தலைப்பு

திங்கள், 17 ஏப்ரல், 2023

உணவுக்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?

குறைந்த பெட்ரொலில் நிறைய கிலோ மீட்டர் ஓடும் காரையே அனைவரும் வாங்குவர்... அது போல் குறைந்த உணவில் நிறைய வேலை செய்வதாக உடல் மாற வேண்டும்! தற்போது பெரும்பாலானோர் வழக்கத்திற்கு மாறாக குறைவாக உண்டாலே உடல் ஆரோக்கியத்தோடு இருக்க முடியும்! 

அதிகம் உண்டால் பலமா? இல்லை அது உடலே நான் என்கிற உணர்வை வளர்த்துவிடுகிறது! மிதமான உணவே உடல் நலன் மற்றும் ஆன்ம நலனுக்கும் உதவுவது!


அந்த மிதமான உணவும் சாத்வீகமாக இருக்க வேண்டும்! அப்போது தானா மனம் தெளிவாகும்! அதிகக் காரம், புளிப்பு, உப்பு முதலியவை ராஜஸம்!

அதாவது உணர்ச்சி வசப்பட வைக்கும் ரஜோகுணம்! வெங்காயம் போன்ற காமக்ரோதம் தூண்டும் உணவும் ராஜஸமே!

ஆறிப்போகிறவை , ஊசிப்போகிறவை, அழுகிப்போகிறவை யாவும் புத்தியை மந்தமாக்கி தாமஸ குணமாக்கும்! 

"அஹிம்சா பரமோ தர்மஹ" ஆக தர்மத்திற்கு விரோதமான , பாவ உணவான புலால் உணவு பாவத்தையே கொடுக்கிறது!


பழம், பால், புளிக்காத தயிர், இனிப்பு வகைகள் சாத்வீகமாயினும் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்கிற ரீதியில் எவை அளவுக்கு அதிகமானாலும் அது உடல்/ மனம்/ ஆன்மாவுக்கு கெடுதலே!

ஆக உணவு வகைகள் கூட மன இயல்புகளை பாதிக்கிறது... குணங்களை உணவுகள் தீர்மானிக்கிறது.. காரம் கோபத்தை தருவது போல... காரணம் ; உணவே ரத்தமாகிறது, சத்தாகிறது , தேவையற்றவை மலமாகிறது, கெட்ட உணவாக இருந்தால் உடல்நலம் கெட்டுவிடுகிறது... உடல் சோர்வாகும் போது மனமும் சோர்வாகிறது! 


கூடுமானவரை காய்கறிகள், பழவகைகள் யாவையும் பச்சையாகவே உண்ணுங்கள்! ரசாயனம் கலந்த உணவை உண்ணாதீர்கள்... குறிப்பாக சீனி (வெள்ளை சர்க்கரை) அதை உண்டால் கேன்சர் உறுதி!

எப்படி உணவால் குணநலன் மாறுகிறதோ அல்லது மேம்படுகிறதோ அது போல் சமைப்பவர்களின் மன இயல்புகள் சாப்பிடுபவர்களை பெரிதும் பாதிக்கிறது! 

பிதாமகற் பீஷ்மர் போர்க்கடைசி அம்புப் படுக்கையில் அமர்ந்து தர்மத்தை பற்றி பாண்டவர்க்கு உபதேசிக்க... அதைக் கேட்ட துரௌபதி சிரிக்க... காரணம் வினவிய பீஷ்மருக்கு துரௌபதி , சபையில் தான் மானபங்கம் செய்யப்பட்ட போது அதைத் தடுக்காமல் / எதிர்த்து கேள்வியும் கேளாது இப்போது என்னவோ தர்மம் உபதேசிக்கிறீர்களே... அதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது என அவள் சொல்லியபோது...

வெட்கித்தலை குனிந்து அதற்குக் காரணம் இருக்கிறது..."என்ன தான் எனக்கு தர்மம் தெரிந்திருந்தாலும்... நியாயம் அறிந்திருந்தாலும்... இந்த உடல் கௌரவர்களின் சாப்பாட்டை தின்று வளர்ந்தது... அவர்களின் உப்பை தின்று வளர்ந்ததால் தான் எனக்கும் தர்மத்தை காக்க வேண்டும் என்றோ... அதர்மத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்றோ தோன்றவில்லை!" என்று மனம் திறந்து பீஷ்மர் பேசுகிறார்!


ஆக இறை நாமங்களை உச்சரித்த படி சமைக்க வேண்டும்... அதை சாப்பிடுபவர்கள் தினந்தோறும் பிரம்மார்ப்பணம் சொல்லியே சாப்பிட வேண்டும்! 

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஹோட்டல், பாராட்டி, ஹாஸ்டல் போன்றவற்றில் உணவைச் சாப்பிடும்படி இருந்தால் சுவாமிக்கு மானசீகமாக நிவேதனம் செய்துவிட்டு பிரசாதமாகக் கருதியே உண்ண வேண்டும்! 


(ஆதாரம் : அறிவு அறுபது / பக்கம் : 123 / ஆசிரியர்: அமரர் ரா.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக