தலைப்பு

செவ்வாய், 3 நவம்பர், 2020

🇵🇰 ஸ்ரீ சத்ய சாயியை கிருஷ்ண அவதாரம் என உரைத்த பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய மகான்!

மகான்களால் மட்டுமே இறைவன் யார் என்பதை அடையாளம் கண்டு உணர முடியும். அப்படி உணர்ந்து ஸ்ரீ சத்யசாயியை இறைவன் ஸ்ரீகிருஷ்ணனின் வரிசையில் வந்த அவதார புருஷர் என உரைத்தார் பாகிஸ்தானில் புகழடைந்து பல மகிமைகளும் நோய் நிவாரணங்களும் புரிந்த அரிதான ஒரு இஸ்லாமிய மகான் ஹாஜி பாபா.. அதனை உடனிருந்து அனுபவித்த டாக்டர் காடியாவின் மெய்சிலிர்க்கும் அனுபவம் இதோ..

 

டாக்டர் காடியா , ஆப்பிரிக்க தேசமான உகாண்டாவின் கம்பாலாவில் பிறந்தவர். மும்பை பவன்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டமும், மணிப்பால் கஸ்தூரிபா மருத்துவக்கல்லூரியில், எம்.பி.பி.எஸ் பட்டமும் பெற்றார். இங்கிலாந்து லிவர்பூல் கல்லூரியில், D. T. M&H பட்டயகல்வியும், குஜராத் மருத்துவக் கல்லூரியில், எம்.டி பட்டமும் பெற்றவர். பகவானுடைய தீவிர பக்தரான இவர், பகவானுடைய அற்புதங்களையும், லீலைகளையும், உடனிருந்து காணும் பேறு பெற்றவர்.


காடியாவின் குடும்ப உறுப்பினர்களுடன் இறைவன் ஸ்ரீ சத்திய சாயி

ஒருமுறை, புட்டபர்த்தியில் பகவான், ஒரு டாக்டர் குழுவினருடன் பேசிக்கொண்டிருந்தார். உடன் டாக்டர் காடியா அவர்களும் இருந்தார். சுவாமி அனைவரையும், வயிற்றுப்புண்ணால் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நோயாளியிடம் அழைத்துச் சென்றார். அவருக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டுமென மருத்துவ குழுவினரை பார்த்து கேட்டார். குழுவில் பல அறுவை சிகிச்சை நிபுணர்கள் இருந்தனர். அவர்கள் நோயாளியின் மருத்துவ அறிக்கையை பார்த்து, அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். சுவாமி, இவருக்கு Gastro jejunostomy செய்ய வேண்டுமா? அதற்கு எவ்வளவு நேரம் ஆகும் ?, என்றார். சுவாமி, வயிற்றுப் புண்ணுக்காக செய்யப்படும் அறுவை சிகிச்சையின் மருத்துவ பெயரை கூறியதைக் கேட்டு, மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். "சுவாமி, எல்லாம் தயாராக இருந்தால், சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகும்.", என்றனர்.


சுவாமி, "நான் இப்போது அறுவை சிகிச்சை செய்கிறேன். எவ்வளவு நேரம் ஆகிறது பாருங்கள்.", என்று கூறி அவர்களை அதிர வைத்தார். சுவாமி, கரத்தை அசைத்து, அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் கத்தியை (scalpel) சிருஷ்டி தந்தார். நோயாளியின் வயிற்றை சீராக கிழித்த பாபா, கத்தரிக்கோல், பேண்டேஜ், முதலியவற்றையும் சிருஷ்டி செய்து, அரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சையை முடித்தார். நோயாளியும் சுகம் அடைந்தார். மருத்துவத்திற்கு மேலானது, தெய்வீக மருத்துவம் என்பதை டாக்டர்கள் புரிந்துகொண்டனர்.


டாக்டர் காடியாவின் நண்பரும், கர்நாடக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான, டாக்டர் அட்லி, சுவாமியின் பக்தர். டாக்டர் அட்லி, பகவானை பணிந்து, பல்கலைக்கழகத்தின் சார்பில், ஹூப்ளியில் துவக்கப்பட உள்ள, பொறியியல் கல்லூரி விழாவிற்கு, வருகை தர வேண்டும், என வேண்டுகோள் விடுத்தார். பகவான் அன்புடன், வருவதாக உறுதி அளித்தார். மிகவும் மனம் மகிழ்ந்த டாக்டர் அட்லி, நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்யலானார். நிகழ்ச்சி நாள் அன்று, பகவான் அங்கு வருகை தந்த போது, மருத்துவர்கள், கனவான்கள், பத்திரிகையாளர்கள், புகைப்பட நிபுணர்கள், மற்றும் பொதுமக்கள், என்று பத்தாயிரம் பேர், பகவானை தரிசிக்கவும், அவரது ஆசியை பெறவும், வளாகத்தில் குழுமியிருந்தனர். 


பகவான் மேடைக்கு வந்தபோது, அனைவரும் எழுந்து நின்று பகவானை அன்புடன் வரவேற்றனர். கையை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்த பகவான், திடீரென மேடையை விட்டு இறங்கி, கூட்டத்தில் இருந்த இரண்டு பெண்களை நோக்கி நடந்தார். அதில் ஒரு பெண் அழுது கொண்டிருந்தாள். மற்றொரு பெண், அமைதியாக ஜெபம் செய்து கொண்டிருந்தாள். சுவாமி, அழுது கொண்டிருந்த பெண்ணின் அருகே சென்று, "அம்மா! அழாதே. உன் அழுகையை நிறுத்து. சுவாமி, உன் மகளுக்கு கண் பார்வை கொடுக்க வந்துள்ளேன். உன் மகளுக்கு பார்வை இல்லை. அவளுக்கு ஐந்து வயதாக இருக்கும் போது, நீ அவளிடம், " 'ஓம் நமச்சிவாய!', என்று ஜெபம் செய்து கொண்டிரு, சிவன் உனக்கு பார்வையை தருவார்.", என்று கூறியிருந்தாய். இப்பொழுது அவளுக்கு 18 வயதாகிறது. நீ கூறியபடியே, அவள் ஜெபித்துக் கொண்டிருந்த படியால், சுவாமி அவளுக்கு இப்போது, பார்வையை தருகிறேன்.", என்று கூறி, தன் இரு கட்டை விரல்களால், அந்த சிறிய பெண்ணின் கண் இமையின் மீது கையை வைத்து அழுத்தி, கையை எடுக்க, அடுத்த கணம், அப்பெண் பார்வை கிடைக்கப் பெற்றாள். இதைக் கண்ட அனைவரும் மகிழ்ந்து, "பகவானுக்கு ஜே!", என்று கோஷமிட்டனர்.


டாக்டர் காடியா, தான் செல்லும் இடங்களில் எல்லாம், இதுபோன்ற பகவானின் அற்புத லீலைகளையும், சுவாமியின் நற்செய்திகளை பற்றியும், மற்றவர்களுக்கு கூறுவார். ஒரு முறை டாக்டர் காடியா, நைரோபி சென்றிருந்தார். நைரோபியில், டி.எல். பட்டேல், என்ற புகழ்பெற்ற பதிப்பகத்தை, திரு. ஹரிஜிபாய் பட்டேல் என்ற செல்வந்தர், நடத்திவந்தார். அவர் நோயுற்ற தனது மகனுக்கு, மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும் என திரு. காடியா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்து, காரை அனுப்பி வைத்தார். அதனை ஏற்று, திரு. பட்டேல் அவர்களின் இல்லம் சென்று, அவரது மகனை, திரு. காடியாஅவர்கள் பார்த்தார். இரண்டு கால்களும், போலியோவால் நலிவுற்று, நடக்க இயலாமல் படுத்து இருந்தான் அந்தச் சிறுவன். "நவீன மருத்துவத்தால் இவனை எவ்வாறேனும் குணப்படுத்துங்கள்.", என்று மன்றாடினார், திரு. பட்டேல்.


"இன்றைய மருந்துகளால், இவனை குணப்படுத்த இயலாது. ஆனால் அவதார புருஷர்களும், மகான்களும், இவனை முழுமையாக குணப்படுத்த முடியும். கவலைப்பட வேண்டாம்.", என்று அறிவுறுத்தி திரும்பினார், டாக்டர். பட்டேல் அவர்களின் மனம் அமைதி அடைந்தது. பல மாதங்களுக்குப் பின், டாக்டர். காடியா மீண்டும் நைரோபி செல்ல நேர்ந்தது. டாக்டர் நைரோபி வந்ததை அறிந்த திரு. பட்டேல், நேரில் வந்து தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு போலியோவால் நடக்க இயலாது இருந்த அவரது மகன், மற்ற சிறுவர்களுடன் ஓடி விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்.


மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த டாக்டர், என்ன நடந்தது என்று பட்டேல் அவர்களிடம் கேட்டார். "டாக்டர் அவர்களே, தாங்கள் என் மகனை, மகான்களால் மட்டுமே குணப்படுத்த முடியும், என்று கூறினீர்கள். அதன்படியே, அப்துல்லா பாபா என்றும், ஹாஜி பாபாஜி என்றும், அன்புடன் அழைக்கப்படும், 92 வயது முஸ்லிம் மகான், அல் ஹச் சிராசி அஸ்கர் ஹாஜி அவர்கள் இவனை குணப்படுத்தினார். இந்த முஸ்லிம் மகான், நைரோபி வந்திருந்தபோது, நான் அவரிடம் சரணடைந்து, நோயுற்ற என் மகனை தாங்கள் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினேன். நான் உன் மகனை பார்க்க வேண்டும் என்றார், அவர். நாங்கள் உடனடியாக அவருடன் புறப்பட்டு, வீட்டிற்கு வந்தோம். அவர் சிறுவன் படுத்து இருந்த படுக்கை அருகே சென்று, தன் இரு கைகளையும் வானத்தை நோக்கி நீட்டியவாறு, கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருந்தார். 5 நிமிடங்கள் கழித்து, கிஷ்முவில் உள்ள தர்காவில் இருந்து அழைப்பு வருகிறது,  நாம் உமது மகனை அங்கு அழைத்துச் செல்வோம், என்றார். அந்த தர்கா, எங்களது இல்லத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

என் மகனை தூக்கிக் கொண்டு, உடனடியாக நாங்கள் காரில் அங்கு சென்றோம். கிஷ்மு சென்றடைந்ததும், ஹாஜி பாபா, நாம் இடுகாடு இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்றார். அங்கு ஒரு கல்லறையை காட்டி, இந்த சிறுவனை அந்த கல்லறையின் அருகில் படுக்க வையுங்கள் என்றார். அதன்படி செய்தோம். பின்னர் ஹாஜி பாபா, 'அல்லாஹ் அக்பர்!', என்று உரக்கக் கூறினார். அந்தக் கணம் அந்தச் சிறுவன் எழுந்து ஓட ஆரம்பித்தான். என் மகன் குணமடைந்தான்.", என்றார் பட்டேல்.


நான், திரு. ஹாஜி பாபா அவர்களை சந்திக்க மிகவும் ஆசை பட்டேன். சில நாட்கள் கழித்து அதிர்ஷ்டவசமாக, எனது நண்பரும், ஒரு அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றுபவரான, அம்ரிட் லால் அதானி, எனக்கு போன் செய்து, நாளை மகான் ஹாஜி பாபா எனது வீட்டிற்கு வருகை தர உள்ளார். தாங்கள் வருகிறீர்களா எனக் கேட்டார். அவரது தரிசனத்தை பெற நான் மிகவும் விரும்புகிறேன் என்று கூறி, மறுநாள் அவரை தரிசிக்க, நண்பரின் வீட்டிற்கு நான் சென்றேன். அங்கு பலரது சிறு சிறு பிரச்சனைகள், ஹாஜி பாபாவின் ஆசீர்வாதத்தால் தீர்க்கப்பட்டதை கண்டேன். அன்புடன் அவரை வணங்கி நான், எனது இல்லத்திற்கு வர வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்தேன். அதை ஏற்று, மகான் ஹாஜிபாபா, எனது இல்லத்திற்கு வந்து, என்னையும், எனது மனைவியையும் ஆசீர்வதித்தார்.


அவர் எங்களிடம் மிகவும் அன்பாக இருந்தார். நான் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டு பதிலையும் பெற்றேன். அப்போது நான் ஒரு முக்கியமான கேள்வியை அவரிடம் கேட்டேன். "பெருமகனாரே! தங்களுக்கும், பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவிற்கும், என்ன வித்தியாசம் ?", என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், "உனக்கு மகான் ராம்தேவ் அவர்களை தெரியுமா ?", எனக் கேட்டார். நான், மகான் ராம்தேவ் அவர்களை அறிவேன் என்றேன். அதற்கு அவர், "ராம்தேவ் மற்றும் நான், மகான்கள் வரிசையில் வருகிறோம். என்னுடைய பணி, பாகிஸ்தான், மலாவி, கிழக்கு ஆப்பிரிக்கா, ஐக்கிய ராஜ்யம், இன்னும் சில நாடுகளில் உள்ள  பக்தர்களுக்கு உட்பட்டது. ஆனால் பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்களின் பணியோ, இவ்வுலகம் முழுவதற்கும் உரியது. ஸ்ரீ சத்ய சாயிபாபா, அவதார புருஷர். ஸ்ரீ கிருஷ்ணரின் வரிசையில் வருகிறார். நாங்கள் எங்கள் இடையேயான அன்பை அவ்வப்போது பகிர்ந்து கொள்வோம். பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா, 1968ஆம் ஆண்டு, மும்பைக்கு செல்ல நைரோபி விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது நானும் அங்கு இருந்தேன். விமானத்தின் படிக்கட்டில் ஏறும் போது, அவர் என்னை பார்த்தார். நாங்கள் இருவரும், எங்களது கண்களால் ஒருவருக்கு ஒருவர் அன்பையும் மகிழ்ச்சியையும் தெரியப்படுத்தி கொண்டோம்.", என்றார் ஹாஜி பாபா. மகானும் தீர்க்கதரிசியும் ஆன ஹாஜி பாபா அவர்கள், நமது அன்பிற்குரிய சுவாமியை, உலகம் முழுவதும் வியாபித்துள்ள, 'காஸ்மிக் எனர்ஜி' என ஒப்புரை தந்தது, மிகவும் முக்கியமான ஒன்றாகும் என்கிறார், டாக்டர் காடியா.


🇦🇺 ஆஸ்திரேலிய விஞ்ஞானியான ஹோவார்ட் மர்பெட், இவ்வாறு கூறுகிறார்:"நான் விஞ்ஞான சக்திக்கு மேலான இறை சக்தி உள்ளதா என, உலகெங்கும் பயணித்து ஆராய்ச்சி மேற்கொண்டேன். இறுதியில் இந்தியா வந்து, புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்களை பார்த்தேன். நான் அதீத சந்தேகத்துடனும், ஆராய்ச்சி மனப்பான்மையுடனும், இவரது தெய்வீக ஆற்றலை, 4 ஆண்டுகள் உடனிருந்து அணுவணுவாக ஆராய்ந்தேன். பண்டைய புராதன இந்திய தத்துவங்களிலும், இதிகாசங்களிலும், சாதுக்கள், மகான்கள், இவர்களுக்கும் மேலாக தெய்வீக ஆற்றலுடன், ரிஷிகள் இருப்பதை அறிந்தேன். ஒரு புல்லைக்கூட அஸ்திரம் ஆக்கும் ஆற்றலும், வரத்தை வழங்கவும், சபிக்கவும் வல்ல, தெய்வீக சக்தியுடன், அவர்கள் இருப்பதைக் கண்டேன். சுவாமியின் தெய்வீக ஆற்றலை நான் அறிந்த போது, இவரும் ஒரு பெரிய ரிஷியோ என நினைத்தேன். ஆனால், ரிஷிகள் வரத்தை வழங்கினாலும், கோபத்தில் சபித்தாலும், தங்கள் சக்தியை இழந்து, இறைவனை நோக்கி தவம் செய்து, தங்கள் ஆற்றலை திரும்ப பெறுவதை கண்டேன்.


ஆனால் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களோ, யாரையும் சபிப்பது இல்லை. மனிதர்கள் பல்வேறு குறைகளுடன், குழந்தைப்பேரின்மை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உயிர் போக்கும் நோயிலிருந்து காப்பாற்ற வேண்டி, இவரை நாடி வருகின்றனர். இவர் தமது தெய்வீக ஆற்றலால், அவர்கள் குறையை நீக்கி, அருள் செய்கிறார். பால்ய வயதில் இருந்து, தொடர்ந்து, இவரது தெய்வீக ஆற்றலை பயன்படுத்திய போதும், அது குறையவில்லை. மாறாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இவருக்கு எந்த தவமும் தேவையில்லை. ஆகவே ரிஷிகளும், முனிவர்களும், வரம் தருவதாலும், சாபம் விடுவதாலும், தாங்கள் இழந்த தெய்வீக ஆற்றலை பெற, எந்த இறை சக்தியை நோக்கி தவம் இருக்கிறார்களோ, எந்த இறை சக்தியின் மூலம் தங்களது ஆற்றலை திரும்ப பெறுகிறார்களோ, அந்த இறை சக்தியாக, அந்த இறைவனாக, பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா விளங்குகிறார் என்பதில், எந்தவித ஐயப்பாடும் இல்லை.",என்கிறார் ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஹோவர்ட் மர்பெட்

ஆதாரம் : சாயி ஸ்மரண் By Dr. D.J காடியா

 தொகுத்தளித்தவர் : S. Ramesh, Ex-Convenor, Salem Samithi, Salem.


🌻 நம்மில் பலர், சுவாமியை சித்த புருஷராக, ஒரு மகானாக எண்ணிக் கொள்கிறோம். முகமதிய தீர்க்கதரிசியின் ஒப்புரையும், விஞ்ஞானியின் தெளிவுரையும், பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா, முழுமுதற் கடவுள் என்பதை நமக்கு உணரவைக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக