தலைப்பு

செவ்வாய், 3 நவம்பர், 2020

மனம் சுத்தமாக இருப்பதற்கு ஏதேனும் வழியை சுவாமி சொல்லி இருக்கிறாரா?


சுவாமி சொல்லி இருக்கிறார்.

மனம் என்பது வெறும் எண்ணங்களின் குவியல்கள் எனப் புரிந்துணர வேண்டும்.

Mind is a Mad monkey (மனம் என்பது பைத்தியக்கார குரங்கு) என்கிறார் சுவாமி.

காரணம் Random Thoughts..

மேகங்களைப் போல் பலவித எண்ணங்கள் அலைந்து கொண்டே இருப்பதாலும்..

கலைந்து கலைந்து மீண்டும் புதுப்புது மேகங்கள் இணைவது போல் எண்ண அலைகள் கடலலைகளை விட முடிவே இல்லாமல் சீறிப் பாய்ந்து கொண்டே இருக்கிறது.

வீட்டிற்கும் நாட்டிற்கும் எல்லை இருப்பது போல் எண்ணங்களையும் எல்லையோடு வைத்திருக்க வேண்டும்.

காரணம் எண்ணங்களே செயல்களாகின்றன...

பல எண்ணங்கள் சில எண்ணங்களாகும் 

சில எண்ணங்கள் ஓரிரு எண்ணமாகும் பிறகு அதுவும் நின்றுவிடும்.

எண்ணமற்ற நிலைக்கு வர நாம் அதை கண்மூடி கவனிக்க வேண்டும்!

எப்படி கவனிக்கப்படாத வியாபாரம் நஷ்டமடையுமோ..

அப்படியே நம்மால் கவனிக்கப்படாத எண்ணங்களும் நம்மை பல பிரச்சனைகளுக்கும் ... உடல்/மன நோய்களுக்கும்.. அமைதி இல்லாத பதட்டநிலைக்கும் தள்ளிவிடுகிறது.

அதனால் வியாபரம் மட்டுமே நஷ்டமாகும்.. இதனால் வாழ்க்கையே நஷ்டமாகிறது.

இந்த எண்ண கவனிப்பிற்கு பெயரே தியானம்.



வெறும் சாட்சியாக இருப்பது அதனை கவனிப்பது.

ஜபம் என்பது கூட பல எண்ணங்களை ஒரே எண்ணமாக்கிட அந்த மந்திரத்தையே சொல்லப் பழகி.. இறுதியில் எண்ணமற்ற நிலைக்கு செல்வது.

எண்ணமற்ற நிலை வருவதற்கான ஒரு கருவியே மந்திரம். அது யோசனைகளை நிறுத்தி ஜபிக்க வைக்கிறது.

மனம் சுத்தமாவது என்பது சுத்தமாக மனம் இல்லாத நிலைக்கே பயணித்து சுவாமியோடு இரண்டற கலக்கும் இலக்கை அடைவது.

மனமற்ற நிலையே பிறவியற்ற நிலையை முடிவு செய்கிறது.



சுவாமி வழிவகுத்த ஒன்பதுவித கோட்பாடுகளும் இந்த மனமற்ற நிலையான ஆன்மீக நிலைக்கே மெல்ல மெல்ல பூர்வ கர்மாவை கரைத்து நம் ஆன்மாவை நகர்த்துகிறது.

மனம் சுத்தமாவதற்கு நமக்கு நான்கு குணங்கள் வேண்டும் என்கிறார் சுவாமி. அவை

மைத்ரி

கருணை

முதிதம்

உபேக்ஷை

ஸாதுக்கள் / மகான்கள் இவர்களின் பால் அன்பு.. சுவாமியின் பெயரை கேட்ட மாத்திரத்திலேயே பேரன்பு... இதுவே மைத்ரி.

துக்கத்தில் இருப்பவர்களின் பால் இரக்கம்.. இதுவே கருணை.

தானம்.. தருமம்... பரோபகாரம் (மனிதனுக்கு மனிதன் உதவி)... போன்ற சேவைகளை செய்வதைப் பார்த்து மகிழ்வது இதுவே முதிதம்.

இதனையே ஒவ்வையார் அறம் செய்ய விரும்பு என்கிறார்.

கடைசியான குணம்..

கெட்டவர்களின்பால் சினம் கொள்ளாமல் இருப்பது இதுவே உபேக்ஷை .

(ஆதாரம் : பிரச்னோத்தர வாஹினி- பக்கம் : 24. ஆசிரியர் : ஸ்ரீமான் கஸ்தூரி)


இந்த நான்கு குணங்களை வளர்க்கும் போதே மனம் சுத்தமடையும் என்கிறார்.

நமது அன்றாட ஆன்மீக சாதனையாலும் இறைவன் ஸ்ரீ சத்யசாயியின் பெருங்கருணையாலும் நிச்சயம் நம்மால் இந்த நான்கு குணங்களை வளர்க்க முடியும்!

சுவாமி எந்த பக்தரையும் கைவிடுவதில்லை.

சுவாமி எந்த பக்தரையும் கீழ்நிலைக்கு தள்ளுவதில்லை.

வாழ்க்கையின் ஒரே இலக்கான பிறவாமையை சுவாமியால் மட்டுமே தர முடியும் என்பதை நாம் நெஞ்சில் நிறுத்த வேண்டும்.

அழுக்கு துணியை வாஷிங் மெஷினில் வைத்து தண்ணீர்/ சோப் பவுடர் போட்டு மூடிவைத்து மறக்காமல் சுவிட்ச் போட்டு விட்டுவிடுகிறோம். அதுவே துவைத்து காயவைத்து கையில் தருகிறது.

அதுபோல் நம் பூர்வ கர்ம அழுக்கு மனங்களை சுவாமியின் பாதத்தில் மேலே சொன்ன நான்கு குணங்களோடு சேர்த்து சமர்ப்பித்து மறக்காமல் சரணாகதி எனும் பக்தி சுவிட்ச்சை அழுத்த வேண்டும்.

நம்மை பரிசுத்தப்படுத்துவது சுவாமியின் வேலை. 

வீதி எல்லாம் மழை. குண்டு குழி எல்லாம் தண்ணீர். எதில் கால் வைத்து கீழே விழுவோமோ என நாம் கவலைப்படத் தேவையே இல்லை..

காரணம் சுவாமி தன் பக்தர்களை தோளில் சுமந்து கொண்டு உலகத்தில் நடக்கிறார்.

இது அனுபவப் பூர்வமான சத்தியம். இதை ஆழமாய் உணருங்கள்.

   பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக