தலைப்பு

புதன், 26 ஏப்ரல், 2023

டிக்கட் இல்லாமல் பயணித்தவர்களிடம் டிக்கட் பரிசோதிக்க வந்த டி.டி.ஆர்!!

எவ்வாறு இரு நாடோடி பக்தரும் பாபா உத்தரவிட்டார் என்ற காரணத்திற்காகவே பாபாவை பிரிய மனம் இல்லாமலும் , கையில் பணம் இல்லாமலும் பயணித்து.. வழிவழியே எவ்வகையான சாயி அற்புதங்களை அனுபவித்தார்கள் என்பதும் விறு விறு வென இதோ...


தசராவுக்கு அழைத்ததால் இல்லறத்துறவிகள் சஞ்ஜெய் - மீரா இருவரும் புட்டபர்த்தி செல்ல வேண்டும்... ஆனால் கையில் பணம் இல்லை... அவர்கள் தஞ்சம் அடைந்திருந்த டாக்டர் நாரம் அவர்களே தர்மாவரத்துக்கு இரு டிக்கட் வாங்கி வர... அவர்கள் புறப்படுவதற்கு முன் சாயி பக்தர் நாயர் பாபாவுக்கு கொடுக்க வேண்டும் என்றே பம்பாய் பிரபல பேடா இனிப்பு டப்பாவை தந்து.. "இதனை  எப்படியாவது நீயே பாபாவை சாப்பிட வைத்துவிடு!" எனக் கேட்டு கொண்டதற்கு... "பாபாவிடம் கொடுக்க என்னால் முடியும்.. பாபா சாப்பிடுவாரா? இல்லையா? என்பது அவர் சங்கல்பமே!" என்கிறார் சஞ்ஜெய்! "பாபா உண்மையிலேயே ஷிர்டி பாபா அவதாரம் என்றால் நிச்சயமாக சாப்பிடுவார்!" என்று சொல்கிறார்!

"உனக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தால்... நானும் முயற்சிக்கிறேன்!" என்று பதில் சொல்லித் தான் சஞ்ஜெய் வருகிறார்!


தசராவும் நிகழ்கிறது.. கூட்டம் குறைகிறது.. சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார் சஞ்ஜெய்! அந்த சூழ்நிலையிலும்... பாபாவிடம் அந்த பேடா டப்பாவை நீட்ட.. பாபா அதனை ஆசீர்வதித்து சென்றுவிடுகிறார்! ஆனால் சாப்பிடவில்லை... சஞ்ஜெய் விடவில்லை..மேலும் முன்னேறுகிறார்.. சேவாதளர் தடுக்கிறார்... "பாபாவுக்கும் எனக்கும் இடையே நீ வரவேண்டாம்!" என்று சொல்லிவிட்டு மேலும் முன்னேற... முன்பு செய்தது போலவே பேடா டப்பாவை தொட்டுவிட்டு நகர்கிறார்.. விடாக்கண்டன் சஞ்ஜெய் விடவே இல்லை.. மேலும் முன்னேறுகிறார்... மீண்டும் சேவாதளர் தடுப்பணை.. உடைத்துவிட்டு யாருக்கும் தெரியாமல் வேறு வழியாக சென்று பூர்ண சந்திர அரங்கத்தில் நுழைந்துவிடுகிறார்! அந்த நொடியில் பாபாவும் சஞ்ஜெயும் மட்டுமே அருகருகே... பாபாவிடம் முட்டிப் போட்டுக் கொண்டு சஞ்ஜெய் "பாபா இது கௌரவப் பிரச்சனை.. நீங்கள் இதைக் கட்டாயமாக சாப்பிட்டே ஆக வேண்டும்!" என்று மனதிற்குள்ளே ஓசை எழுப்பாமல் மௌன கோரிக்கை விடுத்தபடி பேடா டப்பாவை நீட்டுகிறார்.. பாபா அதிலிருந்து ஒரு பேடாவை கிள்ளி வாயில் போட்டுக் கொண்டு நகர்ந்து விடுகிறார்..

தூரத்தில் பார்ப்பவர்கள் அப்படி என்ன இனிப்பு அது என வியக்கிறார்கள்... பக்தன் உளமாற தரும் எதையும் இறைவன் ஏற்பார் என்பதை பாபா உணர்த்திய நொடி அது! பாபா ஏற்றுக் கொண்ட அந்த சஞ்ஜெய் பிரசாதத்தை தாங்களும் சாப்பிட... அவர்கள் சஞ்ஜெயை தேட ஆரம்பிக்கிறார்கள்.. தேடுதல் வேட்டை முடியவில்லை.. சஞ்ஜெய்யோ சூரியன் அஸ்தமனமாகும் வரை சித்ராவதியில் பதுங்கி இருக்கிறார்! மீராவையும் சஞ்ஜெய் எங்கே? என்று பிற பக்தர்கள் கேட்டு துளாவுகிறார்கள்.. மீராவுக்கும் சஞ்ஜெய் செய்த தற்காலிக பதுங்குதலின் இடம் தெரியவில்லை... இரவு வந்து தான் தங்கி இருந்த இடம் சொல்ல.. மீராவுக்கு சில இனிப்புகள் கொடுத்துவிட்டு.. மீதம் உள்ளதை நாயருக்கே அனுப்பி விடுகிறார்! 


பிறகு அவர்கள் புட்டபர்த்தியில் இருந்து புறப்படும் நாள் வந்தது.. அது 19 ஆம் தேதி.. பாபாவே நாளை குறிக்கிறார்... கஸ்தூரியிடம் சொல்லி அனுப்புகிறார்... போக விருப்பமின்றி இருவரும் (சஞ்ஜெய் - மீரா) பாபாவிடமே செல்கிறார்கள்... "ஆம் குமார்.. உங்களை போகச் சொல்லி கட்டளை இட்டேன்! நீங்கள் போகலாம்!" என்கிறார் 


சஞ்ஜெய் - மீரா கண் முட்டிய நீருடன் குரல் உடைந்தபடி "உங்களை பிரிந்து எங்கே செல்வோம் பாபா?" என்று கேட்கிறார்கள்! அதற்கு சஞ்ஜெயிடம்

"உன் மாமியார் வீட்டுக்குச் செல்!" என்கிறார் பாபா! இருவரின் இதய மாமியார் வீட்டில் (இதய ஜெயிலில்) பாபாவை அடைத்துவிட்ட இருவராலும் அவரை பிரிந்து எங்கேயும் செல்ல இயலவில்லை! பாபா சொல்லிவிட்டார்.. இருவருக்கும் பாபாவே இறைவனும் குருவும்.. ஆகவே வேறு வழியின்றி பறவையைப் பிரியும் சிறகுகளாய் கிளம்புகிறார்கள்...

மாமியார் (மீராவின் தாயார்) எங்கே இருக்கிறார்? முகவரி கூட இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை.. பயணித்து பயணித்து கண்டுபிடிக்க அவர்களிடம் கையில் பணமும் இல்லை.. பாபா விட்ட வழி என்று கிளம்புகிறார்கள்! 

மரமாய் நிற்கிறார்கள்...எதிரே தர்மாவரம் பஸ்! ஏறிக் கொள்கிறார்கள்! பணம் இல்லை டிக்கட் எடுக்க.. திடீரென 10 நிமிடங்களில் வட நாட்டவர் வந்து பணம் இருக்கிறதா? என்று கேட்டு 15 ரூபாய் தருகிறார்... அவர் பெயர் நர்கீஸ்.. பெரும் ஆச்சர்யம்! பேருந்து தர்மாவரத்தில் நிற்கிறது.. நாம் இல்லாமல் பாபாவுக்கு அவதார ஜெயந்தியே நிகழக் கூடாது... நம்மை ஜெயந்திக்கு கூட பாபா அங்கே தங்க வைக்க சம்மதிக்கவில்லை என்ற நினைவு ஆற்றாமை இருவருக்கும்... நேராக போஸ்ட் மாஸ்டரிடம் வந்து ஒரு ஃபோன் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.. யாருக்கு? என்று அவர் விசாரித்தவுடன் "சத்ய சாயி பாபாவுக்கு!" என்கின்றனர்! "ஓ சத்யாவுக்கா" என்று கேட்டு ஆச்சர்யப்படுகிறார்! "என்ன சத்யாவா?" இருவருக்கும் திக் என்று இருந்தது.. ஆம் அவரும் நானும் பள்ளித் தோழர்கள்.. அப்போதே எங்களுக்கு நிறைய சிருஷ்டி இனிப்புகள் எல்லாம் வழங்குவார்.. எங்களோடு விளையாடுவார் இப்போதோ அவர் பகவான் ஆகிவிட்டார்... நான் வெறும் போஸ்ட் மாஸ்டராகவே இருக்கிறேன்! என்று அவர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த... மறுமுனையில் பாபாவே எடுக்க.. தான் குமார் பேசுவதாக பாபாவிடம் சஞ்ஜெய் தெரிவிக்க... "உன்னை போகச் சொன்னேனே! ஃபோன் செய்யச் சொன்னேனா? இங்கே அதிக நேரம் இருக்காமல் உடனே கிளம்பிவிடுங்கள்!" என்று சொல்லி தொலைபேசி இணைப்பை கட் செய்கிறார் பாபா! இருவருக்கும் ஒரே ஷாக்! 

பிறகு போஸ்ட் மாஸ்டரிடம் பாபா குறித்து நிறைய கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்! அவரே டிபன் வாங்கித் தருகிறார்.. அங்கிருந்து நகிர்கிறார்கள்.. வேறு வழியில்லை.. சாயி கட்டளை அது! நர்கீஸ் கொடுத்த பண மீதியில் ஹைதராபாத் வரை பயணம்.. பிறகு அந்த ரயில்வே ஸ்டேஷனில் தஞ்சம்.. இடையில் ஒரு குஜராத்தி குடும்பத்தின் தொடர்பு ஏற்பட.. சத்திரத்தில் தங்கல்.. அவர்களின் இனிப்பை இருவரும் பகிர்தல்... அப்படியே சில நாட்கள் நகர்தல்...

ஏதாவது சாயி பக்தர்கள் இருக்கிறார்களா? என்று சஞ்ஜெய் தேடி அலைய... தூரத்தில் இருந்து சாயி பஜன் ஓசை... அது இரண்டாம் ரயில்வே பிளாட்ஃபாரம்...பிறகு இருவரும் பஜனில் கலந்து கொள்ள... பிறகு பஜன் இசைத்தவர்கள் இவர்களை விசாரிக்க... இரவு நேரமாகிவிட்டதால் ஒரு சாயி பக்த குடும்பம் இருவரையும் அவர்களின் இருப்பிடம் அழைத்துச் செல்ல..‌ தெரிந்த நபர் காஜீபேட்டையில் இருக்க... அங்கே செல்ல... சஞ்ஜெயின் சாயி பஜனைகள் தொடர... மீண்டும் ஹைதராபாத் வரவேண்டி ரயிலில் ஏற... டிக்கட் எடுக்கவில்லை.. எடுக்க பணம் வேண்டுமே! இந்த ரயில் இல்லை என்றால் ஜெயில்..! சஞ்ஜெய் பயப்படவே இல்லை... தைரியமாக டிக்கட் இல்லாமல் அமர்கின்றனர்... ரயில் சப்தமிட்டு கிளம்ப... சப்தமில்லாமல் சஞ்ஜெய் முன் வருகிறார் டி.டி.ஆர்... 


"உங்கள் டிக்கட் எங்கே?" டி.டி.ஆரின் வழக்கமான கேள்வி... சஞ்ஜெய் பாக்கெட்டில் கைவிடுகிறார்... அது வெற்றுப் பாக்கெட்... "வேண்டாம்! எங்கிருந்து வருகிறீர்கள்?" என்ற ஒரு ஆச்சர்யமான கேள்வியை அந்த அதிசய டி.டி.ஆர் கேட்கிறார்! 

"சாயிபாபா ஆசிரமத்திலிருந்து!" என்று சஞ்ஜெய் தெரிவிக்க..

மகிழ்ச்சி அடைந்த டி.டி.ஆர் "அப்போ எனக்கு பாபாவை பற்றி சொல்லுங்கள்!" என்று அவர்களோடு அமர... கூட்டம் - இரைச்சல் என்பதால் டிக்கட் இல்லாத இருவரையும் முதல் வகுப்பில் அழைத்துக் கொண்டு போய் அமர வைத்து பாபாவை பற்றி நிறைய தெரிந்து கொள்கிறார்!

ஹைதராபாத் வந்தும் கூட தானே பெங்களூர் அழைத்துப் போவதாக டி.டி.ஆர் சொல்லியபடியே அவர்களை அங்கே அழைத்துப் போகிறார்...இப்படியாக இருவரும் அடுத்த நாள் வொயிட் ஃபீல்ட்'டுக்கு வருகிறார்கள்! சஞ்ஜெய் காகா தீட்சித் தம்பி மகனோடு கடைத்தெருவுக்கு செல்ல.. மீரா வெளியே அமர்ந்திருக்க.. பாபா கார் வருகிறது! "இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்.. கேட்டை திற..!" என்று பாபா சப்தமிட்டு உரைக்க... பாபாவின் தரிசன ஏற்றமும் , கோப சீற்றமும் ஒன்றிணைந்து கிடைக்கிறது மீராவுக்கு...! சாவியை தேடும் படலம் ஆரம்பிக்க... பாபாவிடம் சாவி கிடைக்கவில்லை என்று மீரா பதற... தீட்ஷித் எங்கோ சென்றிருக்கும் தகவல் பரிமாறப்பட.. பாபா அப்படியே தனக்குள் ஏதோ பேசி உள்ளே செல்கிறார்... பிறகு சஞ்ஜெய் வந்து நடந்ததை மீரா மூலம் கேள்விப்பட... இருவரும் 3 நாள் தங்குகிறார்கள்.. பிறகு பாபா அவர்களை அங்கிருந்து செல்லுமாறு மீண்டும் கட்டளை!

சஞ்ஜெயும் விடுவதாக இல்லை.. பாபாவும் விடுவதாக இல்லை... பாபா விஷமே கொடுத்தாலும் அதைக் குடித்து ஏப்பம் விடுகிற மனநிலை சஞ்ஜெய் நிலை!

பாபாவின் கட்டளையை கசப்பாக ஏற்று பெங்களூர் வருகிறார்கள் இருவரும்.. சஞ்ஜெய்க்கு காய்ச்சல் வேறு கொதிக்கிறது... மீதமான காசில் வாங்கிய தேநீர் கொதிப்பில் பாபா விபூதியை கலந்து சஞ்ஜெய் குடிக்க.. இருவரும் தூங்கிவிடுகிறார்கள்... காய்ச்சல் குணமாகிவிடுகிறது!

பணத்திற்கு என்ன செய்வது என்று யோசித்து பையில் தேட... அதுவரை இல்லாத பணம் பையில் தோன்ற... அங்கிருந்து பம்பாய்.. சாயி பக்தர் காலேன்கர் வீடு... அப்படியே அங்கிருந்தே பாபா சொல்படி மாமியார் வீட்டு முகவரியை தேடுவதற்கான உத்தேசம்...முதலில் மீராவின் தம்பி வீட்டுக்கு செல்வதான மன ஏற்பாடு.. இடையில் சில சாயி பக்தர் வீட்டில் பஜனை!

பாபாவே தங்களை பார்த்துக் கொள்வார்.. அவரே இருவரது பயண வழிகாட்டி என்ற தீவிர வைராக்கியத்தில் இருவரின் நாட்களும் நகர்கிறது!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 99- 105 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


இறைவன் பாபாவின் பக்தர்களுக்கு நிர்கதியும் இல்லை அதோ கதியும் இல்லை! பரம கதி மட்டுமே பரமானந்தமாய் காத்திருக்கிறது! அதை பல பக்தர்கள் உணரவே முடியாவிட்டாலும் அதுவே சர்வ சத்தியம்! முதலில் பாபா நம்மோடு தான் இருக்கிறார்! எனும் பரம சத்தியத்தை நாம் நம்ப ஆரம்பிக்க வேண்டும்... நாம் நம்பாவிட்டாலும் நம் கூடவே இருக்கிறார் என்றாலும் கூட நம்புகிற போதே பாபாவின் பேரிருப்பை நாம் உணரவும் ஆரம்பித்துவிடுகிறோம்! அந்த உணர்வு பல சாயி அனுபவங்களை நமக்கு தருகிறது! உண்மையான பக்தர்கள் ஒருநாளும் வீணாவதில்லை... அவர்கள் பாபாவின் பாதார விந்த மலர்களில் தேனாகவே காலம் கடந்தும் இனிக்கிறார்கள்!


பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக