தலைப்பு

ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

கொலைப் பட்டினியிலும் தானமாக கிடைத்த மாமிச உணவை உண்ணாத வைராக்கியசாலிகள்!

பண்டரிபுரத்திற்கு புனிதப் பாத யாத்திரை செல்கிற இல்லறத் துறவிகள் சஞ்ஜெய் - மீரா அனுபவித்த சிரமங்களும் அதற்கு இதமான வகையில் அவர்கள் அனுபவித்த சாயி பரவசங்களும் மிக சுவாரஸ்யமாக இதோ...


ஹுப்லி'யிலிருந்து குல்பர்தா வருகிறார்கள் இல்லறத் துறவிகள் சஞ்ஜெய்- மீரா!

அது ஸ்ரீ தத்தாத்ரேயர் புனித ஷேத்ரமான கானகாபூர்! இரண்டு நதிகளின் சங்கம தலம் அது! அங்கே தரிசனம் அங்கிருந்து பண்டரிபுர விஜயத்திற்கான பாத யாத்திரை! செல்கிற வரையில் குர்டுவாடி ரயில்வே ஸ்டேஷன்! கையில் எப்போதும் போலவே பைசா இல்லை! அங்கே பாபா பக்தர்கள் யாரும் பெரிதாக தர்மம் செய்பவர் இல்லை.. அவரவர் அவரவர் வேலைகளில் மும்முரமாக இருப்பர் அவ்வளவே! அதிகமாக கையை உதற மாட்டார்கள் ஆகையால் இருவருக்கும் பஜனை நிகழ்த்த வழிசெலவிற்கு 5 முதல் 10 ரூபாயே கொடுப்பர்.. சாயி பக்தர்கள் எது அன்பாய் அளித்தாலும் அதிலேயே திருப்தி அடைவர் இருவரும்... ஆனால் அம்முறை யாரும் எதுவும் தரவில்லை... காசும் இல்லை கையில் உணவும் இல்லை.. பசி வயிற்றை கூறு போடுகிறது! 


ஒருமுறை வயிறு நிரம்ப உணவு கிடைக்கும்.. இன்னொரு முறை வயிறு ஒட்ட ஒட்ட பசி வயிற்றைச் சாப்பிடும்.. அப்படி ஒரு கொடும் பசி வேளை! சஞ்ஜெய் எங்கேயோ சென்று எதையோ வாங்கி வருகிறார்.. அந்தப் பொட்டலத்தை பிரித்தால் மாமிச பிரியாணி... 

 செல்லும் வழியில் மஸ்ஜித்... அங்கே வாசலில் கூப்பிட்டு கொடுத்தார்கள் என்ற தகவலை மீராவிடம் சொல்ல... "வேண்டுமானால் சாப்பிடு! வேறு வழியில்லை!" என்று சஞ்ஜெய் சமாதானப்படுத்த... "இப்போது ஒன்றும் கஷ்ட காலம் இல்லை! பாபா நம் பசியை எப்படியாவது தீர்ப்பார்! காத்திருப்போம்!" என்கிறார் மீரா! அவர் ஜைன மதம் என்பதாலும்  சுவாமி பக்தர்கள் என்பதாலும் இருவரும் அதை தள்ளி வைத்துவிடுகிறார்கள்! பிரியாணி பொட்டலம் பார்த்தால் பசி அடங்குமா? சாப்பிட அவர்களது ஆன்மீக  வைராக்கியம் இடம் கொடுக்கவில்லை! 


அப்போது இருவரையும் தேடி ஒரு குடும்பம் வருகிறது... பணம், பொருள் யாவும் களவு கொடுத்த குடும்பம் அது , பசியோடிருந்தனர்.. உணவு ஏதாவது கிடைக்குமா? என்று சஞ்ஜெய் மீராவிடம் கேட்டபடி அவர்கள் நெருங்க... ஏற்கனவே கொடும் பசியோடிருந்த இருந்த இருவரும் அந்த பசித் தம்பதிகளை விசாரித்த பிறகு அவர்கள இஸ்லாமியர் என்று அறிந்த உடன் அந்த மாமிச உணவை தருகிறார்கள்! அவர்களோ தங்களுக்கு உயிரே மீண்டு வந்தது போல் சந்தோஷத்தோடு சாப்பிட்டு திருப்தி அடைகிறார்கள்! பசியோடிருந்தும் அவர்கள் சாப்பிட்டு சந்தோஷப்படுவதைப் பார்த்து இருவரும் சந்தோஷப்படுகிறார்கள்! பிறகு பசி மயக்கத்தில் மீரா படுத்துறங்க... எங்கிருந்தோ கைநிறைய கம்பு மாவு ரொட்டி , வெங்காய கறி கொண்டு வந்த சஞ்ஜெய் தர.. அது பஜனை செய்து கொண்டிருந்த பண்டரிபுர யாத்ரீகர்கள் தந்த பிரசாதம்.. தானும் அங்கு சென்று பாடியதாக சஞ்ஜெய் தெரிவிக்க.. இருவரும் சாப்பிட.. அடுத்த நாள் காலை பண்டரி புர‌ யாத்திரைக்கு நடக்க ஆரம்பிக்கிறார்கள்...அது நல்ல வெய்யில் நேரம்.. மணல் இல்லை அது தணல்... இருவர் கால்களிலும் செருப்புகள் கூட இல்லை... செருப்பில்லா கால்களில் வெய்யில் என்னும் நெருப்பு பதம் பார்க்கிறது! உடனே மீரா 

"இனி மேல் பாபாவை நாம் வழிபடவே கூடாது! அவர் அங்கே ஜம் என்று இருக்கிறார்.. நாம் இங்கே வெய்யிலில் நடக்க முடியாமல் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறோம்! புட்டபர்த்தி போனால் பாபாவிடம் நீ வேண்டாம் என்று சொல்லிவிடப் போகிறேன்! " என்று வெப்பம் தாளாமல் அங்கலாய்க்கிறார்.. அது ஒரு திறந்த வெளி.. ஒதுங்க மரமில்லை... பொட்டு நிழல் கூட இல்லை... உடனே சஞ்ஜெய் "அப்படி எல்லாம் பேசாதே!" என்று துக்காராம், பிரகலாதன் , மீரா, துருவன் ஆகியவர்களது உறுதியான பக்தியை விவரித்துக் கொண்டே "நாம் ஒருநாளும் பாபாவின் மேல் உள்ள விசுவாசத்தை கை விடவே கூடாது!" என்கிறார்! 

அந்த சமயம் பார்த்து குளிர் காற்று வீச... மழை இன்னும் சில மணித்துளிகளில் என்றபடி உணர்த்த... மழை மேகங்கள் இருவரின் தலைமாட்டில் ஆகாயத்தில் குடை பிடிக்க.. ஆனால் மீதமுள்ள இடம் எல்லாம் அதே கொடும் வெய்யிலே... ஆச்சர்யப்படுகிறார் மீரா! இப்போது சங்கடம் இன்றி இருவரும் நடந்து செல்ல.. ஒரு கிணறு தென்படுகிறது! உணவேதும் இல்லாததால் தண்ணீரை குடித்து வயிறு நிரப்புகின்றனர்.. அவர்களின் பெரும்பாலான வழக்கமே அது தான்! சரி கிணற்றுத் தண்ணீரை சோதிக்க அது சூடாக இருக்கிறது.. இதற்கிடையில் முன்பின் தெரியாத ஒருவர் "அந்த நீரை குடிக்க வேண்டாம்!" என்று சொல்லி தன் வீட்டிற்கு அழைத்து அவர்களை விசாரிக்கையில் பண்டரிபுர பாத யாத்ரீகர்கள் என்று கேள்விப்பட்ட உடன்...இந்த சிறு வயதிலேயே இத்தகைய ஆன்மீக வைராக்கியமா!! என்ற வண்ணம் ஆச்சர்யப்பட்டு உணவையும் நீரையும் உபசரித்து வழங்குகிறார்கள்... பிறகு அங்கிருந்து பண்டரிபுரம்.. அங்கே தரிசனம் .. பிறகு எங்கே செல்வது? பெரிய கேள்வி! அருகிலேயே சோலாப்பூர்! அங்கே செல்கிறார்கள்.. வழக்கம் போல் கால் நடையாகத்தான்! செல்லும் வழியில் சிறிய பேருந்து நிறுத்தத்தில் களைப்பால் இருவரும் அங்கேயே உறங்கிவிட.. முன்பின் தெரியாத ஒரு வயதான பெண்மணி அவர்களை எழுப்பியபடி உணவும் நீரும் தருகிறார்! அப்படியே ஷிர்டி பாபாவுக்கு படைக்கப் படுகிற கம்பு ரொட்டி, கடலைப்பருப்பு வெங்காய கறி.. அந்த முதிர்வயதுப் பெண்மணியை பார்க்க மீராவுக்கு உடனே ஷிர்டி பாபாவுக்கு தேடித் தேடி உணவளித்த பாய்ஜா மாதாவே நினைவுக்கு வருகிறார்!


பிறகு சோலாப்பூருக்கு நடந்தே சென்று சாயி பக்தர் ராமச்சந்திர வாத்வா வீட்டில் ஒரு மாத காலம் தங்குகிறார்கள்! அங்கே நிகழ்ந்த பாபா அற்புதங்களுக்கு அளவை இல்லை...

இரவு முழுதும் பாபா அற்புதங்களை இருவரும் அவர்களோடு பேசுவர்!

ஒருமுறை ஒரு பூனை பாத்திரம் உருட்டும் சத்தம்... நள்ளிரவு... தூக்கம் கலைத்த சஞ்ஜெய் பாபா வந்திருப்பதாக தெரிவிக்க.. அந்தப் பூனை அப்படியே நடந்து சென்று பூஜையறையில் நுழைந்து.. பாபா நாற்காலியில் அமர்ந்து அப்படியே அவர்களை உற்று நோக்கி... பிறகு எகிறி குதித்து நடக்கிறது... அதன் உடல் எங்கும் விபூதி உதிர்ந்து கொண்டே இருக்கிறது.. பாபா நாற்காலியின் பாத பீடத்தை அவர்கள் திரும்பிப் பார்க்க குவியல் விபூதி! அன்றைய இரவு சில நேரத்திற்கு முன் பாபா எந்த வடிவமும் எடுப்பார்! பூனை , நாய் என்று பல வடிவமும் எடுப்பார் என்று சஞ்ஜெய் விவரிக்க... வாத்வா நம்பாமல் ஆச்சர்யப்பட‌.. அவருக்கு உணர்த்தவே பாபா எடுத்த பூனை வடிவம் அது!


ஒருமுறை வாத்வா மனைவியிடம் சஞ்ஜெய் தேநீர் கேட்க.. பால் வாங்கி வர வெளியே சென்று உள்ளே வருகையில் பா..பா..பா என கத்துகிறார்... பாபா வெளியே நின்று கொண்டிருக்கிறார் என்று அந்த திருமதி பாத்வா திகைத்துப் பேச.. பாபா நின்ற இடத்தில் குவியல் விபூதி.. அதே சமயத்தில் அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் குதிரையின் குளம்படிச் சத்தமும் கேட்கிறது!

இன்னொரு சமயம் அனைவரும் அவர்கள் வீட்டில் அந்த இரவு சாயி பஜன் பாட.. திடீரென மின்சாரம் அணைய... பாபா படத்தின் மேல் இருக்கும் சிறு மின்சார விளக்கு மட்டும் அணையவே இல்லை.. அவர்கள் வீட்டுக்கு மட்டுமல்ல அந்த ஏரியாவிலேயே அன்று மின்சாரம் இல்லை.. இன்வர்ட்டர் வராத காலமும் அது! ஒரே இருட்டு ஆனால் பாபாவின் படம் அதை சுற்றிய அறையில் மட்டும் வெளிச்சம்!

ஆரத்தி முடிந்த பிறகே மின்சாரமும் வருகிறது! "நீங்கள் எனக்காக சத்சங் மற்றும் பஜன் நிகழ்த்தினால் நான் அங்கே நிச்சயமாக வந்து அமர்ந்துவிடுவேன்!" என்று பாபா சொன்ன சத்ய வாக்கும் மீராவுக்கு நினைவில் வருகிறது!


பொதுவாக சஞ்ஜெய் உடல் முழுவதும் ஜவ்வாது போன்ற வாசனை வீசும்... ஆனால் சஞ்ஜெய் ஜவ்வாது பயன்படுத்துபவர் அல்ல.. அவரிடம் அதை வாங்கிக் கூட பணம் இல்லை.. அந்த திவ்ய வாசனையை 1970'களில் நுகர்ந்து அனைவரும் மீராவிடம் அதைப் பற்றி விசாரிப்பர்.. உண்மையில் அவர்களிடம் இரு ஜோடி உடைகளே இருந்தன... ஒன்று உடலில் ... இன்னொன்று துவைத்து காய்ந்தபடி கொடியில்... அப்படி மிக மிக எளிய ஆனால் மகிமை வாய்ந்த பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தான் சஞ்ஜெயும் மீராவும்! 

பிறகு சோலாப்பூரிலிருந்து அவர்களின் சொந்த ஊரான கொங்கண் செல்கிறார்கள்..‌அது சஞ்ஜெய் இல்லம்! அவரின் தந்தைக்கு அவர் மேல் உள்ள அதே பழைய கோபம் இன்னமும் தணியவே இல்லை... ஆனால் மற்ற குடும்பத்தினர் இருவரின் வரவை கண்டு மகிழ்கின்றனர்! அவர்கள் அசைவம் சாப்பிடும் குடும்பமே... அங்கே சிறு அறையில் பாபாவின் புகைப்படம் வைத்து காலை ஓம்காரம்- சுப்ரபாதம் , மாலை பஜன் என நிகழ்த்தி வருகின்றனர் இருவரும்!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 134 - 141 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


"பாபாவே கதி!" என்று முழு நினைவோடு முழு மனதோடு உளப்பூர்வமாக தஞ்சம் அடைந்துவிட்டால் ஒவ்வொரு நொடியும் பாபா நம் கூடவே இருந்து காத்து அருள்புரிகிறார் என்பதற்கு இல்லறத் துறவிகள் மீரா சஞ்ஜெய் ஒரு வாழ்நாள் உதாரணமாக திகழ்கிறார்கள்! 


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக