தலைப்பு

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

சாக்ஸில் ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியை நீட்டிய அமெரிக்கர்!

பாபா சொல்வது தான் வேதவாக்கு.      ஏன், எதற்கு என்று கேட்காமல் கீழ்ப் படிந்த பக்தர். அந்நிய நாட்டில் முகம் தெரியாத ஒருவர், துப்பாக்கியை காட்டியபோதும், பாபா நாமத்தை ஸ்மரித்து, பகவான் கட்டளையை நிறைவேற்றிய பக்தர், இறுதியில் வெளிப்பட்ட பாபாவின் பரவச லீலை. ஒரு திகில் படப் பாணியில் , தன் கருணா சக்தியால், பாபா நிகழ்த்திய விநோத லீலை. வாருங்கள் சாய்ராம் V.சீனிவாசன் அவர்கள் கூறும் பாபாவின் விசித்திர லீலை ஒன்றை இங்கு காணலாம்... 


🌹அமெரிக்காவில் முகம் தெரியா நபரை சந்தித்துவிட்டு வா - பாபாவின் கட்டளை:

அது அந்தக் கால நிகழ்வு. பாபா அப்போது அடிக்கடி மெட்ராஸ் (தற்போது சென்னை) வருவது வழக்கம். இப்படித்தான், திடீரென்று, அடுத்தவாரம் மெட்ராஸ் செல்வதாக அறிவித்தார் பாபா.

நான் அவருடைய அப்பயணத்தில் கலந்து கொள்ள ஆவலுடன் ஒரு எதிர் பார்ப்பில் இருந்தேன். அப்போதுதான் அவசர, தவிர்க்க இயலாத மீட்டிங் ஒன்றுக்கு,  சிகாகோ செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தர்ம சங்கடமான நிலைமை. பாபாவின் சென்னைப் பயணத்துக்குள் திரும்பிவிட இயலுமா. ஒன்றும் புரியவில்லை. தவித்த மனதுடன் பிருந்தாவன் சென்று பாபாவை சந்தித்து விவரம் கூறி அவரது அனுமதி கோரினேன். தயாளுவான பாபாவும் சரி என்று தலையசைத்தார். பிறகு என்னை நோக்கிய பாபா "உன் அமெரிக்க விஜயம் முடிந்து திரும்பும் முன், அங்கு ஓரிடத்திற்கு சென்று குறிப்பிட்ட ஒருநபரை சந்தித்துவிட்டு வா" என  உத்தரவிட்டார். இதில் என்ன வேடிக்கை என்றால் இடம் மற்றும் நபர் பெயரைக் குறிப்பிட்ட பாபா, மேற்கோண்டு எந்த தகவலும் அளிக்காமல் சென்றுவிட்டார். நான் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தேன். ஆனாலும் பாபாவின் கட்டளையை செயல் படுத்தியே தீரவேண்டும் அல்லவா. 


🌹 எதற்காக என்னை சந்திக்க வேண்டும்:


சிகாகோவில் என் பணி முடிந்தது. அந்த முகம் தெரியா நபருக்கு நான் ஒரு போன் செய்து, அவரை சந்திக்க வருவதாகக் கூறினேன். அவர் சற்று தடித்த குரலில் இந்த சந்திப்பு எதற்காக எனக் கேட்டார். தெரியாது என்று கூறினால், அவர் சம்மதிக்கமாட்டார்  நினைத்து, காரணத்தை நேரில் கூறுவதாகக் கூறினேன். அவர் மறுப்பதற்கு முன்,  "சாய்ராம். நான் தற்போது  புறப்பட்டு விட்டேன். உங்களை விமான நிலையத்தில் சந்திக்கிறேன்" எனக்கூறி பேச்சை முடித்துக் கோண்டேன்.  

சிகாகோவிலிருந்து அவர் இருக்கும் இடம் 14 மணி நேர விமானப் பயண தூரத்தில் இருந்தது. பாபாவை பிரார்த்தித்தபடி, விமானப் பயணம் செய்து, அந்த விமான நிலைய வளாகத்தை அடைந்தேன். அவரை அங்கு கண்டுபிடித்தேன். சாய்ராம் என்று கூறிய அவர் ஒரு மேல்தட்டு மனிதராகத் தோற்றம் அளித்தார். மேற்கொண்டு ஒன்றும் பேசவில்லை. அவரைப் பின் தொடர்ந்தேன். விலை மதிப்புள்ள ரோல்ஸ்ராய் காரில் அவருடன் ஏறி அமர்ந்தேன். எங்களிடையே ஒரு கனத்த மௌனம் நிலவியது. அவர் தனது காரை பேசாமல் ஓட்டிச் சென்று, ஒரு ஆடம்பர பங்களாவில் நிறுத்தினார்


🌹 சாக்ஸின் உள்ளிருந்த நீலநிறத் துப்பாக்கி:


14 மணி நேரப் பிரயாணம். மணியோ நடுநிசியைத் தாண்டி அனைவரும் உறங்கும் சமயம். இருவரும் காரைவிட்டு இறங்கினோம்.

ஓய்வெடுங்கள் என்று கூறாத அவர், தமது வரவேற்பரைக்கு என்னை அழைத்துச் சென்றார். நட்பற்ற குரலில் கேட்டார் "சந்திக்க வந்ததன் காரணம் என்ன?" முன்பின் பார்த்திராத நாங்கள். நட்பற்ற மனநிலையில் அவர். என்ன செய்வது என்று தெரியவில்லை. சாயிராம். ஸ்வாமி என்னை உங்களைச் சந்தித்தி வரச் சொன்னார் என்றேன். சரி.சரி. அவர் கூறிய செய்தி என்ன என்று கேட்டார். அதற்கு நான், பாபா வேறொன்றும் கூறவில்லை. உங்களைச் சந்தித்துவிட்டு வா என்று மட்டும்  சொன்னார் என்றேன். நம்பாமல் என்னைப் பார்த்த அவர், நீ என்ன முட்டாளா. எந்தவித செய்தியோ காரணமோ இல்லாமல், ஒரு  நீண்ட பயணம் செய்து என்னை சந்திக்க வந்திருக்கிறாய். உண்மையைக் கூறு என பலவாறு என்னை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார். அனைத்துக்கும் என்னிடம் இருந்தது அந்த ஒரே பதில் தான். அதனால் அவர் தமது கேள்விகளை நிறுத்திவிட்டு, ஒரு சிந்தனைப் பார்வையுடன் ஆழ்ந்த மௌனத்தில் நீண்ட நேரம் போக்கினார். 


பிறகு, அவர் சற்றே குனிந்து தனது வலது காலின் ஷூ வைக் கழற்றினார், என்னை அடிக்கவோ என நான் பயந்த வேளையில் , கால் சாக்ஸிலிருந்து ஒரு நீல நிற கைத் துப்பாக்கியை எடுத்து, இது என்னவென்று தெரியுமா என என்னைக் கேட்டார். இதயம் தடதடக்க, மனமோ சாயிராம் சாயிராம் என ஜெபிக்க, நான்  கூறினேன். தெரியும். அது ஒரு ரிவால்வர். தயவு செய்து அதனால் என்னைக் குறி வைக்காதீர்கள். இதன் பின் அவர் மடை திறந்த வெள்ளமென தன் மனக் குறையை  கூறலானார். என் வணிகத்தில் ஏராளமான நஷ்டம்.  ஆகவே வாங்கிய கடன்களைத் திரும்பச் செலுத்த இயலவில்லை. உயிரை போக்கிக் கொள்வதுதான் ஒரே வழி என நினைத்து, இன்றிரவு தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். அதற்காகத்தான் இந்த துப்பாக்கி. ஆனால் பகவான் இதை அறிந்து உங்களை அனுப்பியுள்ளார். பெருமூச்சுடன் அவர் தனது பேச்சை முடிக்க, நான்  ஸ்வாமி ஓரிரு நாட்களில் சென்னைக்கு வரும் செய்தியை அவரிடம் கூறி விடை பெற்றேன். அவர் மகிழ்வுடன் தான் சென்னை வந்து பகவானைத் தரிசிப்பதாக உறுதி அளித்தார். 


சாயிராம்... பகவானுக்கு நம் அனைவரின் கடந்த, நிகழ், எதிர்காலமும் தெரியும். அவர் தமது பக்தர்களை எப்போதும் தம் கருணைச் சிறகால் அணைத்துக் காக்கிறார். இந்த அமெரிக்கர் முதலில் பாபா பக்தராக இருந்து, பிறகு தமது பக்தியிலிருந்து விலகிவிட்டார். ஆயினும் பாபா அவரைக் காப்பதில்.  இருந்து விலகிவிடவில்லை. "நீ என்னை விட்டு விலகிச் சென்றாலும் , நான் உன்னைப் போக  விட மாட்டேன்" என்கிற தமது சங்கல்பத்தை பாபா அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார் அல்லவா.


இந்த நிகழ்வுக்கு ஒரு சுபமான முடிவுரையும் உண்டு. அந்த அமெரிக்கர் சென்னை வந்தார். பகவானைத் தரிசித்தார். ஆனால் பகவான் அவரைக் முதலில் கண்டு கொள்ளவே இல்லை. சில நாட்களுக்குப் பிறகு, அவரை நேர்காணலுக்கு அழைத்தார். நானும் உடன் அழைக்கப் பட்டேன். அங்கு பகவான் அவரை தம் சொற்களால் துளைத்தெடுத்தார். சில கடுமையான சொற்களை நான் பூசிமெழுகி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, பகவான் என்னைக் கடிந்து கொண்டு , "நீ இங்கு என் ஒலிபெருக்கியாக மட்டும் இரு" என்றார். பகவானின் கடிந்த கருணை அந்த மனிதரைக் கரைத்து கண்ணீர் பெருக வைத்தது. பிறகு பகவான் அவரிடம் இரக்கப்பட்டு  அவரைத் தேற்றினார். நாடு திரும்பிய அவர் தமது அதுவரை விற்க இயலாத சொத்துக்களை , பகவான் பாபா அருளால், நல்ல விலையில் விற்று தமது கடன்களை அடைத்து, நல்வாழ்வு நடத்தலானார்.


சாய்ராம். இறைவனது பாதுகாப்பு நம் அனைவருக்கும் உண்டு. எப்போது எப்படி யார்வழியாக என்பதை அவரே அறிவார். நம்பிக்கையுடன் வழிபடுவோம். நாளும் நாம் நலமடைவோம்... 


அதாரம்: Mr V Srinivasan interview Aired on Radio Sai circa 2005, the interviewer was SSSIHL's professor PhD G. Venkataraman.

தமிழில் தொகுத்தளித்தவர்' திரு குஞ்சிதபாதம், நங்கநல்லூர்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக