தலைப்பு

புதன், 19 ஏப்ரல், 2023

வெளி உலகில் நாங்கள் மக்களுடன் பழக வேண்டியிருப்பதால் எவ்வாறு நாங்கள் பிறரோடு பேச வேண்டும்? எது நன்மை அளிக்கும்?

லௌகீகம் - ஆன்மீகம் என்பவை வெவ்வேறானது அல்ல! நீங்கள் அவற்றை வெவ்வேறு என எண்ணுகிறீர்கள்! 

ஆன்மீகம் என்பது விழிப்புணர்வு (Awareness)! 

நீங்கள் நல்லவற்றை மென்மையாகவும் இனிமையாகவும் பேச வேண்டும்! (Speak Softly & Sweetly)

பேச்சு நன்றாக இருந்தால் ஊர் நன்றாக இருக்கும்! 

பேச்சு நன்றாக இருந்தால் நல்ல பெயரும் இருக்கும்! 

உங்கள் வீட்டில் ஒரு காகம் கா கா என கரையும் பொழுது.. உஷ் உஷ் என விரட்டி விடுகிறீர்கள்... ஆனால் அதே இடத்தில் ஒரு குயில் அமர்ந்து கூவினால் மகிழ்ச்சியோடு அதைக் கேட்கிறீர்கள்! 

இங்கே வித்தியாசம் எதில் உள்ளது?

குயில் உங்களுக்கு ஏதேனும் கொடுத்ததா? அல்லது காகம் தான் உங்களை எதாவது கெடுத்ததா?


உண்மையே பேச வேண்டும்! அதை அன்புடன் பேச வேண்டும்! கடினமாகப் பேசக் கூடாது! இனிமையாகப் பேச வேண்டும்! உங்களுடைய வார்த்தைகள் எவருக்கும் தீமை விளைவிக்கக் கூடாது! 


ஒரு துறவி தவம் செய்யும் இடத்தில் மான் ஒன்று தப்பித்து தஞ்சம் அடைய வந்தது! அதைத்தேடி ஒரு வேடர் வந்து அந்தத் துறவியை விசாரிக்க... "அப்பனே ! நான் பார்த்த கண்களால் பேச முடியாது! நான் கேட்ட காதுகளால் பார்க்க முடியாது!" என அந்த வேடரிடம் பதில் அளிக்கிறார்!

இதனால் மானுக்கு தீங்கு விளையவில்லை...அந்த துறவியும் பொய் கூறியதாக ஆகவில்லை!


அதே போல் அரிச்சந்திரன் ஒரே ஒரு பொய் சொல்லி இருந்தால் அவரால் தன் துன்பங்களில் இருந்து விடுபட்டிருக்க முடியும்! எல்லா சுகபோகங்களையும் அனுபவித்திருக்கலாம்... உலக சக்கரவர்த்தியாகவே ஆகி இருக்கலாம்... ஆனாலும் அவர் ஒரு பொய் கூட சொல்லவில்லை... தன்னுடைய ராஜ்ஜியம் குடும்பம் எல்லாவற்றையும் இழந்தார்... அதே போல் சத்தியத்தினாலேயே மீண்டும் யாவற்றையும் அடைந்தார்!


"சத்யம் நாஸ்தி பரோதர்ம" என்பார்கள்!

பணத்தின் உயிர் - அதில் உள்ள முத்திரை

கோட்டையின் உயிர் - சேனைகள் 

பேச்சின் உயிர் - சத்தியம்


அதுபோல் மிதமாகப் பேச வேண்டும்! அதிகமாகப் பேசுவது நல்லதல்ல...! அளவுக்கு அதிகமாகப் பேசுவது உங்கள் புத்தியைக் கெடுக்கும்! மிதமான பேச்சே நிம்மதியை கொடுக்கும்! அளவு மீறிய பேச்சினால் வாயாடி, லொட லொட என்ற பட்டமே கிடைக்கும்! இப்படியே நீங்கள் இருந்தால்... நீங்கள் வரும் வழியில் எதிர் வருகிறவர்கள் வேறு வழியை நோக்கி தப்பித்து ஓடிவிடுவார்கள்! 

ஒலியை அதிகமாக வைத்தால் என்னவாகும்... ரேடியோவில் மின்சார செலவு அதிகமாகும்!

ஆக அளவோடு பேச வேண்டும்!


பொய், அதிகமான பேச்ச, பிறரை குறை கூறுவது! ஏசுவது இவை யாவும் நாவினால் இழைக்கப்படும் மிக மோசமான பாவங்கள்! இவை யாவும் அளவுக்கு மீறிய பேச்சினால் விளைகிறது! 

இறைவனின் குரலை மனத்தின் ஆழ்ந்த அமைதியினால் தான் கேட்க முடியும்! 

யாராவது 'ஹலோ' என்று சொன்னால் 'ஹலோ' என்று சொல்லி நிறுத்தி விடுங்கள்! 

'குட்பை' என்று சொன்னால் 'குட்பை' என்று சொல்லி முடித்து விடுங்கள்.. பேச்சை வளர்க்காதீர்கள்! 


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 80)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக