தலைப்பு

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

அவருக்கு அவரே உருவச் சிலை அமைத்த உண்மை சம்பவம்!


சிலை செய்யும் கல்லாகவும்.. அதை வடிக்கும் கையாகவும்.. வடித்தபின் அதன் கலையாகவும் திகழ்வது இறைவன் சத்ய சாயி ஒருவரே. இதோ ஓர் உன்னதமான சத்திய சம்பவம் எப்படி உயிரோட்டமான சிற்ப சரித்திரமானது என இதோ...

1966ம் ஆண்டு, இலங்கையில் முதன்முதலாக, ஆரம்பித்த கொழும்பு ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய நிலையத்தில், “சத்ய சாயி பாபா டிரஸ்ட் ஸ்ரீலங்கா" என்ற ஸ்தாபன அனுசரணையில், 2011ம் ஆண்டு சுவாமி மகாசமாதியடைந்து, மறு வருடம் 2012ல், முதலாவது மகாசமாதி தினத்தில், இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் திருவுருவச்சிலையொன்று பிரதிஷ்டை செய்வதாக முடிவெடுக்கப்பட்டது. (அதே சமயம் சாயிநிலையத்தில், 2011ம் ஆண்டு பாபாவின் மகாசமாதி நிகழ்வை, நேரடி ஒளிபரப்பு மூலம் பார்த்துக்கொண்டிருந்த, ஒரு தீவிர சாயி பக்தைக்கு, திருவுருவச்சிலையொன்று பிரதிஷ்டை செய்யும்படி, தெய்வீக சமிக்ஞையொன்று கிடைக்கிறது.) உடனே நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியது.

சுவாமியின் உயரத்தில், உயர்தர வெண்பளிங்கு கல்லில், சுமார் ஆயிரம் கிலோ எடையில், வட இந்தியாவில், ஜெய்பூர் மாநிலத்தில் உருவாக்கி, கொழும்புக்கு எடுத்துவந்து பிரதிஷ்டைக்கான ஒழுங்குகளைச் செய்தது. அப்போது நடந்த முதல் அற்புதம், சிலை பம்பாய் துறைமுகத்தில் ஏற்றப்பட்டு. கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தடைந்தது. அன்று பெய்த கடும் மழையால், கப்பலிருந்து இறக்கப்பட்ட, பொதிகலனைத் திறக்கமுடியவில்லை. இன்னும் இரண்டு தினங்கள் காலதாமதமாகும் என்று பேசப்பட்டது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டது. அந்த சமயத்தில் ஒரு அதிகாரி, கொட்டும் மழையில், குடையுடன் அங்குவந்து, குறிப்பிட்ட பொதிகலனை மட்டும் திறக்கும்படி கட்டளையிட்டு, குறிப்பிட்ட சிலை வைக்கப்பட்ட பெட்டியை மட்டும் இறக்கும்படியும், எந்தவிதமான இறக்குமதி வரிகளும் செலுத்தவேண்டாம் என்றும் கூறிவிட்டு, பொதிகலனை திரும்பவும் மூடிவிட்டு சென்றுவிட்டார். (அந்த மழையில் வந்தவர் யார்?)

அதே சமயம் திருவுருவச்சிலை, பிரதிஷ்டை செய்யப்பட வேண்டிய மூலஸ்தானத்தில், முன்னோட்டமாக சிறப்பு கஜபூஜை , யாகம், கணபதி ஹோமம், போன்றவை செய்யப்பட்டு, தங்கம், வெள்ளி. விலையுயர்ந்த நவரத்தின கற்கள், காசி தீர்த்தம் மற்றும் புண்ணிய நதி தீர்த்தங்கள், அத்துடன் பகவானின் மகாசமாதியன்று சமாதியில் வைத்து பூஜிக்கப்பட்ட பூமாலையொன்று புஷ்பங்கள், அதிலும் விஷேசமாக, சுமார் 40வருடங்களுக்கு முன், பிரசாந்தி நிலையத்தில், மண்தரையில் சுவாமி நடந்துவரும் சமயங்களில், அப்போதைய பக்தர்களினால் சேகரித்து வைத்திருந்த, விலைமதிப்பற்ற, அவரது காலடிமண், அத்துடன் இலட்சக்கணக்கான பக்தர்களினால் எழுதப்பட்ட சாயி நாமம் புத்தகங்கள் யாவும் சேர்த்து வைக்கப்பட்டது.


அடுத்து இன்னொரு அற்புதம். திருவுருவச்சிலை மூலஸ்தானத்துக்கு கொண்டுவரப்பட்டது. காயத்ரி மந்திரம் ஜெபிக்கப்பட்டு, சாயிராம், சாயிராம் என்ற கோஷத்துடன், திருவுருவச்சிலை தூக்கப்பட்டது. அவ்வளவுதான் எவ்வளவோ சிரமப்பட்டு, தரையிலிருந்து ஐந்து அடி உயரத்திலுள்ள மூலஸ்தானத்தில் தூக்கிவைக்க முடியாது போயிற்று. அப்போது அங்குவந்த ஒருவர், அதனை தான் தூக்கிவைப்பதாகக் கூறிவிட்டு, ஒரு தேங்காயில் கற்பூரம் ஏற்றி, தன்னிடமிருந்தொரு இரும்புச்சட்டத்தை திருவுருவச்சிலையின் அடியில் கொடுத்து இழுத்தார், ஆச்சரியம்!! எந்தவித சிரமமின்றி, திருவுருவச்சிலை மூலஸ்தானத்தில் போய் அமர்ந்துகொண்டது. அதற்கு அவர், தனக்கு இப்படியோரு காரியம், நடப்பதுபோன்ற ஒரு கனவு முன்தினம் வந்ததாகவும், அதற்காக இங்கு வந்ததாகவும் கூறினார். (அவரது கனவுக்குக் காரணம் யார்?)


எல்லாவற்றிக்கும் முக்கியமாக, நிகழ்ந்த மாபெரும் அற்புதம் இதுதான்.அதாவது ஒரு மாதம் கழித்து, இந்தச் சிலைக்கான செலவை, இந்த ஸ்தாபன அங்கத்தவர்கள் கணக்குப் பார்த்தார்கள். மொத்தச் செலவும் இலங்கை பணம் ரூபா 1,128,778 வாக இருந்தது.

2012ம் ஆண்டு குருபூர்ணிமா தினம், சாயி பக்தர்களினால் பஜனை பூஜை வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது, கொழும்பிலுள்ள அரசு வங்கியிலிருந்து கடிதமொன்று வந்தது. அதில் இந்த ஸ்தாபனத்தின் பெயரில் வைப்புப் பணமாக, ஒரு தொகைப் பணம் வட்டியுடன் சேர்ந்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உடனே வங்கியில் சென்று அதன் விபரத்தைக் கேட்டபோது, அங்கு நான்கு வைப்புப் பத்திரங்கள் வைப்புத்தொகைப் பணமாக, இந்த சாயி டிரஸ்ட் பெயரில் பல வருடங்களுக்கு முன் வைப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அவை வட்டியுடன் பெருகியிருப்பதாகவும் வங்கி முகாமையாளர் கூறினார். அதன்பின்னர் பழைய கணக்குகளைத் தேடிப்பிடித்து, அதற்கான அனைத்து ஆவணங்களையும் சேகரித்து, சட்டதிட்டங்களுடன், சத்திய கடதாசி தயாரிக்கப்பட்டு, அந்த நான்கு வைப்புப்பத்திரங்களும் பெற்றுக்கொள்ளப்பட்டது. பாபா இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதுமட்டுமல்ல, பூரண நம்பிக்கையுடன் செய்யும் காரியங்களுக்கு, கடல்கடந்தும் அருள்புரிவார் என்பதற்கு அத்தாட்சியாக, அந்த வைப்புப்பணத்தின் முதலும் வட்டியும் கூட்டிப் பார்த்தபோது, அதன் மொத்தத் தொகையானது ரூபா 1,128,778ஆக இருந்ததுதான் அது ஒரு அதிர்ச்சியும், ஆச்சரியமும், அதிசயமும் வியக்கத்தக்கதுமான சம்பவமாகும். (சாயிநிலையத்தில் இன்றும் இந்த ஆவணங்கள் ஒரு சாட்சியாக, பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன.)

பகவானின் படங்களிலிருந்து விபூதி, குங்குமம், தேன் வருவதைப் பார்த்து வியந்தாலும் கொழும்பு சாயி நிலையத்தில் நடந்த, இந்த அதிசய நிகழ்வை வார்த்தைகளினால் வர்ணிக்கமுடியாது. உலகிலேயே முதலாவதாக உருவாக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்தத் திருவுருவச்சிலை இதுவாகும். இன்றும் பல தெய்வீக அதிர்வுகள் அந்தத் திருவுருவச்சிலையில் இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது. அவருக்கு அவரே தன் திருவுருச்சிலையை அமைத்துக்கொண்டார்.

நன்றி: எஸ். என். உதயநாயகம் - தலைவர்: கொழும்பு ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய நிலையம் 

இந்த அற்புதம் தொடர்பாக  அன்றைய பிரபல இலங்கை செய்தித்தாள்களிலும் இந்த செய்தி வெளிவந்துள்ளது. அதனையும் கீழே இணைத்துள்ளோம்..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக