தலைப்பு

வியாழன், 3 மார்ச், 2022

முள்ளில் ரோஜாவாய் தியானத்தில் மலர வேண்டும்!


தியானம் என்பது சாதாரண விஷயமல்ல.. சாதாரண விஷயத்திற்காகவும் அல்ல என்பதை இறைவன் ஸ்ரீ சத்யசாயி வாஹினிப் பொழிவாய் விவரிக்கிறார்.. 

தியானம் என்பது புலன்களுக்கு அப்பால் நிகழ்வது. புலன்களாலான மனக்குவிப்புக்கும் புலன்களுக்கு அப்பாற்பட்ட தியானத்திற்கும் இடையே சிந்தை எனும் ஒரு எல்லைக்கோடு உண்டு. சிந்தை என்பது சித்தத்தின் இரண்டாவது பகுதி. அதனுடைய மற்றொரு வேலை நல்லது தீயது பிரித்தறிவது.


🌹ரோஜாவும் முள்ளும் - ஓர் உதாரணம்

ஒரு எடுத்துக்காட்டு இதனை விளக்கும். 


ஒரு ரோஜாச்செடியில் கிளைகள், இலைகள், மலர்கள், முட்கள் என எல்லாம் உள்ளன. மலர் இருக்கும் இடம் தெரிய மனக்குவிப்பு அவசியமாகிறது. ஆனால் முள்ளில் படாமல் பூவைப் பறிக்க வேண்டும். அன்பு என்பது மலர். காமம் என்பதே முள். ஆனால் முள்ளில்லாத ரோஜா இல்லை. காம இச்சை எனும் முள்ளில் படாமல் அன்பு எனும் மலரை பறிப்பது எப்படி என்பதே பிரச்சனை. அங்கு சிந்தனை தேவைப்படுகிறது. பூவைப் பறித்து இறைவனடியில் சமர்ப்பணம் செய்கிறோம்.


தியானம் என்பது அன்பின் மலரை இறைவனுக்கு காணிக்கையாக்குதல். நமது உடல் என்னும் ரோஜா செடியில் மனம் கமழும் புனித அன்பென்னும் ரோஜாப்பூ நல்ல குணங்களின் வாசனை வீச உள்ளது. ஆனால் ஆங்காங்கே புலன் இச்சைகள் என்ற ஆசாபாசங்களும் உண்டு. தியானம் செய்வதன் நோக்கம் அந்த ஆசாபாசங்களுக்கு அகப்படாமல் அன்பெனும் மலரை பறித்து இறைவனடியில் அர்ப்பணம் செய்வதுதான்.


பண்டை நாட்களிலிருந்தே பாரத நாட்டில் தியானத்திற்கு மிக முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போதெல்லாம் பலர் தலைவலிக்கோ வேறு உபாதைக்கோ மருந்து எனக் கொண்டு தியானம் செய்ய அமர்ந்து விடுகிறார்கள். தியானம் ஒன்றும் அப்படிப்பட்ட ஒரு சாதாரண விஷயம் அல்ல. வெகு காலத்திற்கு முன்னர் சனத்குமாரர், நாரதர், தும்புரு போன்ற முனிவர்கள் குண்டலினி சக்தியை எழுப்பி மேலே ஸஹஸ்ரஹாரத்தில் பொருந்தும் பொருட்டு தியானத்தில் அமர்ந்தனர். இப்போது தியானத்தை பயில்வது அன்பை வளர்க்கவும், சுயநலமற்ற தியானம் செய்யவும் என்றிருக்க வேண்டும்.


ஆதாரம்: Sathya Sai Speaks Volume 17

🌻 தியானமே சுவாமி என உணர்ந்தவருக்கு தியானமாய் ஆட்கொண்டு அருள்புரிவார் தியான மூர்த்தியான இறைவன் சத்யசாயி.. 🌻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக