தலைப்பு

திங்கள், 17 ஏப்ரல், 2023

பசியோடு பந்தியில் அமரப் போன பக்தரை எழுப்பி பரிமாறச் சொன்ன பாபா! பகீர் அனுபவம்!

ஒரு நிகழ்வில் பசியோடு சேவை செய்த இரண்டு பக்தருக்கு எவ்வாறு உணவு பரிமாறப்பட்டது...? வட இந்திய சேவகர்க்கு தென் இந்திய உணவு இறங்காததை அறிந்து பாபா செய்த செயல் என்ன? நடுஇரவில் பாபாவை பற்றி பேசிக் கொண்டிருந்ததை பாபாவே பார்த்து அவர்களிடம் சொன்னதென்ன? சுவாரஸ்யமாக இதோ...


அது 1969. வொயிட் ஃபீல்டில் கவி சம்மேளன விழாவிற்கான ஏற்பாடுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன... பாபா நூலக அறையில் இருக்கும் நாற்காலிகளை விரிக்கச் சொல்கிறார்! அன்று பார்த்து உணவு உண்ணவில்லை மும்பையில் இருந்து வந்த குஜராத்தி பக்தர்களான சஞ்ஜெய் - மீரா.. இருவரும் இல்லறத் துறவிகள்! மனதில் மாசும் இல்லை... கையில் காசும் இல்லை! 

சக சேவாதளர்களான குஜராத்தி ஜவேரி மற்றும் அவரது மனைவியோடு இருவரும் சேர்ந்து மெய் மறந்து சேவை செய்கிறார்கள்! அடையாள அட்டை உள்ளவர்களே கவி சம்மேளன விழா அறையில் நுழைய முடியும்.. இல்லாதவர்கள் மரத்தடியில் நிற்கிறார்கள்! பாபா வருகிறார்.. சூழ்நிலை உணர்ந்து சஞ்ஜெயிடம் ஒரு மேஜை நாற்காலியை வடவிருட்ச மரத்தடியில் விரிக்கச் சொல்கிறார்... கிருஷ்ண விக்ரஹம் கொலுவேற்றிருக்கும் மரத்தடி அது! ஷிர்டி சாயி முகத்தில் அறைந்த காகா தீட்ஷித் அப்போது வந்திருக்கிறார்.. அவரது அறையின் டேபிளை கொண்டு வந்தும்.. பாபாவின் சகோதரி வெங்கம்மா அறையிலிருந்து 4 நாற்காலி, விரிக்க ஒரு ஜமுக்காளம் என தற்காலிக ஏற்பாடே தடபுடலாக இருந்து... அனைவரையும் வரவழைத்து.. அடையாள அட்டை இருப்பவர், இல்லாதவர் என எல்லோரையும் அந்த மரத்தடியில் அமர்த்திவிட்டு சூழ்நிலையை சமமாக்கி சுபமாக்கிவிடுகிறார் பாபா!

கவிகள் கவிதை வாசிக்க... பாபா அவ்வப்போது நகைத்தபடி சிறப்பாக நடக்கிறது கவி சம்மேளனம்! 


விழா முடிந்து சமபந்தி போஜனம்... கவிகளையும், பெங்களூர் செல்பவர்களையும் முதலில் சாப்பிடச் சொல்லி தன் அறைக்கு செல்கிறார் பாபா! பகலில் பிருந்தாவன சேவை , இரவில் இரயில்வே ஸ்டேஷனில் தூக்கம் என நாட்களை பணமற்றும் , பாபா இருக்க பயமற்றும் நகர்த்திக் கொண்டிருந்த சஞ்ஜெய் - மீரா காலையிலிருந்து ஏதும் சாப்பிடவில்லை..! 

பசி பிடித்து பந்தியில் தள்ளுகிறது சஞ்ஜெயை...ஆகவே பெங்களூர் வாசிகளோடு அமர்ந்துவிடுகிறார்! அப்போது உபசரிப்பு சரியாக நிகழ்கிறதா? என்று பார்வை இட வந்த பாபா.. சஞ்ஜெயை பார்த்து... பின்னால் சென்று எழுப்பி... 

"குமார்! (சஞ்ஜெய் குமார்) நீ விருந்தாளியா? பெங்களூர்காரனா? எழுந்திரு! முதலில் அவர்களை சாப்பிட வை! அவர்களோடு உட்கார்ந்து சாப்பிட வேண்டாம்! நீ நம்ம வீட்டுக்காரன்! பிறகு நீ சாப்பிடு!" என்கிறார்! 

மீரா வேடிக்கையாக அதைப் பார்க்கிறார்! பிறகு இருவரும் சுற்றிச் சுற்றி வந்து உபசரிக்கிறார்கள்! உரிமையோடு தன் வீடு போல் பிருந்தாவனத்தில் எல்லா இடங்களுக்கும் போய் வருவார் மீரா! அந்த ஆனந்தம் இப்போது எங்கே? என வருத்தப் பதிவு செய்கிறார்!

அந்த நேரத்தில் மின்சாரம் தப்பித்து ஓடிப் போய்விடுகிறது... எங்கேயோ தூங்கிக் கொண்டிருந்த மெழுகுவர்த்தியை எழுப்ப... பாபாவின் அறைக்கு செல்கிறார் சஞ்ஜெய்!அப்போது தலையும் தலையும் இடித்துக் கொள்கிறது! "யார் இங்கே?" என்ற குரல்...!

பிறகு தான் தெரிந்தது சஞ்ஜெய்க்கு தான் இடித்தது பாபாவை என்று... பிறகு பாபா மீராவையும் இடிக்க... யார்? என்று மீரா கேட்க... "பாபா ஹை" என்கிறார் பாபா! அந்த திடுக்கிடும் தருணத்தில் மீராவோ சஞ்ஜெயோ பாபாவிடம் மன்னிப்பே கேட்கவில்லை...

கருணாமூர்த்தி பாபா சிரித்துக் கொண்டே போய்விடுகிறார்! 


அப்போது பெண்களின் சாப்பாட்டு சமயம் வர... மீரா அமர... அவருக்கு ஒவ்வாத தென்னிந்திய சாம்பார்... சாதம்... இலையையே மிரண்டு பார்க்கிறார் மீரா! அதை கவனித்த பாபா "சாப்பிடவில்லையா?" என்று கேட்க... "எனக்கு சோறு பிடிக்காது!" என்று சொல்ல... "ராம பிரம்மம்! இவர் குஜராத்தி! சோறு பிடிக்காது! இந்த இலையை எடுத்துவிட்டு வேறு சாப்பாட்டை கொடு!" என்று பாபா உத்தரவிட...

பாயாசம்-பால்-நெய் சக்கரையோடு சுடச்சுட வெளுத்த பூரிக்கள் பரிமாறப்பட்டன... அந்த பூரிக்களை தன் கையாலேயே நசுக்கி அதில் நெய், சர்க்கரை, பால் எல்லாம் கலந்து மீராவை சாப்பிடச் சொல்கிறார் தாயுமானவ பாபா!

பிறகு ஆண்கள் வரிசையில் சஞ்ஜெயோடு சாப்பிட அமர்ந்தார் பாபா! பிறகு பாபா எல்லோருக்கும் ஐஸ்கிரீம் பரிமாற... 3 ஐஸ்கிரீம்களை மீரா ருசித்து ருசித்து சாப்பிடுகிறார்! பிறகு இரயில் வே ஸ்டேஷன் நித்திரை! 


ஒருநாள் இருவருக்கும் சாப்பாடு கிடைக்கவில்லை.. பசியோடே இரயில்வே ஸ்டேஷனில் உறங்கப் போக... 9 மணிக்கு பாபா அழைத்து வரச் சொல்ல...மூச்சிறைக்க ஓடோடிப் போகிறார்கள்! 


அப்போது பாபாவின் அருகே அமெரிக்கா தேசத்து யோகினி இந்திராதேவியும் உடன் இருக்கிறார்! "பசியோடவே தூங்குவீர்களா?" என்று கேட்டு பாபா இருவருக்கும் மாம்பழம் தருகிறார்! "இனிமேல் பிருந்தாவனத்திலேயே வெங்கம்மா இருக்கும் வரண்டாவில் தூங்குங்கள்!" என்கிறார் பாபா!

இந்திராதேவியை பார்த்து இருவரையும் சுட்டிக்காட்டி "இவர்கள் எந்த நிலையிலும் மற்றவருடைய தப்பைக் காட்டிக் கொடுப்பதில்லை! கஷ்டங்களை தைரியமாக எதிர்த்து நிற்பார்கள்! என்னிடம் தவிர யாரிடமும் அவர்கள் கை நீட்டவே மாட்டார்கள்!" என்று பாபா அவர்களைப் பற்றிய தன்னிலை விளக்கம் அளிக்க... அவர்களின் பக்தியைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார் இந்திராதேவி அம்மையார்! மேலும் சில மாம்பழங்களை இருவருக்கும் தருகிறார்!


அன்று முதல் பிருந்தாவனமே நித்திரை தலமாகிறது இருவருக்கும்...! ஒரு நாய் அவர்களின் பக்கத்தில் படுக்க...அதுவும் சரி.. பாபாவின் காலடி விரிப்பும் தலையணையாகிறது..! ஒருமுறை பிருந்தாவன் வாட்ச் மேன் பிரேம பகதூர் "குமார்! ராத்திரியில் சுவாமி தூங்குவதில்லை! அவ்வப்போது வெளியே வருவார்! ஆக நீங்கள் இரவில் அதிக நேரம் தூங்காதீர்கள்! கவனியுங்கள்!" என்கிறார்! அதற்குப் பிறகு அந்த இரண்டு சரணாலயக் கிளிகள் ஆந்தைகளாகவும் இரவில் அவ்வப்போது கண்விழிக்கின்றன...!

இருவரும் ஒரு நாள் வடவிருட்சம் அருகே பாபாவை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்... சாயி கீதா பாகன் வசந்த் பாயியும் அங்கேயே கீதாவை கட்டி வைத்து.. பேச்சு கச்சேரியில் இணைகிறார்! பேச்சு கச்சேரி இசைக் கச்சேரியாக சஞ்ஜெய் குழல் வாசிக்க.. அப்போது வந்திருந்த கலிஃபோர்னியா பக்தர்கள் மீரா, ஜான், லேன் அதில் இணைய , அந்த இசைக்கு ஜான் டின் டப்பாவை டோலக்காக வாசிக்க... ஆனந்த சிவராத்திரியாகிறது அன்று...! அப்படி ஒவ்வொரு இரவும் தொடர... அந்த இசை தமாஷை தூரத்தில் இருந்து ஒரு நாள் பாபா பார்த்துவிடுகிறார்! அதைப் பார்த்த சஞ்ஜெயின் குழலில் இருந்து இசை வரவில்லை பயத்தில் காற்றே வருகிறது... திரும்பிப் பார்த்தால்... பாபா கோபித்துக் கொள்வார் என அந்த வெளிநாட்டு பக்தர்கள் பயத்தில் தப்பி ஓடிவிடுகிறார்கள்...! மீராவும் சஞ்ஜெயும் பயந்து ஓரிடத்தில் நிற்கிறார்கள்! பாபா இருவரின் அருகே வருகிறார்! 

என்னாகுமோ? ஏதாகுமோ? இனி நிரந்தர இரயில்வே ஸ்டேஷனோ? பிருந்தாவனத்தில் இனி காலடியே எடுத்து வைக்க அனுமதிக்க மாட்டாரோ? ஆயிரம் கேள்விகள் இரவுக் கொசுக்களாய் இருவரின் மனதிலும் சுற்றி வந்து கடிக்கின்றன... 

பாபா அருகே வந்து சஞ்ஜெயை பார்த்து 

"என்ன குமார்! ராம்லீலா நடக்கிறதா?" என்று இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டே நகர்ந்து போகிறார்! இருவருக்கும் சென்ற மூச்சு திரும்ப வருகிறது... திரும்புகையில் பாபாவின் தெய்வீக காற்றலையோடு அந்த மூச்சு கலந்து போகிறது!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 72 - 75 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


அவர்களிடம் பணமில்லை, வாழ நல்ல இடமில்லை, அவர்களால் எந்த பயனுமில்லை... ஓசியில் வேலை வாங்கியும் அதட்டிக் கொண்டே வேலை வாங்குவோம் என்று மீரா- சஞ்ஜெயை பாபா அடிமை போல் ஒருநாளும் நடத்தியதே இல்லை! பிரதமர் வந்தாலும் பராரிகள் வந்தாலும் பாபாவிடம் ஒரே விதமான அன்பு தான்! ஆகவே தான் பாபா இறைவன்! இது மனிதனால் சாத்தியப்படுத்த இயலாத செயல்முறை! பிறரது பாரவையில் அந்த இருவரும் பாபாவிடம் தஞ்சம் அடைந்தவர்கள்! ஆனால் பாபாவின் பார்வையில் அந்த இருவரும் அவர் நெஞ்சம் அடைந்தவர்கள்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக