தலைப்பு

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

இரண்டு நாடோடி பக்தர்களின் செருப்புகளை கையில் ஏந்தியபடி வாசலில் காத்திருந்த பாபா!

இப்படி எல்லாம் நடந்திருக்குமா? என்று வியக்கும் அளவிற்கு தனது பக்தர்களுக்கு தானே சேவகம் புரிந்த பாபாவின் கருணை ஆதாரப்பூர்வமாக விளக்கப்படுகிறது சுவாரஸ்யமாக இதோ...


அது 1969 ஆம் ஆண்டு வாக்கில் நிகழ்கிற சம்பவம்! நிர்கதி இன்றி பம்பாயிலிருந்து வந்து பிருந்தாவனத்தில் பாபாவோடு தங்கிய இல்லறத்துறவிகள் சஞ்ஜெய் -மீராவை ஒரு நாள் நல்ல வண்ணம் தனது நேர்காணல் அறையிலேயே திருமணம் நிகழ்த்தி வைத்து பம்பாய்க்கு வழி அனுப்புகிறார்...

பிரியா விடை பெற்று பெங்களூரில் சேவாதளர் ஜவேரி வீட்டுக்கு வருகிறார்கள்! அங்கே ஜவேரி தம்பதியர் இல்லாததால் அவர்களின் குழந்தை பிங்கியோடு அங்கே பேனர் ஜி எனும் ஒரு பக்தர் வீட்டுக்கு பாபா வரப்போகும் தகவலை தெரிந்து கொண்டு அங்கே செல்ல எத்தனிக்கிறார்கள்!


பேருந்தில் சென்றால் நேரம் எடுக்கும் என...குறுக்கு வழியில் செல்கிறார்கள்... முள் வேலிக்குள் புகுந்த பேனர் ஜி வீட்டுக்கு விரைகிறார்கள்! தூரத்திலாவது பாபா தரிசனம் 

பெற்று விட வேண்டும் என்ற நோக்கமே சஞ்ஜெய் மீராவுக்கும்... ஏற்கனவே பல மைல் நடந்தே பிருந்தாவனத்திற்கு வந்தவர்களுக்கு இந்த தூ.....ரம் ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை! பேனர்ஜி வீடும் வந்துவிடுகிறது! வாசலிலேயே அமர்ந்து கொள்கிறார்கள்... பாபா ஒருவேளை உள்ளே இருப்பாரோ என்று கேட்ட சிறுமி பிங்கியிடம் இல்லை என்று மறுக்கிறார் சஞ்ஜெய்! 

வெளியே கூட்டமில்லை... வாசலில் செருப்புகள் இல்லை... ஆகையால் சூழ்நிலை பாபா அங்கே விஜயம் செய்ததாக சொல்லவில்லை!


காத்திருக்கும் நொடிகளில் மீரா சஞ்ஜெயை வழக்கம் போல் பாடச் சொல்கிறார் .. அவர் ஒரு அற்புதமான ஷிர்டி பாபா பஜன் பாடலை பாடுகிறார்‌... "ஷிர்டி வாலே சாயிநாத் தர்சன் திகானா (தரிசனம் தருவாயே ஷிர்டியில் இருக்கும் சாயிநாதா) பிறகு "ஷிர்டி கே துகாரே துஜே தேரே பக்த புகாரே!" ஷிர்டியில் இருப்பவரே நீ தான் இந்த பக்தனின் காவலன் என்ற ஒரு பாடல்! அது முடிகிறது.. கார் சப்தம் கேட்கிறது... இருவரும் பரவசமாக எழுந்து நிற்கிறார்கள்... கார் கதவு திறக்கப்படுகிறது...


"ஆஹா.. நீங்கள் இங்கேயும் வந்துவிட்டீர்களா? பம்பாய் செல்லவில்லையா?" என பாபா அவர்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே வாசலில் நெருங்குகிறார்...

பிறகு பாபா இரண்டு கைகளையும் மேல் எடுத்து "வா குமார் உள்ளே வா!" என்று உள்ளே அழைக்கிறார்! இதை எதிர்பார்க்காத சஞ்ஜெய் குமார் - மீரா பதட்டத்தில் செருப்புகளை தோட்டத்தின் புதரில் எறிந்துவிட்டு பாபா பின்னே ஓடிப் போகிறார்கள்!

பாபா ஒரு ஊஞ்சலில் அமர்ந்து கொள்கிறார்! 

அவரின் காலடி அருகே மீரா - சஞ்ஜெய் மற்றும் பிங்கி!

அவர்களின் அருகே ஒரு வெளிநாட்டு தம்பதியினரும் அமர்ந்திருக்கிறார்கள்! அவர்கள் ஏற்கனவே பாபா உடன் அங்கே காரில் இறங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!


அப்போது ஊஞ்சலில் அமர்ந்தபடியே பாபா "குமார்! சில பேர் பஜனையை எப்படி பாடுவார்கள் தெரியுமா? நான்கு நாள் பட்டினி கிடந்து சாப்பிடாதவர் போல் பாடுவார்கள்... அப்படிப் பட்ட சக்தி இல்லாத பஜனைகளில் பாபாவுக்கு இஷ்டமே இல்லை!" என்று பட்டினிகள் பஜனை செய்வதை அப்படியே இமிடேட் செய்து பாடி காட்டுகிறார் பாபா!

மேலும் "பாபாவுக்கு அன்போடு சிரத்தையோடு பாடும் பஜனை தான் இஷ்டம்... குமார்! நீ பாடும் பஜனை பாபாவுக்கு ரொம்ப இஷ்டம்!" என்கிறார் பாபா! பிறகு தனது வெற்றிலை டப்பாவிலிருந்து ஒரு வெற்றிலையை எடுத்தபடி மேலும் "குமார்! சுவாமிக்கு நீ என்றால் மிகவும் இஷ்டம்!" என்று சொல்கிறார்...

வெற்றிலையை மென்று கொண்டே "குமார் ! மணி 8.. நீ ஜவேரி வீட்டுக்குப் போக வேண்டும்! கிச்சடி சாப்பிடணும்... வண்டியை பிடிக்கணும்...எழுந்துரு! எழுத்துரு!" என்று வேகப்படுத்துகிறார் பாபா!


பிறகு காற்றில் கைவிரல்களைச் சுற்றி விபூதி வரவழைத்து கொடுத்து...அவர்களின் நெற்றியில் இட்டுவிட்டு... முதுகில் கைவைத்தபடி "தசராவுக்கு வா! சுவாமி பணம் அனுப்புவார்!" என்று கேட் வரை வந்து வழி அனுப்புகிறார் பாபா! 

மீரா சஞ்ஜெய் பிங்கி வெளியே வந்தபிறகு பேருந்து பிடிக்க ஓட ஆரம்பிக்கிறார்கள்...

பாபா வாசலில் நின்று கொண்டே "ஓ குமார் ! குமார்!" என்று மறுபடியும் கூவி அழைக்கிறார்! "ஹரே பாபா மறுபடியும் அழைக்கிறார் !" என்று திரும்பி அவர்கள் ஓடி வர...

"குமார்! உங்கள் செருப்பைக் கூட அணியாமல் அவசரமாக போகிறீர்களே!" என்று நிதானமாகப் புன்னகைத்தபடியே சொல்கிறார்! 

சஞ்ஜெய் - மீரா அந்த காட்சியைப் பார்த்து திடுக்கிடுகிறார்கள்!

இதென்ன கொடுமை...?! இதென்ன விபரீதம்...?!

ஆம்! அப்போது பாபா அவர்களின் செருப்புகளை கைகளில் ஏந்தியபடி நின்று கொண்டிருக்கிறார்!

அந்தக் காட்சி அவர்களை நிலைகுலையச் செய்கிறது! 

*எந்தவித அருவெறுப்பும் தர்மசங்கடமும் இல்லாமல் தனது பக்தர்களின் செருப்புகளை பாபா தனது கையால் ஏந்திக் கொண்டிருக்கிறார்!*

உடனே பாபா கைகளிலிருந்து  செருப்புகளை அவர்கள் இழுத்துக் கொண்டபடி பாபாவின் முகத்தையே பார்க்கிறார்கள்! பாபாவும் அவர்களை அன்போடு பார்த்துக் கொண்டே இருக்கிறார்! 


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 89 - 91 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


இந்த பேரன்பை பாபாவிடம் தவிர வேறு யாரிடம் நம்மால் அனுபவிக்க முடியும்? எந்த ரிஷிகள் தனது சீடரின் பாதுகையை கையில் ஏந்தி இருக்கிறார்கள்?? பாபா இறைவனே என்பதற்கான உதாரணம் இது! எப்படி அகந்தையற்ற அன்போடிருக்க வேண்டும் என்பதை பாபாவே நமக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுகிறார்!

ஒரு ரிஷி நெஞ்சில் உதைத்த போது ஸ்ரீ கிருஷ்ணர் "அய்யோ உங்கள் கால்கள் வலித்ததா?" என்று அவரது கால்களை பிடித்துக் கேட்டாரே அதே ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்யசாயி என்பதை இன்னுமா நம்மால் உணர முடியவில்லை!?! 


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக