தலைப்பு

சனி, 1 ஏப்ரல், 2023

சாது சம்மேளனத்தில் ஸ்ரீ சத்ய சாயி பற்றிய சத்திய வாக்குமூலங்கள்!

எவ்வாறு இரு இல்லறத் துறவிகளுக்கு சாதுசம்மேளனத்தில் கலந்து கொண்ட ஞானிகள் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பற்றிய தங்கள் பேருணர்வை பகிர்ந்து கொண்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறார்கள் எனும் மிக முக்கிய சுவாரஸ்ய பதிவு இதோ...


அது 1970 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்! மீரா - சஞ்ஜெய் இருவரும் இல்லறத்துறவிகள் மாதா ஸ்ரீ ஆனந்தமயி தம்பதிகள் போல்... அந்த ஆண்டு அதே மாதம் நாக்பூருக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்! அமராவதியில் ஒரு உறவினர் வீட்டில் தங்கி இருந்த போது சியாம் பாபா எனும் சாது அங்கே வந்திருந்த... மனிதர்களின் முன்னிலையில் வராத சாதுக்களை தான் ஒருங்கிணைத்து மக்களுக்கு தரிசனம் செய்விக்கப் போவதாகவும் அதற்காக சஞ்ஜெயிடம் உதவி கேட்கிறார்...

இல்லறத் துறவிகள்  மீரா - சஞ்ஜெயானந்த்

சஞ்ஜெய் ஷிர்டி சாயி பக்தர்... நன்றாக பாடுபவர்... ஆக அதனை அறிந்த சியாம்பாபா அவரது பாடல் சேவையை பயன்படுவதற்கு அழைக்கிறார்! 

பிறகு அந்த சாது சம்மேளனத்தில் நிகழ்ந்த அனைத்தும் ஆச்சர்யமயமானது!


அது 15 ஜனவரி 1970. சாது சம்மேளனம்! சாதுக்களின் ஒருங்கிணைப்பை சாது சம்மேளனம் என்பர்... வெவ்வேறு வகையான, வெவ்வேறு ஆன்மீக வழிமுறைகளை கடைபிடிக்கும் சாதுக்கள் இருப்பர்... சாதுக்களின் ஞானிகள், மகான்கள், யோகிகள் என கதம்பமாக அமர்ந்திருப்பர்...

மீரா - சஞ்ஜெய் இருவரும் பாடல் பாடி சம்மேளனத்தில் கானத்தால் இழையோடிக் கொண்டிருக்கிறார்கள்! 

மேடையில் ஒவ்வொரு சாது மகானும் பேச ஆரம்பிக்கிறார்கள்...🌷புண்டலீக் பாபா:

"சஞ்ஜெய்! என்னை சத்ய சாயி பாபாவிடம் அழைத்துச் செல்! நான் அங்கஹீனன்! என்னால் தனியாகப் போக முடியாது!" என்று குஜராத்தி மொழியில் பேசுகிறார்! 

"ஸ்ரீ சத்ய சாயி பாபா ரொம்ப சக்தியுள்ள பகவான்! இது போன்ற அவதாரம் மறுபடி மறுபடி பூமிக்கு வருவதில்லை! நீ எப்படியாவது அவரது இடத்திற்கு என்னை கூட்டிச் செல்!" 


🌷ஹரிஹர் பாபா:

"நான் சத்ய சாயி பாபாவுக்காகவே இங்கே வந்திருக்கிறேன்! 'டகா பவன்' எனும் அடர்ந்த கடினமாக காட்டில் என் இருப்பிடம்! அங்கே சிங்கம்- புலி- கரடி தான் என் நண்பர்கள்! 

ஸ்ரீ சத்ய சாயி பாபாவை என் தியானத்தில் கண்டேன்! ஆனால் நான் அவர் தரிசனத்திற்கு செல்ல முடியாது! அவர் என்னை போன்றவர்கள் அருகே வர அனுமதிப்பதில்லை! நீங்கள் பெரும் பாக்கியசாலிகள்...

அதனால் தான் அவரை தரிசிக்கிறீர்கள்! "ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் மிகவும் அபூர்வமான அவதாரம்... காணக் கிடைக்காத அவதாரம்! எந்த விதத்திலும் அவருடனான உங்கள் பந்தத்தை துண்டிக்க வேண்டாம்! ஸ்ரீ சத்ய சாயி பாபா கடினமான விதிகளை விதிப்பார்! அதில் நீங்கள் வெற்றியை காணுங்கள்! அப்பொழுது அவர் உங்களை குழந்தை போல் பார்த்துக் கொள்வார்!" என்று மிக உருக்கமாக பதிவு செய்கையில் அவர் கண்களில் இருந்து கண்ணீர் உருண்டோடுகிறது!


🌷பாஞ்சலே காவ்கர் மகராஜ்:

காம் கிராமத்தை சேர்ந்த இவரை சாம்ப் வாலா பாபா (பாம்புகளின் பாபா) என அழைப்பார்கள்! அவர் மேடை மீது ஏறிய போது அவர் கை காலில் சுருண்டிருந்த பாம்புகள் விடுதலை பெற்று சஞ்ஜெய் பக்கம் ஊர்ந்து வருகிற போது... "பேட்டா! இவர்கள் சத்ய சாயி பாபாவின் குழந்தைகள்.. ஆகவே அவர்களுக்கு வணக்கம் செலுத்தி பின் திரும்பி வாருங்கள்!" என்கிறார் அந்த பாம்பு பாபா.. அவர் சொன்னபடியே அந்தப் பாம்புகள் செய்கின்றன!

"சத்ய சாயி பாபா ரொம்ப தயாமயன்! சஞ்ஜெய்! , அவருக்கு பிடிக்காத காரியத்தை நீ ஒருபோதும் செய்யாதே! அவர் மனம் கடலை விட விசாலமானது! நான் ஒரு சாதாரண சாதுவாவேன்! அவர் மகிமை- குண கணங்கள்- லீலைகள் எவற்றையும் வர்ணிக்க இயலாது! யார் அவரைப் பார்த்திருக்கிறாரோ அவரும் அவரைப் பற்றி சொல்ல முடியாது! யார் அவர் மகிமையை சொல்ல முடியுமோ அவர்கள் அவரை பார்க்க முடியாது!" இந்த இறுதி வார்த்தைகள் சொன்ன போது அந்த பாம்பு பாபா ஏதோ சூனியத்தில் நிலைத்து நிற்பதாகக் காட்சி அளிக்கிறார்!


🌷பால கஜானன் பாபா:

அவரை சஞ்ஜெய் - மீரா பார்த்த போது வயது வெறும் ஆறே! கனத்த கருத்த உருவம்! கனத்த விரல்கள், பூனை கண்கள் , மிகவும் அழகான உருவம் (கஜானன் பாபாவின் உருவம் வர்ணிக்கப்படுகிறது) 

அவர் மீராவை பார்த்து 

"தீதீ (அக்கா) என்னை சத்ய சாயி பாபாவிடம் அழைத்துச் செல்! " 

சஞ்ஜெயிடம் "பாவூ (அண்ணா) நீ புட்டபர்த்தி செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்!" என்கிறார்!

பிறகு மீரா மடியில் அமர்ந்தபடி "எனக்கு தெரியும்.. சத்ய சாயி பாபா மிகவும் பெரிய பகவான்! தனது இரண்டு கைகளையும் விரித்துக் காட்டியபடி "இவ்வளவு பெரிய தேவன்!" என்று சொல்லியபடி கண்கள் கசக்கி அழ ஆரம்பித்தார்! மீரா- சஞ்ஜெய் இருவருக்கும் கண்கள் குளமாயின...


🌷காட்டேல் நாகப்பூர் குலாப் பாபா:

அவர் பெற்ற சத்ய சாயி தரிசனத்தை விளக்க ஆரம்பிக்கிறார்! 

"ஹரே சஞ்ஜெய்! அந்த புட்டபர்த்தி பாபா மிகவும் குறும்புக்காரன்! இவரே தான் அந்த வெண்ணெய் திருடன் கோபால கிருஷ்ணன், அவரை மிகவும் ஜாக்கிரதையாக மனதில் கட்டி வைத்துக் கொள்ளுங்கள்... இல்லாவிட்டால் பிசைந்து கொண்டு தப்பித்து ஓடிவிடுவார்! அவருக்கு தப்பித்துக் கொண்டு ஓடும் (கோபிகைகளிடம் இருந்து) வழக்கம் உண்டு! எனக்கு அந்த புட்டபர்த்தி பாபாவை நன்றாக தெரியும்!" என்கிறார்!

அவர் சொல்லியது ஷிர்டி சாயி சத்சரித 4 ஆம் அத்தியாயத்தில் ஷிர்டி பாபா தாசுகணுவிற்கு "விட்டல் பாட்டில் (பாண்டுரங்கன்) வந்தார் இல்லையா? கொஞ்சம் நீ ஏமாந்தால் தப்பித்து ஓடிவிடுவார்!" என்றே அதே வார்த்தையை குலாப் பாபாவும் சொல்கிறார்! மேலும் 

"அது போன்ற சுலப-துர்லப அவதாரம் ஸ்ரீ சத்ய சாயி பாபா !" என்று "போல்! நித்ய சத்யாய நமஹ!" என்று தன் பேச்சை நிறைவு செய்கிறார்!


நமது பாரத நாட்டை நித்திய உற்சவ நாடாகச் சொல்வார்கள்... ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு பண்டிகை நிகழ்ந்த வண்ணம் இருக்கும்! அதுபோல் பிரசாந்தி நிலையத்திலும் நித்திய உற்சவங்கள் நடந்து கொண்டே இருக்கும்! அதனால் தான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவை "நித்ய உற்சவாய நமஹ" என்றும் சொல்கிறார்கள்! 


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 14 - 17 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெய் ஆனந்த்) 


ஞானிகளும் மகான்களுமே இறைவன் ஸ்ரீ சத்ய சாயியை உணர முடியும்! காரணம்- அவர்கள் இறை அலைவரிசையில் தங்களை தியானத்தில் டியூன் செய்து கொண்டவர்கள்! எங்கும் வாசிக்கக் கிடைக்காத இந்த அபூர்வப் பதிவின் மூலமும் ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி என்பது இன்னொரு முறை அழுத்தம் திருத்தமாக பதிவாகி நம் இதயத்தில் பக்தி சேர்த்திருக்கிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக