூலமாக வசந்தா அம்மாவுக்கு கடிதம் வருகிறது. அன்று தசரா. வசந்தா அம்மாவின் குடும்பமே அங்கே திரண்டு சுவாமி முன் பர்த்தியில் பாடுகிறது! மகன் கிடார் வாசிக்க.. மகள் வீணை வாசிக்க வசந்தா அம்மா பாட.. கலை கட்டுகிறது கச்சேரி..


குடும்பத்துக்கே நேர்காணல் தருகிறார் சுவாமி. மகள் தான் இஞ்சினியர் ஆகப்போவதாக சுவாமியிடம் தெரிவிக்கிறார். சுவாமி சால சந்தோஷம் என்கிறார். சுவாமியை அங்கில் அங்கில் என்கிறார் வசந்தா அம்மாவின் மகள். சுவாமி என அழைக்க வேண்டும் என அவர் திருத்த.. சுவாமியோ சிரிக்க.. குழந்தைகளின் இதயத்தையே பார்க்கிறார் சத்யசாயி இறைவன் வார்த்தைகளை அல்ல.. 

ஒருமுறை மகனுக்கு பிட்ஸ் பிலானியில் படிக்க ஆவல். அவ்வளவு பணம் இல்லை என தயங்குகிறார். சுவாமி நேர்காணலில் படிக்க வை என்கிறார். என்ன சுவாமி பணத்துக்கு எங்க போறது என வசந்தா அம்மா கேட்க.. சுவாமி நான் இருக்கேன்ல பாத்துப்பேன் என்கிறார் சுவாமி.

அதுபோலவே ஒருவர் உதவ முன்வருகிறார். அவரும் சுவாமி பக்தரே! நம் வாழ்க்கை எனும் செஸ்  விளையாட்டில் எதை எப்போது எப்படி நகர்த்த வேண்டும் என்று சுவாமிக்கு நன்கு தெரியும்.

பாடகி B.வசந்தா தனது குடும்பத்துடன்...

பல நேர்காணல். பல பாத நமஸ்காரங்கள். பல பட்டுப் புடவைகள் என சுவாமியிடம் பேரருளை பளபளக்கும் வகையில் கஜம் கஜமாய் சுமந்திருக்கிறார் வசந்தா அம்மா. ஒருமுறை தன் மகளுக்கு ஏழு வருடமாக குழந்தை இல்லை என வருத்தப்பட.. ஏன் கவலப்படற வெயிட் பண்ணு.. பெண் குழந்தை பிறக்கும் என்கிறார் சுவாமி. சொல்லி அடுத்த வருடம் வசந்தா அம்மா மீண்டும் பாட்டி ஆகிறார். எத்தனை கூட்டமாக இருந்தாலும் வசந்தா அம்மா தரிசன வரிசையில் இருந்தால்.. நேராக வந்து "வசந்தி .. எப்படி இருக்க.. உன் ஹஸ்பெண்டும் வந்தாச்சா?" என கொஞ்சு தமிழில் கேட்பார். 


எத்தனை வாத்ஸல்யம். இறைவனால் மட்டுமே இத்தகைய பேரன்பு காட்ட முடியும்!

பாடகி வசந்தா அம்மா திரைத்துறையில் பாடி 25 வருட நிறைவை ஒட்டி விழா எடுக்க ஹைதராபாத் நகரம் அமர்க்களப்பட்டது. அதன் விஜயத்தில்  சுவாமியிடம் ஆசி வாங்க வருகிறார். சுவாமி மகிழ்ந்து வெள்ளிக் கவசம்.. சிருஷ்டி லிங்கம் வழங்கி.. இதை அபிஷேகம் செய்து பருகு.. இன்னும் நல்ல குரல் வளம் வரும் என தாயன்பு பொழிந்திருக்கிறார்.

சுவாமி பாடகி வசந்தாவிற்கு வழங்கிய சிருஷ்டி லிங்கம் மற்றும் வெள்ளி கலசம்


உன் திறமைக்கு இன்னும் நீ நிறைய பாடி இருக்க வேண்டுமே.. காரணம் என்ன தெரியுமா? Jeleousy எனும் சத்தியம் பேசுகிறார்.

சுவாமி யாராருக்கு எத்தன வாய்ப்பு தராரோ அதெல்லாம் அவங்க அதிர்ஷ்டம்.

அப்படி நிறைய பாடறவங்க எத்தன பேர் சுவாமிய தரிசிக்க வராங்க.. ? அவங்க வராட்டி கூட அவங்கள சுவாமி ஆசீர்வதிச்சிட்டு தான் இருக்கேன். வீட்ட விட்டுட்டு என்ன பார்க்க வரவேண்டிய அவசியம் இல்ல.. உங்க வீடு .. குடும்பம் அதான் முதல்ல.. சுவாமி இங்க மட்டும் இல்ல.. உங்க ஒவ்வொரு வீட்டு பூஜையறையிலும் சுவாமி தான் இருக்கேன்!"  என சுவாமி சத்தியப் பிரமானம் தருகிறார் வசந்தா அம்மா மூலமாக நம் அனைவருக்குமே!!

இரண்டு மகன் அயல்நாட்டில் வேலையில் இருக்க.. மகள் அருகே இருக்க.. பேரன் பேத்திகளோடு இனிதே தன் இல்லற நல்லறத்தை இந்த 77 வயதிலும் திருவளர்ச்செல்வியோ என்று அவர் பாடிய பாடலாய்..

பாடகி வசந்தா அவர்களின் விட்டு பூஜை அறை 

திருமகள் தேடி வந்தாள் எனும் இனிய கான சத்தியமாய் சத்யசாயி திருமகள் கலைமகளாகவும் இன்னமும் இவரின்  குரலில் உயிர்ப்போடும் உணர்வோடும் வாழ்கிறாள்.

என்ன விட என் தங்கை பாடகி சாவித்ரிக்கு சுவாமி மேல ரொம்ப பக்தி. அவளுக்கு நிறைய பஜன் பாடல் தெரியும் என தங்கையை விட்டுத்தராமல் வசந்தசாவித்ரியாய் இதயம் கனிந்து வாழ்கிறார்.

வசந்தா அவர்கள் பாடகி மட்டும் அல்ல.. இசையமைப்பாளரும் கூட.. பாலவிகாஸ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளில் 16 இசை நாடகத்திற்கு இசையமைத்து அதில் இரண்டு சகோதரிகளும் இணைந்து பாடியிருக்கின்றனர்.

ஏசு நாதர் பேசினால் என்ன பேசுவார்? எனும் இவரின் பிரபலமான பாடலுக்கு பதிலாக ஏசுநாதரின் தந்தையான சத்யசாயி பரமபிதா எத்தனையோ முறை இவரிடம் அன்பொழுகப் பேசியிருக்கிறார்.

அந்த வசந்த காலத்தை  இன்னும் பசுமையோடு நெஞ்சில் சுமந்து பரம சத்யசாயி பக்தையாய் வாழ்ந்து வருகிறார் பிரபல பாடகி வசந்தா அம்மா .

 பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக