ஸ்ரீ சத்ய சாயியால் எதுதான் இயலாது. அண்ட சராசரத்தை படைத்து இயக்கும் பரம்பொருள் அவர் என்பதை மிகத் துல்லியமாய் விளக்கும் தூய அனுபவம் இதோ..
பெரிய பண்டிதர்கள் சுவாமியை "மௌன வ்யாக்யாய ப்ரகடித பரப்பிரம்ம தத்வம்" என்று வருணித்துள்ளார்கள். இதன் பொருள் மிக உயர்ந்த தெய்வீகம் மௌனத்தின் வாயிலாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது, என்பதாகும்.
ஸ்வாமி அதிகம் பேசுவது கிடையாது. ஆனால் எல்லா பக்தர்களுக்கும் அவர்களது சந்தேகங்கள் தானாகவே விலகுவதை உணர முடிகிறது. ஸ்வாமியின் மேல் அவர்களது பார்வை விழுந்ததும் சந்தேகங்கள் அனைத்தும் விலகி ஓடுகின்றன.
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் தெய்வீக சங்கல்பத்தால் புரையோடிப்போன சந்தேகத்தின் வேர் நம்பிக்கையின் விதையாக மாற்றம் அடைந்ததை இங்கே காணப் போகிறோம்...
🌹இறைவன் சாயி வரவழைத்த வானவில் பழம்:
திரு ஜோயல் ரியோர்டன் ஹாலிவுட் திரைப்பட உலகத்தில் இவர் ஒரு தயாரிப்பாளர், கதாசிரியர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் ஹைவே பேட்ரோல்... எ ப்ரைஸ் ஆஃப் கோல்ட்... அட்வென்சர்ஸ் ஆஃப் சூப்பர் மேன் போன்ற பல ஹாலிவுட் படங்களில் முக்கிய பங்காற்றியவர். இவரிடம் பாபா எவ்வாறு சந்தேகம் எனும் நஞ்சால் அழுகிப் போயிருந்த அவரது மனதில் நம்பிக்கை விதையைத் தூவினார் என்ற சுவாரசியமான சம்பவம் உள்ளது. ஜோயலின் மனைவி டயானா பாபாவின் அதீத பக்தை. தன் மனைவி டயானாவுடன் பிரசாந்தி நிலையம் வந்த ஜோயலுக்கு பாபாவின் 'உண்மையான இயல்பை' அனைவருக்கும் வெளிப்படுத்தும் எண்ணம் மாத்திரமே இருந்தது. பாபாவை அவர் எப்போதும் குதர்க்கமாக "கதாபாத்திரம்(Character)" என்றே குறிப்பிடுவார்.
டயானா தன்னுடைய அம்மா அனலைஸ் உடன் ஏற்கனவே இரு முறை இந்தியாவிற்கு வந்தவர். இருவரும் சாய்பாபா செய்த அற்புதங்களைப் பற்றியே எப்போதும் பேசிக்கொண்டு இருப்பார்கள். ஒன்று இவர்கள் இருவரும் ஏற்கனவே பைத்தியமாகி விட்டனர் அல்லது கூடிய விரைவில் பைத்தியமாக ஆகிவிடப் போகிறார்கள் என்றே நினைத்தேன். கடைசியாக நான் ஒரு முடிவுக்கு வந்தேன். விபரீதமாக எதுவும் நடப்பதற்கு ஒருமுறை நாமே ஏன் நேரில் சென்று சாய்பாபா என்னும் இந்தக் கதாபாத்திரத்தை போய் பார்த்துவிட்டு வரக்கூடாது என்று நினைத்தேன். ஹாலிவுட்டில் இருந்து கிளம்புவதற்கு முன்னதாக ஒரு முக்கிய பிரமுகருடன் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அவரை சிரிப்பூட்டும் விதமாக நான் என்ன செய்வதாக உத்தேசித்துள்ளேன் என்பதை எடுத்துச் சொன்னேன். ஆனால் அவர் ஏற்கனவே சாய்பாபாவை பற்றி படித்தும், கேள்விப்பட்டும் இருப்பதாக எனக்குத் தோற்றியது. சரி ஜோயல்... நீ அவரிடம் என்ன கேட்கப் போகிறாய் என்று என்னிடம் கேட்டார். அப்போதுதான் இந்த எண்ணம் எனக்குள் தோன்றியது.
எல்லோரும் அவரை கடவுள் என்று கூறுகின்றனர். எனவே கடவுளால் மாத்திரமே வரவழைக்க முடிந்த வானவில்லை கேட்கப் போகிறேன் என்று அவருக்கு பதில் அளித்தேன். எனது பதிலைக் கேட்டவுடன் அவர் சிரித்தார். பின்னர் நாங்கள் இருவரும் வேறு பல விஷயங்களைப் பற்றி பேசினோம். ஆனால் வானவில்லை வரவழைக்க வேண்டும் என்பதைத் தான் கேட்க வேண்டும் என தீர்மானித்தேன்.
நேர்காணல் அறைக்குள் நாங்கள் நுழைந்த உடனே ஸ்வாமி முகத்தில் அறைந்தார் போல "நல்லது கதாபாத்திரமே... வானவில் எப்படி நீ ரசிக்கும் வண்ணம் இருந்ததா?" என்று கேட்டார்.
இதைக் கேட்டதும் பதில் பேச முடியாத ஊமையானேன். நான் அவருக்கு வைத்திருந்த பெயரை அறிந்திருந்தார். நான் என்ன அவரை கேட்கப் போகிறேன் என்பதும் தெரிந்திருந்தது. அவ்வாறே ஆகாயத்தில் வானவில்லையும் வரவழைத்தார். இவை அனைத்தும் என் மனதில் வட்டமிட்டது.
பின்னர் நான் எல்லோருடனும் சேர்ந்து தரையில் அமர்ந்து கொண்டேன். பாபாவின் பேச்சைக் கேட்டும் கேட்காமலும் எதுவும் புரிந்து கொள்ள முடியாமலும் இருந்தேன். இன்னும் சொல்லப்போனால் பொறியில் அகப்பட்ட எலியைப் போல என் மனம் இங்குமங்கும் ஓடி சகஜ வாழ்க்கைக்கு திரும்ப வழி தேடிக் கொண்டிருந்தது. இவருக்கு பிறர் மனதை அறியும் சக்தி இருந்தது. "டெலிபதி" என்று சொல்லப்படும் புலன்கள் தொடர்பின்றி மக்களின் உள்ளத்திலிருந்த எண்ணங்கள் அவருக்கு தெரிந்தது. இது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டிருந்தது. ஆனால் வானவில்லை கண்டது மட்டும் ஒன்று மாயையாக இருக்கும் அல்லது நான் பாபாவால் மனோவசியம் செய்யப்பட்டு இருப்பேன் என்று நினைத்தேன்.
நான் மீண்டும் இவரை ஒருமுறை பரீட்சித்துப் பார்க்க விரும்பினேன். இந்தப் பருவத்தில் எங்குமே கிடைக்காத ஒரு புத்தம் புதிய பழம் ஒன்றை இந்த அறையிலேயே அவர் வரவழைத்து தரவேண்டும் என எனக்குள் நான் கூறிக் கொண்டேன்.
இவ்வாறு நான் நினைத்த சில நிமிடங்கள் கழித்து, ஸ்வாமி தன் பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு காற்றிலே தன் கரத்தை அவருடைய பாணியில் சுழற்றினார். அவர் தன்னுடைய கரத்தை திருப்பியவுடன் அங்கே புத்தம்புதிய அத்திப்பழம் அமர்ந்திருந்ததைக் கண்டேன். ஒரு வார்த்தை கூட பேசாமல் அப்பழத்தை என்னிடம் அவர் கொடுத்தார்.
சிறிது நேரம் கழித்து அப்பழத்தை நான் சாப்பிட்டேன். அது அப்போதுதான் பறிக்கப்பட்டிருந்த புத்தம்புதிய பழமாக இருந்தது. இருப்பினும் அது அத்திப்பழம் கிடைக்கும் காலம் கிடையாது என பின்னர் தான் தெரிந்து கொண்டேன்... சுற்றுவட்டாரத்தில் யாருமே அத்திப்பழ மரத்தை வளர்க்கவில்லை.
இவ்வாறு தான் ஸ்ரீ சத்திய சாய் பாபா ஜோயலின் சந்தேகத்தைத் தீர்த்து அவரது மனதில் நம்பிக்கை எனும் விதையை விதைத்தார்.
பசியோடு - அதுவும் சந்தேகப் பசியோடு வந்தவரை அப்படியே திருப்பி அனுப்பாமல் அந்தப் பசிக்கு நம்பிக்கை என்னும் உணவிட்டு திருப்தியோடு அனுப்பிய ஓ சாயி...உங்களை வணங்குகிறோம்.
A Rainbow Story from “Sai Baba Avatar” by H.Murphet.
மொழிமாற்றம்: R.வரலக்ஷ்மி , கிரோம்பேட்டை, சென்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக