தலைப்பு

சனி, 29 ஏப்ரல், 2023

இசைக்கு மயங்கி இரு பாபாவின் விக்ரஹங்களும் வடித்த ஆனந்தக் கண்ணீர்!

எவ்வாறு ஏழு ஸ்வரங்கள் ஏழு உலகங்களையும் ஆளும் இறைவனான பாபாவின் இதயத்தை உருக்குகிறது எனும் பரவசப் பதிவின் சுவாரஸ்ய விரிவு இதோ...


ஹூப்ளி பகுதியில் இருக்கும் சாயி சமிதி அது... அங்கே சஞ்ஜெய் - மீராவையும் அழைத்துச் செல்கிறார்கள்! சஞ்ஜெய் ஆர்மோனியம் வாசிக்க , பிள்ளை என்று பெயர் கொண்ட வேறொரு நபர் தபலா வாசிக்க.. பஜனை தடபுடல்... அந்த பஜனையில் ஆள் உயர ஷிர்டி பாபா மற்றும் புட்டபர்த்தி பாபா படம் .. நடுவில் ஸ்ரீ கிருஷ்ணர் படம்... ஆயிரக்கணக்கில் கூட்டம்... "பிரேம ஸ்வரூப சாயி" என்ற பாடலை பாடுகிறார் சஞ்ஜெய்.. பெரும்பாலும் தான்  எழுதி இசையமைத்த பாபா பாடல்களையே பாடுவார் சஞ்ஜெய்! பிறகு மால்கோஸ் ராகத்தில் ஒரு பாடல்... இறைவனை அழைக்க இசை வாசித்துக் கொண்டிருந்த இராவணனை... நாரதர் தோன்றி மால்கோஸ் ராகம் வாசித்தால் சிவபெருமான் நிச்சயம் உனக்கு தரிசனம் தருவார் என்று தெரிவிக்க..இந்த ராகம் இசைத்த பின்னே அவருக்கு தரிசனமும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது...!

அந்த ராகத்தையே சஞ்ஜெய் தான் எழுதிய பாடலுக்குப் பொருத்திப் பாடுகிறார்... பாடலின் கடைசி வரி "பக்த சம்ரட்சக சாயி" என்ற பாடுகிற போது.. பாபாவின் பேரிருப்பை அனைவரும் அங்கே உணர்கின்றனர்.. அதற்குச் சான்றாக பாபா படங்களின் கண்ணாடிகள் எல்லாம் டப் டப் என்று உடைந்து சிதறின... கண்ணாடிச் சிறையிலிருந்து அவர் வெளி வந்தது போலான உணர்வே மேலோங்கியது! அதை அனைவரும் கண்டு மெய்சிலிர்த்தனர்... நரேகல், அடகே, போன்ற பக்திப் பெரியவர்களும் உடன் இருக்கிறார்கள்! 


ஒருமுறை "ஹே துனியா கே ராக்வலே" என்ற பாடலின் இனிமைக்காகவே "பைஜுபாவரா" என்ற திரைப்படத்தை மீரா பார்க்க விரும்ப..‌அந்த பாடல் வருகிற திரைப்படக்காட்சியில் சிவபெருமான் விக்ரஹத்தில் இருந்து கண்ணீர் வழிகிறது... அதைக் கண்டு களிக்கிறார்கள் இருவரும்...


பிறகு லக்நவ்'விலிருந்து பரோடா சஞ்ஜெய் - மீரா வருகிறார்கள்... சித்ரே எனும் சாயி பக்தர் வீட்டில் தங்குகிறார்கள்! அந்தக் குடும்பமே சஞ்ஜெயை தங்கள் குருவாக பார்க்கிறது... பாபா என்றே அவரை அழைக்கிறது!

அங்கே அந்த வீட்டில் பஜனை ஏற்பாடுகள் நடைபெறுகின்றன... பிரசாதமாக ஷிர்டி பாபாவுக்குப் பிடித்த போளி தயாராகின்றன... அந்த வீட்டுக் குடும்ப வாரிசுகளை (ஜோதி, சந்தோஷ், சஞ்சய்) பள்ளிப் பாடங்களுக்கு முன்பே நேரத்தை ஒதுக்கிவிட்டு பஜனைக்கு வரும்படி சொல்கிறார் சஞ்ஜெய்!

பஜனை ஆரம்பிக்கிறது... கணேஷ பஜனைக்கு பிறகு தர்பாரி கானடா ராகத்தில் ஒரு பாடல்... பொதுவாக சஞ்ஜெய் இசைக்கும் பஜனைகளில் தூபங்கள் இடம் பெறுவதில்லை.. அது பாபாவின் வரகிற போது எழும் வாசனையை உணர தடையாக இருக்கும் என்பதால் இந்த பஜனையிலும் ஊதுபத்தி தூபம் இல்லை! ஆனால் பாடப் பாட வாசனை எழ ஆரம்பித்துவிட்டன... இந்த அருள் அடையாளத்தை மீரா சிறுமி ஜோதியோடு "பார்! பாபா வந்துவிட்டார்!" என்று பகிர்கிறார்! அனைவரும் பஜனையில் மூழ்கி இருக்க.. சஞ்ஜெய் உடனே அந்தத் திரைப்படப் பாடலான "ஹே துனியா கே ராக்வாலே!" என்ற பாடலை பாடுகிறார்... உடனே மீரா எடுத்து வந்த பிரசாதத்தை பாபா முன் படைத்திட மூடி வைக்கிறார்.. அந்த பாடல் ஒலிக்க ஒலிக்க.. இரு பாபா விக்ரஹங்கலும் துளித் துளியாக ஆனந்தக் கண்ணீர் சிந்துகின்றன..‌.பிறகு துளிகள் பெருகின.. ஆச்சர்யம் மகா ஆச்சர்யம் அனைவருக்கும்! 

பரவசத்தோடு அதனை பாத்திரத்தில் நிரப்புகிறார் மீரா! பஜனையில் திளைத்தது பக்தர்கள் மட்டுமல்ல பாபாவும் தான் என்பதற்கு எடுத்துக்காட்டான ஆனந்த நீருற்று அது!

அதை பிரசாதமாக அனைவரும் அந்த அருள் தீர்த்தத்தைப் பருக... அது தேவாமிர்தம் போல் இனிக்க...

"இப்படி ஒரு பஜனையை நாங்கள் கேட்டதே இல்லை.. பாபாவின் கண்களிலேயே ஆனந்தக் கண்ணீர் வரவழைத்துவிட்டீர்களே சுவாமிஜி!" என்று சஞ்ஜெயின் பக்தியை பார்த்து திக்குமுக்காடிப் போகிறார்கள் வந்திருந்த அனைவரும்...! 


இதைப் பகிர்கிற போது ஒரு தொடர் சம்பவத்தையும் மேற்கொண்டு பகிர்கிறார் சன்யாசினி மீரா.. அது 1969.. பிருந்தாவன் வொயிட் ஃபீல்டில் இருந்த போது இருவருக்கும் சிரோஹி ராஜமாதா ஒரு ஸ்ரீ கிருஷ்ணர் விக்ரஹத்தை அன்பளிப்பாக அளிக்கிறார்! அது 2 அங்குல நீளம்! 

அதைத் தொடர்ந்து டா.சோன்டக்கே'யின் வீட்டில் ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம் செய்வர்.. அங்கே தங்கியிருந்த மீரா சஞ்ஜெயும் அவர்களின் பூஜையறையிலேயே அந்த ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹத்தை வைத்திருந்தனர்... தினசரி மாவை பஜனையும் நிகழும்... 


ஒருமுறை பாபா பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருந்த போது... சஞ்ஜெய் கையில் புல்லாங்குழலை பார்த்த பட்னாகர் என்னும் ரயில் வே கார்டின் மனைவி "சுவாமிஜி புல்லாங்குழல் வாசியுங்கள்!" என்று தெரிவித்த போது... 

ஓரிரண்டு பாபா பஜனைகளை வாசித்த பிறகு "இப்போது அந்த கிருஷ்ண விக்ரஹத்தை கவனியுங்கள்!" என்று சஞ்ஜெய் தெரிவித்தபடி 

சந்த் ஞானேஷ்வர் பஜனையை புல்லாங்குழலில் சஞ்ஜெய் வாசிக்க... ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹம் அரை அங்குலம் தரையிலிருந்து மேலே எழுந்து நாட்டியம் ஆட ஆரம்பிக்கிறது...!

அப்போது டாக்டரின் மனைவி 

"பாபா வந்துவிட்டார் பாபா வந்துவிட்டார்!" என்று பரவசப்பட்டுக் கத்த... அவ்வளவு தான் நாட்டியம் நின்றுவிடுகிறது! 

"பாபி! எதற்கு அவசரப்பட்டீர்கள்.. கொஞ்சம் பொறுமையோடு இருந்திருந்தால் இந்த விக்ரஹம் நிஜ கிருஷ்ண ரூபத்தை எடுத்திருக்கும்... இப்போது பாபா சென்றுவிட்டார்!" என்று கூற... 

அனைவருக்கும் மூச்சு பேச்சில்லை... அந்த விக்ரஹம் நடமாடியதே அங்கிருந்த அவரவர் கண்களிலும் வந்து வந்து போய்க் கொண்டிருந்தன...!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | 128 - 133 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


இந்த அனுபவத்தை வைத்தே பரம பாவன ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளும், அன்னை மீரா மற்றும் பல ஸ்ரீ கிருஷ்ண பக்தர்களும் பாடல்  இசைக்க இசைக்க பல அற்புதங்கள் நிகழ்ந்திருப்பவை எல்லாம் பரம சத்தியம் என்பதை உணர முடிகிறது! காரணம் சஞ்ஜெய் பாடல் பாடுகிற போது அங்கே பாடல் மட்டுமே வியாபிக்கிறது.. பாடிடும் அவரோ சாயி பக்தியில் கரைந்து காணாமல் போய்விடுகிறார்! இப்படி பஜனையில் தன்னை கரைப்பதே ஆன்ம சாதனையாக திகழ்கிறது! அதற்காகவே நாம் சாயி பஜன் இசைப்பதெல்லாம்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக