தலைப்பு

சனி, 15 ஏப்ரல், 2023

கண்ணில் கண்ட உடனே கண் கண்ட கடவுள் பாபா தன் பக்தரை கட்டி அணைத்தார்!

நிர்கதியாக தன்னையே நம்பி வந்து இறங்கிய தனது உண்மையான எளிய பக்தர்களை இறைவன் பாபா எவ்வாறு ஆரத்தழுவி அரவணைத்து அரணாக திகழ்கிறார் எனும் உண்மையான உருக்க சம்பவம் மிக சுவாரஸ்யமாக இதோ...


படாதபாடுபட்டு பசி பட்டினியோடு பராரியாக வந்து சேர்கின்றனர் சஞ்ஜெயும் மீராவும்... அது வொயிட் ஃபீல்ட் பிருந்தாவனம்! அது 1969. கன்றைத் தேடி வந்த காறாம் பசுவாக பாபா அவர்கள் முன் நிற்கிறார்! அது பாபா எங்கேயோ வெளியே சென்று கொண்டிருந்த சமயம்... கார் இவர்கள் முன் நிற்கிறது... பாபாவை பார்த்த சஞ்ஜெய் நெடுந்துன்பச் சுவடுகள் மனதில் கனக்க... கதறி அழுகிறார்...அப்போது பரிவு பாபா 

"குமார் ! அழ வேண்டாம்! (சஞ்ஜெயின் முழுப் பெயர் சஞ்ஜெய் குமார்) பாபா உன் எதிரில் தான் நின்று கொண்டிருக்கிறார்! ஒன்று நீ சொல்வாய் இல்லையா! நான் புட்டபர்த்திக்கு போவேன் என்று... சுவாமி உனக்காக எவ்வளவு எதிர்பார்த்தார் தெரியுமா?!" என்று கூறியபடி 



மீராவையும் பார்த்து 

"அழ வேண்டாம் மகளே! உங்கள் சொந்த வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள்! இப்போது சுவாமி சிட்டிக்கு போகிறார்.. நாளை காலை சந்திக்கிறேன்!" என்று கூறி காரில் வேகமாக கிளம்புகிறார் பாபா! 5 நிமிடத்திற்குள் பிருந்தாவன கூட்டம் காலியாகிவிட்டது!


இருவரும் வெளியே தெரிந்த மைதானத்தின் ஒரு கல்லில் அமர்ந்து தங்கும் இடம், சாப்பிட உணவு பற்றி யோசித்துக் கொண்டிருக்க.. அதை குறித்து பிருந்தாவன் வாட்ச் மேனிடமும் பேசி... பொழுது பசியைப் பொறுக்க... பேச்சு பசியைப் போக்க... அப்படியே இரவு 10 ஆகிறது! 

பாபா காரில் திரும்பி வருகிறார்.. இருவரையும் பார்த்து காரை நிறுத்தி... 


"குமார்! இன்னமும் முழித்துக் கொண்டா இருக்கிறீர்கள்!? தூங்கவில்லையா?" என்று காரில் இருந்து இறங்கி... "என்னோடு வாருங்கள்!" என்று தன்னை பின்தொடர வைத்து ஆசிரமத்திற்குள் அழைத்துச் செல்கிறார் பாபா.. பிறகு பாபாவின் சகோதரி வெங்கம்மாவை அழைத்து... போர்வை வரவழைத்து தன் கையாலேயே விரித்து... "இதன் மேல் படுங்கள்!" என்று இருவரையும் படுக்க வைத்து.. இன்னொரு போர்வையை தானே அவர்களுக்கு போர்த்தி விடுகிறார் பாபா! "சுவாமி நாளை உங்களோடு பேசுவார்!" என்று கூறி பாபா கிளம்பிவிடுகிறார்! 

யாரை பாபா 'சுவாமி' என்று அழைக்கிறார் என்று இருவருக்கும் பிடிபடவில்லை! 

பாபாவை 'சுவாமி' என்று தான் பக்தர்கள் அழைப்பர் என்பது இருவருக்கும் தெரியாத தருணம் அது!


காலையில் பாபாவே அவர்கள் இருவரையும் எழுப்பி "உள்ளே செல்லுங்கள்!" என்று அனுப்புகிறார்.. பக்த சேவகர்கள் வந்து கூடுகிற சமயம் அது! அவர்கள் உள்ளே செல்கிற போது ஒரு சாயி சேவாதளர் தடுத்து நிறுத்துகிறார்... அவர்களோ ஒரு மரத்தின் ஓரத்தில் மரத்தோடு இரு மரமாய் நிற்கிறார்கள்! பாபா இருவரை மறுபடியும் பார்த்து "உள்ளே செல்லுங்கள்!" என்று கைகாட்ட... மறுபடியும் அதே சேவாதளர் தடுக்கிறார்... "பாபா தான் எங்களை உள்ளே அழைத்தார்!" என்று சஞ்ஜெய் சொல்லியும்... "உங்களைப் போன்றவரை பாபா உள்ளே அழைப்பாரா? போங்கள்! பின்னால் சென்று உட்காருங்கள்!" என்கிறார் அந்த அறியாமைச் சேவாதளர். இருவரின் தோற்றமும் பிச்சைக்காரர்களை போல் இருந்ததால்... பிச்சைக்காரர்களை உள்ளே அனுமதிப்பதால் பாபாவுக்கென்ன லாபம்?! என்பதாக இருவரும் தங்கள் நிலையை எண்ணி நொந்து கொள்கின்றனர்!

பாபா ஆன்மாவை பார்த்தார்... சேவாதளர் தங்களின் துணிகளையே பார்த்தார் என்று மீரா தன் புத்தகத்தில் இந்த சம்பவத்தை பதிவு செய்கிறார்!

தரிசனம் நேரம் நிறைகிறது! பாபாவின் கண்கள் சஞ்ஜெயை தேடிய வண்ணமே இருந்தன...

சஞ்ஜெயை கண்டு கொண்ட பாபா.. "உங்களை உள்ளே வரச் சொன்னால்.. ஏன் நீங்கள் வெளியே நின்று கொண்டிருக்கிறீர்கள்?!" என பாபா இருவரையும் அந்த சேவாதளரின் எதிரிலேயே  உள்ளே அழைத்துச் செல்கிறார்... 

பாபா மீராவை பார்த்து "இப்பொழுது சுவாமி குமாரோடு பேசுகிறேன்! உன்னை பிறகு கூப்பிடுகிறேன்!" என்று அவரை மட்டும் உள்ளே அழைத்துச் செல்கிறார்!

அந்த காலத்தில் பாபாவின் நேர்காணல் அதிக நேரம் நடக்கும்! நேரம் கடந்து நேய சாயி தனது பக்தர்களோடு பேசுவார்.. அதுபோல் இந்த நேர்காணலும் அரைமணி நேரம் தாண்டிச் செல்கிறது! சஞ்ஜெய் வெளியே வருகிறார்!


நிழல் தேடி வந்த இருவரும் ஒரு மரத்தின் கீழ் ஒருவருக்கு ஒருவர் நிழலாகவே அமர... 

"பாபா என்ன சொன்னார்? நீ என்ன சொன்னாய்?" என்று மீரா ஆர்வமோடு கேட்க...

"சொல்வதற்கு என்ன இருக்கிறது! எல்லாம் பாபாவே ஒன்றுவிடாமல் சொன்னார்! முன் - பின் ஜென்மங்கள் பேசினார்... அந்த போலீஸ் கேஸை பற்றியும் தெரிவித்தார்... நான் கேட்கவே செய்தேன்! எதையும் பேசவே இல்லை! என்னை இறுக்கமாக பாபா கட்டி அணைத்தார்!" என்று மெய்மறந்து கூறிய சஞ்ஜெய்!

"குமார்! சுவாமி உன் மேல் மிகவும் பிரசன்னன்! வா என்னை கட்டிப்பிடி!" என்று பாபா கூறிய அதே வார்த்தையை கூறி.. தாய் தந்தை எப்படி தன் குழந்தைகளை கட்டி அணைப்பாரோ... அப்படி அணைத்துக் கொண்டார் பாபா! பாபா அப்படியே கட்டிப்பிடித்து சஞ்ஜெய் மேல் விபூதியை உருவாக்கி அள்ளித் தெறிக்கிறார்! சாப்பிடுவதற்கும் கொடுக்கிறார்! 

அப்போது சஞ்ஜெய் "பாபா! எங்களுக்கு வேலை ஏதாவது கொடுங்கள்!" என்று கேட்ட போது..

"குமார்! நீ முன் ஜென்மங்களில் நிறைய புண்ணியம் சம்பாதித்திருக்கிறாய்! உனக்கு வேலை அவசியமில்லை... சமயம் வருகிற போது உனக்கு பாபா எல்லாம் கொடுப்பார்! சுவாமியை விட வேண்டாம்!" என்கிறார் புன்னகையோடு பரிவு பாபா! 

மேலும் "நீ ஏன் அதிக நேரம் பஜனை செய்கிறாய்? பஜனை பாடும் நேரத்தை குறைத்துக் கொள்!" என்கிறார் பாபா!

பிறகு இருவரும் அந்த நாள் முழுவதும் ஆசிரமத்தில் தங்கி.. இரவில் ரயில் வே ஸ்டேஷனில் படுத்து உறங்கி...அடுத்த நாள் ஆசிரமத்திற்கு செல்கிற போது..


"குமார் இரு! எங்கேயும் போகாதே! சுவாமி ஆள் அனுப்புகிறேன்!" என்று கூறிய பாபா நகர்கிறார்... பிறகு உள்ளே வரவிடாமல் தடுத்த அதே சேவாதளரே இப்போது பணிவோடு... "குமார்! பாபா உனக்கு வேலை கொடுத்திருக்கிறார்!" என்று கூற‌... "என்ன வேலை" என்று சஞ்ஜெய் விசாரிக்க...

"ஜுன் 1 ஆம் தேதி நடக்க இருக்கும் விழாவிற்கு ஒரு பூங்கா தேவைப்படுகிறது! நீ அந்த வேலையை அழகாகச் செய்வாய் என்றார் பாபா ... உடனே வேலையை தொடங்கு!" என்று வேண்டிய உபகரணங்களுடன் வேலை தொடங்கப்படுகிறது! மீரா மகளிர் சேவாதளரோடு வேலை செய்ய அனுப்பப்படுகிறார்!

அதை கவனித்த பாபா 

"ஜவேரி (சேவாதளர் பெயர்); இருவரையும் பிரிக்காதே! மீராவை சஞ்ஜெயோடே சேர்ந்து சேவை செய்யச் சொல்! இவர்கள் என் பக்கத்திலேயே இருக்கட்டும்!" என்று பாபா மொழிய... ஜவேரி அவரது மனைவி இருவரும் குஜராத்திக்காரர்கள், பெரிய பொருளாதார வசதி இல்லாதவர்கள், நன்றாக அண்ணா அண்ணி என்று அன்பொழுக அவர்களை அழைத்து சாயி சேவையாற்றுகிறார் மீராவும் சஞ்ஜெயும்...ஆனால் உணவு? கையில் பணமே இல்லை! குழாய் அடியே ஓட்டல்! தண்ணீரே சைவச் சாப்பாடு என பாபா மேல் கொண்ட பிடிமான பக்தியால் சாப்பிடாமலேயே வெறும் தண்ணீர் குடித்தே சஞ்ஜெயும் மீராவும் 5 நாள் வரை சேவை செய்கிறார்கள்!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 66 - 68 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


ஏழை எளியவர்களுக்காக மட்டுமே இறைவன் அவதாரமாய் இறங்கி வருகிறான்! ஆகவே இறைவனை பணக்கார நாராயணன் என யாரும் அழைப்பதில்லை...தரித்திர நாராயணன் என்று தான் அழைக்கிறார்கள்! வறுமையே நிலையாமை, பணிவு , பக்குவம், வைராக்கியம், ஆன்மீகம், பக்தி இவற்றை கற்றுத் தருகிறது! ஊசி முனையில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையும் ஆனால் பணக்காரர்கள் இறைவனின் சாம்ராஜ்யத்தில் நுழையவே முடியாது என்கிறார் பாபாவின் மகனான ஏசுநாதர்! இதய ஏழ்மையே ஆன்மீகக் குறையே தவிர பொருளாதார ஏழ்மை அல்ல! ஏழைகள் பாபா பிள்ளைகளே!! அவர்கள் சாயி ஜனம்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக