தலைப்பு

வியாழன், 13 ஏப்ரல், 2023

கழுத்தில் கத்தி வைத்து 5 பேர் கொல்ல வந்தபோது கண்களை மூடி "சாயிராம்" என்று கத்தினார் சஞ்ஜெய்!

எவ்வாறு ஒரு பக்தி தம்பதிகளுக்கு நிலையாமை உணர்த்தி, உயிரையும் காப்பாற்றி புட்டபர்த்திக்கு வரவழைப்பதற்காக இறைவன் பாபா சூழ்நிலையையே மாற்றினார் எனும் எதிர்பாரா திருப்ப சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...


மீரா- சஞ்ஜெய் ஆகிய இரு இல்லறத்துறவிகளும் (கணவன் - மனைவி; பரமஹம்சர் - மாதா சாரதா தேவி போல்) சூழ்நிலை காரணமாக ஒரு கிராமத்தில் தங்குகின்றனர்... அங்கே பாபா பக்தரான டாக்டர் வீட்டில் வீட்டு வேலை பார்க்கிறார் மீரா, சாயி சமிதியில் இசை கற்றுக் கொடுக்கிறார் சஞ்ஜெய்!


ஒருமுறை டாக்டர் சஞ்ஜெயை தன்னுடைய இல்லத்தின் பஜன் நேரத்தில் பஜன் மற்றும் கவ்வாலி இசைக்கும்படி அறிவுறுத்துகிறார்... அதற்கு சம்மதித்து முதலில் மீராவை அவர் வீட்டுக்கு அனுப்பி தான் பின்னர் வருவதாக சொல்கிறார்! டாக்டர் வீட்டு பஜனுக்கு அனைவரும் வந்துவிடுகின்றனர்... ஆனாலும் சஞ்ஜெயை காணவில்லை...டாக்டருக்கோ பெரும் ஏமாற்றம்... பெருங்கோபம்.. மீராவுக்கோ தர்மசங்கடம்... வேறு வழியின்றி தனக்கு தெரிந்த பாடல்களை மீராவே பாடுகிறார்... சாயி பஜன் முடிந்து அனைவரும் கிளம்புகிற போது சஞ்ஜெய் டாக்டர் வீட்டுக்குள் நுழைகிறார்... டாக்டர் மனைவி பாபிக்கும் கோபம்... யாரிடமும் எதுவும் பேசவில்லை சஞ்ஜெய்... ஒன்றும் பேசாது மீராவை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு செல்கிற வழியில்.. மீரா ஏன் தாமதம்? என வற்புறுத்திக் கேட்க...


சஞ்ஜெய் பஜனுக்காக வந்து கொண்டிருந்த போது சஞ்ஜெய் வீட்டு‌ உரிமையாளர் சுதீர் சஞ்ஜெயை காரில் எங்கேயோ அழைத்துச் செல்கிறார்... பஜன் இருக்கிறது என்று சஞ்ஜெய் சொல்லியும்.. அதற்குள் வந்துவிடலாம் என்று சுதீர் சமாளிக்க... கார் கடற்கரையோரம் வந்து நிற்க... அங்கே கத்தி எடுத்துக் கொண்டு ஐவர் வர... ஒருவர் சஞ்ஜெய் கழுத்தில் கத்தி வைக்கிறார்...  

நால்வரும் சஞ்ஜெயை குத்த விரைகின்றனர்... "ஹும் சீக்கிரம் நடக்கட்டும்!" என்ற குரல் கேட்கிறது... திரும்பிப் பார்த்தால்... அது சுதீர் குரல்...இந்த கொலை ஏற்பாட்டை செய்யச்  சொன்னதே சுதீர் தான் என்று புரியவருகிற அதே சமயத்தில் கத்தியும் வயிற்றைப் பதம் பார்க்க ஓடி வருகிறது... சஞ்ஜெய் கண்களோ சூனியத்தில்... துணியால் இறுக்கப் பட்டிருக்கிறது... சஞ்ஜெயை காப்பாற்ற ஈ காக்கா இல்லை... "சாயிராம் சாயிராம்" என்று கத்துகிறார் சஞ்ஜெய்! "உன் இதயத்துடிப்பு எனக்கு உடனே கேட்கும்!" என்று பாபா பற்றி சத்யம் சிவம் சுந்தரத்தில் படித்து மீரா சொன்ன வாசகம் நினைவில் வருகிறது...


"சாயிராம்" என்று சொன்ன அதே நொடியில் மின்னலாய் ஒரு ஒளி தோன்ற... அதைக் கண்டு கொல்ல வந்தவர்கள் மிரண்டு ஓட... அந்த ஒளியிலிருந்து பாபா சஞ்ஜெய்க்கு தரிசனம் தர... நடந்தது என்னவென்று புரியாமல் மிரண்ட சுதீர் பயந்து காரிலேயே சஞ்ஜெயை டாக்டர் வீட்டில் டிராப் செய்ய.. நடந்ததை முழு மூச்சாக சொல்லி முடிக்கையில் முகத்தில் ஈ ஆடவில்லை மீராவுக்கு... இந்த ஊரே வேண்டாம் என சஞ்ஜெய் மீராவை அழைத்து.. தங்களது உடைமைகளை தானம் செய்து ஊரை தியாகம் செய்து புட்டபர்த்திக்கே சென்றுவிடலாம் என்ற முடிவில் உறுதியாக இருந்து தங்களின் வாடகை வீட்டிற்கு வருகிறார்கள்... அப்போது ஒரே ஷாக்!!


வீட்டில்...பூட்டுக்கு மேல் பூட்டு! வைத்திருந்த துணிமணிகளை எடுக்க வேண்டும் என்று சுதீரை கேட்க... "நீங்கள் யார்? இது என் வீடு! நீங்கள் இங்கு தங்கவே இல்லை!" என்று பெரிய குண்டை தூக்கி இன்னமும் திருந்தாத அந்த சுதீர் இருவரின் இதயத்தில் வீச... அக்கம் பக்கத்தினரிடம் முறையிட... அவர்களும் சுதீர் சொன்னதையே சொல்ல... ஷாக் மேல் ஷாக்... "மனிதர்கள் இப்படிப்பட்டவர்களா?" அதிர்ச்சி இருவருக்கும்...

டாக்டர் வீட்டுக்கு வந்து பாபியிடம் சொல்ல... பாபியின் குறையாத கோபம் முகத்தைத் திருப்ப வைக்க ... "அதற்குள் இந்த மனிதர்களின் அன்பு வற்றிவிடுமா?" குடைந்தெடுக்கிறது சஞ்ஜெயை ஞானக் கேள்விகள்! 


காவல்நிலையம் சென்றும் பலனில்லை... பணம் எனும் பெரிய பிளாஸ்திரி காவல்துறையினர் கண்களையும் வாயையும் கட்டிப்போட்டு விடுகிறது! வேறு வழியே இன்றி பாபாவிடம் முறையிட... மீண்டும் டாக்டர் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது... பாபி (டாக்டர் மனைவி) திறக்கிறார்... ஆனாலும் இன்னும் அவர் இதயம் திறக்கப்படவில்லை... பாபாவின் பூஜையறை தரிசனம் பெற வேண்டி வந்திருந்தனர் மீரா- சஞ்ஜெய்! 

சரி என சம்மதிக்கிறார் பாபி! 


பூஜையறையில் வந்து விம்மி விம்மி அழுகிறார்கள் இருவரும்...! தானம் தரக் கூட அவர்களின் பொருள் அவர்கள் கைவசம் இல்லை! புட்டபர்த்தி செல்ல பணமும் இல்லை! கொடுமையின் குத்தாட்டத்தில் கண்ணீர் குடம் குடமாக வழிகிறது சஞ்ஜெய்க்கு... சாயி பக்தர்கள் என்று தங்களை சமுதாயத்தில் காட்டிக் கொண்ட ஒருவர் கூட அப்போது இருவரையும் காப்பாற்ற முன்வரவில்லை... ஒரே ஒரு சாயி பக்தர் சுதாமா அடைக்கலம் தருகிறார்... அவர் வீட்டிலேயே தங்கிச் சாப்பிடுகிறார்கள்! 


அவர்களை நன்கு தெரிந்த ஒரு கிறிஸ்துவ பாதிரியார் தன் கைப்படவே எழுதிய கடிதம் ஒன்று தர...‌ அந்தக் கடிதத்தை முன்தினம் பாபி வீட்டு பாபா பூஜையறையில் வைத்துத் தான் அவர்களின் முறையீடலே நடந்தது! ஆக...அந்த பாதிரியார் கடிதத்தை அடுத்த நாள் சாம்பரே எனும் உயர் அதிகாரிக்கு சஞ்ஜெய் தர... அவர் சந்தேகரை (விலை போன காவல் அதிகாரி) அழைக்க... அவரோ  "இவர்கள் அந்த வீட்டில் தங்கவே இல்லை" என்று சமாளிக்க.. சாம்பரே குரல் உயர்த்திக் கேட்க... சுதீர் வரவழைக்கப்பட... ஒரே களேபரம்! 

சுதீர் மிரண்டு மன்னிப்பு கேட்க... "மானம் போய்விடும் 1000 ரூபாயும் அந்த வீட்டையும் கூட தருகிறேன் கேஸை வாப்பஸ் வாங்குங்கள்!"  என்று சுதீர் கெஞ்சி ஆசை வார்த்தை காட்ட... முதலில் பிடிவாத சஞ்ஜெய் மறுக்க... பிறகு காவல்நிலையம் - நீதிமன்றம் என்ற சுழலில் சிக்க மனமின்றி.. புட்டபர்த்தி போகும் ஆவலில் ... ஒருமனதாய் சம்மதிக்க... 500 ரூபாய் கொடுப்பதான பேச்சுவார்த்தை தீர்மானத்திற்கு வர... சுமூகமாக சூழ்நிலை நேர்கிறது... தர்மம் மீட்கப்படுகிறது!  

"தான் பாபா பக்தராக மட்டும் இல்லை என்றால் அந்த வீட்டையும் 1000 ரூபாய்க்கு பதிலாக 5000 ரூபாயே வாங்கி இருப்பேன்... ஆனால் பாபாவுக்கு அது எல்லாம் பிடிக்காது! இந்த 500 ரூபாய் கூட புட்டபர்த்தி பயணச் செலவுக்குத்தான்...!" என சஞ்ஜெய் மனம் திறக்க...!

பஜன்- கவ்வாலி பாடி சஞ்ஜெய் பரப்பரப்பாக புகழ் அடைந்து வருவதாலும், தனது வியாபாரம் காற்று வாங்குகிறது என்பதாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டு தொழில் செய்யும் சுதீர் தாங்க முடியாமல் தான் பொறாமையில் இத்தனை பிரச்சனைகளை உருவாக்குகிறார்!


 பிற்காலத்தில் இருவரும் ஒரு சூழ்நிலையில் சந்திக்கிற போது சுதீர் யாருடனோ சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறார்.. மீரா 'சுதீர்' என்று அழைக்கிறார்! முதலில் அடையாளம் மறந்த சுதீர்... பிறகு கண்கலங்கி இருவரின் கால்களில் விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுகிறான்...‌சுதீர் உடல் எங்கும் குஷ்டம் பரவி இருந்தது! பாவத்திற்கான சம்பளம் இது என சுதீர் உணர... வீட்டைப் பூட்டி விளையாட்டுக் காட்டிய சுதீரை கர்மா அவனது வாழ்வையே குஷ்டம் எனும் பூட்டால் பூட்டிவிடுகிறது! 


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 57 - 62 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


ஒருவரை மனதாலோ உடம்பாலோ காயப்படுத்தினால்... அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால், முறைகெட்டு ஏமாற்றி பதவி நாற்காலியில் அமர்ந்தால், பதவி ஆணவத்தில் கொக்கரித்தால், அடக்குமுறை தர்பார் நிகழ்த்தினால் அந்த பாவ கர்மா அவர்களை கழுத்தைப் பிடிக்காமல் விடுவதே இல்லை! இறைவன் பாபாவே மன்னித்தாலும், செய்த பாவ கர்மா யாரையும் எவரையும் ஒருபோதும் மன்னிப்பதில்லை! திருந்துதலின் அளவிற்கு இணங்க கர்ம வீரியம் குறைகிறதே தவிர கர்மா யாரையும் விட்டு வைப்பதில்லை! பாவம் செய்கிற போது மனிதனுக்கு இருக்கிற துணிச்சல் அதனால் விளைகிற பாவங்களை அனுபவிக்கிற போது இருப்பதே இல்லை!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக