தலைப்பு

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

பாபா ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளாக காட்சி அளித்த சம்பவம்!


இறைவன் சத்ய சாயியே எல்லா இறை வடிவங்களும் ஒன்றிணைந்த ஓர் வடிவம். அந்த சத்திய அனுபவம் இதோ.. 

எடாலம் வெங்கட ரமணப்பாவின் அனுபவங்கள் எப்போது நினைத்தாலும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

வெங்கட ரமணப்பா தன்னிடமிருந்த தானிய வகைகள் மற்றும் வெல்லம் இவற்றை பண்ட மாற்று முறையில் கிராமத்தினரிடம் இருக்கும் அரிசி, கேழ்வரகு முதலியவற்றை வாங்கி அருகிலுள்ள நகரத்தில் விற்பனை செய்வார்.

ஒரு நாள் அவரும் அவரது மனைவியும் தங்களிடமிருந்த தானிய மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு புக்கபட்டிணத்திலிருந்து புட்டபர்த்தி சென்று கொண்டிருந்தனர்.

செல்லும் வழியில் செவ்வரளி பூக்கள் பூத்திருந்ததைக் கண்டனர்.  எப்போதுமே புட்டபர்த்தி கோபால ஸ்வாமிக்கு மாலை சாற்றி கற்பூர ஆரத்தி காட்டிய பிறகே பாதையோரம் தரையில் தங்களிடமுள்ள பொருட்களை விரித்து வியாபாரத்தை தொடங்குவார்.

எனவே பூத்திருந்த செவ்வரளிப் பூக்களைப் பறித்து மாலையாக தொடுத்தனர். சித்ராவதி நதியைக் கடந்து புட்டபர்த்திக்குள் செல்லும் போது அருகிலுள்ள சிறு குன்றில் சங்கு சக்கரதாரியான தங்களது குல தெய்வம் ஸ்ரீ வெங்கடேஸ்வரனை ப்ரத்யட்சமாக கண்டனர். இந்த அதிசயத்தை கண்டதும் இருவரும் தங்கள் மெய் மறந்து பெருமாள் காலில் விழுந்து வணங்கி ஏற்கனவே தொடுத்திருந்த செவ்வரளி மாலையை அவரது பாதத்தில் சார்த்தினர். வணங்கி எழுந்ததும் அங்கு   தங்களது குல தெய்வம் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாளுக்கு பதிலாக பாபாவையே கண்டனர்.


அதனினும் ஆச்சரியம் என்னவென்றால், பொதுவாக இந்துக்கள் நறுமண மலர்களையே இறை வழிபாட்டில் வைப்பர்.  ஆனால் இவர்களிடமிருந்ததோ  நறுமணமற்ற செவ்வரளிப் பூக்கள். இதைப் போய் பெருமாள் பாதத்தில் சாற்றுகிறோமே என்று மனதிற்குள் மருகியவாறே இருந்தனர். பாபாவிற்கு பதிலாக பெருமாளை தரிசித்த போது செவ்வரளிப்பூக்கள் நறுமணமிக்க மல்லிகையாக மாறியிருந்தது.

பாபா மறுபடியும் அவர்களது குல தெய்வமாக காட்சி அளித்த போது இருவருக்கும் சொல்லொணா ஆச்சரியம் கலந்த குழப்பம்... நாம் கண்ட இவை அனைத்தைம் கனவா அல்லது நம் கற்பனையா என்று.

இதற்கிடையில் இவர்கள் இருவரையும் ஆசிர்வதித்து மீண்டும் பாபாவாக காட்சியளித்தார்.

இவ்வாறு முன்பு சத்யசாய் பாபாவிடம் கிஞ்சித்தும் நம்பிக்கையில்லாமல் இருந்த வெங்கட்ட ரமணப்பா குடும்பம் தீவிர பக்தர் குடும்பமாக மாறியது.

இறைவன் சத்ய சாயியின் பக்தராக வாழ்வது என்பது பல லட்சம் பிறவிகளில் செய்த புண்ணியம்... 
ஒன்றிணைந்த இறைவனோடு ஒன்றிணைவதே நம் மனித வாழ்வின் ஒரே இலக்கு என உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆதாரம்: Nectarine Leelas of Bhagawan Sri Sathya Sai Baba, By R. Balapattabi
மொழிமாற்றம்: R. வரலட்சுமி, குரோம்பேட்டை, சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக