தலைப்பு

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

நள்ளிரவில் பயங்கர வெடிச் சத்தம் - வெடித்தவரை மடக்க வந்த கஸ்தூரி!

பல்வேறு வகையான சுவாரஸ்ய அனுபவங்கள்- இதுவரை வாசிக்காத ஆச்சர்ய நிகழ்வுகள்- கேள்வியேபடாத அந்த காலத்து ஆனந்த அதிர்வலைகள் - நினைத்தாலும் திகட்டாத சம்பவங்கள் மிக விறுவிறுப்பாக இதோ...


பாபா தரிசனம் முடித்த பிறகு சேவாதளர் ஜவேரி வீட்டுக்கு சென்று, பாபா சொன்னபடியே மும்பைக்கு செல்ல வேண்டும்! ஆனால் இல்லறத் துறவிகளான சஞ்ஜெய் - மீராவிடம் கையில் டிக்கட்டே இல்லை! டிக்கட் தேடி அவர்கள் அலையவும் இல்லை! உடனே ஒரு அற்புதம் நிகழ்கிறது... ரயில் நிலையத்திற்கு வந்து இருவரையும் பார்த்து முன் பின் தெரியாத ஒருவர் "இந்த போகியில் இரண்டு படுக்கைகள் இருக்கின்றன!" என்று டிக்கெட்டை கொடுக்க.. இருவரும் பணம் கொடுக்க.. சரியாக அந்த பெட்டியில் ஏறவும்.. இவர்களுக்காக காத்திருந்த பயணம் போல் ரயில் கிளம்பிவிடுகிறது!

மும்பை இருவரையும் அன்போடு வரவேற்கிறது! காலையில் ஆங்காங்கே சுற்றுதல்,பிறகு ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இரவு வாசம், பி.டி ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன், தாதர் ஸ்டேஷன் என தங்க இடமின்றி அங்கேயே வாசம்! பிறகு தெரிந்த சாயி பக்தரான ஃபோட்டோகிராஃபர் ஹீரேமட் வீட்டில் சில நாள் தங்குதல், பிறகு இருவரது ஊர்க்காரரான குஜராத்தி டாக்டர் நாரம் காந்திவாலாவிலிருந்து பாபா முன்பே இருவருக்கும் நேர்காணலில் சொன்னது போல் அவர்களை பங்களாவிற்கு அழைத்துச் செல்கிறார்! மூன்று மாதம் அங்கே வாசம்! அங்கே வீட்டு வேலை மீராவுக்கு... அவரது மகளுக்கு ஹார்மோனியம் கற்றுக் கொடுப்பது சஞ்ஜெயின் வேலை... டாக்டர் வீட்டில் பஜனை... கலந்து கொள்ள அங்கே வந்திருப்பவரில் புஷ்பா என்ற பெண்மணி.. அவரும் அழைக்க... அவர் வீட்டிலும் ஒரு நாள் பஜன்!


டாக்டர் இவர்களுக்கு ஒரு அறை தர.. அங்கே பாபா படம் வைத்து வழிபட்டு அங்கேயே தங்கிக் கொள்கிறார்கள் இருவரும்... ஒரு நாள் திடீரென இருவரும் வழிபட்டு வந்த பாபா படத்தைக் காணவில்லை! அங்கும் இங்கும் தேடுகிறார்கள் படம் கிடைக்கவில்லை... யார் என்ன செய்தது? ஒரே குழப்பம்! படம் தொலைந்த இடத்தில் ஒரே விபூதி குவியல்... கையை அதில் விடுகிறார்கள்... அந்த விபூதிப் குவியலுக்குள் இவர்கள் வழிபட்ட அதே பாபா படம்... ஆச்சர்யப்படுகிறார்கள்... மேலும் கிளறுகிறார்கள்...‌ அதில் பஞ்ச தாதுக்களால் உருவான ஷிர்டி பாபா சிருஷ்டி மோதிரம்... அவர்கள் இதுவரை தங்கிய அறையில் நடந்த முதன்முறையான லீலை இது! இதைத் தொடர்ந்து பல சிருஷ்டி லீலைகள்..அவற்றைப் பார்வையிட பல பக்தர்கள் வரிசையாக வந்த வண்ணமும் பஜனைகள் நிகழ்ந்த வண்ணமும் இருந்தன...


இருவரையும் பாபா தசராவிற்கு வரச் சொல்லியிருக்கிறார்... ஆனால் அவர்களது கையிலோ பணமே இல்லை! எதிர்பாராவிதமாக ஒரு அற்புதம் நிகழ்கிறது... அந்த சமயம் ஒருநாள் ஒரு டாபாவில் இருவரும் சாப்பிடச் செல்ல.. ஒரு பொட்டலம் நிறைய கடலை வாங்கி அறைக்கு வந்து பஜனையில் அதை பிரசாதமாகப் படைக்கிறார் சஞ்ஜெய்! பஜனை முடிந்து பக்தர் நாயரை வைத்து அந்த பொட்டல பிரசாதத்தை விநியோகிக்கச் சொல்ல... அந்த பொட்டலம் காலியாக இருக்கிறது.. உள்ளே ஒரு கடலைகளையும் இல்லை.. பாபா அதை முழுதாக ஏற்றுக் கொள்கிறார்... அந்த லீலையின் தொடர்ச்சியாக டாக்டர் நாரம் அவர்கள் தர்மாவரத்துக்கு அவர் செலவிலேயே டிக்கட் எடுக்க.. பாபா இருவருக்கும் முன்பு நேர்காணலில் சொல்லியபடியே நிகழ்கிறது..

இருவரும் வழி அனுப்புகிற போது நாயர் கண்களில் நீர்! பாபாவுக்கு அளிக்க ஒரு பேடா (பம்பாய் இனிப்பு) டப்பாவையும் வழங்குகிறார்! 

அது 1969 அக்டோபர் 16 ஆம் தேதி.. பாபா நேர்காணலில் சொன்னது போல் "கோடி பேர் இருந்தாலும் உங்களை நான் கண்டுபிடித்துவிடுவேன்!" என்பதற்கு இணங்க.. பாபா அவர்களை இனம் கண்டு.. "தசராவிற்கு வரச் சொன்னால்.. இப்போதே வந்துவிட்டீர்களா?" என்று அசீர்வாதம் செய்கிறார்.. அவர்கள் நவராத்தியின் போதே வந்துவிடுகிறார்கள்! 

பிறகு பாபா சில சேவைப் பணிகளை தருகிறார்! இருவருக்கும் தனித்தனியான சேவை! 


ஆசிரமத்தில் அப்போது ஒரு கூப்பன் 75 பைசா! இரண்டு பேர் சாப்பிடும் அளவிற்கு சாதம் - சாம்பார் - ரசம் - கூட்டு! ரொட்டி எல்லாம் கிடைக்காத காலகட்டம் அது ! மீராவுக்கோ ரொட்டி இல்லாமல் அதிலும் இனிப்பு இல்லாமல் ஆகாரமே இறங்காது... காரணம் அவர்கள் குஜராத்திக்காரர்கள் என்பதால்... அப்போது யாருக்காவது பாபாவின் நேர்காணல் கிடைக்கவில்லை என்றால் சஞ்ஜெயிடம் சிபாரிக்கு போவார்கள்...

சஞ்ஜெய் சொல்லை பாபா தட்டுவதே இல்லை! பிரதி உபகாரமாக சஞ்ஜெய் பணமோ பொருளோ எதையும் எதிர்பார்த்ததில்லை! 

மீராவுக்கு இனிப்பு வகைகளை மட்டும் கேட்டுப் பெறுவார்... அதற்கு காரணம் இனிப்புகள் அந்தக் காலக்கட்டத்தில் ஆசிரமத்தில் கிடைப்பதில்லை என்பதால்...!


அந்த சமயம் அனந்தப்பூர் கல்லூரிக்கு பூமி பூஜை.. பாபா செல்கிறார்... "நீ அங்கே வரவேண்டாம்.. இங்கேயே இரு! 1 மணிநேர வேலை தான்... வந்துவிடுகிறேன் !" என்று பாபா சஞ்ஜெயிடம் சொல்லிவிட்டுச் செல்கிறார்! 

அன்று சித்ராவதிக்கு சென்று சாயி கீதாவும் வர இருவரும் அதோடு நன்றாக விளையாடுகிறார்கள்! 

வரும் வழியில் பாபாவை தரிசிப்போம் என்கிறார் மீரா..

பாபாவின் காரை பஞ்சர் ஆக்கிவிட்டால் இன்னும் தரிசனம் அதிக நேரம் கிடைக்கும் என்று மீரா சொல்ல... அனைவரும் சிரிக்க...அந்த காலத்தில் மந்திரில் பஜனை 11 மணி முதல் 12 மணி வரை நிகழும்... ராஜாரெட்டி, விஜயலக்ஷ்மி மட்டுமே பாடுவர்! பஜனையில் கலந்து கொள்ளும் பாதி நேரத்தில் சஞ்ஜெய் பாபாவின் திரும்பி வரும் கார் தரிசனத்திற்காக மீராவை அழைத்துப் போக... பாபா இருவரையும் பார்த்த பின் காரின் வேகம் குறைக்கப்பட்டு

"இங்கே என்ன செய்கிறீர்கள்.. பிரசாந்திக்கு செல்லுங்கள்!" என்று சொல்கிறார்.. கார் வேகம் எடுக்கிறது...

பிறகு தரிசன வரிசையில் மீரா.. பாபா மீராவின் அருகே வர.. மீரா பாத நமஸ்காரம் எடுத்துக் கொள்ள... "எதற்கு பாத நமஸ்காரம்...? அங்கே இங்கே சுற்றிக் கொண்டிருக்க வேண்டியது! இங்கே வந்தும் இப்படியே நீங்கள் செய்கிறீர்கள்!" என்று கோபித்துக் கொண்டே பாபா செல்கிறார்! 

பாபா கோபித்துக் கொண்டார் என்று மீரா சொல்ல.. "பாபா யாரோடு அதிக அன்பு காட்டுகிறாரோ அவரை மட்டுமே கோபிப்பார்! எல்லோரையும் அல்ல!" என்று சஞ்ஜெய் அதற்கு தெளிவான பதில் சொல்கிறார்! 


ஆசிரமத்தில் ரொட்டிகள் கிடைக்காத காலகட்டத்தில் பசுபாய் பட்டேல் மனைவி இருவருக்காகவும் பிரத்யேகமாக ரொட்டி மாவு மற்றும் மாவு உபகரணி தர... தனக்காக வைத்துக் கொள்ளாமல் இருவரும் அனைவருக்கும் ரொட்டி சுட்டு தர... 20 நாட்களுக்கு வர வேண்டிய ரொட்டி மாவு 10 நாளில் தீர்ந்து விடுகிறது! மாவு தீர்ந்த பிறகு கூட்டமும் காணாமல் போகிறது.. சாயிராம் சாயிராம் என்று சொல்லி சாப்பிட்டவர்கள் ஒருவர் கூட மாவு தீர்ந்த பிறகு இருவரையும் பார்த்த சாயிராம் என்று சொல்லவில்லை! பாபாவும் "பெரிய ஹரிச்சந்திரன் நீ! 20 நாட்களின் பொருளை 10 நாட்களுக்குள்ளாகவே தீர்த்துவிட்டாய் ! இனி ராம் ராம் பாடி விரதத்தை செய்!" என்று கோபப்படுகிறார்! பெரிய‌ ஞானம் தருவதாக அந்தச் சூழல் இருவருக்கும் அமைகிறது!

சாயிகீதாவுக்கும் இதனால் ரொட்டி கிடைப்பது நின்றுவிடுகிறது... இவர்கள் தங்கும் வராண்டாவில் வந்து ரொட்டியில்லை என்ற பிறகு தண்ணீரை மீரா மேல் பீய்ச்சி அடிக்கிறது... பாகன் வசந்த் பாயி சூழ்நிலையை சாயி கீதாவுக்கு தெளிவு படுத்திய பிறகு... புரிந்து கொண்டு அதே துதிக்கையால் மீராவிடம் மன்னிப்பும் கேட்கிறது சாயிகீதா!


வராண்டா வாசம்.. பாபாவின் அக்கா வெங்கம்மா அறையில் உணவு என இருவரின் நாட்கள் நகர... தீபாவளி நெருங்க.. அது தீபாவளி இரவு... பிருந்தாவனத்தில் வேலை செய்யும் சிலர் சஞ்ஜெயிடம் சில பட்டாசுகள் கொடுக்க... சஞ்ஜெயோ குறும்புத்தனமாக "இங்கே வேண்டாம்.. வெளியே சென்று வெடிக்கிறேன்!" என்று

முகமூடி அணிந்தபடி கேன்டின் அருகே இருந்த மைதானத்தில் எல்லா வெடிகளையும் ஒரே முறை வைத்து எரித்து விடுகிறார்.. எப்போது? அனைவரும் தூங்கச் சென்ற இரவு மணி 9'க்கு.. பிறகு ஒன்றும் நடக்காதது போல் படுத்துவிடுகிறார்!

வெடிகள் தாம் தூம் என்று ஒரே சப்தத்தோடு துள்ளிக் குதிக்கின்றன... அதிர்ச்சி அடைந்து அனைவரும் முழிக்க... பாபாவும் எழ... கஸ்தூரிக்கு அது சஞ்ஜெய் தான் இப்படிச் செய்திருப்பார் என்று ஒரே சந்தேகம்.. சி.ஐ.டி வேலை பார்க்க சேவைத் திலகம் கஸ்தூரி வர... சஞ்ஜெய் தூங்குவது போல் நடிக்க... மீரா எழுந்திருந்து அவன் தூங்கிவிட்டான் போல என்று சொல்ல... கோபத்துடன் கஸ்தூரி விறு விறு என்று நடந்து போகிறார்... பாபா தனது பக்தரின் அந்தக் குறும்பை செயலை கண்டித்து ஒன்றுமே சொல்லவில்லை!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 92 - 98 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்)  


கருணையும் கருணை சார்ந்த இதயமுமே இறைவன் பாபா! மனிதனுக்கு கைப்பிடி அளவே இதயம் ஆனால் இறைவன் பாபாவுக்கு பிரபஞ்சம் அளவுக்கு இதயம்! முழுக்க முழுக்க பேரன்பு, சுயநலமற்ற கனிவு, தன்னை கொல்ல வந்தவனையும் ஆரத்தழுவி அரவணைக்கும் தயை, ஒரு நாள் இரு நாள் அல்ல 24/7 நாட்களும் தொடர்ந்து விடுமுறையே விடாமல் இன்றளவும் தன் பக்தருக்காக சதா ஓயாத விளம்பரமற்ற சேவை... வேறு யார் ஸ்ரீ சத்ய சாயி பாபாவை விட இக்கலியுகத்தில் இறைவனாக இருக்க முடியும்?!


பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக