தலைப்பு

வெள்ளி, 17 டிசம்பர், 2021

🚂🔥 ஓடும் ரயிலில் தாவி ஏறி பக்தர் உயிர் காத்த சாயி!



மறைந்த பழைய ஹைதராபாத் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பின்னர் உத்தரபிரதேசம் மற்றும் கேரள கவர்னராகவும் இருந்த திரு. டாக்டர் புர்குல ராமகிருஷ்ண ராவ் அவர்களின் மெய்சிலிர்க்கும் சாயி அனுபவங்கள்... 

திரு. டாக்டர் புர்குல ராமகிருஷ்ண ராவ் அவர்கள் உத்தரபிரதேசம் மாநிலத்தின் கவர்னராக இருந்தபோது ஒருமுறை அவரும் அவரது மனைவியாரும் பத்ரிநாத் செல்லும்போது, வழித் தடத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இருந்த அந்த பெட்டியில் வேறு யாரும் இல்லை. அது ஒரு பிரத்தியேக வண்டி. பாதி ராத்திரியில் திடீரென்று ஏனோ விழிப்பு ஏற்பட்டது. இருவரும் கண் விழித்துப் பார்க்கையில், அவர்களது தலைக்கு மேல் ஓடிக் கொண்டிருந்த மின்சார விசிறியில் திடீரென்று தீப்பிடித்து எரிவதைக் கண்டனர். அவர்கள் பார்க்கும் போதே, தீ பெரும் சத்தத்தோடு எரிந்து பரவ ஆரம்பித்தது. அவர்கள் பயந்து போனார்கள். ஓடும் ரயிலை அவர்களால் நிறுத்த முடியவில்லை. அபாய சங்கிலி வேலை செய்யவில்லை போலும்!


நிர்க்கதியான அவர்கள் பாபாவை பிராத்தனை செய்ய ஆரம்பித்தார்கள். வண்டி எங்கேயாவது நிற்காதா? என்று மனதில் நினைத்தார்கள். ஆனால் சிறிது நேரத்திற்குள் அவர்கள் பிரயாணம் செய்த பெட்டியின் கதவு தட்டப்பட்டது. திறந்தவுடன் உள்ளே ஒரு மனிதர் கையில் சில ஆயுதங்களுடன் வந்தார்.

அவர் ஒரு எலக்ட்ரீசியன் என்று தெரிந்தது. சட்டென்று அந்த பகுதி ஒயர்களை கட் செய்து, அடுத்த சில நொடிகளில் தீயை அணைத்து விட்டார். கவர்னரும் அவரது மனைவியாரும் நன்றியை தெரிவிப்பதற்கு முன்பாகவே, 'இதோ வந்துவிட்டேன்' என்று ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்து விட்டார். கவர்னருக்கும் அவருடைய மனைவிக்கும் அது ஆச்சரியமாக இருந்தது. மறு ஸ்டேஷனில் வண்டி நின்றதும் கார்டை கூப்பிட்டு கேட்டார்கள். "இந்த வண்டியில் எலக்ட்ரீசியன் யாரும் வரவில்லை" என்று கூறினார் கார்டு. அது அவர்களுக்கு இன்னும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை இது பாபா செய்த லீலையாக இருக்கும்
 என நினைத்தார்கள். 

தனது துணைவியாருடன் கவர்னர்

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு அவர் அரசாங்க நிகழ்ச்சிக்காக கான்பூரில் இருந்து பனாரஸ்க்கு தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த விமானத்தில் அவரது மனைவியும் மற்றும் அவரது மெய்க்காப்பாளரும் உடன் சென்று கொண்டிருந்தார்கள். 

விமானம் பனாரஸில் தரையிறங்கும் தருவாயில் விமானத்தின் சக்கரங்கள் ஜாம் ஆகி விட்டது. சக்கரத்தில்
எந்த ஒரு அசைவும் இல்லை. விமானிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. விமானத்திலிருந்து அனைவரும் சாய்ராம் காப்பாற்றுங்கள் என்று கதறினார்கள். விமானத்தில் பயணித்த கவர்னரின் மெய்க்காப்பாளரும் தீவிர சாயி பக்தர். அவரிடம் பகவான் சிருஷ்டித்து அணிவித்த மோதிரம் அவருடைய விரலில் அணிந்திருந்தார். இது விமானத்தை ஓட்டும் விமானிக்கு நன்கு தெரியும். விமானி கவர்னரின் மெய்க்காப்பாளரிடம் பாபா அணிவித்த மோதிர கையால் இந்த லிவரை பின்பக்கமாக இயக்க முயற்சி செய்து பாருங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதேபோல் அந்தமெய்க்காப்பாளரும் பாபாவை பிராத்தனை செய்து கொண்டு லிவரில் கையை வைத்தார் என்ன ஆச்சரியம் அவர் கையை வைத்த உடனே ஜாம் ஆகியிருந்த சக்கரங்கள் செயல்படத் தொடங்கின. கடைசியாக அவர்கள் பனாரஸில் பத்திரமாகத் தரை இறங்கினார்கள். 


பனாரஸில் அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பாபாவுக்கு நன்றி தெரிவிக்க கணவன் மனைவி இருவரும் விமானம் மூலம் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார்கள். அப்போது பகவான் பாபா ஒயிட் ஃபீல்டில் இருந்தார். பாபா அவர்களை பார்த்ததும் புன்னகை புரிந்தார். கவர்னர் பாபாவிடம் பேசும் முன்னரே பாபாவுக்கு எல்லாம் தெரிந்திருந்தது. பாபாவே நடந்த எல்லா விஷயங்களையும் கூறித்,தான் அவர்களைக் காப்பாற்றியதை உறுதிப்படுத்தினார்.

கடைசியாக பாபா  "அது மட்டும் இல்லை மிஸ்டர் ராவ். உங்களுக்கு நினைவு இருக்கிறதா? ஒரு மாதத்திற்கு முன்பு நீங்கள் போன ரயிலில் மின்சாரம் தீப்பற்றியது. ஒரு எலக்ட்ரீசியன் வந்தாரே தெரியுமா... அந்த எலக்ட்ரீசியன் நான்தான். அந்த நேரத்தில் நான் வந்திராவிட்டால் அந்த பெட்டியே தீப்பிடித்து எரிந்து போயிருக்கும்" என்று பாபா கூறினார். கணவர் மனைவி இருவரும் பாபாவின் கால்களை நன்றி பெருக்கோடு தொட்டு கண்ணீர் விட்டனர்.


🌻 பாபாவின் கண்கள் அகில சராசரம் எல்லாம் ஊடுருவி உள்ளன. அவை
 பக்தர்களை அனுகணமும் பாதுகாத்து
துயர்களை உடனுக்குடன் களைகின்றன. ஆகவேநாம் பாபாவின் கண் காணிப்பில் எப்போதும் இருக்கிறோம் என்பதை உணர்ந்து அவரைப் பணிவோமாக. 🌻

 இப்படி கவர்னருக்கு ஏற்பட்ட திக் திக் அனுபவத்தை ஹோவர்ட் மர்பெட் என்ற பிரபல எழுத்தாளரிடம் டாக்டர் ராவ் பகிர்ந்துள்ளார். அவர் தன்னுடைய புத்தகமான 'Sai Baba: Man of Miracles' என்ற புத்தகத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார்.

3 கருத்துகள்: