தலைப்பு

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

பாபாவின் அறையிலிருந்து யாருக்கும் தெரியாமல் எடுத்து வரப்பட்ட வெற்றிலைப் பெட்டி!

இது போல் எல்லாம் நிகழ்ந்ததா?! என்று ஆச்சர்யப்படும் அளவிற்கான அற்புதமான அனுபவம் மிக சுவாரஸ்யமாக இதோ...


அது 1969. வொயிட் ஃபீல்ட் பிருந்தாவனம்! பம்பாயிலிருந்து பாபாவே கதி என்று வந்த குஜராத்திக்காரர்களான இல்லறத் துறவிகள் சஞ்ஜெய் - மீரா அங்கே பாபாவுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்! 

அப்போது பாபாவின் பூர்வ குடும்பத்து பெரிய அக்கா வெங்கம்மாவின் மகன் சங்கரப்பா அங்கேயே இருக்கிறார்! அவருக்கு 3 குழந்தைகள் - சோம சேகர், சுப்பிரமணியம், நீரஜா! 


குழந்தைகள் அனைவரும் சாயி சேவையாற்றும் சஞ்ஜெய் - மீரா அருகிலேயே விளையாடிக் கொண்டிருப்பர்... வெங்கம்மா வீட்டிலிருந்து தின்பண்டங்கள் எடுத்து வரும்... குழந்தைகளுக்கு ஹிந்தியும் தெரியாது... இவர்களுக்கு தெலுங்கும் தெரியாது... இதய பாஷையில் இருவரும் உரையாடிக் கொள்கின்றனர்...

"சாப்டாச்சா? டீ குடிச்சாச்சா?" என்று அவர்களோடு மழலை உறவாடும்! வெங்கம்மா தேடி வந்தால் சஞ்ஜெய்- மீரா பின்னால் ஒளிந்து கண்ணாமூச்சி விளையாடும் அந்த 3 குழந்தைகள்! 


இருவரிடமும் பணம் இல்லை என்று தெரிந்தும் அந்தக் குழந்தைகள் வெங்கம்மாவிடம் "குமார் பாயியும், அம்மாவும் பசியோடிருக்கிறார்கள்! நீ சுவாமி ரூமிலிருந்து ஆப்பிள், ஆரஞ்சு பழங்களைக் கொண்டு வந்து கொடு!" என்று இருவருக்காகவும் குழந்தைகள் பரிவோடு பேசும்!

நீரஜா சிறுமி என்பதால் சேட்டை செய்தாலும் யாரும் எதுவும் சொல்வதில்லை... பாபா அறையிலிருந்து எடுத்துவரச் சொல்வர் "அய்யோ சுவாமி பார்த்தால் அம்மாவிடம் சொல்லிக் கொடுத்துவிடுவார்!" என்று நீரஜா பயப்படுவாள்... பிறகு நைசாக யாருக்கும் தெரியாமல் பாபா அறையிலிருந்து பழங்கள் எடுத்துவர.. அனைவரும் பங்கு போட்டுச் சாப்பிடுவார்கள்! இப்படி ஒருநாள் நீரஜா யாருக்கும் தெரியாமல் பூனை போல் மெதுவாக பாபா அறைக்குச் சென்று பழங்கள் எடுத்துவருகிற தருணத்தில்.. மேஜை எட்டாததால் எம்பிக் குதிக்கிறாள், அதற்குள் பாபா வர...

"சுவாமி வந்துவிட்டார்! எல்லோரும் தப்பித்து ஓடிவிடுங்கள்!" என்று ஒரே ஓட்டமாக ஓடுகிறாள்! அதைப் பார்த்த பாபா அவளையோ... வேறு யாரையுமே எதுவுமே சொல்லவில்லை! ‌திகட்டாத இந்த விளையாட்டு தினந்தோறும் இனிதே தொடர்கிறது!


ஒருநாள் சஞ்ஜெய் நீரஜாவிடம் "நீரஜா! போய் பாபா அறையிலிருந்து ஒரே ஒரு பீடா எடுத்துக் கொண்டு வா! தாம்பூலம் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது!" என்கிறார் 

அதற்கு சிறுமி நீரஜா "அய்யோ சுவாமி பார்த்தால் கோபிப்பார்! ஹும் ஹும் மாட்டேன்!" என்கிறார்!

அதற்கு சமாதானப்படுத்தியபடி சஞ்ஜெய் "நீ சின்னவள்! பாபா உன்னை ஒன்றுமே சொல்ல மாட்டார்! சுவாமி உன்னை எவ்வளவு அன்பாக நடத்துகிறார் அல்லவா!" என்கிறார்! நீரஜாவுக்கு தயக்கம் விடவில்லை! பிறகு நீரஜா சகோதரன் சேகர் "இதோ பார்.. நீ ரொம்ப சமர்த்து தானே! குமார் பாயி, (சஞ்ஜெய் குமார்) அம்மா (மீரா) நம்மவர்கள் இல்லையா? அவர்களுக்காக எடுத்து வர மாட்டாயா?" என்று ஆசை வார்த்தை காட்டுகிறான்! நீரஜா ஒருவழியாக சம்மதிக்கிறாள்! 

அனைவரும் சப்போட்டா மரத்தில் பதுங்கியபடி நீரஜா வரவிற்காக காத்திருக்கிறார்கள்! 

நீரஜா மெதுமெதுவாக ஓசையின்றி காற்று போல் பாபா அறைக்குள் நுழைகிறாள்! பூனை போல் அங்கே இங்கே கழுத்தைத் திருப்பிப் பார்க்கிறாள், இதயம் லப்டாப் லப்டப் என்று வேகமாக அடித்துக் கொள்கிறது... ஹப்பாடா... அந்த வெற்றிலைப் பெட்டி ஒரு ஓரமாக இருப்பதை கவனித்துவிடுகிறாள்! இப்போது தான் அவளுக்கு மூச்சே வருகிறது! சஞ்ஜெய் கேட்டதோ ஒரே ஒரு பீடா.. ஆனால் நீரஜாவோ ஒரே ஒரு சஞ்ஜீவினி மூலிகை கேட்டபோது மலையையே தூக்கிக் கொண்டு பறந்து வந்த அனுமான் போல் அந்த முழு வெற்றிலைப் பெட்டியையே தூக்கிக்கொண்டு ஓடி வருகிறாள் அந்தக் குறும்புச் சிறுமி!


அதைப் பார்த்த சப்போட்டா மரத்தடிவாசிகள் (சஞ்ஜெய், மீரா, சேகர் இத்யாதி) ஆளுக்கொரு வெற்றிலை எடுத்துக் கொண்டு.. மீதம் உள்ளதை ஒரு காகிதத்தில் கவிழத்தி விடுகின்றனர்... நீரஜா வாயும் சிவந்து போகிறது... 

"நீ இந்த டப்பாவை பாபா அறையிலேயே வைத்து விடு!" என்று மீரா சொல்ல... அதற்குள் அந்த வெற்றிலை கூட்டத்தை வாட்ச் மேன் பகதூர் பார்த்துவிட... நீரஜாவை பார்த்து "உனக்கு வெற்றிலை எங்கே கிடைத்தது?" என்று கேட்க... நீரஜாவோ குறும்பாக "குமார் பாயி கொடுத்தார்!" என்று சொல்ல...

"இங்கே வெற்றிலையே கிடைக்காதே! உங்களுக்கு எப்படி கிடைத்தது?" என்று பகதூர் சஞ்ஜெயை விசாரிக்க...

"உனக்கு வெற்றிலை வேண்டுமா வேண்டாமா? அதிகம் பேசாதே! இந்தா சாப்பிடு!" என்று சஞ்ஜெய் கொடுக்க...

அந்த சமயம் வெங்கம்மா வந்துவிடுகிறார்!


"நீரஜா ! சேகர்! குமார்! எங்கே நீங்கள்?" என்று குரல் எழுப்பிக் கொண்டே வருகிறார் வெங்கம்மா! அந்தக் குரலைக் கேட்டு குழந்தைகள் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்! ஆனாலும் நீரஜா வெங்கம்மாவிடம் மாட்டிக் கொள்கிறாள்! அவள் வாயெல்லாம் சிகப்பு! என்னாச்சு அம்மா என்று மீரா கேட்க... "அங்கே வெற்றிலை டப்பா காணவில்லை என்று சுவாமி தாண்டவம் ஆடுகிறார்!" என்கிறார் வெங்கம்மா!


"உங்களுக்கு வெற்றிலை எங்கே கிடைத்தது?" என வெங்கம்மா வினவுவதற்கும்... இன்னும் பாபா அறையில் வைக்கப்படாத அந்த வெற்றிலை டப்பா சஞ்ஜெய் சட்டைக்குள் இருந்து தொப் என்று ஓசையோடு விழுவதற்கும் சரியாக இருந்தது! 

"அய்யோ ராமா ! சுவாமியின் டப்பா இங்கே இருக்கிறது! இதை யார் வெளியே கொண்டு வந்தார்?" என்று வெங்கம்மா பதற... உள்ளே திறந்து பார்க்கையில் காலி டப்பாவாக இருக்க மேலும் பதறுகிறார்!

"இதில் உள்ள வெற்றிலை எங்கே?" என்று ஐவரையும் பார்க்க! அந்த ஐந்து வாய்களிலும் சிகப்பு, அந்த பத்து கண்களோ திரு திரு என முழிக்கின்றன!

பிறகு காகிதத்தில் மடித்த வெற்றிலைகளை சஞ்ஜெய் வெங்கம்மாவிடம் கொடுக்க...

அதை சஞ்ஜெயிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு காலி டப்பாவை எடுத்துக் கொண்டு கண்கள் வெற்றிலைப் போட்ட படி சிவக்க வெங்கம்மா சுவாமியின் அறைக்குள் போய்விடுகிறார்!


என்ன நடந்திருக்கும்? பாபா என்ன சொல்லியிருப்பார்? எனும் ஆவலும் பதட்டமும் மீராவுக்கு... பிறகு வெங்கம்மாவிடம் கேட்கிற போது!

"வெற்றிலை டப்பா கிடைத்ததா?" என்று பாபா கேட்க.. காலி டப்பாவை வெங்கம்மா காட்ட... பான்கள் காலியானதை பாபா விசாரிக்க.. குமார்,மீரா, பஹதூர் சாப்பிட்டுவிட்டார்கள் என்று வெங்கம்மா சொல்ல.. "யார் இங்கிருந்து எடுத்துப் போனது?" என்று பாபா மீண்டும் கேள்வியால் துளைக்க... "குமார் நீரஜாவிடம் ஒரு வெற்றிலை கேட்டதற்கு.. அவள் டப்பாவையே தூக்கிக் கொண்டு போய்விட்டாள்!" என்று வெங்கம்மா பதில் சொல்ல... "சரி நீ போ!" என பாபா வெங்கம்மாவை அனுப்பிவிட...! இப்படி பாபா அறைக்குள் நடந்தவற்றை வெங்கம்மா விவரிக்கிறார்!

பிறகு வெங்கம்மா சஞ்ஜெயை பார்த்தபடி "வேறு யாராவது இப்படி செய்திருந்தால் அவர்களை வெளியேவே அனுப்பி இருப்பார்! ஆனால் நீங்கள் என்பதால் சுவாமி ஒன்றும் சொல்லவில்லை! குமார்! சுவாமி உங்கள் மேல் மிகவும் அன்பு வைத்திருக்கிறார்!" என்று மனம் திறந்து பேசுகிறார்!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 66 - 68 | ஆசிரியர் : சன்யாசினி சஞ்ஜெயானந்த்) 


இப்படி ஒரு உரிமை விளையாடல்களை எல்லாம் துவாபர யுகத்தில் தான் கேள்விப்பட்டிருக்கிறோம்! தனது ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தை காட்டிலும் மிகவும் பொறுமையான அவதாரம் ஸ்ரீ சத்யசாயி! அத்தனை அன்பு! உண்மையான பக்தர்களை விட்டுத்தராத அத்தனை பேரன்பு! இறைவன் பாபாவிடம் இருந்து அத்தகைய பேரன்பை சம்பாதித்தவர்களுக்கு அல்லது இனிமேல் சம்பாதிக்கப் போகிறவர்களுக்கு உண்மையில் எதுவும் இந்த உலகத்திலிருந்து தேவையே இல்லை!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக