தலைப்பு

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

பெண் தர்மத்தை எதிர்க்கும் தற்கால பெண்ணியவாதிகளுக்கு உங்களின் பதில்?



பெண் தர்மம் என்று சொன்னாலே 'முற்போக்கு மகளிர்' எனப்படுபவர் முரண்பட்டு எதிர்க்கிறார்கள்! ஆண்களும் பெண்களும் சமம் தான்... எங்களுக்கு மட்டும் தனியான பெண் தர்மம் என்று விதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளவே மாட்டோம் என்கிறார்கள்! 

இப்படிச் சொல்லும் தாய்மார்களை ஒன்று கேட்க வேண்டும்! இயற்கையே உங்களுக்குத் தனியாகத் தந்திருக்கும் தர்மத்தினால் தானே நீங்கள் பெண்ணாகப் பிறந்திருக்கிறீர்கள்! உங்களை சமமாக நினைத்து எந்த ஆண்களாகவது தாய்மை எய்த முடியுமா? உலகத்திலேயே சிறந்தது தாயன்பு தான்! 'சிசுவை வயிற்றில் தாங்கிப் பிறகு பாலூட்டி வளர்க்கும் தாயின் அன்பையும் இன்பத்தையும் நாங்களும் பெறுவோம்!' என்று எந்த ஆண்களாவது போட்டி போட்டால் நடக்குமா?


அன்னையர்களே! ஆண்களைப் போல் நீங்கள் ஆவதைவிட பெண்களாகவே இருப்பது தான் உங்களுக்குப் பெருமை! இயற்கை வழி இறைவன் இந்த உலக நாடகத்தில் பிரித்துக் கொடுத்துள்ள இரண்டு கதாபாத்திரங்களின் பகுதிகளை அவரவர் சிறப்பாக நடித்தால் வாழ்க்கை நாடகம் முழுமை பெறும்! 

வேலைக்குச் செல்லும் பெண்களாக, அலுவலகம் செல்வதென்றால், கையில் சாப்பாடு, டிஃபன் கட்டி எடுத்துக் கொள்வதற்காக விழித்தெழுந்த உடனேயே சமையல் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது! கணவர் மட்டும் அலுவலகம் சென்றால் , பிற்பாடு ஆளிடம் கொடுத்தனுப்புவது போல் இப்போது முடிவதில்லை அல்லவா?! 

பிறகு பகல் முழுவதும் அலுவலகத்திலேயே போகிறது... மாலை வீடு திரும்பியபின் அந்த களைப்பு ஆறி... கொஞ்சம் டி.வி பார்த்து நரம்புத் தளர்ச்சி அடைந்த பின் தூங்கத்தான் சரியாக இருக்கிறது அல்லவா!! இப்படி அலுவலகம் தொடர்பாகவே நாள் முழுவதைம் நீங்கள் கட்டிப்போட்டு விட்டால் , வீட்டை அன்புமயமாக்குவது எப்படி?

மனைவியாகவும், தாயாகவும் வீட்டிலேயே அன்பு தழைக்கச் செய்வதற்கு நீங்களே தடை செய்து கொள்ளலாமா?

பூஜைகள், நோன்புகள் கடைபிடித்து வீட்டை கோவிலாக்குவதுதான் என்னாவது? குழந்தைகளுக்கு ஆற அமர நற்போதைனைக் கதைகள், நல்வழி காட்டும் புராண/ இதிகாச சம்பவங்கள் இவற்றை சொல்லிக் கொடுப்பதும், புனித மந்திரங்கள் கற்றுக் கொடுப்பதுமான சத்தான விஷயங்கள் அடுத்தத் தலைமுறைக்கு என்னாவது? அப்படி செய்வதால் தான் வீடே தர்ம ஆலயமாக மாற முடியும்! 


அநாவசியத் தேவைகளைப் பெருக்கிக் கொண்டு , விதவித புடவை (பட்டுப்புடவைகள் பீரோவில் தூங்கி அழுவது உட்பட) அலங்காரங்களுக்காகப் (ஸ்பா, பியூட்டி பார்லர்) பணம் போதவில்லை என்று வேலைக்குப் போய்ப் பெண்மையின் உண்மையான அலங்காரத்தை இழக்கலாமா? 

அலுவலகம் முடிந்தால் கிளப் , சினிமா, பப், பார்ட்டி என்று பெற்றோர்களே போய்க் கொண்டிருந்தால் குழந்தைகளின் நிலை? எஜமானர்களை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் வேலையாட்கள் மற்றும் டிரைவர்களிடம் குழந்தைகள் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு அவர்களின் போக்கையும் பேச்சையுமே நுகர்ந்தபடி கடைபிடிக்கத் தொடங்குகின்றன... இது குடும்பத்திற்கே கேடு விளைவிக்கிறது!

இதற்காகவா நீங்கள் உத்தமமான பெண் எனும் உயர் பிறவி எடுத்தது?!


இந்தியப் பெண்களை இந்திய பெண்மணிகளாக்குவது இரண்டே இரண்டு முக்கிய அம்சங்கள்

1. பதிவிரதா தர்மம் (ஒருவனுக்கு ஒருத்தி)

2. தாய்மையில் பெருமை கொண்டு நல்ல வாரிசுகளைப் பேணுவது!


முதலாவதற்கு ஊறு விளைவிப்பது 

விவாகரத்தே! உங்களின் திருமணங்கள் அக்னி சாட்சியாக செய்யப்படுவதே! விவாகரத்தால் நாளைக்கு ஜோடி மாறுவதால் அக்னியும் தனது சாட்சியத்தை மாற்றிக் கொள்ளுமா? விவாகரத்தால் தாய் தந்தையர் இருவரின் அன்பையும் ஒருசேரப் பெற முடியாத பிள்ளைகளின் மனநிலை என்னாகும்?

பெண்கள் ஏதோ சேலை மாற்றுவது போலவும், ஆண்கள் ஏதோ சட்டை மாற்றுவது போலவும் ஜோடிகளை மாற்றிக் கொள்கின்றனர்... இப்படி விவாகரத்தும், மறுமணமும் புரிவது பாவமாகிறது! 

இதில் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. ஆயுட்காலம் வரை எப்படி மனைவிக்கு கணவன் மேல் விஸ்வாசம் (நம்பிக்கையோடு கூடிய நன்றியுணர்வு) இருக்க வேண்டுமோ அதுபோல் கணவனுக்கும் மனைவி மேல் நம்பிக்கையும் நன்றியும் இருக்க வேண்டும்!


மனைவி இறந்துவிட்டாலோ அதனால் ஒருவருக்கு வம்சமில்லாத காரணத்தினாலோ பாரம்பரியம் துண்டிக்காமலும் , தர்மத்தை கடைபிடிக்க முடியாமலும் போய்விடுமோ என்பதற்காகவே ஆண்களுக்கு மறுதாரம் என்பது இடமளிக்கப்பட்டது! ஏதோ இது ஆண்களுக்கு மட்டுமே தரப்பட்ட விதிவிலக்கு என நினைத்து இறுமாந்து பிற்காலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிற அவலம் ஆதியான சாஸ்திர விதிக்கு விரோதமானதே! 

வனம் சென்றபின்னும் சீதா மாதாவின்றி மறுதாரம் புரியாமல் அஷ்வமேத யாகத்திற்கு சீதா மாதாவைப் போலவே பொற்சிலை செய்து அருகமர்த்தி யாகத்தை நிறைவு செய்து உதாரணமாக வாழ்ந்தார் ஸ்ரீராமர்! இது அனைவருக்குமே பாடமாகும்!


அதுபோல் தாய்மை உணர்வு இப்போது குறைந்துவிட்டது... அதற்குக் காரணம் கருக்கலைப்பு... அது மிகப்பெரிய பாவம்! கருவின் ஐந்தாம் மாதம் உள்ளே ஜீவன் நுழைந்து விடுவதால் கருக்கலைப்பு என்பது கொலைக்கு சமானம்! முறையற்றவர்கள் செய்துவந்த கருக்கலைப்பு இப்போது பரவலாக அனைவரும் செய்யும் படி சகஜமாகிவிட்டது பெரிய பாவமே! ஒரு செயலில் ஈடுபட்டு அதற்கு இறைவன் தரும் இயற்கையான பலனை ஏற்காமல் அழிப்பது பாவமே ஆகையால் தற்போது செயற்கையாகச் செய்யும் குடும்பக் கட்டுப்பாடு என்பதே மகத்தான அதர்மம்!


ஆன்மீக சாதனையால் மனத்தை நிதானப்படுத்தி பிரம்மச்சர்ய விரதம் வழியாகவே சந்ததிப் பெருக்கம் (வாரிசு பெருகுதல்) உருவாகாமல் நீங்கள் தடுக்க வேண்டும்! செயற்கை முறையில் இப்படி குடும்பக்கட்டுப்பாடு செய்வதால் அப்போது தெரியாவிடினும் பிற்காலத்தில் உடற் கோளாறுகளையும், மூளை பாதிப்பையும் அது ஏற்படுத்திவிடுகிறது! ஆனால் மனத்தை ஆன்மீக சாதனையால் கட்டுக்குள் வைத்திருப்பது அப்போது சிரமமாக தோன்றினும் பிற்காலத்தில் அந்த ஆன்மீக சாதனையே பரிசுத்தமான நிரந்தர இன்பத்தை உங்களுக்கு அளிக்கிறது!


(ஆதாரம்: அறிவு அறுபது / பக்கம் : 155 -159/ ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக