தலைப்பு

வியாழன், 20 ஏப்ரல், 2023

பாபா செய்து வைத்த திடீர் திருமணம் -பரவச நேர்காணல் அனுபவம்!

இறைவன் பாபா உடனான தங்குதல் எவ்வாறு ஒரு பக்தி குடும்பத்திற்கு வரமானது! அவர்களின் வழி அனுப்புதலை பாபா எவ்வகையில் செய்கிறார் எனும் நெகிழ்வான சம்பவம் சுவாரஸ்யமாக இதோ...


வொயிட் ஃபீல்ட் பிருந்தாவனத்தில் குளிர் அதிகமாக இருக்கும்... ஆனால் தினசரி கடும்சேவையாற்றும் சஞ்ஜெய் மீரா இருவரும் குளித்தாக வேண்டும் ஆகவே ஒரு தகர டப்பாவை எடுத்து தண்ணீரை சூடுபடுத்திக்  கொண்டு குளிக்கிறார்கள்! 


அப்போது ஒரு நாள் பாபாவின் கார் ஷெட்டில் ஒரு ஓரத்தில் நிறைய கட்டைகளை பார்த்தனர் இருவரும்... உடனே அதை எரித்து சுடுதண்ணீர் தயாரிக்கின்றனர்... அதை எரிக்கிற போது ஏதேதோ திவ்யமான வாசனை வருகிற போதும் அது எவ்விதமான கட்டைகள் என்று அவர்களால் உணர முடியவில்லை! ஒருமுறை பாபா தீட்ஷித்தை அழைத்து ஏதோ ஒரு செயலுக்காக சந்தனக்கட்டைகளை எடுத்து வரச் சொல்ல... உடன் ஜோகா ராவும் செல்ல... சந்தனக்கட்டைகள் குறைந்தது கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள்... பாபாவும் விசாரிக்க இவ்வளவு தான் இருக்கிறது என்று தயங்கிச் சொல்கிறார்கள்...

திரு திரு என்று அருகிலேயே சொல்லவும் முடியாமல் மெல்லவும் இயலாமல் திருடனுக்கு தேள் கடித்தது போல் பதட்டத்தோடு நின்று கொண்டிருக்கிறார்கள் சஞ்ஜெயும் - மீராவும்! பாபா இருவரையுமே உற்று பார்க்கிறார்! ஆனால் புட்டை உடைத்து இவர்கள் தான் எரித்தது என்று தனது உண்மையான  பக்தர்களை பாபா காட்டிக் கொடுக்கவும் இல்லை.. அவர்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவும் இல்லை! 


சேவாதளர் ஜவேரி சஞ்ஜெய் - மீராவை தனது வீட்டுக்கு ஒருமுறை அழைக்கிறார்! ஆனால் பாபா முதலில் இருவரையும் அனுப்பவே இல்லை! பிறகு ஒரு நாள் அனுமதி வழங்கி "ஒருநாள் தான் அடுத்த நாள் வந்துவிடு!" என்று பாபா சொல்லி அனுப்புகிறார்! ஜவேரி வீட்டில் ஓர் நாள் இரவு தங்குதல் மட்டும்.. அப்போதும் கூட பாபாவை பற்றியே பேசிவிட்டு தூங்கச் செல்கிறார்கள்! காலை விடிகிறது "குமார் வந்தாச்சா? வந்தாச்சா?" என்று பலமுறை தீட்ஷித்திடம் எதிர்பார்த்துக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்! "வந்தால் என்னை வந்து பார்க்க சொல்!" என்கிறார்! 

சஞ்ஜெய் -மீரா காலையில் சற்று தாமதமாக வந்து பாபா தரிசனம் பெறுகின்றனர்! மற்ற ஒருநாள் பாபாவிடம் அனுமதி பெற்றுக் கொண்டு "ஷத்ரஞ்" ஹிந்தி சினிமா பெங்களுரில் பார்த்துவிட்டு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வருகிறார்கள்! பாபா ஒன்றும் கேட்கவில்லை... மாலை பிரசாதம் தருகிற போது "இனி சிட்டிக்கு எல்லாம் நீங்கள் எங்கும் போக வேண்டாம்!" என்று மிக அக்கறையோடு பாபா சொல்லிவிடுகிறார்! 

ஒருவேளை சினிமா பார்த்தது பாபாவுக்கு பிடிக்கவில்லையோ என்று மீரா யோசிக்க... அவருடைய அனுமதி கேட்டுத்தானே சென்றோம் என்று சஞ்ஜெய் நியாயம் பேச... ஒரு நாள்...


அன்று புதன்கிழமை..‌ "நாளை உங்களுக்கு பிரத்யேக நேர்காணல் தருகிறேன்!" என்று பாபா சொல்கிறார்! ஆனால் வழக்கத்துக்கு மாறாக பாபா இருவரையும் கண்டு கொள்ளவே இல்லை! மாலையும் இருண்டது... அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வழக்கத்துக்கு மாறாக இருவரும் தாமதமாக எழுந்து 12 மணிவரை சேவையாற்றிவிட்டு... ஹோட்டலுக்கு உணவருந்த செல்கிற போது.. வாட்ச்மேன் பஹதூர் பாபா அழைக்கிறார் என்று பரபரப்பாக இருவரையும் பாதி சாப்பாட்டில் எழ வைத்து அழைத்துப் போகிறார்!

அது பாபா நேர்காணல் அறை...

"எங்கே போனீர்கள்? சுவாமி உங்களை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?" என்று பாபா கேட்க.. முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொல்ல... "உங்கள் இருவருக்கும் திருமணம் நிகழவில்லை தானே?" என்று பாபா கேட்க... "திருமணமா?" மீராவுக்கு புரியவில்லை..

"மாங்கல்ய தாரணம்" என்று பாபா விவரிக்கிறார்... "அப்படி என்றால்?" அதுவும் புரியவில்லை மீராவுக்கு...

"ஹரே ஷாதி ! உங்களுக்கு பண்ண வேண்டாமா?" என்று பாபா விளக்க..

"அதெல்லாம் நடந்துவிட்டதே!" என்று மீரா தெரிவிக்க..

"நீங்களே உங்களுக்கு செய்து கொண்டதால்லாம் ஒரு திருமணமா? இதோ சுவாமியே இப்போது செய்து வைக்கிறேன்!" என்று பாபா தனது கையால் தங்கத் தாலியை சிருஷ்டி செய்கிறார்..

அதில் ஒருபக்கம் ஷிர்டி பாபா.. இன்னொரு பக்கம் மகாலட்சுமி... "நீயும் லட்சுமிகரமாகவே இருப்பதால்... உன்னை லஷ்மி காந்தம் என்றே பெயர் மாற்றி அழைக்கிறேன்!" என்கிறார் பாபா! தனது நேர்காணல் அறையிலேயே தனது கைப்பட திருமணம் நிகழ்த்தி வைக்கிறார் பாபா! 

சஞ்ஜெய் கையில் பணம் கொடுக்க.. அவரது ஜிப்பாவில் கைப்போட எத்தனிக்கிறார் பாபா! அந்த ஜிப்பா பாக்கெட்டுள் வசந்த் பாய் கேட்டு வாங்கிய சிகரெக்ட் அவரிடம் கொடுக்க மறந்து அங்கேயே தங்கிவிட... அதை தொட்டு விடுவாரோ பாபா என்று சஞ்ஜெய் அங்கும் இங்கும் ஓடுகிறார்.. பாபா பிடிக்க முயல்கிறார்...

அந்த தெய்வீக விளையாட்டை ஆச்சர்யமாக கண்டு களிக்கிறார் மீரா! ஒருவழியாக பாபா சஞ்ஜெயை மடக்கி அவரின் ஜிப்பா பாக்கெட்டில் கைவிட.. சிகரெட் பெட்டி எடுக்க.. "என்ன நீ சிகரெட் பிடிப்பாயா?" என்று ஏதும் தெரியாதது போல் பாபா அதிர்ந்து கேள்வி கேட்க... அது வசந்த் பாய்க்கு வாங்கியது என சஞ்ஜெய் ரகசியம் உடைக்க..

இனி இது போன்ற சமாச்சாரங்கள் உன்னிடம் வைத்துக் கொள்ளாதே! அது உன் ஆன்மீக வாழ்க்கைக்கு இடைஞ்சல் தரும்!" என்று பாபா அறிவுறுத்த..

சஞ்ஜெய் ராஜமாதாவிடம் 10 ரூபாய் கடன் வாங்கியதை வெளிப்படையாக பாபாவிடம் தெரிவிக்க..

"அதை அவருக்கு சுவாமியே கொடுக்கிறேன்! நீ யாருக்கு எதை கொடுத்தாலும் திருப்பி கேட்க வேண்டாம்! நீயும் யாருக்கும் எதுவும் தர வேண்டாம்!" என்று பாபா அன்பொழுக ஆற்றி தேற்றி பிரிவு உபச்சாரம் நிகழ்த்துகிறார்!


"பாபா நாங்கள் எங்கே செல்வது?" - இருவரும்!

"பம்பாய்க்கு செல்லுங்கள்!" - பாபா!

"அங்கே எங்கே தங்குவது? சிறு அறையாவது வேண்டுமே!?" என்று சஞ்ஜெய் தயங்க..

"அறை என்ன அறை! உங்களுக்கு பங்களாவே கிடைக்கும்!" என்று பாபா தெளிவுபடுத்த..

மீராவை பார்த்து பாபா "நீ என்ன குமாரிடம் உன் தந்தை வீட்டுக்கே சென்று விடுவேன் என்று மிரட்டுகிறாய்?"

பாபா தனது கையை நீட்டி

"இந்தக் கையால் உன் தந்தையின் சொத்தை எல்லாம் அபகரித்து அவரை நான் நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டால்... அப்போது நீ அங்கே எப்படி தங்குவாய்?" என்று கேட்கிறார்!

மீரா தனது தவறை உணர்கிறாள்! 

இருவருக்கும் ஆரம்பத்திலேயே லௌகீகத்தில் நாட்டமில்லை... நாடோடியாக சுற்றித் திரிவதே விருப்பம்! பாபாவை விட்டு பிரிய மனமே இன்றி பாபா சொல்வதால் மட்டுமே விடை பெற முயற்சிக்கிறார்கள்! 

உங்களை விட்டு எப்படி பிடித்திருப்போம் என்று பாபாவிடம் கண் கலங்குகிறார்கள்! 

"வேண்டாம் குமார் வேண்டாம்! இங்கே இருக்க முயற்சிக்காதே! சுவாமி உன் அருகில் இருக்கும் வரை தான் இங்கே நன்றாக இருக்கும்! சுவாமி போய்விட்டால் இங்கே ஒன்றும் இருக்காது! தூரத்திலிருந்தே சுவாமியை பக்தி செய்! சுவாமி நீ எங்கிருந்தாலும் உனக்கு தரிசனம் கொடுப்பேன்! இந்த தசராவுக்கு புட்டபர்த்தி வா!" என்று வாஞ்சையோடு சத்தியம் மொழிகிறார் பாபா!

"தசராவில் கூட்டம் அதிகமாக இருக்குமே.. நீங்கள் எப்படி எங்களை கண்டு கொள்வீர்கள்?" என்று சஞ்ஜெய் வருத்தத்தோடு தயங்க...

"பல கோடி பேர் சூழ்ந்திருந்தாலும் சுவாமி உங்களை கண்டுபிடித்து அழைப்பேன்!" என்று உறுதி மொழி சொல்கிறார் பாபா!


அறைக்குள் நடந்ததை யாருக்கும் எதுவும் சொல்லாதே! என்று பாபா பேசி வழி அனுப்ப... ராஜமாதாவும் நீங்கள் நம்முடையவராக மாறிக் கொண்டு அன்பை பெற்றீர்கள்... சிரோஹி சென்றால் அங்கே என் மகன் மஹாராவ் அபய்சிங்கிடம் செல்! அவர்கள் அனைவருக்கும் பஜனை கற்றுக் கொடு.. மக்களுக்கு சுவாமி மேல் ஆர்வத்தை ஏற்படுத்து!" என்று அவரும் பிரியா விடை தருகிறார்!

தனது ஆசீர்வாதம் என்றும் உண்டு என்று பாபாவும் சொல்ல‌... கண்களை விட்டுப் பிரியும் கண்ணீராய் இருவரும் பிரியாமல் பிரிந்து செல்கிறார்கள்!

பெங்களூரில் ஜவேரி வீட்டுக்கு முதலில் செல்ல... அங்கே அவர்கள் இல்லை... குழந்தைகள் மட்டும் இருக்க... "பிங்கி! பேனர் ஜி வீடு தெரியுமா?" அங்கே பாபா வரப்போகிறாராமே!" என்று சஞ்ஜெய் தெரிவிக்க...

"நம்மை உள்ளே அனுமதிப்பாரா?" என்று பிங்கி கேட்கிறாள்!

"வெளியிலிருந்தே தரிசித்து வருவோம்!" என்று சஞ்ஜெய் சொல்கிறார்!

இன்னும் இருவரின் ஆன்மாவை ஆட்டிப்படைக்கும் பாபாவின் அந்த தரிசன ஆவல் இதயத்தில் அப்படியே அலைமோதுகிறது!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 84 -88 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


நாம் அவர் அருகில் இருப்பதோ தூர இருப்பதோ இறைவன் பாபாவுக்கு ஒரு பொருட்டே இல்லை... பக்தர்கள் தன் பேரிருப்பை கணந்தோறும் அவரவர் ஆன்மாவில் உணர்வதே பாபாவுக்கு நம்மிடமிருந்து ஒரே தேவை! அந்தப் பேரிருப்பே பேரானந்தம்! அந்தப் பேரிருப்பே பெருஞ்சத்தியம்!

எங்கே வாழ்ந்தாலும் தன் உண்மையான பக்தர்களை பாபா ஒருபோதும் ஒரு சமயத்திலும் கைவிடுவதே இல்லை!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக