தலைப்பு

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

கைச் செலவுக்கு காசும் இன்றி பசியோடு பாதம் தேயத் தேய புட்டபர்த்திக்கு ஒரு வைராக்கிய யாத்திரை!

எவ்வாறு ஒரு பக்தித் தம்பதிகள் தங்களுக்கு நேர்ந்த பல இக்கட்டுகளை சமாளித்து கையில் காசுமின்றி புட்டபர்த்தி வந்து சேர்ந்தார்கள்? எவ்வாறு பாபா அவர்களின் வழிநெடுக உதவி புரிந்தார்? எனும் நெகிழ் சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...


தாங்கள் இறுதியாக தங்கிய சாயி பக்தர் சுதாமா வீட்டில் அன்றைய பொழுதை கழித்து... பிரச்சனைகள் உருவாக்கியவரே சமரசம் பேசியதில் புட்டபர்த்தி பயணச் செலவுக்கு 500 ரூபாயும் தேறியது! இதனை சுதாமாவிடம் சஞ்ஜெய் தெரிவிக்க... அந்த கிராமத்திலிருந்து இருவரும் (சஞ்ஜெய்- மீரா) செல்வதை அவரால் ஏற்க முடியவில்லை! சஞ்ஜெயின் சாயி கானமும், மீராவின் சேவை மனமும்... அப்படி ஒரு நல்ல ஆன்மாவை இழப்போம் என்ற கவலை சுதாமாவுக்கு...! கொஞ்சம் பொறுத்தால் தாங்களும் அவர்கள் கூட புட்டபர்த்திக்கே வருவதாக சுதாமாவின் மனைவி சொல்லியும் சஞ்ஜெய் மறுத்து... அதிகாலையே புட்டபர்த்தி நோக்கி வைராக்கியமாய் கிளம்புகிறார்கள் இருவரும்...!


முதலில் மும்பை வருகிறார்கள்... இருவரும் அவர்களின் சொந்த வீட்டுக்குச்  செல்கிறார்கள்... நான்கைந்து நாட்கள் அங்கிருந்த பின்னர் கோவா வழியாக குண்டக்கல்! 

அங்கேயே படுத்து உறங்கி காலை பார்த்தால்... அதிகாலை அவர்களுக்காக விடியவே இல்லை! கையில் பணமே இல்லை! பணம் தொலைந்ததா? ஆனால் அவர்களின் புட்டபர்த்தியை நோக்கிய பாதை தொலையவே இல்லை! அங்கே இருந்த ஒரு டி.டி.ஆரோடு நிலைமையை எடுத்துரைக்க... 


"மாலை குண்டக்கல்- பெங்களூர் passenger ரயில் வரும்... அதில் டிடிஆர் இருக்க மாட்டார்... அதிலே போங்கள்!" என்கிறார்! ஆச்சர்யப்படுகின்றனர் இருவரும்..

மாலை வரை செய்வதறியாது... குண்டக்கல்லில் இருந்து தர்மாவரம் வரை நடந்து போக தீர்மானிக்கின்றனர் இருவரும்...! அப்படியே ரயில் ஓர பாதையிலேயே நடக்க ஆரம்பிக்கிறார்கள்! இறைவனை நோக்கிய இரயிலடி பயணமது! மாலை 6 மணி வரை நடை... பாமிடி என்ற சின்ன நிலையத்தில் நிற்கின்றனர்... பசியோ வயிற்றை கிள்ள ஆரம்பித்து குத்தத் தொடங்குகிறது...


கையில் கொண்டு வந்திருந்த முந்திரிக் கொட்டைகளை வாட்டிச் சாப்பிட நெருப்பை மூட்ட காய்ந்த புல் திரட்டி வாட்டுகிற போது... விதி சும்மா இருக்குமா? காற்றை மட்டுமல்ல மழையையும் சேர்த்து விதி இழுத்து வர... முந்திரிகள் எனும் மந்திரிகளின் மேல் மழை விழ... அவை வழுக்கி விழுந்து தொலைந்து போகின்றன... மீண்டும் வெறுங்கையோடு ரயில் வே ஸ்டேஷனில் தங்கும் அறை திறந்திருக்க... அங்கே தொப்பலாக நனைந்தபடி வருகின்றனர்... கரன்ட் கண் அயர்ந்து மீண்டும் ஒளிர்ந்தது.. நிலம் எல்லாம் ஜலம்! அந்த passenger train வரவே இல்லை ! 

இரவு ஸ்டேஷன் மாஸ்டரிடம் விசாரிக்கிற போது ... *! குண்டக்கல் - பெங்களூர் ரயில் குடை சாய்ந்து மேம்பாலம் கீழே நதியில் விழுந்ததையும் அறிந்து தங்களை காப்பாற்றிய பாபாவுக்கு இருவரும் கண்கலங்கி நன்றி தெரிவிக்கின்றனர்!

மீண்டும் தொடர் நடை-  கல்லூரு ஸ்டேஷனுக்கு வந்து சேர்கின்றனர்...ஒரு மரத்தடியில் அமர... அங்கே விதி போலீசை அழைத்து வருகிறது.. சிறிய விசாரணை...

அவர்கள் புட்டபர்த்தி செல்ல இருப்பதாக தகவல் அறிந்தவுடன்... அங்கிருந்து கிளம்பிய போலீஸ் அவர்களை தேடி மீண்டும் வருகிறார்!


இருவருக்கும் ஒரே பசி! கொலைப்பசி! அந்த நேரத்தில் வந்த அதே போலீஸ் அவர்களின் கையில் இரு பொட்டலம் கொடுத்துவிட்டு கிளம்புகிறார்... என்னவென்று திறந்து பார்த்த போது.... பாபாவை நினைத்து கண் கலங்குகிறார்கள்... கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிப்பது பாபாவே என்பதை உணர்கிறார்கள்... இட்லி - தோசை - சட்னி அந்த பொட்டலங்களில் இருந்தன... அந்த போலீஸ் அவர்களின் மனக்கண்ணில் பாபாவாக காட்சி அளிக்கிறார்! 

பிறகு மெல்ல மெல்ல நடந்து உரவகொண்டா அதன் பிறகு புட்டபர்த்திக்கு நடந்தே வருகிறார்கள்!


அந்நாளைய பிரசாந்தி நிலைய ஆசிரமம் பெரிய அளவில்லை... பூர்ண சந்திர அரங்கம் இருந்தது‌.. கேன்டீனில் பக்தர்கள் அனைவருக்கும் இலவச உணவு... ஆயினும் அவ்வளவு சிரமப்பட்டு அவர்கள் வந்தும் கூட பாபா அங்கே இல்லை.. பெங்களூரில் இருப்பதற்கான செய்தி அறிந்து...அங்கே செல்லும் தாகம்... பாபாவிடம் தஞ்சமடைவதே அவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது.. பிறகு 5 பைசாவுக்கு போஸ்ட் கார்ட் வாங்கி... அதில் "பாபா! எங்களுக்கு உதவி செய்யுங்கள்!" என்று எழுதி அனுப்புகின்றனர்! 3 நாட்கள் பிரசாந்தி நிலையத்தில் தங்கி, இலவச உணவை உண்டு... அங்கிருந்து நடந்து ஹிந்துப்பூர் வருகிறார்கள்! அங்கேயே படுத்துக் கொள்கின்றனர்... இரவு 2 மணிக்கு ஒரு போலீஸ் வந்து எழுப்ப... விபரம் அறிந்து... பணமில்லாததையும் விசாரித்து.. கவலைப்பட வேண்டாம் என்றும் பெங்களூர் ரயிலில் தனக்கு பணி இருக்கிறது.. தானே அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி.. அதிகாலையிலேயே எழுப்பி இருவரையும் அழைத்துச் செல்கிறார்...

பயண இலக்கு எங்கே? என்பதை அதே போலீஸ் விசாரிக்க... வொயிட் ஃபீல்ட் ஆசிரமத்துக்கு ஒரு passenger train 3மணிக்கு வரும்... அதில் ஏறி அங்கு இறங்கச் சொல்லி... யாரும் டிக்கட் கேட்கமாட்டார்கள்... பயப்பட வேண்டாம் என்றும் வழிகாட்டுகிறார் அந்த போலீஸ்! 

ஆக 5 மணிக்கு பிருந்தாவன் வந்து சேர்கிறார்கள்! 300 பேர் தவிர அந்த காலத்தில் அங்கே அதிக ஜனமே இல்லை... அது 1969 ஆம் ஆண்டு... மார்ச் மாதம்! அவர்களும் தங்களது வழுவாத வைராக்கியத்தை இறுக்கமாகப் பிடித்தபடி பசியும் பட்டினியுமாக பாபாவிடம் தஞ்சம் அடைவதே ஒரே இலக்காக அவரின் இருப்பிடம் வந்து சேர்ந்து ஒரு இடம் பார்த்து நிற்கிறார்கள்!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 63 - 65 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


வைராக்கியமே ஆன்மீகத்திற்கான அஸ்திவாரம்! பற்றின்மையே வைராக்கியத்தை வளர்த்துவிடுகிறது! வெறுத்தலோ ஒதுங்குதலோ அல்ல வைராக்கியம் என்பது.. எது நிகழ்ந்தாலும் இதயம் அதை பாபா சங்கல்பம் என ஏற்பது! உறுதியாக அதில் நிலைத்து நிற்பது! அதுவே வைராக்கியம்! பாதை வழுக்கினாலும் இலக்கை அடையலாம்... ஆனால் பார்வை வழுக்கினால் தான் பயணமே தடைபடுகிறது! எதற்கும் அசராத அப்படிப்பட்ட வைராக்கியசாலிகளுக்கே பாபா ஆன்மீகப் பேரானந்தத்தின் கதவுகளை அகலத்திறந்து விடுகிறார்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக