தலைப்பு

சனி, 21 நவம்பர், 2020

சுனில் கவாஸ்கரின் வாழ்வில் பாபாவின் அருட்பிரவேசம்!


டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் என்பது இமாலய சாதனைக்கு சமம். இதுவரை 13 பேர் இந்த சாதனையை எட்டிப்பிடித்துவிட்டாலும் கூட முதல் முதலாக இந்த சாதனையை எட்டி வரலாறு படைத்தவர் இந்தியாவின் சுனில் கவாஸ்கர்.  அப்படிப்பட்ட சுனில் கவாஸ்கரின் வாழ்க்கையில் சுவாமி எவ்வாறு நுழைந்தார்.. சுவாமி அவர் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறீர்கள். 

1970ஆம் ஆண்டு, மீனாள் மனோகர் கவாஸ்கர் மும்பையில் உள்ள தனது வீீ்ட்டில் காலையில் சிற்றுண்டி செய்து கொண்டிருந்தாள். அவளது மகன் சுனில் கவாஸ்கர். அவன் கிரிக்கெட்டில் நல்ல இடத்தை அடைய வேண்டும் என அவள் இரண்டு வருடமாக சீரடி சாய்பாபாவை பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.

சுனில் கவாஸ்கர் தன் தாயார் மீனாள் மனோகர் கவாஸ்கருடன்.. 

அன்றைய தினம் பிராபோர்ன் ஸ்டேடியத்தில் மும்பைக்கும் குஜராத் கும் இடையே ராஞ்சி கோப்பைக்கான போட்டி நடக்க இருந்தது. அந்தப் போட்டியில் சுனில் சப்ஸ்டிடுட் பிளேயர்(Substitute player). ஏனென்றால் அதற்கு முந்தைய போட்டியில் அவனது ரன் குறைவாக இருந்தது. இந்த போட்டியில் நல்ல ரன் எடுப்பவர்கள் இந்திய அணிக்கு தேர்வு ஆகும் வாய்ப்பு இருந்தது.

அவள் சீரடி சாய்பாபாவை பிரார்த்தித்தாள். அப்போது ஜன்னல் அருகே, ஆரஞ்சு வண்ண உடையில் அடர்ந்த முடியுடன் ஒருவர் நிற்பதைக் கண்டாள். அவளுக்கு பயம் ஏற்பட்டது. இருந்தபோதிலும், அவர் ஒரு மகானாக இருக்கவேண்டுமென்று அவரை நமஸ்கரித்தார்.

அவர் புன்னகையுடன் மராத்தி மொழியில், "நிதானமாக இரு, உனது மகன் இன்று சதம் அடிப்பான்" என்று ஆசி கூறினார்.

இன்று அவன் ஆடவே வாய்ப்பு இல்லாத போது இவரது ஆசி எப்படி பலிக்கும் என குழம்பினாள். அவள் அருகே இருந்த பூஜை படங்கள், சுவாமி படங்கள் விற்கும் கடைக்குச் சென்று தான் பார்த்ததைப் போன்ற உருவத்தில் ஏதாவது மகான், கடவுள் படங்கள் இருக்குமா என தேடிப்பார்த்தாள்.

அவளுக்கு அப்படி எந்த படமும் கிடைக்கவில்லை வீட்டிற்கு வந்து சில நிமிடங்களில் ,ஒரு உந்துதலால் மீண்டும் அதே கடைக்கு சென்று நன்றாக தேடிப்பார்த்தாள்.


ஒரு புத்தக கட்டுக்கு அடியில் ஒரு படம் அவளுக்கு கிடைத்தது. கடைக்காரர், அந்த படத்தைத்தான் வாங்கவில்லை என்றும் அது யாரென்று தெரியாது என்றும் நீங்களே அதை இலவசமாக வைத்துக் கொள்ளுங்கள் எனக்கூறி இவளுக்கு தந்துவிட்டார்.

மீனாள் மனோகர் கவாஸ்கர் அந்த படத்தை எடுத்து வந்து, தான் பார்த்த அந்த ஜன்னல் அருகே பொருத்தினாள். அப்போது டெலிபோன் மணி அடித்தது. மறுமுனையில் சுனில் கவாஸ்கர் பேசினான்.காலை பயிற்சியின்போது அஜித் வடேகர் அடிபட்டதால் தான் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக ஆடப் போவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்தார். உணவு இடைவேளைக்கு முன் 70 ரன்கள் எடுத்திருந்த சுனில் இடைவேளைக்குப்பின் சதமடித்தார்.


மாலையில் அனைவரும் வீட்டில் இருந்தபோது காலையில் தனக்கு ஏற்பட்ட அந்த உயர்ந்த அனுபவத்தை மீனாள் கவாஸ்கர் தெரிவித்தார். காலையில் வந்தது ஸ்ரீ சத்ய சாய்பாபா என்றும் சீரடி சாய்பாபாவின் அடுத்த அவதாரம் என்றும் அறிந்து அனைவரும் நமஸ்கரித்து அவருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

அதன்பின் சுனிலை தடுக்க யாருமில்லை 16 ஆண்டுகளில் 34 சதங்களுடன் உலகில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.


சுவாமியின் அருமை பக்தர் சுனில் கவாஸ்கர். ஒருமுறை அவரிடம், "உங்கள் கிரிக்கெட் வாழ்க்கைக்கு பகவான் உதவி உள்ளாரா?" என கேட்டபோது, "அவர் இல்லாமல் நான் ஒரு run கூட எடுத்திருக்க முடியாது." என்று தெரிவித்தார்.

✋ கவாஸ்கரை குணப்படுத்திய பகவான்:

1977ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி விக்டோரியா மாகாணத்தில் நடைபெற இருந்தது.

போட்டிக்கு முன்னதான பயிற்சி ஆட்டத்தின் போது, கவாஸ்கரின் தொடை தசைப் பகுதி கிழிந்து காயம் ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், "காயம் சரியாக ஆறு வாரம் ஆகும் எனவே விளையாட கூடாது." என தடை விதித்து விட்டனர்.

சுனில் கவாஸ்கர் மனமுடைந்தார். பகவானை உதவிக்கு அழைத்தார்.
 கவாஸ்கரின் மனைவி, இந்தியாவில் இருந்து விமானம் மூலம் பகவானின் விபூதியை அனுப்பினாள்.


விபூதி தடவியதும் முதல் நாள் வலி குறைந்தது. இரண்டாம் நாள், தசைப்பிடிப்பு மறைந்தது. இதைக்கண்டு டீம் மேனேஜர், டாக்டர்கள் குழுவினர் அனைவருமே அதிசயம் அடைந்தனர்.

அடுத்த நாள் போட்டியில் பங்கேற்று, பகவான் அருளால், தனது 11 ஆவது சதத்தை நிறைவு செய்தார்.


"பகவானின் அருள் இல்லாவிடில் நான் என்ன செய்திருக்க முடியும்?!"என்கிறார் சுனில் கவாஸ்கர் பணிவுடன்.


ஆதாரம்: Sathyam Shivam Sundaram - Volume 5 
நன்றி: S. Ramesh - Ex-Convenor,  Salem Samithi

🌻 ஆம்..! வாழ்க்கையின் ஒவ்வொரு உயரத்திற்கு செல்லும் போதும், ஒவ்வொரு நிலையிலும் நம்மை உயர்த்துவது  அருமை இறைவனே!
அந்த இறைவன் சத்யசாயிக்கு நன்றியோடும்... மேலும் பக்தியோடும் கடமைகளை அவர் திருப்பாதங்களில் சமர்பித்து ஆன்மீக உயர்வும் எய்துவதே வாழ்க்கை லட்சியமாக இருக்க வேண்டும். 🌻




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக