தலைப்பு

வியாழன், 27 ஏப்ரல், 2023

ஸ்ரீ கிருஷ்ணர் படத்திலிருந்து வெளியே வந்து தன் பக்தருக்கு போர்வையை போர்த்தி விட்ட பங்காரு பாபா!

திகைக்க வைக்கும் லீலைகள் , ஆச்சர்யப்பட வைக்கும் அனுபவங்கள், வசதியே இல்லாத இரு தம்பதி பக்தருக்கு அசதியே தராத பக்திக்கு பாபா செய்த அற்புதங்கள், கம்பி எண்ண வேண்டியவர்களை பாபா கைப்பிடித்து அழைத்துச் சென்ற வியப்புகள் மிக சுவாரஸ்யமாக இதோ...


இல்லறத் துறவிகள் சஞ்ஜெய் - மீரா இருவரையும் பல சாயி பக்தர்கள் அவரவர் வீட்டில் அழைத்து சாயி பஜனை நிகழ்த்தச் சொல்கிறார்கள்! சஞ்ஜெய் ஆர்மோனியப் பெட்டி இசைத்துக் கொண்டே பஜன் பாட ஆரம்பித்தால்.. அனைவரும் தன்னையே மறப்பர்... சாயி ஆனந்தத்தில் திளைப்பர்.. அப்படி ஒரு அதீத குரல் வளம் அவருக்கு! ஆகவே பஜனை நிகழ்த்த கேட்டுக் கொண்டவர்களில் ஒரு பெண்மணி தனது வீட்டில் பஜனைக்கு கேட்க .. பாபா படம் தன்னிடம் இல்லை என சொல்கிற போது... சாயி பஜனைக்கு பாபா படம் தேவையில்லை உங்கள் வீட்டில் ஸ்ரீ கிருஷ்ணர் படம் இருந்தாலும் போதுமானது.. இருவரும் ஒருவர் தான் என்று தெளிய வைக்கிறார் சஞ்ஜெய்... ஆயினும் அந்தப் பெண்மணி ஒரு பாபா படத்தை கேட்டு வாங்கி பஜனையில் வைத்து பஜன் ஆரம்பிக்க.. அந்த படம் பாபா எங்கேயோ பார்ப்பது போல் சிகப்பாடை அணிந்த போஸ்... பாபா படம் சுற்றி பெரிய பெரிய ஸ்ரீகிருஷ்ணர் படங்கள்.. அவர்கள் ஸ்ரீ கிருஷ்ண பக்தர்கள்... பஜனை தொடர்கிறது... திடீரென ஓ'வெனும் சப்தம்... மயங்கி விழுகிறார்... யார் என்று அனைவரும் திரும்ப.. அந்த வீட்டுப் பெண்மணி அது... பிறகு அனைவரும் அவரை ஆசுவாசப்படுத்த.. சஞ்ஜெய் நடந்ததை விசாரிக்க.. "உங்கள் பாபா பஜனையில் வருவாரா?" என்று ஆச்சர்யமாக அவர் கேட்க... சஞ்ஜெய் ஆம் என்கிறார்...


"நீங்கள் சொல்வது உண்மை! நான் பாபாவை பார்த்தேன் .. பாபா அந்த புகைப்படத்தில் என்னை நோக்கி முகம் திருப்பி ஒரு கையை தூக்கி இப்படி செய்து காட்டினார்... ஆனால் அப்போது பாபா கிரீடமும் மயில் பீலியும் அணிந்திருந்தார்".. என்றும், மேலும் "சர்வ சத்தியமாக உங்கள் பாபா தான் எங்கள் ஸ்ரீ கிருஷ்ணர்!" என்று பரவசப்பட்டு அவர் பேச.. அது முதல் அந்தப் பெண்மணி குடும்பமே பாபாவின் பக்தரானது! 


இப்படி ரத்லாம் என்ற பகுதியில் பலர் வீட்டில் பஜன் நடக்கும்... சஞ்ஜெய் - மீரா இருவருக்கும் வீடில்லாத காரணத்தினால் பஜன் நடக்கும் வீடுகளிலேயே தங்கிக் கொள்வார்கள்.. சிறு அறை ஆயின் மட்டும்  மற்ற பெரிய அறை கொண்ட பக்தர் வீட்டில் படுப்பர்.. இரவு 8 முதல் 10 வரை பஜன் நிகழும்.. அது குளிர் காலம்.. சாம்பிராணிகளை பரவவிட்டு உஷ்ணமாக்குவர்.. சஞ்ஜெய் சிலபோது குளிரிலும் நடுங்குவார்.. அவரிடம் கோர்ட் கூட இல்லை.. அன்று ஒரு ரயில் இஞ்சின் டிரைவர் வீட்டில் பஜன்... சிறு வீடே...இப்படியே சாம்பிராணி புகை.. தல்வீ (ரயில் இஞ்சின் டிரைவர்) வீட்டு மகள் தனது கோர்ட்டை கொடுக்கிறாள்... இப்படியாக வாழ்க்கையும் நாம சேர்க்கையும் இருவருக்கும் நகர்கிறது!

    ஒரு நாள் சந்து பாய் தம்பதிகள் வீட்டில் இரவு பஜன் (8 முதல் 10 வரை) பஜன் முடிந்து அங்கேயே சஞ்ஜெய் மீரா தங்க... சஞ்ஜெயை கட்டிலில் படுக்கச் சொல்கிறார் சந்து பாய் .. தான் பாபா படம் அருகேயே தரையில் படுத்துக் கொள்வதாக மீரா தெரிவிக்க... அவருடனேயே அந்த இனிய இதயம் கொண்ட திருமதி சந்து பாயும் படுக்க.. அந்த இரவு அதிகாலையை தொட எத்தனிக்கிற 3 மணி.. மீராவுக்கு தூக்கம் கலைகிறது.. ஆனாலும் பூஜையறை தீபம் கலையவே இல்லை... அதில் உள்ள ஓர் ஸ்ரீ கிருஷ்ண படத்தையே மீரா பார்த்துக் கொண்டிருக்க... திடீரென மீரா கண்ட காட்சி ஆச்சர்யப்பட வைக்கிறது!


அந்த ஸ்ரீ கிருஷ்ணர் படத்தில் பாபா தெரிகிறார்.. மீராவால் நம்பவே முடியவில்லை... பிறகு பாபாவுக்காக வைக்கப்பட்டிருக்கும் நாற்காலியை பார்க்கிறார்.. அதற்குள் பாபா அந்த நாற்காலி அருகே வந்து நிற்கிறார்... அது கனவில்லை, தான் கண்களை திறந்திருப்பதை உறுதி செய்கிறார் மீரா, சுய உணர்வுடனேயே இருக்கிறார் அவர்.. பரவசப்பட்டு திருமதி சந்து பாயை எழுப்ப... அவரோ எழவே இல்லை... அதற்குள் பாபா மெதுவாக நடந்து சஞ்ஜெய் இருக்கிற கட்டிலின் அருகே சென்று அவரது தலைமாட்டில் ஏதோ தெலுங்கில் பேசுகிறார் பாபா...பிறகு போர்த்தாமல் அருகே இருந்த காட்டன் போர்வையை போர்த்தி விட்டு மெது மெதுவாக அந்தப் புகைப்படத்தின் உள்ளேயே புகுந்துவிட்டு மறைகிறார்! அதிகாலை சஞ்ஜெய் எழுகிறார்... அவர் கட்டிலில் ஒரு ரோஜாப்பூ இருக்க.. அதை ஆச்சர்யத்தோடு பார்த்து சஞ்ஜெய் விசாரிக்க... 3 மணிக்கு நடந்த நிகழ்வு அனைத்தையும் மீரா சஞ்ஜெயோடு பகிர... அந்த சூட்டோடு சூடாக பாபாவுக்கு ஓம்கார சுப்ரபாதம் இசைக்கிறார்கள் இருவரும்...

இதனை புட்டபர்த்தி போவதற்கு முன்பே அவர்களை முதன்முறையாக தங்க வைத்த டாக்டர் வீட்டில் கற்றுக் கொள்கிறார்கள்! 


2 மாதங்கள் இருந்த பிறகு ரத்லாமை விட்டு நகர்கிறார்கள்.. வழி அனுப்ப வந்த சாயி பக்தர்களில் ஒருவர் 10 ரூபாய் தருகிறார்.. இருவரிடமும் ஏற்கனவே இருந்த 10 ரூபாயோடு சேர்த்து 20 ரூபாய்! வேறு பணமே இல்லை.. இதை வைத்துத் தான் மீராவின் அம்மாவை தேடிப் பயணிக்க வேண்டும்! அதற்கு முன் மீராவின் மூத்த சகோதரனை பார்க்க வேண்டும்.. அவரின் மூலமாக அம்மாவின் முகவரி தெரிய வரலாம்.. இருவரின் திட்டம் அது! ஆனால் மீராவின் அண்ணன் எங்கேயோ சென்றுவிட்டதாக தகவல் வர... எங்கே செல்வது? ஒரு சாயி பக்தை முன்பு புட்டபர்த்தியில் இருந்த போதே ஜான்சிக்கு அழைத்திருந்ததை மீரா நினைவு படுத்த... ஓரிரண்டு ரூபாய் வைத்து ஜான்சிக்கு எப்படிப் போவது? பாபா விட்ட வழி என்று... டெல்லி செல்லும் ரயிலில் ஏறி ஒரு டி.டி.ஆரை சந்தித்து நிலைமையை எடுத்துச் சொல்ல... அவரோ எதிர்பாரா விதமாக முதல் வகுப்பில் இருவரையும் அழைத்துச் சென்று தன்னோடு அமர வைத்து ஜான்சி வரை அழைத்துச் செல்ல ஒருமனதாக முடிவெடுக்கிறார்... வண்டி பீனா ஸ்டேஷனில் நிற்கிறது! தான் டிக்கட் பரிசோதித்து விட்டு வந்து விடுவதாகவும் யார் வந்தாலும் தன் பெயரை சொல்லும்படியும் சொல்லிவிட்டு அந்த டி.டி.ஆர் வேறொரு கம்பார்ட்மென்ட் சென்றுவிடுகிறார்! 

சாயி கைவிடுவாரா? சனி கை தொடுவாரா? அடுத்த நொடி என்ன நடக்கும்.. பாபா விட்ட வழி என்பதுவே இருவரின் வழி! திடீர் என இரண்டு டி.டி.ஆர் வந்து அவர்களிடம் டிக்கட் பரிசோதிக்க.. டி.டி.ஆர் சர்மா உடன் தான் செல்கிறோம் என்று சஞ்ஜெய் சொல்லியும்...  யார் அந்த சர்மா? என்பது போல் அந்த 2 டி.டி ஆர்கள் வேண்டா வெறுப்பாக இருவரையும் இறக்கிவிட .. இவர்கள் இறங்கிய அடுத்த நொடி ரயில் புறப்படுகிறது..

அந்த இருவரில் ஒரு டிடிஆர் அலுவலகம் அழைத்துச் சென்று விசாரிக்கிறார்...

போபாலில் இருந்து ஏறியதாகவும், ஜான்சி செல்ல வேண்டும் என்றும் , பணம் இல்லாததை தெரிவித்த போது டி.டி.ஆர் சர்மாவே அங்கே அமர வைத்தார் என்று எவ்வளவு சொல்லியும் அவர்கள் நம்பவில்லை... அபராதமாக இரு மடங்கு டிக்கட் அல்லது 7 நாள் சிறை இதிலேயே உறுதியாக இருந்தார் அந்த டிடிஆர்.. "யார் இவர்?" என்று மீராவை பற்றி சஞ்ஜெயிடம் விசாரிக்க.. "இவர் என் மனைவி, நாங்கள் சத்ய சாயிபாபா பக்தர்கள், நாங்கள் ஜான்சிக்கு போக வேண்டும்!" என்று சஞ்ஜெய் தெரிவித்தும் ‌..

"நீங்கள் பொய் சொல்கிறீர்கள்!" என்று டிடிஆர் மறுக்க..

இரட்டிப்பு அபராதம் அல்லது சிறை என்று டிடிஆர் சொன்னதையே சொல்ல..

சஞ்ஜெய் மிகவும் தைரியமுடன் "எங்கள் குருவின் (பாபா) அனுமதி இல்லாமல் உங்களால் எங்களை சிறையில் அடைக்க முடியாது!" என்று சொன்ன அந்த சத்தியச் சொல் டி.டி.ஆரை மேலும் கோபப்பட வைக்கிறது.. என்னாகுமோ? ஏதாகுமோ? என்றவாறு கடிகார முள் நொண்டி அடிக்கிறது!


கொஞ்ச நேரத்தில் 4 டி.டி.ஆர்கள் வர... இருவரை பற்றி விசாரிக்க... 

"டிக்கட் இல்லாமல் ரயில் ஏறி விட்டு.. கேட்டால் சாயி பாபா பக்தர்கள் என்கிறார்கள்... இவர்களிடம் அபராதம் வசூலிக்காமல் விடுவதாக இல்லை!" என்று அந்த டி.டிஆர் 

கர்ஜிக்க... 

சாயி பாபா என்ற பெயரை கேள்விப்பட்டதும் அந்த 4 டிடிஆர்களுக்கும் ஒரு ஷாக் அடித்தது போல் இருக்க.. அந்த நால்வரில் ஒரு டி.டி.ஆர்

"ஓஹோ நீங்கள் சாயி பக்தர்களா? நானும் சாயி பக்தன் தான்! எனக்கு பாபாவை பற்றி அதிகம் சொல்வீர்களா? சரி! முதலில் சாப்பிட்டீர்களா?" என்று கேட்டு சஞ்ஜெய் மீராவை ஆச்சர்யப்பட வைக்கிறார்... 

எங்கே செல்ல வேண்டும்? என்று அவர் சஞ்ஜெயிடம் கேட்க... 

ஜான்சி என்று சஞ்ஜெய் தெரிவித்த உடன் தானே இருவரையும் ஜான்சிக்கு அழைத்துப் போவதாக தெரிவிக்க...அவர் பெயர் கௌதம்... டிபன் வருகிறது... இருவரும் சாப்பிடுகிறார்கள்.. கர்ஜித்த அந்த டி.டி.ஆர் பெயரோ ஸ்ரீ வாத்சவா...!

"மறக்காமல் அவர்களிடம் டிக்கட் பணத்தை வாங்கிவிடு!"என்று அவர் தெரிவிக்க... "டிக்கட் பணமா? இவர்கள் எங்கள் உறவினர்கள் தான்! நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம்... இவர்கள் சாயி பக்தர்கள்.. இவ்வளவு நேரம் இவர்களை பசியோடு  காக்க வைத்ததற்கு நீ வெட்கப்பட வேண்டும்! அவரோடு ஒரு பெண்ணும் இருக்கிறாள் ..அதை கூட நீ யோசிக்கவில்லை‌... அதுவும் டபுள் சார்ஜ் கேட்கிறாய்! முதலில் இவர்களிடம் மன்னிப்பு கேள்!  அந்த டபுள் சார்ஜை நாங்கள் நால்வரும் கலந்து தருகிறோம்.. ஆனால் பாபா அதை உன்னிடம் நான்கு மடங்காக வசூலிப்பார் ஜாக்கிரதை!" என்று குரல் உயர்த்திப் பேசுகிறார் டி.டி.ஆர் கௌதம்! 

மிரண்டு போகிறார் டி.டி.ஆர் ஸ்ரீ வாத்சவா!

பிறகு கௌதம் இருவரையும் அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்ல.. மீண்டும் அவரோடு இருவரும் ரயில் ஏற... அருகே ஸ்ரீ வாத்சவா நின்று கொண்டிருக்க...  "முடிந்ததா? இன்னும் ஏதாவது இருக்கிறதா? ஒரே ராத்திரியில் எங்களை ஜெயிலுக்கு அனுப்பப் பார்த்தீர்களே!" என்று சஞ்ஜெய் சொன்ன சொல்லைக் கேட்டு மன்னிப்புக் கேட்கிறார் ஸ்ரீ வாத்சவா!

ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக டி.டி.ஆர் கௌதமே உடன்வர இருவரும் ஜான்சிக்கு அவரோடு பயணிக்கிறார்கள்!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 106 - 111 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


பணம் மாதாமாதம் சம்பளமாக கிடைத்தும் நமக்கு போதவில்லை, திருப்தியில்லை என்ற ஒரு ஒப்பாரியை இறைவன் பாபா படத்தின் முன் நாம் வைக்கிறோமே.. இது பக்தியா? பணமே இன்றி பல இன்னல்களை எதிர்கொண்டு வைராக்கிய பக்தியில் பாபா சொன்னதை எப்படியாவது செயல்படுத்த வேண்டும் என்ற சஞ்ஜெய் மீரா பயணித்தார்களே... அது பக்தியா? 

உண்மையான சாயி பக்தர்கள் நமக்கான ஆன்மீக உதாரணங்கள்! அவர்கள் எந்த பதவி நாற்காலியிலும் அமர்ந்து பிறரை அதட்டிக் கொண்டிருக்கவில்லை... அவர்கள் அமர்ந்த ஒரே நாற்காலி பாபாவின் இதய நாற்காலி மட்டுமே! அது மட்டுமே நமக்கு நிரந்தரமான நாற்காலி! மற்ற அனைத்தும் ஒருநாள் அந்தோ பரிதாபமாய் காலி!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக