தலைப்பு

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

மாற்று ஆடை இல்லாத பக்தருக்கு ஒருவர் வாங்கிக் கொடுத்த புத்தாடைக்கு பில் கேட்டு பாபாவே பணம் கொடுக்கிறார்!

எவ்வாறு ஒரு பக்தித் தம்பதிகளின் நாடோடி வாழ்க்கைக்கு பாபாவே பஜனை மூலம் சுதியாகிறார்..‌ காவல் மூலம் கதியாகிறார் எனும் அரிய அற்புத சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...


பாபா நேர்காணலில் சொல்லி மீராவின் முகவரி தெரியாத தாய் வீட்டுக்கு செல்லும் பயணத்தில்.. ஜான்சி வந்து சேர்கிறார்கள் மீராவும் சஞ்ஜெயும்... அங்கே ஒரு சாயி பக்தர் இல்லம்... அவர்களது குடும்பப் பெயர் காலே.. மிகவும் அன்போடும் மீராவை தனது மகள் போலவே பாசமோடு பராமரிக்கிறது அந்தக் குடும்பம்... சஞ்ஜெய் பஜனை செய்து ஆர்மோனியம் வாசிக்கையில் விபூதி,தேன் வந்து அறை முழுதும் நறுமணம் சூழும்.. ஒருமுறை காலே மகன் மண்பாண்ட  தபலா (கடம் போல்) வாசிக்க அது உடைய.. அந்த நொடி பாபா ரூபமும் தெரிகிறது.. இப்படி அங்கே 2 மாதம்... பிறகு எங்கே பயணிப்பது? காலே உறவினர் 

சதுர்வேதி அவர்களை சொந்த ஊரான உரயீ அழைத்துச் செல்கிறார்.. "கல்கி அவதாரம் வந்துவிட்டது" என்ற பிட் நோட்டீஸ் பஜனைக்கு முன்னர் வழங்கி அங்கே நிறைய கூட்டம்! வந்தவர்கள் பாபாவை பற்றி நிறைய கேள்விகளால் குடைய சஞ்ஜெய் தெளிவாக பதில் அளிக்க ஒரே அமர்க்களம்! அதில் ஒருவர் டாக்டர்... போனி ஆகாத மருத்துவமனை வைத்திருக்கிறார்.. அவருக்கு மூன்று மகள்கள்... திருமணம் தள்ளிப் போகிறது... பாபா பற்றிய  சஞ்ஜெயின் பேச்சைக் கேட்டு பாபாவிடம் நம்பிக்கைக் கொள்கிறார்... அவர் வீட்டிலும் பஜனை நடத்துகிறார் சஞ்ஜெய்... நடத்திய 10 ஆவது நாளில் திருமணம் மள மள என்று ஏற்பாடாகிறது.. பிறகு அந்தக் குடும்பமே பாபா பக்தராக மாறிப் போகிறது!


சதுர்வேதியின் பெரிய பிரபா அவரது புகுந்த வீட்டில் கிராமத்தில் பஜனைக்குக் கேட்க.. 18 பேர்.. சிறிய வேன்.. புறப்படுகிறார்கள்... பஜனை கோலாகலம்.. திரும்புகையில் டயர் வெடிக்க...கால்வாயில் விழப்போக.. பாபா காப்பாற்ற... அங்கேயே அனைவரும் பஜனை பாட.. அங்கு உலாவும் திருடர் நடமாட்டத்திலிருந்தும் பாபா அவர்களை பஜன் அரணால் பாதுக்காக... நள்ளிரவு 2 மணிக்கு மீண்டும் உரயீ வருகிறார்கள்!

ஒரு நாள் மீரா சஞ்ஜெய் வசித்த பழைய இடமான ரத்லாமிலிருந்து கடிதம் வர.. கான்பூரில் ஒரு கல்யாணத்திற்கு அழைப்பு.. இருவரிடமோ நல்ல மாற்று உடை கூட இல்லை... அதை அறிந்து சதுர்வேதி புதிய ஆடைகள் தர.. மீரா தயங்க... அன்றிரவே சதுர்வேதியின் கனவில் பாபா சென்று "எனது பக்தர்கள் சஞ்ஜெய் மீரா ஒரு கல்யாணத்திற்கு கான்பூர் செல்ல வேண்டும்...அவர்களுக்கு உடையை நீ வாங்கிக் கொடு! அதற்கான செலவை நான் உனக்கு தருகிறேன்!" என்று சொல்லியதில் ஆடையை பெற்றுக் கொள்கின்றனர் மீரா சஞ்ஜெய்! வெறும் கனவில் மட்டுமின்றி பிறகு சதுர்வேதி புட்டபர்த்தி செல்கிற போது பாபா "அந்த உடைகளின் பில்லை கொண்டு வந்தாயா?" என்று கேட்டு.. உடைக்கான விலையை மிகச் சரியாக பாபாவே கொடுத்துவிடுகிறார்!

கான்பூர் கல்யாணம் நிறைகிறது.. அங்கிருந்து பல இடங்களில் பல சமிதியில் பஜனை... சில இடங்களில் சில சமிதியில் மரியாதையும் சில சமிதியில் அவமரியாதையும் சேர்ந்தே சுமக்கிறார்கள் மீராவும் சஞ்ஜெயும்! அப்போது ஒரு சில சமிதிகள் தனி வீட்டு பஜனைக்கு மறுப்பு தெரிவித்தும் சஞ்ஜெய் அதை மீறியும் சென்று அவரவர் வீட்டில் பஜனை நிகழ்த்தி வருகிறார்!  இதில் முன்பின் தெரியாதவர்கள் அழைத்தும்.. மீரா பயப்பட... "பாபா நம்மை காப்பாற்றுவார்!" என்ற உறுதியில் சென்று பஜன் நடத்துவது சஞ்ஜெய் வழக்கம்! மிகவும் இரக்க சுபாவம் சஞ்ஜெய்க்கு‌... இதில் மூன்றாவது நபர் அழைக்க.. பஜனுக்காக சஞ்ஜெய் செல்ல... அங்கே மது குடித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து சஞ்ஜெய் ஓடிவந்த சம்பவமும் அடக்கம்! 


ஒருமுறை புட்டபர்த்தி செல்ல நினைத்தும் கையில் பணமில்லை.. பிறகு சாயி பக்தர் பூனா வி.எச் மெஹதா உதவ.. இருவரும் கிளம்புகிறார்கள்.. ரயிலில் வேறொருவர் அவரிடம் டிக்கட் இல்லை.. சஞ்ஜெய் டி.டி.ஆரிடம் பரிந்து பேச.. அவரையும் அழைத்துச் செல்கிறார்..‌அவரோ முன் பின் தெரியாதவர்‌... பீடி புகை வேறு.. மீரா முகம் சுழிக்க... தர்மாவரம் வருகிறது.. அந்த நபர் தொந்தரவு தொடர்கிறது... பாபா புட்டபர்த்தியில் அப்போது இல்லை.. ஆகவே வொயிட் ஃபீல்ட் நோக்கிய பயணம்.. இருவரிடம் பணம் இல்லை.. இரக்கமான டி.டி‌ஆர் சரி என இலவசமாக அழைத்துச் செல்ல.. பெங்களூர் வந்தபின் அந்த டிடிஆரே பணம் கேட்கிறார்.. மீரா அதிர.. சஞ்ஜெய் குழம்ப.. இருவரும் மாஜிஸ்டிரேட் முன் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்! அவரோ 24 மணிநேரம் கெடு வைக்கிறார்... மீராவையும் அந்த நபரையும் பிணையாகப் பிடித்து வைக்க... சஞ்ஜெய் எங்கேயோ சென்று வந்து பணம் கட்டி மீட்டெடுக்கிறார்! அந்த மூன்றாம் நபர் மௌனமாக தொந்தரவு தராமல் முன்பே சென்றுவிடுகிறார்!

பிறகு எவ்வாறு பணம் கிடைத்தது என்று மீரா கேட்க... தெரிந்த சாயி பக்தர்கள் யாரும் ஊரில் இல்லாத காரணத்தினால் தனது நிலையைச் சொல்ல... ரயில்வே போர்ட்டர்களே (கூலித் தொழிலாளர்களே) தங்கள் கைகளில் உள்ள பணத்தைப் போட்டு அபராதம் 41 ரூபாய் மற்றும் பணம் தேடி அலைந்த ஆட்டோ செலவு 50 என்று மொத்தத்தையும் தருகிறார்கள்! இல்லாதவர்களுக்கு இல்லாதவர்களே உதவ முன்வருவார்கள்! என்பதையும் தொந்தரவு செய்யும் முன்பின் தெரியாதவர்க்கு உதவாமல் விலகி இருப்பது பற்றியும் மீராவும் சஞ்ஜெய்யும் பாடம் கற்றுக் கொள்கிறார்கள்!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 112 - 127 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


பாபா விட்ட வழி என்று வாழ்க்கையை நாம் நடத்துகிற போது நமக்குள்ளே ஒளிந்திருக்கும் மனோ தைரியம் தானாக ஒளிர்கிறது! எதிர் வரும் சூழ்நிலையோடு முட்டி மோதாமல் அமைதியாக..‌அதுவும் பாபா சங்கல்பமே என்று உணர்ந்து வாழ்வை நாம் நடத்திச் செல்லும் பக்குவமும் அது தந்துவிடுகிறது! அதுவே ஞான வாசலை படார் எனத் திறக்கிறது! ஞானம் சேராத பக்தியால் எந்த வித பயனுமே இல்லை!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக