தலைப்பு

ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

ஒரு தாய், ஒரு மகன், பாபா


தன் மகனுக்காக வெளிதேசத்து ஒரு பாசத்தாயின் பிரார்த்தனையை இறைவன் பாபா எவ்வாறு நிறைவேற்றுகிறார் எனும் பரவச அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...

என் மகன் டேவிடுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தாயாகவும் தந்தையாகவும் இருக்கப் பல ஆண்டுகளாக முயன்றும் அதில் நான் முழுவெற்றி பெறவில்லை. அப்போது நான் என் இதயத்திலிருந்து அன்பினை ஓர் ஒளிக்கதிராக அவன்மீது செலுத்தும் ஆன்மீக சாதனையைத் தொடங்கினேன். அவனுக்கு வயது பதினாறு. அந்த வயதுக்கேற்ற அடங்காப்பிடாரித்தனம் அவனிடம் இருந்தது.தாயின் பரிதவிப்பு இருந்த இடத்தில் அன்பைக் கொண்டுவரும் அனுபவம் மிக அழகானது. என் இதயம் அப்படியே திறப்பதையும் பரந்து விரிவதையும் என்னால் உணர முடிந்தது. அந்தப் பயிற்சியை (ஜோதி தியானம்) நான் தொடர்ந்து செய்கிறேன். அதன்மூலம் நான் நிபந்தனையற்ற அன்பை ஒவ்வொரு முறையும் அமைதியாக உட்கார்ந்து அவனை நோக்கிச் செலுத்துகிறேன். அவன் மட்டுமல்ல, அவனுடன் சேர்ந்த துறுதுறுப்பான நண்பர்களும் உலகின் எல்லா உயிர்களும் அதில் அடக்கம்.

இருவருக்குமே மற்றவரைச் சமாளிப்பது கடினமாக இருந்தது. நான் செய்த தவறுகளையே அவனும் செய்து, என்னைப் போலவே அந்தத் தவறுகளிலிருந்து மீண்டு வருவதில் அவன் அதிகக் காலத்தை வீணாக்கிவிடக் கூடாதே என்ற அக்கறையில் நான் அவனை மிகவும் நிர்பந்தப் படுத்தினேன். எங்கள் குணங்கள் எதிரெதிரானவை. அவன் சுதந்திரமானவன், யார் சொன்னதையும் கேட்க மாட்டான். அதிலும் நான் சொன்னால் நிச்சயம் கேட்கமாட்டான்.

கடந்த இரண்டு மூன்றாண்டுகளாக நான் பாபாவிடம், என் மகனை உங்கள் மகனாகவே கருதுங்கள், உங்கள் அன்பை வாங்கிக்கொள்ள அவனது இதயத்தைத் திறவுங்கள் என்று எப்போதும் பிரார்த்தனை செய்கிறேன். ஈஸ்டர் மற்றும் கிறிஸ்துமஸ் சமயத்தில் அவன் சில ஆன்மீக விழாக்களில் பங்கேற்றாலும், பொதுவாக அவன் என் அழைப்பை ஏற்பதில்லை.கடந்த நான்கு வாரங்களாக அவனை என் அன்பு வட்டத்துக்குள் வைத்திருந்தேன். அவனுடைய எதிர்ப்பு குறைவதாக உணர்ந்தேன்.  “டேவிட் என்னுடன் சாயிபாபா மையத்துக்கு வரவேண்டும்” என்று நாட்காட்டியில் ஞாயிறு இரவுக்குக் குறித்து வைத்தேன். அவனை எதையும் நம்பவைக்க முயலாமல், பாபாவின் அன்பை என்னால் இயன்ற அளவுக்கு அவன் கண்முன் காட்டவேண்டும் என்று விரும்பினேன். அவன் என்னோடு மறுப்பில்லாமல் வந்தான், அங்கே சந்தோஷமாக இருந்தான். சில பாடல்களைக் கூடச்சேர்ந்து பாடினான். பாபாவின் வீடியோ, அன்பர்களின் அனுபவங்கள், அங்கிருந்த விசேஷ சூழல், வந்திருந்தோர் பாபாவிடம் காட்டிய அன்பு எல்லாமே அவனுக்குப் பிடித்திருந்தது. அவன் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டிருந்தான். என்னோடு அவை குறித்து அவன் பேசினான் என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்.

காரில் வீட்டுக்குத் திரும்புகையில் சாலையின் இடது ஓரத்திலிருந்த லேனில் எங்கள் கார் போய்க்கொண்டிருந்தது. திடீரென்று பார்த்தால் இடப்புறமிருந்து ஒரு கனத்த ஏணி நீண்டு எங்கள் லேனில் முக்கால் பங்கை அடைத்துக் கொண்டிருந்தது. எனக்கு முன்னால் சென்றவர் காரை ஒடிப்பதைப் பார்த்து நானும் சட்டென்று ஒடித்தேன். எல்லாம் நடந்த வேகத்தில் என்னால் பின்னால் என்ன வருகிறதென்று கவனிக்க முடியவில்லை. நடு லேனில் இருந்த கார் என் காரைத் தவிர்க்கச் சட்டென்று நகர, வலது லேனில் இருந்த கார் வலப்புற ஓரத்திலிருந்த செடிகளுக்கிடையே சென்றது. என்னால் இதர கார்களுக்குச் சேதம் ஏற்படக்கூடாது என்றெண்ணி நான் அந்த ஏணியை என் இடதுபக்க முன் டயரில் இடித்தேன், கிட்டத்தட்ட 50 மைல் வேகத்தில்! பாபாவின் கருணையால் காரின் கட்டுப்பாடு இன்னும் என் கையில்தான் இருந்தது. சட்டென்று காரை நிறுத்திவிட்டு ஏணியை அகற்ற எண்ணி அதை நோக்கி ஓடினேன். என் காரில் ஒரு சிறிய கீறல்கூட இல்லை! எந்தக் காரிலும் இருந்த எவருக்கும் தீங்கு ஏற்படவும் இல்லை.

‘பாபா உன்னை நேசிக்கிறார், நீ என்னருகில் வரவேண்டும்’ என்று என் மகனுக்குத் தெரிவிக்கவே பாபா இந்தச் சம்பவத்தைச் செய்திருப்பதாக நான் நினைக்கிறேன். அவரால்தான் எங்கள் உடலும் உயிரும் நல்லவண்ணம் மீண்டு வந்ததென்று உறுதியாக நம்புகிறேன்.

எழுதியவர்: கலிஃபோர்னியாவிலிருந்து ஒரு பக்தை

ஆதாரம்: சனாதன சாரதி, ஜனவரி 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக