தலைப்பு

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

சஞ்ஜெய்யை அம்பாரி தூக்கி அசைந்து அசைந்து பாபாவை நோக்கி வந்த சாயி கீதா!

எவ்வாறு பல கடனங்களையும் கடந்து, வறுமையையும் பொருட்படுத்தாமல் வைராக்கிய பக்தியில் பசியோடு சேவை செய்த பக்தருக்கு இறைவன் பாபா காட்டிய பரிவுத் தூக்கு சுவாரஸ்யமாக இதோ‌...


இன்னல்களை மின்னல்களாய் ஏற்று பாபாவை கண்டு விழிமழை பெய்து அவர் செய்யச் சொன்ன சேவையை, தங்க அறையும், உண்ண உணவும் இன்றியும் கூட வொயிட் ஃபீல்ட்'டிலேயே ஆத்ம சேவையை செய்து வருகின்றனர் இல்லறத் துறவிகள் சஞ்ஜெயும் மீராவும்!


அது 1969. 

அது பூங்கா உருவாக்க இருவரும் செய்து வந்த சேவையின் 5 ஆம் நாள்! பசி மீராவின் கண்களை கருப்புத் துணியால் கட்டி விடுகிறது! சற்று இளைப்பாற மரநிழல் தேடுகிறார்! அப்போது பாபா நால்வர் படையோடு அவ்விடம் நோக்கி நகர்ந்து வருகிறார்! 

அந்த நால்வரில் ராஜாரெட்டி, ஒரு சேவாதளர், மற்றும் மைசூர் இஞ்சினியர் இருக்கின்றனர்! மீரா எழுவதற்கு முயற்சி செய்கிறார்...‌ஆனால் பசிக் களைப்பு பிடித்து இழுத்து அமர வைக்கிறது! பாபாவின் பார்வை முதலில் மீரா மேல் படுகிறது... பிறகு அங்கே வேலை செய்யும் சஞ்ஜெயை பார்த்து அங்கேயே நின்றுவிடுகிறார் பாபா! சஞ்ஜெய் ஓடி வந்து பாபா முன் முட்டி போட்டு கையெடுத்து வணங்கியபடி தலைகுனிந்திருக்கிறார்! 

"குமார்! நீ என்ன வேலை செய்கிறாய்?" என்று பாபா கேட்க... "எதுவும் இல்லை பாபா!" என்று சஞ்ஜெய் (சஞ்ஜெய் குமார் முழுப்பெயர்) பதில் அளிக்க... 

"வேலை இல்லை என்றால்... உங்கள் சாப்பாடு போன்றவை எப்படி நடக்கிறது? குடிக்க தண்ணீர் எங்கேயும் கிடைக்கும்! ஆனால் சாப்பாடு?" என்று அழுத்தமாய் கேட்கிறார் பாபா!

"பாபா! உங்கள் கிருபையால் தயையால் எனக்கு எல்லாமே நடக்கிறது!" என்று சாப்பிடாமல் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து சேவை செய்து கொண்டிருக்கிற சஞ்ஜெய் பொய் சொல்கிறார்!


பாபா சஞ்ஜெயின் பொய்யை கேட்டு முகம் மாறி தீவிரமாகிறார்! 

"குமார்! நீ பொய் சொல்கிறாய்! நீங்கள் 5 நாட்களாக பசியுடனேயே இருக்கிறீர்கள்! ஆனாலும் என் கிருபையால் சாப்பாடு கிடைக்கிறது என்கிறாய்! இதுவரை யாரும் இது போல் 'பாபா உன் தயையால் எல்லாம் நடக்கிறது' என்று சொன்னதில்லை! நீ என்னிடம் பொய் சொல்கிறாய்!" என்கிறார் பாபா! 

பாபாவின் குரல் குழைகிறது... பாபாவின் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது... சஞ்ஜெய் கவனிக்கிறார்! ராஜா ரெட்டி அதனை பார்க்க மனமின்றி திரும்புகிறார்! 

பிறகு சிரித்துக் கொண்டே பாபா "குமார்! வா உள்ளே! உன் மனைவியையும் கூப்பிட்டுக் கொண்டு வா!" என்கிறார்! பாபா ராஜாரெட்டியிடம் *"ராஜா! இவர்கள் இருவருக்கும் சாப்பாடு கொண்டு வா!"* என்கிறார்! 

சோறு-சாம்பார்- ரசம் - இனிப்புடன் கொஞ்சம் மிட்சர்,அதோடு ஐஸ்கிரீம்; இரண்டு இலைகளில் எடுத்து வரப்படுகிறது! வரண்ட பாலையில் பாலை ஊற்றுவது போல் வயிறு குளிர்கிறது! 

பாபா சஞ்ஜெயிடம் "குமார்! சாப்பிடு! நான் தரிசனத்துக்கு செல்கிறேன்!" என்கிறார்!


அப்போது சஞ்ஜெய் "வெளியே எத்தனையோ பேர் பக்தர்கள் இருக்கிறார்கள், ஒருவர் கூட எங்களிடம் தண்ணீர் வேண்டுமா? என்று கூட கேட்கவில்லை பாபா!" என்கிறார்!

அதற்கு பாபா "நீ யாரைப் பற்றி சொல்கிறாய்? குமார்! சுவாமிக்கு யாருமே பக்தர்கள் இல்லை! வெளியே இருப்பவரெல்லாம் வெறும் ஜனம், கும்பல்!! அவரில் யாரும் பக்தர்கள் இல்லை! அவர் என் உண்மையான பக்தர்களாக இருந்தால் உன்னைப் பற்றிக் கேட்டிருப்பார்கள்! சுவாமி புகைப்படங்களை சட்டைப் பையில் வைத்துக் கொள்வதால் மட்டும் அவர்கள் எல்லாம் பக்தர்கள் இல்லை!" என்று அழுத்தம் திருத்தமாக பதில் சொல்கிறார்!


இரவில் ரயில்வே ஸ்டேஷனில் இருவரும் தாங்கிக் கொள்கின்றனர்! தூங்கியபின் காலை ஆசிரமத்திற்குச் செல்கின்றனர்.. ஜுன் 1 விழா இருப்பதால் அதற்குள்ளாக பூங்கா விறுவிறு என்று தயாராகிறது! இனி பூங்காவிற்கு தண்ணீர் தெளிப்பதே இருவரது வேலை! பிறகு கிடைக்கும் நேரத்தில் சாயி கீதா தங்கி இருந்த இடத்திற்கு வந்து சேவை செய்தனர் மீராவும் சஞ்ஜெயும்... அதற்காக புல் சேகரித்து வருவார்கள், மதியம் ஒரு ஆற்றில் சாயி கீதாவை குளிப்பாட்டுவார்கள்! 


ஒருநாள் சாயிகீதாவின் பாகன் வசந்த் பாயி 

"குமார்! இன்று நீ சாயி கீதாவின் மேல் உட்கார்ந்து பிருந்தாவனம் போ!" என்கிறார்! அதற்கு மீரா, "பாயி! பாபா கோபிப்பார்!" என்கிறார்! 

"மீரா தங்கச்சி! எனக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது, பாபா ஒன்றும் சொல்ல மாட்டார்" என்கிறார் பாகன்! 

பிறகு சாயி கீதாவிடம் 

"கீதம்மா! குமாரை மேலே உட்கார வைத்துக்கொள்!" என்று பாகன் சொன்ன உடன்.. கீதா துதிக்கை எழுப்பி ஒரு பிளிறு பிளிறியது! "குமார்.. போ! ஏறி உட்கார்!" என்று பாகன் சொன்னதும்... சஞ்ஜெய் ஏறி அமர்ந்து கொள்கிறார்!

முதன்முதலாக சாயி கீதாவின் மேல் ஏறிய பெரும்பேறு பெறுகிறார் சஞ்ஜெய்!

பிருந்தாவன் கேட் நெருங்குகிறது... 

சஞ்ஜெய் தான் கேட்டிலேயே இறங்கிவிடுகிறேன் என்று சொல்லியும் பாகனும் கீதாவும் கேட்காமல்... கேட் திறந்து உள்ளே பாபாவை நோக்கியபடி சஞ்ஜெய் சாயி கீதா மேல் அமர்ந்து வருகிறார்!

சஞ்ஜெய்க்கு ஒரே பயம்... மீராவுக்கு அதைவிட...

மெதுமெதுவாக அசைந்து வந்து பாபாவின் எதிரில் அசையாமல் நின்றது சாயி கீதா! பாகன், சஞ்ஜெய், மீரா, சாயி கீதா என ஒவ்வொருவரையும் கவனிக்கிறார் பாபா! கீதா பிறகு தனது தும்பிக்கையால் பாபாவின் பாதத்தை தொட்டு கைதூக்கி பிளிறுகிறது! 


"கீதம்மா! குமாரை உட்கார வைத்து கொண்டு வந்தாயா? உள்ளே போ! ஜாக்கிரதையாக கீழே இறக்கு! அவனை தள்ளி விடாதே!" என்று கொஞ்சுகிறார் பாபா சாயி கீதாவிடம்! 

நாட்கள் ஜுன் ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தன! ஒரு சிறு விழா நடக்க இருந்தது! பிருந்தாவன் பின்னால் காலேஜுக்காக பூமி வாங்கி அதற்கான பூமி பூஜை! வந்திருந்த டெய்லரிடம் "அவருக்கு உன் அளவு கொடு!" என்று சஞ்ஜெயிடம் பாபா சொல்ல... "இவருக்கு ஒரு ஷர்ட் , பேன்ட் தைக்க வேண்டும்! நன்றாக தைத்துக் கொடு! இவர் கொஞ்சம் ஷோக்கான மனிதர்!" என்று பாபா தமாஷாக டெய்லரிடம் சொல்லியும் பிறகு சஞ்ஜெயிடம் "சாதாரணமாகவே தைத்துக் கொள்!" என்று சஞ்ஜெயிடமும் சொல்லிவிட்டு சிரிப்போடு நகர்கிறார்! 


அன்று ஜுன் ஒன்று ! சேவாதளர் தங்களுக்குரிய சேவையை செய்து கொண்டிருந்தனர்! மீரா சஞ்ஜெயிடம் "நீ என்ன வேலை செய்யப் போகிறாய்?" என்று கேட்கிறார்! "பாபா! என்ன வேலை கொடுப்பார் என்று தெரியவில்லை!" என்கிறார் சஞ்ஜெய்! அதற்குள் பாபா சஞ்ஜெயை அழைக்க... பாபாவின் கை நிறைய லேடீஸ் பேட்ச்... "ஆண்களுக்கான பேட்ஜ் தீர்ந்துவிட்டது... நீ இதை அணிந்து கொள்! இதில் ஆண் / பெண் என்றெல்லாம் எழுதவில்லை...ஆகவே பிரச்சனையில்லை!" என்று சொல்லி பாபாவே சஞ்ஜெயின் கழுத்தில் பேட்ஜ் அணிவிக்கிறார்... அன்றுடெய்லரிடம் தைக்க சொன்ன புத்தாடையை தருகிறார் பாபா! 

அன்று மாலையே மீராவுக்கும் புத்தம் புதிய புடவை ஒன்றையும் தருகிறார் பாசத் தாய் பாபா! 

கொடிக்குத் தேரை விட... மயிலுக்குப் போர்வையை விட... ஆன்மாவுக்கு அரவணைப்பு எனும் அருட் கதகதப்பை இவ்வுலகில் இறைவன் பாபாவை தவிர ஒருவராலும் தர இயலாது!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 69 -71 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


இறைவன் பாபா மொழிந்தபடியே இரக்கம் உள்ளவரே பக்தர்! இதயம் திறந்திருப்பவரே உண்மையான சாயி பக்தர்! பக்தர் சஞ்ஜெயின் தூய உள்ளத்தை அனைவருக்கும் உணர்த்தவே சாயி கீதா மேல் ஏற்றி அவரின் இதய உயரத்தை மிக கம்பீரமாக காட்டி இருக்கிறார் பாபா! 

சாயி பக்தராகிய நாம் அதிகமாகத் திறப்பது நமது இதயமாகவும், குறைவாகத் திறப்பது நமது வாயாகவும் அமைதல் அவசியம்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக