தலைப்பு

புதன், 5 ஏப்ரல், 2023

நரநாராயண குகைக்கு "போகாதே!" என்று தன் பக்தரை தடுத்த பாபா!

இமயப் பயணத்தில் தொடர்ச்சியாக ஸ்ரீ நரநாராயண குகைக்கு செல்ல பல தூரம் நடந்த தனது பக்தரை தடுத்து நிறுத்தி பாபா புரிந்த அதிசய செயல் சுவாரஸ்யமாக இதோ...


பாபா பக்தர் ஓம்குருவை போலவே பாபாவின் முன்னாள் மாணவி சாரதா அவர்களும் நரநாராயண குகையை தேடி அலைந்திருக்கிறார் என்பதை ஓம்குரு தனது புத்தகத்தில் பதிவு செய்கிறார்! 

அப்படி சாரதா அலைந்து அந்த இடத்தை தேடிய போது "போகாதே! வீணாகத் தேடி அலையாதே!" எனும் ஓர் குரல் எங்கிருந்தோ எச்சரித்ததால் .. அதை காதில் கேட்ட உடனே தனது முயற்சியை கைவிடுகிறார்!

இது நன்கு தெரிந்தும் கூட ஓம்குரு நரநாராயண குகைக்கு செல்லவே ஆசைப்படுகிறார்! நரநாராயண மலையின் உச்சியில் கங்கா பாரதி எனப்படும் மர்ஃபானி பாபா இன்னமும் இருக்கிறார்.. அந்த குகைக்கு பல மகான்கள் வந்து போவதாக அவர் கூட சொல்லியிருக்கிறார்! 


2016 ஆம் ஆண்டு நான்கு ஆண்கள் ஒரு பெண் அடக்கிய இமய யாத்திரை குழுவில் யோகி தத்த சைதன்யாவும் இணைந்து கொள்கிறார்! பத்ரியில் இருந்தவர்கள் வாழ்த்து கூற இமயப் பயணம் தொடர்கிறது! வானம் தெளிவாக இருக்கிறது! வழியில் தங்குவதற்கு தேவையான கூடாரங்கள் , தண்ணீர், உணவு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு... இரவில் நீலகண்ட பர்வதத்தை (பர்வதம் - மலை) அடைகின்றனர்! கூடாரத்தை அமைத்து அங்கேயே தூங்கிவிடுகின்றனர்...!


இரவு 10 மணிக்கு ஒரே மழை! சாதாரண மழை அல்ல...! ஆனால் பகவான் பாபா அருளால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஓம்குரு பதிவு செய்கிறார்!

கூடாரத்தின் வெளியே சென்று பார்க்க... கூடாரத்தை சுற்றி பெரும் கற்கள் கிடப்பதை அனைவரும் கவனிக்கின்றனர்... ஒரு பெருங்கல் கூட கூடாரத்தில் விழாதவாறு பாபா தடுத்து காவல் புரிந்தார் என்பதை உணர்கிறார்கள்! மழை நிற்கிறது! 


காலை 6 மணிக்கு மீண்டும் பயணம்... நீலகண்ட மலையிலிருந்து வேறொரு திசை நோக்கிய பயணம்! வழியில் 3 மலைகளை கடந்து செல்கின்றனர்...!அப்போது அங்கே பிரம்ம கமலம் என்ற மலர்களை ஓம்குருவோடு சேர்ந்த இமயப்பயணிகள் கவனிக்கிறார்கள்!


அந்த அபூர்வ மலர் அங்கே இன்றி வேறெங்கும் மலர்வதில்லை! பிரம்மாவே அந்த மலர் பறித்துத் தான் ஸ்ரீ பத்ரி நாராயணனை வழிபடுவதால் அதற்கு பிரம்ம கமலம் என்று பெயர்! பிரம்மா தவம் செய்த இடம் அது! கோகுலாஷ்டமியில் அந்த மலர் பறித்து பத்ரி நாராயண சுவாமிக்கு பூஜை நடக்கிறது!

இரவு 7 மணிக்கு மலர்த் தொடங்கி... 2 மணிநேரத்தில் மலர்ந்து விரிகிறது! ஜுலை முதல் செப்டம்பர் மாதங்களில் ஒரு வருடத்தில் ஓர் இரவில் மட்டுமே அவை மலர்கின்றன...! இரவு ராணி, இரவுப் பெண் என இதனை அழைக்கிறார்கள்! 

பிரம்மா தன் ரூபத்தில் நான்கு கைகளில் ஒரு கையில் இந்த மலரையே வைத்திருக்கிறார்!


இதனை கண்குளிர தரிசித்து பனிச்சறுக்கி விழும் கிளேசியர் என்பது தொடங்குகிறது! அந்த சறுக்கில் பலமுறை ஓம்குரு வழுக்கியும் எழுந்தும் பாபாவின் அருட்காவலால் பயணம் தொடர்கிறார்! 6 மணிக்கு ஆரம்பித்த பயணம் காலை 11 மணி வரை நீள்கிறது! மழை வேறு பொழிய ஆரம்பிக்கிறது! 

மேலே ஏற முடியாமல் அப்படியே உட்கார்ந்துவிட்ட ஓம்குரு மேலும் பயணத்தை தொடர முடியுமா என்பதை அறியாமல் பாபாவிடம் பிரார்த்தனை செய்கிறார்!

காலணி அறுந்துவிடுகிறது! தண்ணீர் கோப்பை விழுந்து மழைநீரோடு  கலந்து பயனற்றுப் போகிறது! இந்த இக்கட்டான சூழ்நிலையில் 

"என்னால் நரநாராயண பர்வதத்தை எட்ட முடியுமா? பகவானே வழிகாட்டுங்கள்!" என பாபாவை பிரார்த்தனை செய்கிற போது... பாபா உள்ளே பேசுவதை ஓம்குருவால் தெள்ளத் தெளிவாக கேட்க முடிகிறது...

"போகாதே! நில்!" என்கிறார் பாபா! பாபாவின் குரலுக்கு மதிப்பு கொடுத்து 80 சதவிகித தூரம் கடந்து வந்த பிறகும் ஒட்டுமொத்த பயணக்குழுவே பின்வாங்குகிறார்கள்! 


இறங்குகிற சமயத்தில் ஓம்குருவுக்கு அழுத்தமான முதுகுவலி, கால்கள் வேறு பனியால் உறைந்து போகிறது.. மற்றவர்களை திரும்பச் சொல்லி அங்கேயே கூடாரம் அமைத்து அவர் தங்கி பாபாவிடம் பிரார்த்தனை செய்கிறார்...

"எதைப் பற்றியும் கவலைப்படாதே!" என்று பாபா உட்குரல் எழுப்பி பேசியும்... அவரின் அங்கங்களை அசைய வைத்தும் மாலை 5 மணிக்கு நடக்க ஆரம்பித்து தனது குழுவோடு இணைந்து கொள்கிறார்! பத்ரிநாத் வந்தடைந்த பிறகு... அன்று இரவு நடந்த நிலச்சரிவில் நரநாராயண பர்வதம் செல்லும் வழியில் தென்படும் மலைகள் யாவும் இணைந்து விட்டதில் 1 மாதம் மேல் தான் வழித்தடங்கள் இறுகி இருப்பது சரியாகும் எனும் செய்தி அறிந்து... பாபா அவர்களது உயிரையும் காப்பாற்றி தடுத்தாட் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து ஓம்குருவின் குழுவினர் சிலர்க்கிறார்கள்!


(ஆதாரம் : இமாலய ரகசியங்கள் | பக்கம் : 222 - 228 | ஆசிரியர் : கோகுல சந்தான கிருஷ்ணன்) 


இறைவன் பாபா ஒன்றை நமக்கு வரவிடாமல் தடுக்கிறார் என்றால் அதுவும் நம் நன்மைக்கே என்பதை உணர்த்தும் அனுபவிப்பதிவு இது! பாபா எதை நமக்கு தந்தாலும் தராவிட்டாலும் எல்லாம் நம் ஆன்ம நன்மையே கருதியே... கர்ம நிவாரணத்தை முன்னிட்டே எனும் சத்தியத்தை உணர்ந்தால் வாழ்வில் அமைதியும் சமாதானமும் தானாகவே நமக்குள் வந்துவிடுகிறது!


பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக