தனது பக்தர்கள் ஒரு அசைவம் உண்கிற வீட்டில் சூழ்நிலை காரணமாக இருந்தபோதிலும் எவ்வாறு அந்த குடும்ப நபர்களை பாபா சைவமாக்குகிறார் அதற்கு அவர் புரிந்த லீலா விநோதங்கள் என்னென்ன? சுவாரஸ்யமாக இதோ...
இல்லறத் துறவிகளான சஞ்ஜெய் - மீரா சஞ்ஜெய் வீட்டிற்கு வருகின்றனர்.. அது அசைவம் உண்கிற வீடு! ஏற்கனவே மகன் சஞ்ஜெய் மீது கோபமாக இருந்த அவரது
தந்தை.. மருமகள் ஜைன மதம் ஆகையினாலும் பிறந்ததிலிருந்து அசைவமே உண்ணாவதர் என்ற போதும் அந்த துர்மணம் மனதில் கூர் ரணம் தரும் ஆயினும் அவர் இறைச்சி வாங்குவதை நிறுத்தவில்லை!
சஞ்ஜெய் அம்மா தனது கணவரின் செய்கையை குறித்து வருத்தப்படுகிறார்!
"பாபாவுக்கு எல்லாம் தெரியும்.. நீ கவலைப்படாதே! அவர் இந்த பிரச்சனையை கவனித்துக் கொள்வார்!" என்று சஞ்ஜெய் சமாதானப்படுத்த... அன்று அவர்கள் வீட்டில் சாயி பஜன்..
வேண்டாம் என்று சஞ்ஜெய் தாய் வற்புறுத்தியும் தந்தையோ வழக்கம் போல் மீன், இறைச்சிகள் வாங்க கடைத் தெருவுக்கு கிளம்ப...
இங்கே பஜனை நடக்கிறது...அங்கே மீன் வேட்டை நடக்கிறது... பஜனை தொடர்ந்து நிகழ்கிறது.. சற்று நேரத்தில் பின்வாசல் வழியாக வந்த மீராவின் மாமனார் தனது மனைவியை அழைக்க.. அவர் கோலத்தைப் பார்த்து பதைபதைக்கிறார் அவர் மனைவி!
கையில் காலிப் பையும் உடல் முழுதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறார்... உடனே சென்று குளிக்கிறார்... பிறகு நிகழும் பஜனையில் வந்து நின்றபடி பாபா படத்தின் முன் கை எடுத்து வணங்கி கண்கலங்குகிறார்! அன்று முதல் அசைவத்தை துறக்கிறார்! ஏன்? என்ன நடந்தது?
பையில் நிறைய மீன்கள் வாங்கி வருகிற சமயத்தில் சேற்றில் விழுந்து அந்த சேறோடு சேறாக மீன்கள் விழுந்து வீணாகி... எதிரெதிரே லாரியும் பேருந்தும் அவரை மோத வர.. உயிர் உறைந்து திடுக்கிடுகிறார்... பிறகு ஊர் மக்கள் காப்பாற்ற தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீடு நோக்கி மீனும் வேண்டாம் இறைச்சியும் வேண்டாம் என்று அதிர்ந்தபடியே வருகிறார்!
அன்று முதல் வீட்டில் செத்த இறைச்சியின் துர்நாற்றம் இல்லை.. பூஜைக்கான சாகா மலர்களின் வாசனையே பரவியது!
ஒருமுறை பஜனையில் சிறு விளக்கு.. அதில் எண்ணெயே ஒரு துளிதான் ஊற்ற முடியும்! அது அணையா விளக்காக பல மணிநேரம் ஒளி விட்டதைக் கண்டு அவர்களின் இதய விளக்கில் ஆச்சர்ய ஒளி பாய்ச்சப்படுகிறது!
ஒருமுறை அவர்கள் வீட்டில் போஸ்ட் மாஸ்டர் சுவாதி முக்தாவின் இரு குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர்.. அப்போது அறை முழுவதும் தெய்வீக வாசனை பரவியபடி இருக்க... அந்த சமயம் ஒரு கிருஷ்ணர் காலண்டர் கீழே விழுகிறது! அதை வெறும் வாசனை என்று குறிப்பிடாமல் சுவாசனை என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர் மீரா!
அந்த வாசனை நுகர்ந்து மீரா மற்றும் சஞ்ஜெய் தாய் வீட்டுக்குள் வர எத்தனிக்க.. சஞ்ஜெய் தடுக்க.. காலண்டர் விழுந்த சுவற்றில் ஸ்ரீ கிருஷ்ண ரூபம் விபூதியில் தெரிய.. வீடு முழுக்க விபூதி வளர ஆரம்பிக்கிறது! பாபா படம் முதல் சுவர் அதை உதிர்க்க பிறகு தரை என... தரை முழுதும் விபூதி கலந்து போகிறது... அது வெறும் மண்ணால் மெழுகிய தரையே! விபூதி வளர்கிறது அதை அனுபவித்த சஞ்ஜெயின் தந்தைக்கு பாபாவின் மேல் பக்தி வளர்கிறது! ஊரார் அந்த அற்புதத்தை காண கூடிக் குவிகின்றனர்... பத்திரிகை ஊடகத்தில் இருந்து சஞ்ஜெய் தந்தையாரை பேட்டி எடுக்க வருகிறார்கள்.. அனைவரிடமும் பாபாவின் மகிமை குறித்து பேசுகிறார் சஞ்ஜெய்! அடுத்த நாளே அது பத்திரிகையில் செய்தியாக வெளி வர மேலும் மக்கள் கூட்டம் குவிகிறது... சிருஷ்டி மழையாகப் பொழிந்த விபூதியும் குங்குமமும் ஒன்றோடொன்று இணைந்து சிவசக்தி ஐக்கியமாய் பாபாவின் அம்சத்தை குறியீடாக காண்பவர் இதயத்தில் பதிக்கிறது! தரிசிக்க வந்தவர்களுக்கு எல்லாம் விபூதி பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன...! சஞ்ஜெய் குடும்பமே தீவிர சாயி பக்தராக மாறுகிறது!
இதற்கிடையில் ஓடிச் சாடி நடந்து வந்த பைலட் மேல் மோதி.. பைலட் கோபப்பட... இந்த களேபரத்திலும் இதமான பாபாவின் கருணை ததும்பி வழிய...
அந்த வெள்ளை ஆடை அணிந்து இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றது சாட்சர் பாபா எனும் சத்தியத்தை இருவரும் உணர்கிறார்கள்!
இதைப் போலவே 1970 காஷ்மீர் ஸ்ரீ நகரில் ஆரம்பித்து ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரிநாத், மவுன்ட் அபு, அஜ்மிர், சூரத் என பாபா எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் இருவருக்கும் நிகழ்ந்த அற்புதங்களில் எதை எழுத.. எதை எழுதாமல் விட என்று திக்குமுக்காடிப் பதிவு செய்கிறார் நூலாசிரியர் மீரா!
இதற்கிடையில் காஷ்மீர் ஸ்ரீநகரில் குசும்தேவி என்ற அம்மையாரோடு மீரா பாபாவை வரவேற்கப் புரிந்த மலர் ரங்கோலியில்(மலர்க் கோலம்) பாபா தன் பாதங்களை வைக்க வைக்க அந்த மலர்ப் பாதையில் விபூதி பதிந்ததை எண்ணி எண்ணி வியக்கிறார் அவர்!
நெஞ்சம் முழுக்க உலக நினைவையே கபளீகரம் செய்யக்கூடிய சாயி நினைவுச் சுனாமி ஆன்மா வரை அவர்களை ஆக்கிரமிக்கிறது!
(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 142 - 148 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்)
ஓரிரு சாயி அனுபவமே அந்த மனித ஆன்மாவை பிறவியை கடைத்தேற்ற பேரருள் புரிகிற போது வாழ்நாளெல்லாம் சாயி அனுபவங்களால் கரைந்து ஆன்மாவை அதனாலேயே சுத்தீகரித்த சஞ்ஜெய் மீரா போன்ற இல்லறத் துறவிகளின் அனுபவங்களோ அவர்கள் மேல் ஒளியை வீசுகிறது.. இதனை வாசிப்பவரை பக்குவத்தில் செதுக்க அதுவே உளியை வீசுகிறது!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக