தலைப்பு

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

ஜைன தேவதை அம்பாஜி சொன்ன அந்த மோட்ச தாதா யார்?

ஒருவரை பக்தராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பே இறைவன் பாபா சங்கல்பப்படி நிகழ்ந்த ஒரு அமானுஷ்ய நிகழ்வும்... அதன்வழி ஒரு ஆழமான ஆன்மீகப் புரிதலும் மிக சுவாரஸ்யமாக இதோ...!


அப்போது சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த் அவர்களுக்கு 10-12 வயதிருக்கும்... சிறுமியாக அவர் இருந்த காலகட்டம்! ஜைன மதத்தில் பிறந்தவர் அவர்! சிராவண (ஆவணி) - பாத்திரபத மாதங்களில் ஜைன மத உற்சவங்கள் நிகழும்! அப்படிப்பட்ட ஒரு உற்சவ காலத்தில் மீராவின் தாய் தண்ணீர் கூட அருந்தாமல் 8 நாள் உபவாசம் இருப்பார்! "மணீ! நீ என்னுடனேயே இரு! உன் தம்பி தங்கை உற்சவத்திற்கு செல்வார்கள்!" என்று தாய் மீராவிடம் தெரிவிக்கிறார்! ஆகையால் மீரா தாயுடனேயே இருக்கிறார்! அந்த 8 விரத நாட்களில் 3 நாட்கள் நிறைகிறது... நான்காம் நாள் சிறுமி மீராவுக்கு ஒரு அற்புதக் கனவு வருகிறது... 


அந்தக் கனவில் அவர்களது குல தேவதையான சக்ரேஷ்வரி தேவி அம்பாஜிக்கு பிரசாதம் படைக்க கோவிலுக்குள் செல்கிறார் சிறுமி மீரா... பிரசாதத்தை எடுத்துக் கொண்ட பூஜாரி... "மணீ! இங்கேயே இரு! நான் 12 மணிக்கு திரும்பி வருகிறேன்!" என சென்றுவிடுகிறார் பூஜாரி!

இப்போது கோவிலில் தன்னந்தனியாக சிறுமி மீரா மட்டும்... அடர்ந்த மௌனத்தில்... கோவிலின் ஆழ்ந்த அதிர்வலைகளில் தனித்து விடப்படுகிறார்! அது மிகவும் பெரிய கோவில்! அந்தத் தனிமை சூழ்நிலையை பிரார்த்தனையில் செலவு செய்கிறாள் சமர்த்து சிறுமி மீரா! அப்போது ஒரு அமானுஷ்யமான சிரிப்பு சப்தம் கேட்கிறது...


அந்தச் சிரிப்பு சப்தம் சிறுமி மீராவின் பிரார்த்தனையை திசை திருப்புகிறது... சுற்றும் முற்றும் பார்க்கிறார்... யாருமே இல்லை.. ஆனாலும் சிரிப்பு சப்தம் தொடர்கிறது...கோவிலை அப்படியே சுற்றி வருகிற போது... குலதேவதை அம்பாஜி சிரிப்பதை பார்க்கிறார் மீரா... ஆரம்பத்தில் பயந்தாலும்... மனதில் தைரியம் வரவழைத்துக் கொண்டு... "ஏன் இப்படி சிரிக்கிறீர்கள் அம்மா?" என்று கேட்கிறார் சாமர்த்திய சிறுமி மீரா! அப்போது அந்த ஜைன தேவதை மீராவோடு பேசுகிறார்... "மணீ! எனக்காக நீ பிரசாதம் கொண்டு வந்தாய்! கேள்! உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்கிறார் தேவதை!

"நீங்கள் எது கேட்டாலும் கொடுப்பவர் தானே!" இது மீரா

"ஆம் கேள்!" இது அந்த தேவதை!

"எனக்கு மோட்சம் வேண்டும் தாயே! இந்த ஜனன-மரணங்களில் இருந்து எனக்கு முக்தி கொடு! வேறு எதுவும் வேண்டும்! மற்றவை எல்லாம் என்னிடம் உள்ளன!" என்கிறார் அந்த பக்திச் சிறுமி மீரா! 

அந்த எதிர்பாரா பதிலை கேட்டபடி 

"நீ இப்போது சிறு வயதில் இருக்கிறார்! அதைத் தவிர வேறு ஏதாவது கேள்!" என்கிறார் தேவதை அம்பாஜி!

"வேறெதுவும் வேண்டாம் அம்மா.. என்னிடம் பசுக்கள், கன்றுகள், பொம்மைகள் எல்லாம் இருக்கின்றன... கொடுத்தால் மோட்சம் மட்டுமே கொடு! என் தாய் முன்பே சொல்லி இருக்கிறார்... தேவதேவர்களிடம் மோட்சத்தை மட்டுமே கேட்க வேண்டும் என்று‌... ஆகவே கொடுத்தால் அந்த வரம் மட்டுமே கொடு அம்மா!" என்கிறார் வைராக்கிய சிறுமி மீரா! 

அதைக் கேட்டு வியந்து போய் "என்னால் மோட்சத்தை கொடுக்க இயலாது... ஆனால் மோட்சத்தை கொடுக்கும் தேவனை உனக்கு காட்டுகிறேன்! அதுவரை நீ காத்திருக்க வேண்டும்!" என்கிறார் அம்பாஜி!

"அவர் யார்? எந்த ரூபத்தில் இருப்பார்?" என்று மீரா ஆர்வமுடன் கேட்டுவிட்டு.. மீராவே தன் தாய் ஒருமுறை தன்னிடம் சொன்னதாக

"சத்தியமான தேவன் அவர்! சத்திய தேவன்! பூமியில் அவதரிப்பார்! ஆனால் அவர் பாதம் பூமியை வருடாமல் நடக்கும்... அவரின் நிழல் கூட நமக்கு புலப்படாது!" என்றாரே! அவரா? என்று மீரா கேட்க...

"ஆமாம்! அவர் தான்! அப்படியே தான் இருக்கும்! ஆனால் நீ அவரை கண்டுபிடிக்க வேண்டும்! போ! என் ஆசீர்வாதம் எப்போதும் உனக்கு உண்டு!" என்று தேவதை அம்பாஜி சொன்னபோது சிறுமி மீராவின் கனவு கலைகிறது... 


கண்திறந்து பார்க்கிறார் அதிகாலை மணி ஆறு! தனது தாயை பார்க்க அவர் ஏற்கனவே தியானத்தில் மூழ்கி இருப்பதை காண்கிறார் மீரா! 

பிறகு அந்த கனவை பற்றி தனது தாயிடம் தெரிவிக்க... "இனி நீ மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! எப்போது அந்த மோட்ச தாதா உன்னை காண்பாரோ தெரியாது!" என்று தாய் அதற்கு விடை அளிக்க...

அந்த மோட்ச தாதாவின் முதல் தரிசனம் 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 அன்று அந்த மோட்ச தாதாவை காட்டி தான் சொல்லிய வார்த்தையை நிஜமாக்கினார் மீராவின் குல தேவதை... 

அந்த மோட்ச தாதா வேறு யாருமல்ல சாட்சாத் இறைவன் ஸ்ரீ சத்யசாயி என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் மீரா! அந்தச் சிறுமி மீராவே பிற்காலத்தில் சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 43,44 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


மனித இனத்திற்கு மோட்சம் தர அவதரித்த இறைவன் ஸ்ரீ சத்ய சாயி! 

எப்படி பெட்ரோல் பங்கில் பால் கிடைக்குமா என்று யாரும் கேட்க மாட்டோமோ அப்படியே இறைவன் பாபாவிடம் பிறவாமையை தவிர எது கேட்டாலும் அது அவரை குறைத்து மதிப்பிடுவதாகும்!

அந்த பிறவாமைக்கான ஒரே மருந்து நமது அக மாற்றமே! தீயகுணம் மாறி நல்ல குணம் உண்டாவதே நமது பிறவாமைக்காக பாபா நம்மை அழைத்துச் செல்லும் ஆன்மீக ராஜபாட்டை!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக