தலைப்பு

புதன், 12 ஏப்ரல், 2023

பசி, பட்டினி, வறுமை, புறக்கணிப்பு , அவமானம் கடந்து ஷிர்டி பாபா பக்தரின் முதல் சத்யசாயி தரிசனம்!

எவ்வகையில் ஒரு ஷிர்டி சாயி பக்தரை ஸ்ரீ சத்ய சாயி இறைவன் தடுத்தாட் கொண்டு தன்னகம் அரவணைத்து தேற்றி ஆன்மீகமாய் ஏற்றினார் எனும் மிக முக்கிய ஆன்மீகத் திருப்புமுனை சுவாரஸ்யமாக இதோ...


அது ஜுன் 1964. சிறுமி மீரா திருமதி மீராவாக, வளர்ந்து பெரியவளாகி காதலித்து ஒருவரை திருமணம் செய்கிறார்! அவர் பெயர் சஞ்ஜெய் குமார்! மீராவோ ஜைன மதம்! சஞ்ஜெய் இந்து மதம்! இரு பெற்றோர்கள் இடையே மனவிரிசல்! சஞ்ஜெயின் தந்தை போலீஸ் அதிகாரி.. அவரும் இந்த திருமணத்தை ஏற்கவில்லை! மனப்பொருத்தம் இருந்ததே தவிர இருவருக்கும் தோற்றப் பொருத்தம் இல்லை! அதுவும் ஒரு குறையாகப் பார்க்கப்பட்டது! புகுந்த வீட்டில் பல்வேறு சோதனைகளை அனுபவித்தார் திருமதி மீரா! சஞ்ஜெயின் அண்ணன் கொஞ்சம் ஆதரவு அளித்தாலும் சஞ்ஜெய்க்கென்று ஒரு வேலை சரிவர அமையவில்லை! ஆனால் ஹார்மோனியம் வாசிப்பதில், பாடல் பாடுவதில், மற்றும் எழுதுவதிலும் மிகவும் வல்லவர் சஞ்ஜெய்! தீவிர ஷிர்டி பாபா பக்தர்! இருவரும் சேர்ந்து ஷிர்டி சென்று 3 நாட்கள் தங்குகிறார்கள்! 


அந்த 3 நாட்களில் ஒருநாள் சஞ்ஜெயின் கனவில் ஸ்ரீ சத்ய சாயி தோன்றி புட்டபர்த்திக்கு வரும்படி அழைக்கிறார்! இதுவே இறைவன் பாபா உடனான அவரின் முதல் அனுபவம்! பாபா அங்கே அழைக்கிறார்! கர்மாவோ வேறொரு திசையில் இழுக்கிறது! 

மேலும் மீரா பலமுறை வற்புறுத்தி இறுதியாக சஞ்ஜெய் சம்மதிக்க... இருவரும் மீராவின் தோழி வீட்டிற்கு செல்கின்றனர்! அது பம்பாய்! மீராவின் தோழி கணவர் திரைப்பட இயக்குநர் சாந்தாராமின் ஸ்டூடியோ பெயின்டர்! அவர் ஒரு படத்தை பெயின்ட் செய்து கொண்டிருக்க... அது யார்? என மீரா விசாரிக்க... "இவர் தான் புட்டபர்த்தி சாயிபாபா - முற்பிறவியில் இவர் தான் ஷிர்டி சாயி பாபா - அவர் தான் இப்பொழுது புட்டபர்த்தியில் இருக்கிறார்!" என்கிறார். 

இதுவே பாபா உடனான அவர்களது இரண்டாவது அறிமுகம்! 

அப்படி அவர் கூறி மேலும் பாபா பற்றிய ஒரு புத்தகம் தருகிறார்... அதுதான் 'சத்தியம் சிவம் சுந்தரம் - முதல் பாகம்' அதை முழு மூச்சோடு வாசிக்கிறார் மீரா!

அதன் மூன்று சாராம்சத்தில் மனம் கரைகிறார்!


1. ஸ்ரீ சத்ய சாயி பாபாவே ஸ்ரீ ஷிர்டி சாயி பாபா!

2. "நான் இருக்க பயமேன்?"

3. உன் இதயத்துடிப்பு எனக்கு உடனே கேட்கிறது!

இந்த மூன்று விஷயங்களை மீரா சஞ்ஜெய்க்கு சொல்லியும் கேட்டும் கேட்காதபடி இருந்துவிடுகிறார்! கர்மா கடவுளை உணர்வதற்கான கதவை இன்னும் அவர்களுக்கு திறக்கவில்லை! 1964 முதல் 67 வரை இருவரும் நாடோடி வாழ்வையே வாழ்கின்றனர்!


1967'ல் மீராவின் தந்தை சில மளிகைப் பொருட்கள் கொடுக்க‌... அதை எடுத்துக் கொண்டு அவர்கள் ரயிலில் வர... சென்று சேர வேண்டிய இடத்தை தாண்டி இறங்குகின்றனர்...இருவரின் தூக்கம் அந்த ரயிலின் சங்கிலியை பிடித்து இழுக்க முடியவில்லை! அடுத்த நிறுத்தத்தில் இறங்கியதில்.. பயணச் சீட்டு பார் ஆனதால் டி.டி.ஆர் மாஜிஸ்டிரேட் இடம் அழைத்துச் செல்ல... கையில் மளிகைப் பொருட்கள் மாநிலத்துக்கு மாநிலம் கொண்டு போக தடைவிதிக்கப்பட்ட காலகட்டத்தில்... அது குற்றம் என கருதி மாஜிஸ்ட்ரேட் அதற்கும் சேர்த்து அபராதம் விதிக்க... கையில் தம்படி இல்லை... இறங்கிய கிராமத்திலேயே அவர்களை டிடிஆர் உதவி கேட்கச் சொல்ல... மளிகைப் பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு முன்பின் தெரியாத கிராமத்தில் நுழைகின்றனர்... ஒரே நாளில் பலவித சோதனை மாற்றங்கள்! 

அங்கே ஒருவர் இருவரையும் எதேர்ச்சையாக இடிக்க... பிறகு அவர் மீராவின் பால்ய ஆசிரியர் என தெரிய வர..‌ மீரா குடும்பம் முன்பு அவருக்கு செய்த உதவி மீராவுக்கே இப்போது திரும்புகிறது...அவரின் அடைக்கலத்தில் அந்த கிராமத்திலேயே 2 வருடம் தங்குகிறார்கள்...அந்த ஆசிரியர் ஸ்ரீ சத்ய சாயி பக்தர்! வளைத்து வளைத்து மனதை வலை வீசி பிடிப்பதில் இறைவன் பாபாவுக்கு நிகர் பாபாவே!


சாயி சமதியில் சஞ்ஜெய் 'உன் பாதமே கதி' என்று ஷிர்டி சாயி பஜன் ஒன்று பாடுகிறார்! அனைவரும் அந்த பக்திக் குரலிலும் மெட்டின் இனிமையிலும் கரைகிறார்கள்! பாபா பக்தரான ஒரு டாக்டர் வீட்டில் மீரா வீட்டு வேலை செய்கிறார்... சஞ்ஜெய் சமிதியில் இசை கற்றுத் தருகிறார்! கால் வயிறு கழுவிய இருவரும் இப்போது முக்கால் வயிறு கழுவுகிறார்கள்! முன்பே சைக்கிள் கடை என பல்வேறு கடின வேலை செய்தவர் தான் சஞ்ஜெய்! இப்போது ஜீவிதம் ஒருவழியாக ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது! அந்த டாக்டர் குடும்பம் ஒருமுறை மீரா- சஞ்ஜெய் இருவரையும் சேர்த்து புட்டபர்த்திக்கு அழைத்துச் செல்கிறது! அது 1969 ஆம் ஆண்டு! 


அவர்கள் பர்த்தி வருவதற்குள் பாபாவின் தரிசனம் முடிந்து விடுகிறது! நாளை தான் மீண்டும் தரிசனம் என தகவல் வருகிறது! கட்டுப்பாடுகள் இல்லாத பிரசாந்தி நிலைய காலக்கட்டம் அது! ஆகவே பாபாவின் மூடிய அறை அருகே நிற்கின்றனர் இருவரும்... திடீரென கதவு திறக்கிறது... இருவரையும் பார்த்து பாபா ஆசீர்வதிக்கிறார்! கூட்டம் சேர ஆரம்பிக்கவே கதவை அடைத்துவிடுகிறார் பாபா! அது அவர்களுக்காகவே கொடுக்கப்பட்ட தனிப்பட்ட தரிசனம்!

அடுத்த நாள்.. "நீங்கள் மாலை பாபாவின் விபூதி பிரசாதம் வாங்கிக் கொள்ளுங்கள்!" என்று கூறி டாக்டர் குடும்பம் மட்டும் பாபாவின் கைப்பட விபூதி பிரசாதம் வாங்க காலையிலேயே தரிசன வரிசையில் அமர்கிறது.. சஞ்ஜெய் - மீராவுக்கு புறக்கணிப்பு என்பது புதிதல்ல... சஞ்ஜெய் அவர்களுக்கும் சேர்த்து சமைக்கிறார் ! சமையல் முடிந்த உடன் மீராவை மட்டும் தரிசனத்திற்கு அனுப்புகிறார்! 

அப்போது தங்கும் வசதி இல்லாத பிரசாந்தி நிலையத்தில் மரநிழலே அவர்களது வாசஸ்தலம்... நாடோடியாக இருந்த இருவருக்கும் அதுகூட அதிர்ச்சி தரவில்லை!


அப்போது மஞ்சள் ஆடையில் மங்கள மூர்த்தி - பொதுஜன பரமபிதாவான பாபா நடந்து வருகிறார்... கையில் கூடை நிறைய விபூதிப் பொட்டலங்கள் எடுத்துக் கொண்டு சேவாதளர் ஒருவரும் உடன் வருகிறார்!

ஆனால் மாலை தான் விபூதி பிரசாதம் கிடைக்கும் என தகவல் கிடைக்க‌... கூட்டம் கலைகிறது... அதே மரத்தடி நிழல்‌... அந்தத் தகவலை கேட்கிற போது சஞ்ஜெய்.. தனக்கு ஏற்கனவே பாபா விபூதி பொட்டலங்கள் வழங்கிவிட்டதாக கை நீட்டி காட்டுகிறார்... 11 விபூதி பொட்டலங்கள்! டாக்டர் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சி‌... அப்போது நடந்ததை விவரிக்கிறார்...

"நான் முழங்காலில் முகம் புதைந்து அமர்ந்திருந்தேன்! பாபா என் அருகே வந்தார்! தொட்டார்... எழுந்து என் வேட்டி தாங்கி குவித்தேன்... விபூதி போட்டார்... பாத நமஸ்காரம் எடுத்துக் கொண்டேன்... புன்னகையோடு ஆசீர்வதித்து விடை பெற்றார்!" என்று வர்ணித்த போது... டாக்டரால் நம்பவே முடியவில்லை "அப்போ உனக்கு மட்டும்தான் பாபா இன்று விபூதியே கொடுத்தாரா?" என்று சந்தேகத்தோடு டாக்டர் கேட்க... "ஆம் அவருக்கு மட்டும் தான் சுவாமி இன்று கொடுத்தார்! நான் அருகில் தான் இருந்தேன்" என்று அங்கே வந்த அந்த சேவதாளரும் தெரிவிக்க...

நமது வேலைக்காரர்கள் தானே என்று காலையில் சஞ்ஜெய் - மீரா இருவரையும் புறக்கணித்துவிட்டு தரிசனத்திற்குப் போன டாக்டர் முகம் சுண்டிப் போகிறது! 


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 45 - 56 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


பாபா ஒருவரின் அந்தஸ்தை பார்ப்பதே இல்லை...‌ ஆன்மாவையே பார்க்கிறார்! "ஒருவரையும் நீ ஒதுக்குவதில்லை" எனும் ஸ்ரீ சத்ய சாயி கவச வரிகளே முன்னர் விவரித்த சம்பவம்! அதிலும் குறிப்பாக எந்த சாதுக்கள் மனிதர்களால் புறக்கணிக்கப்படுகிறார்களோ அவர்களை ஒருபோதும் இறைவன் பாபா ஒதுக்கியதே இல்லை! அதோடு மட்டுமல்லாமல் அவர்களை மடி தாங்கி தேற்றி அகம் மாற்றி ஆன்மீகத்தில் முன்னேற்றுகிறார்! அதற்காகத்தானே ஸ்ரீ சத்ய சாயி அவதாரமே!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக